Published:Updated:

பேசாக் கதைகள் - 2 | சமைப்பதும் கணவனை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும்தான் பெண்களின் வாழ்க்கையா?

பேசாக் கதைகள் | பெண்

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

பேசாக் கதைகள் - 2 | சமைப்பதும் கணவனை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும்தான் பெண்களின் வாழ்க்கையா?

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

Published:Updated:
பேசாக் கதைகள் | பெண்
சுகந்திக்கிட்ட இருந்து அந்த மெயில் வந்திருந்தது. "இதை யார்க்கிட்ட சொல்றதுன்னு தெரியாம இவ்வளவு நாள் மனசுக்குள்ளேயே போட்டு வச்சிருந்தேன். இனிமேயும் வெளிப்படுத்தலேன்னா எனக்கும் சரி, குடும்பத்துக்கும் சரி அது நல்லதில்லே..."ன்னு சின்ன தயக்கத்தோடதான் அந்த மெயில்ல பேச ஆரம்பிச்சாங்க சுகந்தி.

"எனக்கு நாப்பது வயசாகுது... திருமணமாகி 22 வருஷமாச்சு. எல்லாரப் போலவும் கல்யாணத்துல நிறைய எதிர்பார்ப்புகள் எனக்கும் இருந்துச்சு. அடுத்தடுத்துன்னு ரெண்டு பிள்ளைகளை பெத்தேன். இன்னைக்கு பிள்ளைகள் பெரிசாகிட்டாங்க. ஆனா வாழ்க்கையில எதையோ இழந்த மாதிரியிருக்கு. என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்ன்னு இருக்கு. எப்போ பாத்தாலும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்கிற கணவர். ஒருநாள் நின்னு, ஆறுதலா அன்பா ஒரு வார்த்தை பேசினதில்லை.

பெண்
பெண்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நல்லா யோசிச்சுப்பாருங்க... ஒரு பொண்ணுக்குக் குழந்தை பெறக்கிற நேரம் எவ்வளவு உன்னதமா இருக்கும். அந்த நேரத்துல எல்லாப் பெண்களுமே தன் கணவன் தலையைக் கோதி ஆறுதலா கையை வருடிவிட மாட்டானான்னு இருக்கும். என் ரெண்டு மகள்கள் பிறந்தபோதும் அவர் ஊர்லயே இல்லை. கம்பெனி மீட்டிங்க்னு சொல்லிட்டு வெளியூர் போயிட்டார். இத்தனை வருஷத்தில இந்த மனுஷனால நான் அனுபவிச்சது என்னன்னு யோசிச்சு யோசிச்சுப் பாக்குறேன்... எதுவுமே தோணலே... நேராநேரத்துக்கு சாப்பாடு செய்யனும். காபி போட்டுக் கொடுக்கணும். கூப்பிட்டா படுக்கைக்குப் போகணும்... இப்படியே வாழ்றது வாழ்க்கையா சார்...?

சின்ன வயசுல நல்லாப் பாடுவேன்... திருமணமாகி நாலைஞ்சு மாதம் வரைக்கும் அப்பப்போ பாட்டுப் பாடச் சொல்லிக் கேப்பார். அதுக்கப்புறம் நானா விரும்பிப் பாடினாக்கூட, 'தூக்கம் வருதும்மா... ஏம்மா கத்துறே'னு கேக்க ஆரம்பிச்சுட்டார்... என் கனவை, காதலை எல்லாத்தையும் இழந்துட்டு இந்த வாழ்க்கையை நான் ஏன் வாழனும்..." - சுகந்தி அந்த மெயில்ல ரொம்பவே ஆதங்கத்தோட வார்த்தைகளைப் பதிவு செஞ்சிருக்காங்க.

பேசாக் கதைகள்
பேசாக் கதைகள்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
18 வயசுல திருமணம் நடந்திருக்கு சுகந்திக்கு. 22 வருஷமா இல்லாம திடீர்ன்னு ஏன் இப்போ இப்படியொரு ஆவேசம்ன்னு ஒரு கேள்வி வரும். 22 வருஷமா அவங்க மனசுக்குள்ள துளிர் விட்டிருந்த உணர்வுகள் மெல்ல மெல்ல வளர்ந்து கிளைபரப்பி மரமா மாறி நிக்குது. அலுப்பு, சலிப்பு எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு அழுத்தி அழுத்தி அந்த மனுஷி இப்போ வெடிச்சிருக்காங்க.

மனட்சாட்சியோட யோசிச்சோம்னா, ஒரே ஒரு சுகந்திக்குத்தான் பிரச்னையா..? எத்தனை ஆண்கள் மனைவியோட வேலையைப் பகிர்ந்துக்கிறோம்..? எத்தனை ஆண்கள், மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதப்போ அவங்க பக்கத்துல உக்காந்து தலையைக் கோதி கால் பிடிச்சுவிட்டு சீக்கிரம் சரியாயிடும்மான்னு சொல்றோம்..? எத்தனை ஆண்கள் மனைவியோட திறமையை வளர்த்தெடுத்து அவங்க தனித்தன்மையா வாழ அனுமதிக்கிறோம்..?

"காலம் முழுவதும் அந்த மனுஷனுக்கு சேவை செஞ்சுட்டு அடிமை மாதிரி வாழ்ந்து முடியனும்... அதுக்குத்தானே நாங்க"ன்னு சுகந்தி எழுதியிருந்த வார்த்தைகள் மனசை உலுக்கத்தான் செய்யிது.

மகளிர் தினம் கொண்டாடுறோம்... பெண்களுக்கு வாழ்த்து சொல்றோம்... பரிசுகள் கொடுக்கிறோம்... இதுவே எவ்வளவு பெரிய ஆணாதிக்கம்... வருஷத்தில ஒருநாள் மட்டும்தான் உனக்கான தினம்ங்கிறது...
Women
Women
Pixabay

குடும்பம்ங்கிறது ஒரு பகிர்வு... அதுல ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி... சரி விகிதத்துல பங்கிருக்கு. நாமெல்லாம் தாய்வழி சமூகத்தில இருந்து முளைச்சவங்கதான்... சங்ககால இலக்கியங்களையெல்லாம் படிக்கிறபோது குடும்பத்துக்கு பெண்தான் தலைமை வகிச்சிருக்காங்க. அவங்க வழிகாட்டுதல்படிதான் ஆண்கள் வேட்டையாடியிருக்காங்க. வேலை செஞ்சிருக்காங்க. இன்னைக்கு தொழில்நுட்ப அறிவுலகத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கோம். நம்ம குடும்ப அமைப்பு வேற வேறயா மாறியிருக்கு. ஆண்கள் தலைமை தாங்குறவங்களாவும் பெண்கள் வழிநடக்குறவங்களாவும் மாறியிருக்கு. இந்த ஆதிக்கம்தான் பொதுவெளியில இருந்து குடும்பம் வரைக்கும் பிரச்னையா இருக்கு.

சுகந்தியோட மனக்குறை, கணவர் தன்மேல அக்கறை காட்டுறதில்லைங்கிறதுதான். சுகந்திக்கு மட்டுமில்லே... 90 சதவிகிதம் பெண்களுக்கு இருக்கிற மனக்குறை இது. அதிகாலை எழுந்தவுடனே வேலை வேலைன்னு ஓடுறது... ராத்திரி வீட்டுக்கு வந்தா செல்போனை பாத்துட்டு தூங்குறது... இப்படித்தான் பலபேரோட அன்றாடங்கள் போய்க்கிட்டிருக்கு. அலுவலகத்திலிருந்து மதியம் ஒரு போன் பண்ணி வீட்டிலிருக்கிற மனைவிக்கிட்ட 'சாப்பிட்டியாம்மா'ன்னு கேட்கிற பழக்கம்கூட நிறைய ஆண்கள்கிட்ட இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன்னுடைய ஆண் நம்பிக்கைக்குரியவனா இருக்கணும்னு பெண்கள் விரும்புவாங்க. தன் தவறுகளோட, எந்த முகமூடியுமில்லாம ஆண் தனக்கிட்டே பழகனுங்கிறது பெண்களோட எதிர்பார்ப்பு. அப்பா, கணவன், மகன், அண்ணன், தம்பின்னு எல்லார்க்கிட்டயும் அதைத்தான் பெண்கள் உளவியல்பூர்வமா எதிர்பார்ப்பாங்க. தன்னோட வேலைகளுக்கு முக்கியத்துவம் தர்றது போலவே தனக்கும் முக்கியத்துவம் தரனும்ன்னு எதிர்பார்க்கிறது பெண்களோட இயல்பு.

தன் சிரமங்கள்ல கணவன் பங்கெடுத்துக்கனும்ன்னு எல்லாப் பெண்களும் எதிர்பார்ப்பாங்க. சாப்பிடும்போது மனைவிக்கான தோசையை ஊத்திக்குடுக்கறது, தண்ணீர் எடுத்துத் தர்றது, முகத்துல அதிகம் ஒட்டியிருக்கிற பவுடரைத் துடைச்சு விடுறது... இந்த மாதிரி சின்னசின்ன விஷயங்களே பெண்களை உங்க மனசுக்கு நெருக்கமாக்க போதும்ன்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க. ஒருநாளாவது மனைவிக்கு முன்னால எழுந்து ஒரு கப் காபி போட்டுக் கொடுங்க... திருமணமாகி எவ்வளவு வருடங்களானா என்ன... கடந்துபோகும்போது கைகளை அழுத்தமா பற்றி வருடுங்க... நைட்டியோ சுடிதாரோ... இந்தக் கலர் உனக்கு ரொம்பவே நல்லாயிருக்குன்னு மனசாரப் பாராட்டுங்க... எதிர்பாராத நேரத்துல கிட்ட இழுத்து நெற்றியில ஒரு முத்தம் கொடுங்க... ஒரு விடுமுறை நாள்ல அவங்களை உக்கார வச்சு தப்பும் தவறுமா சமையல் செய்ங்க...

பெண்மணி
பெண்மணி

மாதவிலக்கு நாள்கள்ல பெண்கள் உடலளவிலயும் மனதளவுலயும் ரொம்பவே சோர்வா இருப்பாங்க. அந்த நேரத்துல கொஞ்ச நேரம் படுத்து ஓய்வெடும்மான்னு யாராவது சொல்லமாட்டாங்களான்ன்னு ஓர் ஏக்கம் அவங்களுக்கு இருக்கும். ஆண்கள், அந்தக் காலக்கட்டத்தை கவனிக்கிறதேயில்லை. கோபமும் விரக்தியும் பெண்களுக்கு இந்தக் காலக்கட்டத்துலதான் அதிகமாகும்.

வேலை வேலை வேலைன்னு வாழ்க்கையை வேலையில தொலைச்சுட்டு வேறெங்கையோ தேடிக்கிட்டிருக்கோம். வாரத்துல அல்லது மாசத்துல ஒருநாள் எல்லா வேலையையும் ஒழிச்சுட்டு மனைவியைக் கூட்டிக்கிட்டு ஜாலியா ஒரு பயணம் போங்க பாஸ். ஏற்காட்டுக்கோ கொடைக்கானலுக்கோ போக வேணாம். உங்க ஊர்ல இருக்கிற பார்க்குக்கு... ஒரு ஏரிக்கரைக்கு... அப்படியே கைகோத்துக்கிட்டு நல்ல விஷயங்களை மட்டுமே பேசிக்கிட்டு நடங்க. அடுத்த வாரம் வரைக்கும் அந்த நினைவுகளே பெண்களை உற்சாகமா இயங்க வைக்கும்.

ஒரு ஆய்வுல, 80 சதவிகிதம் ஆண்கள் பொதுவிடத்துல தங்களோட மனைவியைப் பத்தி நல்ல விஷயங்களைப் பேசுறதில்லைன்னு தெரிய வந்திருக்கு. மனைவியோட சமையலைப் பத்தி, அவங்க அலங்காரம் பண்ணிக்கிறதைப் பத்தி, மத்தவங்ககிட்ட பேசுறதைப்பத்தி கிண்டல் பண்றது, நகைச்சுவைங்கிற பேர்ல கேலி பேசுறது... இதெல்லாம் பெண்களை பாதிக்குது பாஸ். அவங்க உங்ககிட்ட நல்ல பேர் எடுக்க தங்களோட வாழ்க்கையையே அடகு வைக்கிறாங்க. கடுமையா உழைக்கிறாங்க. அந்த உழைப்பை அங்கீகரிக்கணும். அது ஒண்ணுதான் அவங்க எதிர்பார்ப்பு.

சுகந்திக்கு இல்லை, சுகந்தியோட கணவருக்குத்தான் இப்போ கவுன்சிலிங் தேவை. சுகந்தியோட கணவருக்கு மட்டுமில்லை... நம்மகூட வாழ்ந்துக்கிட்டிருக்க நிறைய ஆண்களுக்கு கண்டிப்பா கவுன்சிலிங் தேவை. பெண்களை சக மனுஷியா மதிக்கிறது, அவங்க வேலையை அங்கீகரிக்கிறது, அவங்க உணர்வுக்கு மரியாதை குடுக்கறதுன்னு நாமெல்லாம் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு பாஸ். ஒரு சுகந்தி தன்னோட ஆதங்கத்தை ஒரு பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்காங்க. நிறைய சுகந்திகள் மனசுக்குள்ளேயே போட்டு புதைச்சு வச்சிருக்காங்க. என்னைக்கோ ஒருநாள் அது வெடிக்கும். ஆனா, அது பிரளயமா வெடிக்கும். அது குடும்பத்தையும் உறவுகளையும் நிலைகுலையச் செஞ்சிரும்.

பெண்
பெண்

ஒரு ஆண், குடும்பத்துக்கு பொருளீட்டிக் குடுக்கிற ஊழியரா மட்டும்தான் பெரும்பாலும் இருக்கார். எது செஞ்சா ஆரோக்கியம்ன்னு பாத்துப் பாத்து சமைக்கிற ஊட்டச்சத்து நிபுணரா, வீட்டு வரவு செலவை நிர்வகிக்கிற மேலாளரா, குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்கிற ஆசிரியரா... இன்னும் இன்னும் என்னன்ன பாத்திரங்களோ எடுத்து நம்மை வழிநடத்துறாங்க பெண்கள். பல குடும்பங்கள்ல இந்த அத்தனை வேலைகளையும் செஞ்சுக்கிட்டு சரிக்கு சமமா வேலைக்குப் போய் பொருளீட்டவும் செய்றாங்க. சுகந்திகள் நம்மகிட்ட எதிர்பார்க்கிறது சகமனுஷிங்கிற உரிமை. சின்னச்சின்ன பாராட்டு... அங்கீகாரம்... அதைக் கொடுக்கத் தெரியலேன்னா நமக்கு வாழத்தெரியலேன்னு அர்த்தம்!

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism