Published:Updated:

முதல் பெண்கள்! - வை.மு. கோதைநாயகி

வை.மு. கோதைநாயகி
பிரீமியம் ஸ்டோரி
வை.மு. கோதைநாயகி

தமிழின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர்; தமிழின் முதல் பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளர்

முதல் பெண்கள்! - வை.மு. கோதைநாயகி

தமிழின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர்; தமிழின் முதல் பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளர்

Published:Updated:
வை.மு. கோதைநாயகி
பிரீமியம் ஸ்டோரி
வை.மு. கோதைநாயகி

ஹம்சத்வனி

“கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த பெண் ஆளுமைகள் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால், அதில் இடம்பிடிப்பார் கோதைநாயகி. தமிழின் முதல் பெண் துப்பறியும் நாவலாசிரியரான கோதைநாயகி, பள்ளிப் படிப்பின் ருசியை அறிந்தவரில்லை. செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளூர் கிராமத்தில் 1901-ம் ஆண்டு, டிசம்பர் 1 அன்று என்.எஸ்.வெங்கடாச்சாரி - பட்டம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழக்க, பாட்டி மற்றும் சித்தியின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயது முதலே நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம் என்று பக்தி இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

குழந்தைத் திருமணங்கள் மலிந்திருந்த அந்தக் காலகட்டத்தில், 1907-ம் ஆண்டு, ஐந்தரை வயதான கோதைநாயகிக்கும் ஒன்பது வயதே நிரம்பிய திருவல்லிக்கேணி வைத்தமாநிதி முடும்பை பார்த்தசாரதிக்கும் திருமணம் செய்வித்தனர் பெற்றோர். மாமனார் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தமிழ் இலக்கிய உரையாசிரியர். கல்வியின் அருமை அறிந்த குடும்பம் என்பதால், சிறுமி கோதை வீட்டிலேயே தன் இலக்கிய வாசிப்பைத் தொடர்ந்தார்.

அக்கம்பக்கத்து குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டு புராணக் கதைகளுடன் தன் கற்பனையையும் சேர்த்து கதைகள் சொல்ல ஆரம்பித்தார். நாடகங்கள் பார்ப்பதில் அதீத ஆர்வம்கொண்டிருந்த மனைவியைப் புரிந்துகொண்ட பார்த்தசாரதி, அவரை நாடகங்கள் பார்க்க அவ்வப்போது அழைத்துச்சென்றார்; வீட்டிலேயே தெலுங்கு மொழி பேசவும் கற்றுக்கொண்டார் கோதை.

கோதை சொல்லச் சொல்ல, அவரது அண்டை வீட்டுப் பெண்ணான டி.சி.பட்டம்மாள் கேட்டு எழுதிய கோதையின் முதல் நாடகம், `இந்திர மோகனா'. 1924-ம் ஆண்டு, இந்திர மோகனா நோபிள் பிரஸ் மூலம் அச்சிடப்பட்டு வெளிவந்தது. அப்போது வெளிவந்த பிரபல இதழ்கள் இந்திர மோகனாவைப் பாராட்டி எழுதின; பலர், நாடகத்தை இயக்கி நடித்தனர். எழுத்தின் மேல் கோதையின் காதல் இன்னும் அதிகமாக, தமிழைப் பிழையற எழுதக் கற்றுக்கொண்டார். எழுத்து ஆர்வம் உந்தித் தள்ள, கோதை எழுதிய முதல் நாவல், `வைதேகி'. தோழி டி.சி.பட்டம்மாள் அறிவுரையின்படி `வைதேகி'யை அப்போது `மனோரஞ்சனி' இதழை நடத்தி வந்த வடுவூர் துரைசாமி ஐயங்காருக்கு அனுப்பினார்.

கோதைநாயகி என்கிற பெரும் பொக்கிஷத்தைக் கண்டடைந்துவிட்டதை உணர்ந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார், வெளிவராமல் நின்றுபோயிருந்த `ஜகன்மோகினி' மாத இதழை வாங்கிப் பதிப்பிக்க அறிவுறுத்தினார். அறிவுரையை ஏற்றுக்கொண்ட கோதைநாயகி, ஜகன் மோகினியை வாங்கி நடத்தத் தொடங்கினார். அதில் தொடர்களையும் கதைகளையும் புனைபெயர்களில் வெளிக்கொணர்ந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆண் எழுத்தாளர்களே எழுதத் தயங்கிய துப்பறியும் நாவல்கள் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார் கோதைநாயகி. ராஜாராம் நாயுடு என்ற பெயரில் துப்பறிவாளர் ஒருவரை அறிமுகப்படுத்தி, `தமிழின் முதல் பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளர்' என்ற பெருமையைப் பெற்றார். இவர் எழுதிய `இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம்' என்ற துப்பறியும் நாவல் பெரும் புகழ் பெற்றது. இதனிடையே தன் ஒரே மகனான சீனிவாசனைப் பெற்றெடுத்தார் கோதைநாயகி.

`ஜகன்மோகினி' வெளிவந்த அடுத்த ஆண்டே 1,000 பிரதிகள் விற்பனை என்ற உயரத்தை எட்ட, `மனோரஞ்சனி'யின் விற்பனை குறைய ஆரம்பித்தது. வடுவூராருக்கு கோதையின் மேல் பொறாமை எழுந்தது. `வைதேகி' நாவல் கோதைநாயகி எழுதியதே அல்ல... அது தான் எழுதிய நாவல்தான் என்று தன் `மனோரஞ்சனி'யில் எழுதினார். கோதைநாயகியோ இதற்குப் பதில் சொல்லாமல், தன் வேகத்தை எழுத்தில் காட்டினார். தொடர்ச்சியாக ஜகன்மோகினியில் பல பெண் புதுமுக எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார்; வைதேகி நாவலின் அடுத்த பகுதியை எழுதிப் பிரசுரம் செய்தார். மனோரஞ்சனி சரிவை சந்திக்கத் தொடங்கி, நின்றும் போனது.

துப்பறியும் நாவல்கள் எழுதிவந்த கோதைநாயகி, விடுதலைப் போராட்ட வீரரான அம்புஜம் அம்மாளின் வீட்டில் காந்தியைச் சந்தித்து உரையாடும் பேறுபெற்றார். வரதட்சணைக் கொடுமை எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, ஆலயப் பிரவேச ஆதரவு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, விதவை மறுமண ஆதரவு என்று தன் கொள்கைகளை எழுத்து மூலம் மக்களுக்குக் கொண்டுசென்றார். இவர் எழுதிய `புதுமைக் கோயிலில்' என்ற நாவல் தீவிர காந்தியம் பேசியது. `மகிழ்ச்சி உதயம்' தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்தியது. சுதேசி இயக்கத்தை ஆதரித்து கோதைநாயகி எழுதிய நாவல், `வாழ்க்கையின் நாதம்' அல்லது `வானக்குயில்'. வரதட்சணைக் கொடுமையை இவரது `கோபாலரத்தினம்' நாவல் சாடியது. இவர் எழுதிய `சியாமள நாதன்', `உணர்ச்சி வெள்ளம்' போன்ற நாவல்கள் விதவைப் பெண்களின் மறுமணம் குறித்து அலசின. `மகிழ்ச்சி உதயம்', 'கிருபாமந்திர்' போன்ற இவரது நாவல்கள் ஆதரவற்ற குழந்தைகளை சமூகம் நடத்தும் விதத்தைச் சாடின.

ஆண் எழுத்தாளர்களே எழுதத் தயங்கிய துப்பறியும் நாவல்கள் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார் கோதைநாயகி. ராஜாராம் நாயுடு என்ற பெயரில் துப்பறிவாளர் ஒருவரை அறிமுகப்படுத்தி, `தமிழின் முதல் பெண் துப்பறியும் நாவல் எழுத்தாளர்' என்ற பெருமையைப் பெற்றார்.

இவ்வளவு போதாதா எதிர்ப்பைச் சம்பாதிக்க... இவர் எழுதிய நாவல்களை தீயிட்டுக்கொளுத்தினர் ஒரு சிலர். `என் புத்தகங்களை எரிப்பதற்காகவாவது இவர்கள் வாங்குகிறார்களே... அது எனக்கு மகிழ்ச்சியே' என்று அதுகுறித்து கருத்து சொன்னார் கோதைநாயகி. காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுக்க ஆரம்பித்தார். 1932-ம் ஆண்டு நடந்த லோதி கமிஷன் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். `போராட்டத்தின்போது, ஆங்கிலேய காவல்துறையினர் அவர் மேல் சேற்றுத் தண்ணீரை வாரியிறைக்க, அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், ஆங்கிலேய எதிர்ப்புக் குரலை எழுப்பிக் கொண்டிருந்தார் கோதைநாயகி. அவரை வேறு வழியின்றி கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு' என்று கூறியிருக்கிறார் கோதையின் மருமகளான பத்மினி சீனிவாசன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறை சென்ற பின்னும் ஜகன்மோகினி வெளிவருவதில் எந்தத் தடையும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் கோதைநாயகி. சிறையில் இருந்தபடியே துண்டுக் காகிதங்களில் கதைகளையும் தொடர்களையும் கணவர் மூலம் எழுதியனுப்பினார். `சோதனையின் கொடுமை' நாவல் சிறையில் உருப்பெற்றது. அன்றைய தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜாஜியின் மனதைக் கவர்ந்தது இந்த நாவல். காங்கிரஸ் மேடைகளில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்றோருடன் இணைந்து பேசும் வாய்ப்பு கோதைநாயகிக்குக் கிடைத்தது. ஏ.கே. செட்டியார் தயாரித்து, இயக்கி வெளியிட்ட `காந்தி' என்ற குறும்படத்தில் காட்சிகளுக்கு விளக்கம் தந்து பேசியிருக்கிறார்.

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் கோதைநாயகியின் `அநாதைப் பெண்' நாவலை திரைப்படமாகத் தயாரித்தது. அதை அடுத்து `ராஜ்மோகன்', `தயாநிதி', `தியாகக்கொடி', `நளினசேகரன்' போன்ற இவரின் நாவல்கள் படமாக்கப்பட்டன. தயாநிதி நாவல், `சித்தி' என்ற பெயரில், நடிகை பத்மினியின் மறுபிரவேசப்படமாக அமைந்தது. `சித்தி' படத்தின் திரைக்கதைக்கு மாநில அரசு விருது கோதைநாயகிக்குக் கிடைத்தது (இறப்புக்குப்பின்).

இரண்டாம் உலகப்போர் மூண்ட நேரம், சென்னை நகரமே தாக்குதல் பயத்தில் காலியானது. திருவல்லிக்கேணியில் இயங்கிவந்த ஜகன்மோகினி பிரசுரம் சிங்கப்பெருமாள்கோயிலுக்கு இடம் மாறியது. எந்தச் சூழலிலும் இதழ் வெளியாவது தடைப்படவில்லை. கோதைநாயகி உடல்நலம் குன்றிப்போன இறுதி நாள்கள் வரை, கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் தடையின்றி வெளிவந்தது. 1948-ம் ஆண்டு காந்தியின் சாம்பல் கரைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோதைநாயகி, அதே ஆண்டு மார்ச் 7 அன்று `மகாத்மாஜி சேவா சங்கம்' என்ற அமைப்பை திருவல்லிக்கேணியில் தொடங்கினார். அதன் மூலம் ஏழைகள், ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கு உதவினார். இசைப் பயிற்சி, தையற்கலை, இந்தி, சர்க்காவில் நூல் நூற்பது என்று தனக்குத் தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுத்தார். இலவசமாக குழந்தைப் பேறு பார்த்துவந்தார். ஆதரவற்ற பெண்களுக்கு இதைக் கற்றும் தந்தார். இவரது சேவையைப் பாராட்டி அரசு வழங்கிய நிலத்தை, வினோபாவேயின் பூதான இயக்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டார்.

அற்புதமான குரல்வளத்தோடு இவர் பாடி, சில கிராமபோன் டிஸ்க்குகள் வெளியிடப்பட்டன. ஹம்சபராமரி, தாராதரி போன்ற புதிய கர்னாடக இசை ராகங்களை அறிமுகம் செய்தார். இவர் வசித்த பகுதியில் வாழ்ந்த பாரதியாரின் அபிமான பாடகி, கோதைநாயகியேதான். பாரதியின் `ஆடுவோமே பள்ளு பாடுவோமே' பாடல் இவர் குரலில் கற்பனைசெய்து பாரதி எழுதியதே என்று சொல்வோருண்டு. டி.கே.பட்டம்மாள் என்ற பெரும் பாடகியை இசையின்பால் ஈர்த்து, அவர் குடும்பத்தின் அனுமதி பெற்று நட்சத்திரம் ஆக்கியதில் பெரும்பங்கு கோதைநாயகிக்கு உண்டு.

1956-ம் ஆண்டு மகன் சீனிவாசன் இறந்துபோக, அதிலிருந்து மீளவே முடிய வில்லை கோதைநாயகியால். தொடர்ந்து நோய்வாய்ப்பட்டவர், காசநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1960 பிப்ரவரி 20 அன்று உயிரிழந்தார். வாழ்நாளில் 115 நாவல்கள் எழுதி, 100 பெண்களை எழுத்துலகத்துக்குக் கொணர்ந்தவர்; கவியோகி சுத்தானந்த பாரதியால் `புதின அரசி' என்று அழைக்கப்பட்ட கோதைநாயகி, வரலாறு பெரிதும் மறந்துபோன முதல் பெண்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism