Published:Updated:

பேசாக் கதைகள் - 6 | சுடுகாட்டில் அறுவை சிகிச்சை... திருநங்கைகளின் வலியை நாம் அறிந்திருக்கிறோமா?

பேசாக் கதைகள் | திருநங்கை

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

பேசாக் கதைகள் - 6 | சுடுகாட்டில் அறுவை சிகிச்சை... திருநங்கைகளின் வலியை நாம் அறிந்திருக்கிறோமா?

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

Published:Updated:
பேசாக் கதைகள் | திருநங்கை
இந்த எபிசோடை காவ்யாவோட மெயில்ல இருந்து தொடங்கலாம். 'எனக்காக ஒரு பத்து நிமிஷம் ஒதுக்க முடியுமா'ங்கிற பீடிகையோடதான் அந்த மெயிலை ஆரம்பிச்சிருந்தாங்க. காவ்யா, ஒரு திருநங்கை. காவ்யாவுக்கு நர்சிங் படிக்கனும்ன்னு ஆசை. ஆனா காலம் அவங்களை வேற வேற எல்லைடகளுக்குத் துரத்திக்கிட்டே இருக்கு.

காவ்யா ரொம்பவே உணர்வுப்பூர்வமா மெயில்ல பேசியிருக்காங்க.

"திருப்பத்தூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல பெறந்தவ நான். மூணு அண்ணன், ரெண்டு அக்கான்னு பெரிய குடும்பம். குடும்பத்தில எல்லாரும் என்னை ஆண்பிள்ளையாதான் பாத்தாங்க. ஆனா, ஆறேழு வயசுலயே என் உடம்பொரு மாதிரியும் மனசொரு மாதிரியும் இருக்கிறதை உணர்ந்துட்டேன். வளர, வளர எனக்குள்ள பெண்மையும் வளர்ந்துச்சு. அம்மா, அக்காவோட உடையைப் போட்டுப் பார்க்கிறது, லிப்ஸ்டிக் பூசிக்கிறது, ஃபேரன் லவ்லியை அள்ளி அப்பிக்கிறதுன்னு யாருமில்லாத நேரத்துல பரிபூரணமான பெண்ணா என்னை நான் மாத்திப்பாத்து சந்தோஷப்பட்டேன். ஆனா இதையெல்லாம் எவ்வளவு காலம் ஒழிஞ்சு ஒழிஞ்சு செய்ய முடியும். ஒருநாள் வீட்டுல கையும் களவுமா பிடிச்சுட்டாங்க. திட்டு, அடி, உதை... நான் என்னோட பிரச்னையை சொல்ல முயற்சி பண்ணேன். எனக்கும் சொல்லத் தெரியலே. அவங்களாலயும் புரிஞ்சுக்க முடியலை.

பாலினம்
பாலினம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டுல மட்டுமில்லை... வெளியில போனாலும் பிரச்னைதான். எங்க உடல்மொழியை வச்சு கேலி பேசுறது, தப்புத் தப்பா பேரு வச்சு மனசொடிய வைக்கிறதுன்னு நிறைய நடக்கும். ஸ்கூல்ல பொண்ணுங்ககூடவே இருக்கணும்னு தோணும். பாத்ரூம் போறதுகூட பெரிய பிரச்னை. உடலளவுல பையனா இருந்துட்டு பெண்கள் பாத்ரூமுக்குள்ள நுழைய முடியாது. பசங்க பாத்ரூம் போய் அவங்க பக்கத்துல நின்னு பாத்ரூம் போகவும் முடியாது. இந்த அவஸ்தையையெல்லாம் ஒரு ஆணாலயோ பெண்ணாலயோ முழுசா உணரமுடியாது சார்... ஒரு திருநங்கையா இருந்தாமட்டும்தான் புரியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நேரத்துல நம்மைப் புரிஞ்சுக்கிட்ட ஓர் உயிரை எங்காவது பார்க்க மாட்டோமான்னு இருக்கும். அப்போதான் சுதாம்மாவைப் பாத்தேன். அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டிருந்தேன். சுதாம்மா, தினமும் எங்க ஸ்கூலைக் கடந்து போவாங்க. முதல் பார்வையிலேயே சுதாம்மா என்னை அடையாளம் கண்டுக்கிட்டாங்க. ஒருநாள் என்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே என்னை மாதிரி நிறைய பேர் இருந்தாங்க. அவங்க எல்லார்கிட்டயும் என் மகள்ன்னு என்னை அறிமுகம் செஞ்சாங்க. நிச்சயமா நான் இங்கேயிருக்க வேண்டியவதான்னு புரிஞ்சுச்சு. "அம்மா நான் இங்கேயே இருந்திர்றேன்னு சொன்னேன்..."

"அது ரொம்ப தப்பும்மா... நீ எப்போ வேணும்னாலும் வந்து போகலாம். ஆனா நீ இருக்க வேண்டியது உன் அப்பா அம்மா கூடத்தான்"னு அனுப்பி வச்சாங்க.

நாளாக நாளாக வீட்டுல கொடுமைகள் அதிகமாச்சு. அடி, உதை, அவமானம்... ஒருநாள் இரவு யாருக்கும் தெரியாம கொஞ்சம் துணிகளை எடுத்துக்கிட்டு சுதாம்மா வீட்டுக்கே வந்துட்டேன்..."ன்னு தொடருது காவ்யாவோட மெயில்.

போனவரைக்கும் சரின்னு காவ்யாவைத் தேடக்கூட இல்லையாம் அவங்க வீட்ல. அப்பா அம்மாக்கிட்ட சேர்த்து வைக்க சுதாம்மா எடுத்த முயற்சிகளுக்கும் பயனில்லை. இனிமே அவ எங்க வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லி தலைமுழுகிட்டாங்க.

பெண்
பெண்

"சுதாம்மாவோட அரவணைப்புல வளர்ந்தேன். என்னை அழைச்சுக்கிட்டு சென்னைக்கு வந்துட்டாங்க. திருநங்கைகளோட உலகத்துல நானும் வாழ்ந்தேன். சித்தி, அத்தை, பாட்டின்னு நிறைய உறவுகள் கிடைச்சாங்க. சுதாம்மா என்னை படிக்க வச்சாங்க. ஒரு கட்டத்துக்கு மேல படிப்புல நாட்டம் போகலே. என்னதான் மனதளவுல பெண்ணா இருந்தாலும் உடம்புல ஒட்டிக்கிட்டிருக்கிற உறுப்பு ஒவ்வொரு நொடியும் நீ ஆம்பளை ஆம்பளைன்னு சொல்லாமச் சொல்லிக்கிட்டிருக்கும். மும்பைக்குப் போனா ஆபரேஷன் பண்ணிடலாம்ன்னு கூட இருந்தவ சொன்னதை நம்பி கிளம்புனேன்.

ஆபரேஷனுக்கு நிறைய செலவாகும்ன்னு சொன்னாங்க. என்னதான் கடைகடையா ஏறி இறங்கி கைதட்டி காசு கேட்டாலும் ஒருநாளைக்கு இருநூறு ரூபா கிடைச்சாப் பெருசு. சாப்பாட்டுக்கே அது சரியாப் போகும். எங்களுக்கிருக்கிற ஒரே வழி... பாலியல் தொழில்... எங்களுக்கு விதிச்ச விதி அது. அந்த படுகுழியில விழுந்தேன். மூணு வருஷம்... மும்பை வாழ்க்கையில சம்பாதிச்ச பணத்தை வச்சு அறுவை சிகிச்சை செஞ்சுக்கிட்டு முழுமையான பெண்ணா சென்னைக்கு திரும்ப வந்தேன். திரும்பவும் சுதாம்மா கால்லபோய் விழுந்தேன். அவங்க என்னை ஏத்துக்கிட்டாங்க..." - காவ்யாவோட பகிர்வு ரொம்பவே விரிவா இருக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருண்ங்கிற ஆட்டோ டிரைவர் காவ்யாவுக்கு பழக்கமானதுல இருந்து காவ்யா வாழ்க்கையில இன்னொரு பிரச்னை ஆரம்பிக்குது. பொதுவா திருநங்கைகள் தன்னை ஒரு ஆண் திருமணம் செஞ்சுக்கனும்னு விரும்புறது ரொம்பவே இயல்புதான். பிறப்புல பிழையாகி மனதும் உடலும் வேற வேறயா பிறக்கிற திருநங்கைகள் தன்னை இந்த உலகம் பெண்ணுன்னு ஏத்துக்கணும்னுதான் காலம் முழுதும் போராடுறாங்க. ஒரு ஆண் தன்னை நேசிக்கிறதுலதான் அது பரிபூரணமாகும்ன்னு நம்புறாங்க. காவ்யா, அருணோட காதல்ல விழுந்துட்டாங்க.

"எனக்கும் அருண் மேல காதல் இருந்துச்சு. ஆனா, இந்த உலகம் நம் உறவை ஏத்துக்காதுன்னு எதார்த்தத்தை அவருக்கு புரிய வைக்க முயற்சி செஞ்சேன். வாழ்ந்தா உன்னோடதான்னு உறுதியா நின்னார். ஒரு கட்டத்துல அவர்தான் என் உலகம்ன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன். இதுவரைக்கும் நான் சேர்த்து வச்சிருந்த பணம், நகைன்னு எல்லாத்தையும் அவருக்காக இழந்தேன். கூட இருந்த பல தோழிகள் என்னை எச்சரிச்சாங்க. எதுவும் என் காதுல ஏறலே. ரெண்டு பேரும் ஒரு கோயில்ல வச்சு திருமணம் செஞ்சுக்கிட்டோம். அண்ணாநகர்ல ஒரு வீடு பிடிச்சு தங்கினோம். கடன் வாங்கி ஆட்டோ வாங்கிக்கொடுத்தேன். இரவு மட்டும்தான் வீட்டுக்கு வருவார். விடியறதுக்கு முன்னால எழுந்து போயிடுவார். என்கிட்ட இருந்த காசு பணத்தையெல்லாம் பறிச்சுத் தின்னபிறகு என்னை வெறுத்து ஒதுக்க ஆரம்பிச்சுட்டார்.

காதல்
காதல்

படிப்படியா குடிக்கு அடிமையானார். அடிக்க ஆரம்பிச்சார். ஒரு கட்டத்துல வீட்டுக்கே பெண்களை அழைச்சுட்டு வந்தார். என்னை அடிச்சு வெளியில துரத்திட்டு அந்த பெண்ணோட இருப்பார். இரவு முழுவதும் பைத்தியம் மாதிரி ரோட்டுல நின்னிருக்கேன். என்ன இருந்தாலும் நீ பொண்ணாக முடியுமா, எனக்கு ஒரு குழந்தையைப் பெத்துத்தர முடியுமான்னு கேப்பார்.

அவர் கேக்குறது நியாயம் தானே... நாங்கள்லாம் பாவப்பட்ட பிறப்புங்கதானே... நீங்களே சொல்லுங்க... நாங்க இப்படி பொறக்கனும்ன்னு வரம் வாங்கிட்டா வந்து பிறந்தோம்..."- மெயில் நிறைய துயரங்களை சுமந்துக்கிட்டிருந்தது.

காவ்யா மட்டுமில்லை... ஆண்களை நம்பி வாழ்க்கையை தொலைச்சுட்டு பைத்தியமான, தற்கொலை செஞ்சுக்கிட்ட பல திருநங்கைகளை நான் பாத்துருக்கேன். உண்மையில நம் சமூகத்தில ரொம்பவே பாவப்பட்ட உயிர்களாத்தான் திருநங்கைகள் வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

கல்கி மாதிரி, பிரியா பாபு மாதிரி பொது விஷயங்களுக்காகவும் களத்துக்கு வர்ற அளவுக்கு திருநங்கைகள் வளர்ந்திருக்காங்க. மாடலிங்ல, காவல்துறையில, மருத்துவத்துறையில, போக்குவரத்துத் துறையிலன்னு எல்லாத் துறைகள்லயும் திருநங்கைகளோட பங்களிப்பு இருக்கு. ஆனா, இன்னைக்கும் பல திருநங்கைகளுக்கு பாலியல் தொழில்தான் வாழ்வாதாரமா இருக்குங்கிறது பெரிய முரண். இதுக்கு நாமளும் ஏதோவொரு வகையில காரணம்.

முதல்ல திருநங்கைகள் பத்தி நம்ம பார்வை எப்படியிருக்கு? ஆண் மாதிரி பெண் மாதிரி திருநங்கைகள் மூன்றாம் பாலினம். ஆணாப் பிறந்து பெண் மனதோட வாழுறவங்களைப் போலவே பெண்ணாப் பிறந்து ஆண் மனதோட வாழ்றவங்களும் நம் சமூகத்தில நிறைய இருக்காங்க. அவங்களை திருநம்பிகள்ன்னு சொல்றோம். சக ஜீவிகளா நம்மகூட வாழ்ற இவங்களைப் பத்தி நமக்கு எந்தளவுக்கு புரிதல் இருக்கு?

திருநங்கை உருவாகுறது பழக்க வழக்கத்தாலையோ, வளர்ப்பாலயோ இல்லை. பிறப்பிலேயே நிகழ்கிற பிழை. மிகப்பெரிய பாலினச் சிக்கலோட பிறக்கிற பிள்ளைகளோட பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்டு எத்தனை பெற்றோர் ஆதரவு கொடுக்கிறாங்க. அடியும் உதையும் அவமானமும்தானே இன்னைக்கும் துரத்துது.

பெண், ஆண்
பெண், ஆண்

திருநங்கைகளை நாம எப்படிப் பார்க்கிறோம். பொதுவிடத்தில கைதட்டி காசு கேக்குறவங்களா, பிச்சையெடுக்கிறவங்களா, கோபம் வந்தா துணியைத் தூக்கிக்காட்டி சண்டை போடுறவங்களா, பாலியல் தேவைக்காக அலையுறவங்களாத்தானே தெரிஞ்சு வச்சிருக்கோம்.

ஆணுடலோட பெண்ணும், பெண்ணுடலோட ஆணுமா இருக்கிற ஒரு வாழ்க்கையை உங்களால கற்பனை செஞ்சுபாக்க முடியுதா? அவங்க வாழ்நாள் முழுவதும் அந்த துயரத்தை சுமக்கிறாங்க. எந்த நிமிடத்துல தன் உடம்பிலருந்து ஆணுக்கு அடையாளமா இருக்கிற உறுப்பு அறுந்து விழுகுதோ அதுதான் அவங்க பரிபூரணமாகுற நேரம்.

இன்னைக்கு அரசு மருத்துவமனைகள்லயே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்றாங்க. அந்தக்காலத்துல அந்த வசதிகளெல்லாம் இல்லை. நாற்பது வயதான திருநங்கைகள்கிட்ட பேசினிங்கன்னா அந்த துயரக்கதையைச் சொல்லுவாங்க. வசதியான திருநங்கைகள் செலவுபண்ணி தாய்லாந்துக்குப் போய் அறுவை சிகிச்சை செஞ்சுக்குவாங்க. வசதியில்லாத அபலை திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை சுடுகாட்டுலதான் நடக்கும்.

இறந்துட்டாப் புதைக்க குழி வெட்டி வச்சுட்டுத்தான் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாட்டையே தொடங்குவாங்க. அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய திருநங்கையை சுடுகாட்டுக்கு அழைச்சுட்டுப் போய் விரும்பிய தின்பண்டத்தையெல்லாம் சாப்பிட வைச்சு கிட்டத்தட்ட வாழ்க்கையோட இறுதிநாளா அதை உணரவைப்பாங்க. அனுபவமுள்ள மூத்த திருநங்கை நள்ளிரவுல அவங்க ஆணுறுப்பை சவரக்கத்தியால வெட்டி எடுப்பாங்க. கொட்டுற ரத்தத்தோட பூண்டுத்தோலை புகையவிட்டு அந்தப்புகையை வெட்டுக்காயத்துல படவிடுவாங்க. அதுதான் வைத்தியம். அறுவை சிகிச்சை செஞ்ச காயத்துல சீல் வச்சு காலம் முழுவதும் அவதிப்பட்ட பல திருநங்கைகள் இருக்காங்க.

குடும்பத்தால புறக்கணிக்கப்பட்டு, ஏந்தலில்லாம தெருவுல நின்னு, எதையெல்லாம் இந்த சமுகம் இழிவுன்னு சொல்லுதோ அதையெல்லாம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு சந்திக்கக்கூடாத துயரங்களையெல்லாம் சந்திச்ச மூத்த தலைமுறை போல இல்லாம இன்னைக்கு அங்கீகாரத்தோட வாழ ஆரம்பிச்சிருக்காங்க திருநங்கைகள். கோபத்துல உடையைத் தூக்கிக் காட்டுறதும் பொதுவெளியில எதிர்நிலையெடுத்து நிக்குறதும் சமூகத்துமேல அவங்க காட்டுற எதிர்ப்புணர்வு. அவங்க சந்திக்கிற துயரங்களைப் புரிஞ்சுக்கிட்டா நாம அவங்களைப் பாக்குற பார்வையே மாறும்.

பெண் சுதந்திரம்
பெண் சுதந்திரம்

திருநங்கைகளோட வாழ்க்கைமுறை பத்தி நம்மள்ல பலபேருக்குத் தெரியாது. வீட்டுல இருந்து துரத்தப்பட்டு நிராதரவா ஓடிவர்ற ஒரு திருநங்கைக்கு இன்னொரு திருநங்கைதான் ஆதரவு. ஒரு திருநங்கைதான் விரும்பும் எந்தத் திருநங்கையையும் அம்மாவா ஏற்கலாம். ஒரே தகுதி, தன்னைவிட வயசுல மூத்தவங்களா இருக்கனும். ஒரு திருநங்கையை மகளாக ஏத்துக்கிற சடங்குக்கு ‘மடிக்கட்டுதல்’ன்னு பேரு. பெரியவங்க முன்னிலையில, ஒரு தாம்பாளத்தில வெற்றிலை, பாக்கு, சேலை, பூ, பழம், ஒண்ணேகால் ரூபா காசு வச்சு, ‘ஆகாயமறிய, பூமியறிய, பெரியவங்க, சின்னவங்க அறிய இன்னையில இருந்து எனக்கு நீ மகளா வர சம்மதமா’ன்னு கேப்பாங்க. அந்தத் திருநங்கை, அம்மாவோட காலைத் தொட்டுக் கும்பிட்டு, ‘சம்மதம்’னு சொல்லி தாம்பாளத்தை வாங்கிக்கணும். அதுக்குப்பிறகு அந்த திருநங்கை பிறவா மகளா ஆயிடுவா. நல்லது கெட்டது எல்லாமும் அம்மாவோட பொறுப்பு.

ஒரு திருநங்கை எத்தனை மகள்களை வேணுன்னாலும் தத்தெடுக்கலாம். திருநங்கைகள் தங்கள் மூத்தவர்களுக்கு நிறைய மரியாதை கொடுப்பாங்க. அம்மாவை ‘குரு’ன்னுதான் அழைப்பாங்க. அவங்க சொல்றதுதான் வேதவாக்கு. அம்மா நிற்கும்போது மகள்கள் உட்கார மாட்டாங்க. குறுக்கிட்டுப் பேசமாட்டாங்க. அவ்வளவு அன்பு, மரியாதை, கட்டுக்கோப்பு.

திருநங்கைகளோட ஆசையே இந்த சமூகம் தங்களை பொண்ணா அங்கீகரிக்கணும்ங்கிறதுதான். கழுத்துல மஞ்சள் தாலி சரசரக்க, அத்தான்னு ஒரு ஆணை கைபிடிச்சுக்கிட்டு நடந்துட்டா ஒரு திருநங்கை முழுமையடைஞ்சுடுவாங்க. ஆனா, நிறைய ஆண்கள் திருநங்கைகளை ஏமாத்துறாங்க. ஆசைதீர அவங்களை அனுபவிச்சுட்டு, அவங்க சம்பாத்யத்தை பறித்துத் தின்னுட்டு, குற்ற உணர்வே இல்லாம கைவிட்டுட்டுப் போயிடுறாங்க. எத்தனையோ பெண்கள் இருக்கும்போது நீதான் உலகம்னு வர்ற ஒரு ஆணை திருநங்கைகள் தெய்வத்துக்குச் சமமா நினைக்கிறாங்க. தளும்பத் தளும்ப காதலிக்கிறாங்க. நம்பிக்கையாவும் உண்மையாவும் இருக்காங்க. திருநங்கைகளைப் பலவீனப்படுத்துற கேள்வி, உன்னால குழந்தை பெத்துத் தரமுடியுமாங்கிறதுதான்.

குழந்தை
குழந்தை

இந்த வார்த்தை திருநங்கைகளை பதற்றத்தில் ஆழ்துது. அவங்க கனவுகளை கலையவைச்சு சிதறடிக்கிற கேள்வி இது. காவ்யாவையும் அந்தக் கேள்வியாலதான் காயப்படுத்தியிருக்கார் அவங்க கணவர்ன்னு சொல்லப்படுற ஆண். அவர் மேல சட்ட நடவடிக்கைகள் எடுக்கமுடியும். அது தொடர்பான வழிகாட்டுதல்களை காவ்யாவுக்குக் கொடுத்திருக்கேன்.

திருநங்கைகள் பொதுவெளியில முரட்டுத்தனமா அடையாளப்படலாம். உண்மையில அவங்க ரொம்ப மென்மையான மனம் கொண்டவங்க. எந்த அன்பையும் சந்தேகிக்காம அப்படியே ஏத்துக்குவாங்க. அவங்க காதல் ரொம்பவே தூய்மையானது. உறுதியானது. ஏற்கெனவே புறக்கணிப்புகளையும் வலிகளையும் மட்டுமே எதிர்கொண்டு நம்பிக்கையோட உங்கள் கரம் பற்றிக்கிற திருநங்கைகளை ஏமாத்தாதீங்க... அவங்க சிந்துற கண்ணீர் காலம் முழுவதும் விடுபட முடியாத சாபமா மாறும்!

- கேட்போம்...

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism