Published:Updated:

வெல்வெட் முதல் கேப் கவுன் வரை... குளிர்காலத் திருமண உடைகளுக்கான டிப்ஸ்!

கானப்ரியா

ஃபேஷனில் எந்தவித சமரசமும் செய்யாமல், குளிர்காலத்திற்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான டிப்ஸ் இதோ...

Anushka Sharma in Bridal Costume
Anushka Sharma in Bridal Costume

குளிர்காலத்தில், மழையோடு திருமண மண்டபங்களும் நிறைந்திருக்கும். ஆடல், பாடலோடு குளிர்காலத் திருமணங்களில் பனி படர்ந்த இரவில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ்ந்திருக்க, அன்று பருகும் சூடான தேநீர்கூட நிச்சயம் ஸ்பெஷல்தான். விருந்தினர்களின் வருகையால் மனநிறைவு பெற்றிருந்தாலும், மணப்பெண்ணின் கவலை, அவரின் ஆடைபற்றிதான் பெரும்பாலும் இருக்கும். மழையால் சேதமாகிவிடுமோ, அணியும் உடை குளிருமோ போன்ற சந்தேகங்கள்தான் அதிகம் மனதில் எழும். ஃபேஷனில் எந்தவித சமரசமும் செய்யாமல், குளிர்காலத்திற்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான டிப்ஸ் இதோ...

முழுநீளக்கை பிளவுஸ்:

Full Sleeve Blouse
Full Sleeve Blouse

குளிரினால் அடிக்கடி உடல் சிலிர்த்துக்கொள்ளும். அதிலும், மணப்பெண்ணாக ஜொலித்துக்கொண்டிருக்கும்போது, இதுபோன்ற தருணங்களைச் சமாளிப்பது கடினம்தான். இந்தச் சூழலில், முழுநீளக்கை பிளவுஸ் பெரிதும் உதவும். Cap, Off-Shoulder ஸ்லீவ் போன்ற ஸ்லீவ் வகைகளைத்தான் திருமணத்திற்காகத் தற்போதுள்ள பெண்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், கற்கள் பதித்த முழுநீளக்கை பிளவுஸ் வித்தியாசமான தோற்றத்தோடு அதிகப்படியான குளிரையும் கட்டுப்படுத்தும். பிரின்ட்ஸ், எம்ப்ராய்டரி என எந்த வகை பேட்டர்னாகட்டும், வெல்வெட், சிபான் போன்று எந்தத் துணி வகையாகட்டும் முழுநீளக்கை குளிருக்குக் கைகொடுக்கும்.

ராயல் ஜாக்கெட்:

Lehenga with Jacket
Lehenga with Jacket

வரவேற்பு நிகழ்ச்சிகளில் பெரும்பாலான இந்தியப் பெண்களின் சாய்ஸ், 'லெஹெங்கா சோலிதான்'. காக்ரா முதல் மெர்மெயிட் வரை ஏராளமான வடிவமைப்பில் தற்போது லெஹெங்கா குவிந்துள்ளன. அதில், 'ஜாக்கெட்' வகை லெஹெங்கா, குளிர்காலத்திற்கு மிகவும் சிறந்தது. ஆனால், இந்த வகை லெஹெங்காவைத் தேர்ந்தெடுக்கும்போது, துணிவகையை மனத்தில் வைத்துக்கொள்வது அவசியம். எளிமையான ஜாக்கெட் வகை லெஹெங்காக்களும் இருக்கின்றன. 'மிக்ஸ் அண்ட் மேட்ச்' கேட்டகரியிலும் ஸ்டைலிஷ் ராயல் ஜாக்கெட்டை அணிந்து வித்தியாசத் தோற்றம் பெறலாம்.

கேப் கவுன் (Cape Gown):

Kareena Kapoor in Cape Gown
Kareena Kapoor in Cape Gown

தோள்பட்டையைச் சுற்றி அணிந்துகொள்ளும் பிளவுஸ், 'கேப்' பிரிவில் வருபவை. இது, நிச்சயம் பகட்டான தோற்றத்தைத் தரும். அதே நேரம், அதிகப்படியான குளிரிலிருந்தும் தக்கவைத்துக்கொள்ளும். முன்பு எளிமையான பேட்டர்ன்களில் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த கேப் கவுன், தற்போது கனமான எம்ப்ராய்டரி மற்றும் கற்கள் பதித்த பேட்டர்ன்களிலும் கிடைக்கின்றன. எப்போதும் உடுத்தும் லெஹெங்கா, புடவை போன்றவற்றை ஓரம் கட்டிவிட்டு, ஸ்டைலான கேப் கவுன்களை குளிர்கால மணப்பெண்கள் கொஞ்சமும் யோசிக்காமல் தேர்ந்தெடுக்கலாம்.

வெல்வெட்:

Velvet Saree
Velvet Saree

திருமண உடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது, டிசைன், பேட்டர்ன், நிறங்களோடு துணிவகையையும் பார்த்து தேர்வு செய்வது அவசியம். குளிர்கால மணப்பெண்ணுடைய உடை, கனமான துணிவகையிலானவையாக இருப்பது முக்கியம். அதிகப்படியான காற்றோட்டத்தோடு இருந்தால், குளிர் தாங்க முடியாத நிலை ஏற்படும். அந்த வகையில், கனமான வேலைப்பாடுகள் நிறைந்த வெல்வெட் ஆடைகளைச் சற்றும் யோசிக்காமல் தேர்ந்தெடுக்கலாம். லெஹெங்கா முதல் அனார்கலி வரை எந்தவித உடையானாலும், வெல்வெட் துணிவகை உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளும். பட்டு மற்றும் நெட் லெஹெங்காவைவிட, வெல்வெட் குளிர்காலத்திற்கு ஏற்றது. மேலும், 'பஷ்மினா' துணியை, உடுத்தும் பிளவுஸ் அல்லது துப்பட்டாவோடு இணைத்துத் தைப்பதன்மூலம், குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ளமுடியும்.

நிறம்:

Pastel Shades
Pastel Shades

பிரைட் நிறங்களைவிட ஃபேன்ஸி நிறங்களை குளிர்காலத்தில் தேர்ந்தெடுக்கலாம். பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களில் பேஸ்டல் டோன்களைத் தேர்வுசெய்யலாம். அல்லது 'நியூட்' ஷேடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவை, காலநிலைக்கு ஏற்றதுபோல சாந்தமான மனநிலையையே உருவாக்கும்.

ஸ்பெஷல் டிப்ஸ்:

அனார்கலி, லெஹெங்கா சோலி, கவுன், புடவை என எந்த உடை அணிந்தாலும், முழங்கால் வரை நீண்டிருக்கும் leg warmer-ஐ பயன்படுத்தலாம். எப்போதும் பஷ்மினா ஷால் ஒன்றை, திருமண உடைக்கு ஏற்ற நிறத்தில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது அதை உபயோகித்துக்கொள்ளலாம். காபி, தேநீர் போன்றவற்றை அவ்வப்போது பருகுவதன்மூலம், குளிரிலிருந்து ஓரளவிற்கு தற்காத்துக்கொள்ளலாம். தரை வரை நீண்டிருக்கும் உடையாக இருந்தால், 'பூட்ஸ்' வகை காலணிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.