Published:Updated:

அம்மாயிக்கும் நான்தான் அம்மா!

பத்மாவதி
பிரீமியம் ஸ்டோரி
பத்மாவதி

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

அம்மாயிக்கும் நான்தான் அம்மா!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

Published:Updated:
பத்மாவதி
பிரீமியம் ஸ்டோரி
பத்மாவதி

அடிமாடாக விற்கப்பட்ட காராம்பசு ஒன்றை மீட்டு, கடந்த பத்து வருடங்களாக குழந்தையாகப் பாவித்து வளர்த்து வருகிறார் இந்த அற்புத அம்மா!

ரூர் மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது, திருமுக்கூடலூர். அதுதான் பத்மாவதிக்குச் சொந்த ஊர். அவரே முன்கதை சொல்கிறார்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“எங்களுக்குத் தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, கலைவாணின்னு மூணு பிள்ளைகள். பிள்ளைகளைத் தவிர சொத்துன்னு சொல்லிக்க எதுவும் இல்லை. நாலைஞ்சு மாடுகளை மேய்ச்சு, அதுங்க தந்த பால் வருமானத்தைக் கொண்டுதான் பிள்ளைகளை ஆளாக்கினோம். பெரியவன் ஆசிரியரா இருக்கான். சின்னவன் ஒரு டெக்ஸ்டைல்ஸ்ல வேலைபாக்குறான். மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்துட்டோம். இப்படி குடும்பத்தைப் பழுதில்லாம, இத்தனை காலம் நகர்த்தியது நான் வளர்த்த மாடுகள்தாம்'' என்றபடி ‘அம்மாயி’ பசுவை வருடிகொண்டே பேசுகிறார் பத்மாவதி.

“பக்கத்துல இருக்கிற ஒத்தக்கடைங்கிற ஊரைச்சேர்ந்த பையன் கார்த்திக். அவங்க வீட்டுல 20 வருஷத்துக்கு மேல வளர்ந்தவ இந்த அம்மாயி. இவ மேல கார்த்திக் பயலுக்கு அவ்வளவு பாசம். தாய்வழி பாட்டியை எங்க பகுதியில ‘அம்மாயி’ன்னு சொல்லுவோம். அதனால இந்தப் பசுவுக்கும் அம்மாயின்னு பேரு வெச்சு வளர்த்திருக்கான். அவங்க வீட்டுல 16 கன்னுக்குட்டிகள் வரை பிரசவிச்சிருக்கா இந்த அம்மாயி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேல்படிப்பு படிக்கிறதுக்காக கார்த்திக் வெளியூருக்குப் போயிட்டான். அவங்க அம்மாதான் இதை பராமரிச்சிருக்காங்க. அப்போ இந்த மாட்டுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர், “இனி இந்த மாடு கன்னு போடாது. அடிமாட்டுக்குத்தான் லாயக்கு’ன்னு சொல்லியிருக்கார். ‘இதை வளர்த்துப் பிரயோசனம் இல்லே’ன்னு தரகர் மூலமா 10,000 ரூபாய்க்கு மாட்டை வித்துட்டாங்க, கார்த்திக்கோட அம்மா. அன்னிக்கு ராத்திரி வீட்டுக்கு வந்த கார்த்திக், அம்மாயியைத் தேடியிருக்கான். வித்துட்டாங்கன்னு தெரிஞ்சதும், துடிச்சுப்போயிட்டான். `என்னை கேட்காம எப்படி வித்தே... உனக்கு வயசாயிருச்சு... அதனால உன்னை விக்கட்டுமா'ன்னு அம்மாக்கிட்ட சண்டை போட்டிருக்கான்.

‘மாட்டை வெட்டியிருக்கக் கூடாது’ன்னு சாமிகளையெல்லாம் வேண்டிக்கிட்டு, ராத்திரி பூரா கண்ணுல பொட்டுத்தூக்கம் இல்லாம புலம்பிட்டு இருந்திருக்கான். விடிஞ்சும் விடியாததுமா ஓடிப் போய் தரகரைப் பார்த்திருக்கான். நல்லவேளையா, அம்மாயியை தரகர் அடிமாடா அனுப்பாம வெச்சுருந்திருக்கார். தரகர் கையில கால்ல விழுந்து, வித்த காசைவிட 2,500 ரூபாய் அதிகமாக் கொடுத்து, அம்மாயியை மீட்டுட்டான். ஆனா, ‘என்னால அந்த மாட்டை இனி பராமரிக்க முடியாது’ன்னு அவங்க அம்மா சொல்லிட்டாங்க. அப்போதான், ஊர்ல சிலர், எங்க ஊர் அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு அம்மாயியை நேந்துவிடச் சொல்லியிருக்காங்க. அம்மாயியை கோயில்லவிட வந்திருந்தவனை அங்கதான் நான் பார்த்தேன்.

`ஒரு மூணுமாசம் இந்த மாட்டை உங்க வீட்டுல பராமரிக்க முடியுமா'ன்னு கேட்டான். `கறவை அத்துப்போன மாட்டை வெச்சு என்ன பண்றது?’ன்னு வீட்டுல தடுத்தாங்க. ஆனா, மாட்டுமேல அந்த கார்த்திக் பய வச்சிருந்த பாசத்தைப் பார்த்து, `இந்த மாட்டை ஆயுசுக்கும் நான் பார்த்துக்குறேன் கண்ணு. நீ போய், உன் படிப்பைப் பாரு... அம்மாயியையும் சேர்த்து இனி எனக்கு நாலு பிள்ளைங்க’ன்னு மாட்டை ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். என்கிட்ட வந்தபிறகு, ஒரே ஒரு காளைக்கன்னு மட்டும் போட்டுச்சு. அதை வித்து, காசை கார்த்திக்கிட்ட கொடுத்தேன். அதை வெச்சு கோயில்ல அன்னதானம் போட்டுட்டான். இந்தப்பக்கம் வரும் போதெல்லாம் அம்மாயியைப் பார்த்து, தடவிக்கொடுத்துட்டுப் போவான்...” என்கிறார் பத்மாவதி.

அம்மாயிக்கும் நான்தான் அம்மா!

“அம்மாயி இப்போ உசுரோட இருக்க காரணமா இருந்த கார்த்திக் சில நாள்களுக்கு முன்னாடி தற்கொலை பண்ணிக்கிட்டான். எனக்கு ஈரக்குலையே ஆடிப்போயிருச்சு. ஒரு வாயில்லாத ஜீவன்மேல இவ்வளவு பரிவுகாட்டின அவனுக்கு, அப்படி என்ன துயரமோ தெரியலே...

அம்மாயியும் முன்னமாதிரி இல்லை. அவளுக்கு வயசாயிருச்சு. நடக்க சிரமப்படுறா... அதனால, கட்டுத்தரையிலேயே கட்டிவெச்சு, கண்ணுங்கருத்துமா கவனிச்சுக்கிட்டு வர்றேன். என்னாலயும் பராமரிக்க முடியலே. அதனால, பாலுக்காக வளர்த்த மூணு மாடுகளை நாலு மாசத்துக்கு முன்னாடி வித்துட்டேன். `உடம்பு ஒத்துழைக்கலைன்னு லாபம் தந்த மாடுகளையே வித்துப்புட்ட. ஆனா, சல்லிக்காசுக்குப் பெயராத இந்த அம்மாயியை மட்டும் ஏன் கட்டிக்கிட்டு அழுவுறே'ன்னு அக்கம்பக்கத்து குடித்தனக் காரங்க கேட்டாங்க. ‘அந்த மாடுங்க இன்னும் நிறைய கன்னுக்குட்டிகளை ஈனும். அதனால அடிமாடுகளா விக்க மாட்டாங்க’ங்கிற நம்பிக்கை இருக்கு. ஆனா, `அம்மாயி அப்படி இல்லையே’ன்னு அவங்களுக்குப் பதில் சொன்னேன்.

`அம்மாயி இயற்கையா சாகுறவரைக்கும் என்கூடதான் இருக்கும். எனக்கு முன்னாடி அது இறந்தா, வீட்டுக்கு ஓரத்துல அதைப் புதைக்கணும்’னு முடிவு பண்ணியிருக்கேன்” என்று நெகிழ்கிறார் பத்மாவதி.

அந்தத் தாயின் அரவணைப்பின் அர்த்தம் புரிந்தோ என்னவோ, அம்மாயி பெருங்குரலெடுத்துக் கத்துகிறது. அந்த வெளியெங்கும் அன்பின் அடைமழை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism