Election bannerElection banner
Published:Updated:

̀12,000 அடி உயரம், உறைய வைத்த குளிர், கொஞ்சம் `த்ரில்' ' - `பில்லியன் ரைடர்' வானவி அனுபவங்கள்

வானவி பூபாலன்
வானவி பூபாலன்

4 வருடங்களில் பில்லியன் ரைடராகவே 25,000 கி.மீட்டர்கள் பயணித்திருக்கிறார் வானவி.

பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை. அதிலும் பின்னிருக்கை பயணங்கள் கூடுதல் சுவாரஸ்யமானவை என்கிறார் வானவி பூபாலன். வேலூரைச் சேர்ந்தவர், சென்னையில் ஏரோநாடிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு பெங்களூரில் விமான இன்ஜின் சர்வீஸ் இன்ஜினீயராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதுதான் பயணத்தின் மீது காதல் அரும்பியிருக்கிறது இவருக்கு.

Pillion rider Vanavi
Pillion rider Vanavi

``நான் கவிதைகள் எழுதுவது வழக்கம். பயணம் செஞ்சா எழுதுறக்கு நிறைய ஐடியாக்கள் கிடைக்கும்னு நண்பர்கள் சொன்னாங்க. அப்படித்தான் டிராவல் பண்ணத் தொடங்கினேன். கவிதைக்காகப் பயணிக்கத் தொடங்கினது போய், எனக்காகப் பயணிக்க ஆரம்பிச்சேன்.

முதல் ரெண்டு வருஷம் பஸ், ரயில், நடந்து போறதுன்னு பெங்களூரைச் சுற்றியுள்ள மைசூர் போன்ற இடங்களுக்குப் போனேன். பெரும்பாலும் நண்பர்களுடன்தான் டிராவல் பண்ணுவேன். பட்ஜெட் டிரிப்தான் எங்க சாய்ஸ். மைசூரெல்லாம் வெறும் ரூ.150 செலவுலதான் போனோம். நிறைய பேர் சேர்ந்து போகும்போது பட்ஜெட் குறையும்" என்றவர் பில்லியன் ரைடராக மாறிய அனுபவத்தைக் கூறினார்.

``பஸ், டிரெயின்ல போனா நிறைய இடங்களைப் பார்க்க முடியாது. அதுவே பைக்ல போனா தோணுற இடத்துல நிறுத்த முடியும். அதிகம் பார்க்கப்படாத இடங்களைத் தேடித் தேடிப் பார்க்க முடியும். அதனால இரண்டு வருஷத்துக்குப் பிறகு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் பைக் வாங்குனாங்க.

அதுக்கு முன்னாடி வாடகைக்கு பைக் எடுத்துட்டும் போயிருக்கேன். நான் பில்லியன் ரைடரா மாறினது அப்போதான். பைக் வாங்குனதுக்கு அப்புறமா பெங்களூரு, கேரளா, தமிழ்நாட்டுல உள்ள மலைப் பிரதேசங்கள், கடற்கரை பகுதிகள்னு நிறைய டிராவல் பண்ணிருக்கோம்" என்பவர் வேலையை விட்டுவிட்டு தற்போது டிராவல் செய்து வருகிறார்.

வானவி
வானவி

``கொரோனா டைம்ல வேலையை விட்டுட்டேன். ஒரு பிரேக் எடுத்துட்டு மறுபடியும் வேலைக்குப் போகலாம்னும் ஐடியா இருக்கு. இதுவரை இருந்த என்னோட சேவிங்க்ஸை வெச்சு டிராவல் பண்ணினேன். என்னோடது லோயர் மிடில் கிளாஸ் குடும்பம்தான். வீட்ல இருந்து பணம் வாங்கினதே இல்ல. அதனால பட்ஜெட் டிரிப்தான் போவேன்" என்பவர், பட்ஜெட் டிரிப் பற்றி டிப்ஸும் தருகிறார்.

பட்ஜெட் டிரிப்!

``பெண்களா சேர்ந்து போறதால தங்குற இடத்துக்கான செலவுகளையெல்லாம் காம்ப்ரமைஸ் செய்ய மாட்டோம். தரமான இடங்கள்லதான் தங்குவோம். ஆடம்பரமான, தனித்தனி அறைகளில் தங்காமல் எல்லாரும் சேர்ந்து ஒரே அறையில் தங்குவோம்.

சேர்ந்து தங்கும்போது செலவு குறையும். அதே போல உணவு விஷயத்துக்கும் அதிகம் செலவு செய்ய மாட்டோம். போற இடத்துல என்ன கிடைக்குதோ அதை வைத்து அட்ஜஸ்ட் செய்துப்போம். இந்த இரண்டு விஷயத்தில கவனம் செலுத்தினாலே நிறைய செலவுகளைக் குறைக்க முடியும்" - டிப்ஸ் சொல்பவர், 4 வருடங்களில் பில்லியன் ரைடராகவே ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு பைக்கில் 25,000 கி.மீட்டர்கள் பயணித்திருக்கிறார்.

வானம் அல்ல சாலைகள்தான் உயிரோட்டமானவை!
பில்லியன் ரைடர் வானவி பூபாலன்

``வண்டி ஓட்டும்போது கவனம் முழுக்க ரோட்டுலதான் இருக்கும். ஆனால், பின்னாடி உட்கார்ந்து போகும்போது எல்லா விஷயங்களையும் பார்த்துட்டே போக முடியும். ஒரு நாளைக்கு 13 மணி நேரம் டிராவல் பண்ணினாகூட நான் வண்டில உட்காந்தபடி தூங்கவே மாட்டேன். அதனாலதான் எனக்கு கார், விமானப் பயணங்கள் பிடிக்கிறதில்ல. அதுலெல்லாம் பயணிக்கும்போது நம்ம இறங்க வேண்டிய இடம் வந்திருச்சான்னுதான் தூங்கி எழுந்து பாப்போம். ஆனா, பைக் டிராவல் உயிரோட்டமானது" என்பவர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஆலப்புழையிலிருந்து பெங்களூருக்கு 780 கி.மீ பயணித்திருக்கிறாராம்.

ஒரு நாளைக்கு 500 கி.மீ தூரத்தையெல்லாம் சர்வசாதாரணமாகக் கடந்திருப்பவர், பில்லியன் ரைடருக்கான பாசிட்டிவ் விஷயங் களையும் பகிர்ந்தார்.

பில்லியன் ரைடராக மட்டும் இருப்பதால் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவத்தையும் கூறுகிறார். ``சமீபத்துல சிக்கிம் வரை பைக்ல போனோம். கிட்டத்தட்ட 5,000 கி.மீ பைக்ல டிராவல் பண்ணினோம். சிக்கிம் போனப்போ கிட்டத்தட்ட 12,000 அடி உயரத்தில இருந்து கீழே இறங்கிட்டு இருந்தோம். டெம்பரேச்சர் மைனஸ் 10 டிகிரி இருந்தது. அப்போ பைக்கை ஓட்டிட்டு இருந்த என்னோட ஃபிரெண்டுக்கு குளிர்னால கையெல்லாம் உறைஞ்சு போய், தொடர்ந்து வண்டி ஓட்ட முடியாம போச்சு. எனக்கும் வண்டி ஓட்டத் தெரியாது. என்ன பண்றதுன்னு தெரியல.

வானவி பூபாலன்
வானவி பூபாலன்

நாங்க ஒரு டீமோட சேர்ந்துதான் டிராவல் பண்ணிட்டு இருந்தோம். ஆனா, எங்களுக்குப் பரிச்சயமில்லாத நபர்கள்தாம் அதுல இருந்தாங்க. அதுல பில்லியன் ரைடரா பயணிச்ச ஒருத்தர் எங்களோட பைக்கை கீழே வரைக்கும் ஓட்டிட்டு வந்தாரு. அப்போதான் நான் கண்டிப்பா பைக் ஓட்டக் கத்துக்கணும்னு முடிவுக்கு வந்தேன்.

டிரிப் முடிச்சு வந்ததும் ஓட்டக் கத்துக்கிட்டேன். இப்போ யமஹா எஃப்ஸி வண்டி ஓட்டிட்டு இருக்கேன்" என்பவரின் காலண்டரில் மாதத்துக்கு ஒருமுறை சிறிய டிரிப் ஒன்றும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை லாங் டிரிப் ஒன்றும் நிச்சயம் இடம்பெறுமாம்.

``குடும்பத்துக்கான பொருளாதார தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்த பிறகுதான் டிராவல் செய்யத் தொடங்கினேன். பெண் பிள்ளை பயணிக்கும்போது எல்லா பெற்றோருக்கும் இருக்கும் பதற்றம் என் பேரன்ட்ஸுக்கும் இருக்கும். அதனால எங்கே போனாலும் வீட்டுக்கு அப்டேட் கொடுத்திட்டே இருப்பேன்" என்பவருக்கு சர்வதேச பயணங்களில் ஆர்வமில்லையாம். காரணம், நம் நாட்டில் பார்ப்பதற்கே பல இடங்களும் விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன என்கிறார்.

Bike travel
Bike travel
`மொபைல் சிக்னலுக்கே மாணவியின் 5 கி.மீ பயணம்; பின் ஆன்லைன் வகுப்பு!'- இதுவும் `டிஜிட்டல் இந்தியா'தான்

ஆல் இந்தியா டிரிப், யாரும் அதிகம் பார்க்காத இடங்களுக்குச் செல்ல வேண்டும், பயணம் தொடர்பான பிளாக் எழுத வேண்டும் எனப் பயணத்தைப் போலவே அவரின் எதிர்காலத் திட்டங்களுக்கான பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. தன்னுடைய பயணங்கள் பற்றிய அனுபவங்களை ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அப்டேட் செய்து வரும் வானவிக்கு விரைவில் டும் டும் டும்!

சந்தேகமே வேண்டாம்... வருங்கால கணவரும் டிராவலர்தான்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு