Published:Updated:

ரசனையைவிட முக்கியம் பாதுகாப்பு! - ப்ரீவெடிங் போட்டோகிராபி டிப்ஸ்

ப்ரீவெடிங் போட்டோகிராபி
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரீவெடிங் போட்டோகிராபி

#Lifestyle

திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு என்ற கலாசாரம் வந்தபோது அதைப் பலரும் விமர்சனம் செய்தார்கள். இன்று அது இயல்பான நிகழ்வாகிவிட்டது. அதேபோல இன்னொரு டிரெண்டும் பரவலாகி வருகிறது. அது ப்ரீவெடிங் போட்டோஷூட். அதை சுவாரஸ்யமாக்கும் எண்ணத்தில் சமீபத்தில் கிளம்பிய சர்ச்சைகளையும், நிகழ்ந்த விபரீதங்களையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ப்ரீவெடிங் போட்டோஷூட்டை பாதுகாப்பாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றும் வழிமுறைகளை விளக்குகிறார் வெடிங் போட்டோகிராபர் சாரதா.

பிளானிங்

திருமணத்தன்றும் அதன் பிறகும் மணமக்கள் விருந்து, ஹனிமூன் என பிஸியாக இருப்பார்கள். பிரத்யேக போட்டோ ஷூட்டுக்கு நேரம் இருக்காது என்பதால்தான் ப்ரீவெடிங் கலாசாரம் பரவத் தொடங்கியது.

ரசனையைவிட முக்கியம் பாதுகாப்பு! - ப்ரீவெடிங் போட்டோகிராபி டிப்ஸ்
ரசனையைவிட முக்கியம் பாதுகாப்பு! - ப்ரீவெடிங் போட்டோகிராபி டிப்ஸ்

ப்ரீவெடிங் ஷூட்டுக்கு பிளான் செய்பவர்கள் புகைப்படம் எடுக்கப்போகும், இடம், தேதி, உடைகள் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் போட்டோகிராபர் பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஏற்கெனவே போட்டோஷூட் செய்த தம்பதியரிடம்கூட விசாரிக்கலாம். நீங்கள் திருமணத்துக்கு ஃபிக்ஸ் செய்துள்ள போட்டோகிராபருடனேயே ப்ரீவெடிங் போட்டோஷூட் செய்தால் வசதியாக உணர முடியும். திருமணத்துக்கு 20 நாள்களுக்கு முன் ப்ரீவெடிங் போட்டோ ஷூட்டுக்குத் திட்டமிட்டால் கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்கலாம்.

இடத்தேர்வு

பட்ஜெட்டுக்கேற்ப இண்டோர் அல்லது அவுட் டோர் இடங்களைத் தேர்வு செய்யலாம். அதற்கு முன் அந்த இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு அறிமுகம் இல்லாத இடம் எனில், அந்த இடம் பற்றி நன்கு தெரிந்த யாரேனும் ஒருவரை உடன் அழைத்துச் செல்லலாம். கூடுமானவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களைத் தவிர்க்கலாம்.

அவுட்டோர்தான் அழகு என்று யோசிக்காமல் இண்டோர் அல்லது ஸ்ட்ரீட் போட்டோகிராபியைத் தேர்வு செய்யலாம். இவை எல்லா வற்றையும்விட உங்களுடைய எமோஷன்கள் புகைப்படங்களை அழகாகக் காட்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

ரசனையைவிட முக்கியம் பாதுகாப்பு! - ப்ரீவெடிங் போட்டோகிராபி டிப்ஸ்
ரசனையைவிட முக்கியம் பாதுகாப்பு! - ப்ரீவெடிங் போட்டோகிராபி டிப்ஸ்

ஆடைத்தேர்வு

உடைகள் மற்றும் மேக்கப்பை பொறுத்தவரை ஷூட் செய்வதற்கு சில தினங்கள் முன்பே ஒரு முறை டிரையல் பார்த்துக்கொண்டால் சொதப்பல்களைத் தவிர்க்கலாம். உடைகளின் நிறங்கள், போட்டோஷூட் செய்யப் போகும் இடம், பேக்ரவுண்டுக்கு ஏற்றவாறு இருக்கட்டும்.

தம்பதி இருவரும் ஒரே நிறத்தையோ, கான்ட்ராஸ்ட் நிறத்தையோ தேர்வு செய்யலாம். நியான் நிறங்கள், பிரைட் நிறங் களைத் தவிர்க்கலாம். அணிய வசதியில்லாத ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.

ரசனையைவிட முக்கியம் பாதுகாப்பு! - ப்ரீவெடிங் போட்டோகிராபி டிப்ஸ்

பார்ட்னரின் சம்மதம்

காதல் திருமணம் எனில், ஒருவரை ஒருவர் முன்பே நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அதனால் போட்டோஷூட்டில் தயக்கம் இருக்காது. ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு புரிந்துணர்வு குறைவாகவே இருக்கும். எனவே, ப்ரீவெடிங் போட்டோஷூட்டுக்கு பிளான் செய்யும்போதே பார்ட்னரின் சம்மதத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். போஸ், இடம், தீம் என எல்லாவற்றையும் முன்பே பேசி தெளிவு படுத்திக்கொண்டால் தேவையில்லாத மனக்கசப்பு களைத் தவிர்க்கலாம்.

சமூக வலைதளங்கள் வேண்டாமே...

சில வீடுகளில் பெற்றோர்களுக்கு ப்ரீவெடிங் போட்டோஷூட்டில் உடன்பாடு இருக்காது. அது போன்ற சூழலில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர் வதைத் தவிர்க்கலாம். கடைசி நேரத்தில்கூட திருமணங்கள் நின்று போகும் செய்திகளை அடிக்கடி கேள்விப்படுவதால், ப்ரீவெடிங் படங்களைத் திருமணத்துக்குப் பின் பகிர்வது நல்லது.

பாதுகாப்பு முக்கியம்

புகைப்படங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக உயிரைப் பணயம் வைத்து ரிஸ்க் எடுக்கக் கூடாது. ஆறு, ஏரி, குளங்கள், அதிக உயரமான இடங்கள், பாரா கிளைடிங் போன்ற சாகசங்கள் போன்றவற்றைத் தவிர்க்கலாம். புகைப்படம் எடுக்க காரில் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால் அவசியம் சீட் பெல்ட் அணிந்து செலுங்கள்.

வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க ரம்மியமான நிமிடங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பாதுகாப்பும் முக்கியம்” என்று விடைபெற்றார் சாரதா.