லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

“மக்கள் சேவையில மனசு நெறையுது!” - ‘ஆம்புலன்ஸ் பைலட்’ வீரலட்சுமி

வீரலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரலட்சுமி

புது ரூட்

``ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலைக்காக 108 மையத்துக்கு விண்ணப்பிச்சிருந்தேன். அப்ளிகேஷனைப் பார்த்துட்டு போன் பண்ணின ஆபீஸருங்க, ‘உங்க வீட்டுக்காரருக்கு அப்ளை செய்தீங்களா?’னு கேட்டாங்க. ‘எனக்குத்தான்’னு சொன்னவுடனே நேர்ல வரச்சொல்லிட்டாங்க. அப்புறம் நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு” - ஆச்சர்யம் விலகாமல் பேசுகிறார் வீரலட்சுமி.

இந்தியாவிலேயே முதன் முறையாக, ‘பைலட்’ எனப்படும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு முதல் பெண்ணாக நியமிக்கப்பட்டிருக்கிறார் வீர லட்சுமி. கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, தமிழகத்தின் மருத்துவ சேவைக் காகப் புதிதாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அவர்களில் ஒரே பெண்ணாக ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற வீரலட்சுமியின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட, பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘‘நான் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பொண்ணுங்க...’’ - கிராமத்து எளிமையுடன் பேசுகிறார் வீரலட்சுமி. ‘‘என் வீட்டுக்காரர் முத்துக்குமார், சென்னையில சம்பளத்துக்கு கால் டாக்ஸி ஓட்டுறாரு. பொண்ணு தாரணிக்கு 11 வயசு, பையன் கார்த்திகேயனுக்கு 6 வயசு. நான் சின்ன புள்ளையா இருக்கும்போதே எங்கப்பா இறந்துட்டாரு. அம்மாதான் என்னையும் தம்பியையும் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. வீட்டுல பெரிய ஆம்பள யாரும் இல்லாததால, என்னைக் கொஞ்சம் துணிச்சலா வளர்த்துட்டாங்க. ஸ்கூல்ல சிலம்பம், பாக்ஸிங்னு மாநில லெவல் போட்டிகள்ல கலந்துக்கிட்டு மெடல் வாங்குற அளவுக்குத் துடுக்காயிருப்பேன். ப்ளஸ் டூ முடிச்சதும், சொந்தக்கார மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. சென்னையில செட்டிலானோம்.

வீரலட்சுமி
வீரலட்சுமி

வீட்டுல சும்மா இருக்கோமேனு ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங்ல டிப்ளோமா படிச்சேன். பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்துல சேர்ந்து கார், பஸ் ஓட்டக் கத்துக்கிட்டேன். கனரக வாகனங்களை ஓட்டுறதுக்கான `ஹெவி லைசென்ஸு’ம் வாங்கினேன். என் வீட்டுக்காரர் மாதிரியே நானும் நாலு வருஷமா சம்பளத்துக்கு கால் டாக்ஸி ஓட்டிக்கிட்டிருந்தேன். டாக்ஸில சின்ன கீறல்கூட விழாத அளவுக்கு வேலையில கவனமாயிருப்பேன். ஒரு நாளைக்கு 700 ரூபாய் கிடைக்கும். காசைவிட, அதுல கிடைச்ச அனுபவம் நெறைய.

காலையில 9 மணிக்கு வேலைக்குக் கிளம்பினா வீடு திரும்ப நைட் 10 மணி கூட ஆகிடும். ஆனாலும், ஹோட்டல் சாப்பாட்டை யெல்லாம் யோசிக்க மாட்டோம். நான் வந்ததும் சமைச்சு, குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவோம். பசங்க வளர ஆரம்பிச்சதும், செலவைக் குறைக்கணுமேனு சிட்டியிலயிருந்து தள்ளிவந்து திருவேற்காடு பக்கம் குறைஞ்ச வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருக்கோம்’’ - படபடவெனப் பேசியவர், ‘ஆம்புலன்ஸ் பைலட்’ ரூட் எடுத்தது பற்றி பகிர்ந்தார்.

‘`கொரோனா லாக்டௌனால டாக்ஸி யெல்லாம் நின்னுபோச்சு, வருமானம் இல்லாமப்போச்சு. ரோடே வெறிச்சோடிக் கிடக்கும்போது, பல ஆம்புலன்ஸ் மட்டும் போயிட்டே இருக்கிறதை பார்த்தேன். சரி அந்த கியரை போட்டுப் பார்ப்போம்னுதான் 108 மையத்துல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிச்சேன். உடனே நேர்ல வரச் சொன்னாங்க. ஆம்புலன்ஸ் ஓட்டச்சொல்லிப் பார்த்துட்டு, ஜூன் மாசம் என்னை வேலைக்கு எடுத்தாங்க. சீனியர் ஓட்டுநர் கூட அனுப்பி பயிற்சி கொடுத்தாங்க. இப்போ, புது ஆம்புலன்ஸ் கொடுத்து, முதல்வரே என் வாகனத்தைத் தொடங்கி வெச்சது, சந்தோஷம் பிடிபடலை எனக்கு. இந்த 30 வயசுல திடீர்னு வாழ்க்கையே மாறினமாதிரி இருக்கு’’ என்பவர், தன் புதிய பொறுப்பையும் உணர்ந்திருக்கிறார்.

‘`நோயாளிகளைக் குறிப்பிட்ட நேரத்துல கொண்டுசேர்க்கிறதுதான் இதுல முக்கியம். நோயாளிகளை எப்படிக் கையாளணும், விபத்துல சிக்கினவங்களை எப்படி மீட்கணும்னு அதிகாரிங்க சொல்லித் தந்திருக்காங்க. திருவள்ளூர் மாவட்டத்துல பணி ஒதுக்கியிருக்காங்க. அங்க இருக்கிற மருத்துவமனைகள்ல இருந்து நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக அழைச்சிட்டுப் போற வேலை எனக்கு. இப்போ 12,000 ரூபாய் சம்பளம். முதலுதவிக்குக் காத்துக்கிட்டிருக்கிற மக்களுக்குச் செய்ற சேவை என்பதால மனசுக்கு நெறைவா இருக்கு.

சரி... விருப்பப்படுற புள்ளைக டிரைவிங் கத்துக்கிட்டு லைசென்ஸ் வாங்கிட்டு சட்டுபுட்டுனு ஆம்புலன்ஸ் ஓட்ட வாங்க பார்ப்போம்..!”

- சக பெண்களுக்கு அழைப்புவிடுக்கிறார் ‘ஆம்புலன்ஸ் பைலட்’ வீரலட்சுமி.

பெண்களுக்கு வெல்கம்!

ந்தியா முழுக்க 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கும் ஜி.வி.கே நிறுவனத்தின் தமிழகத் தலைமை அதிகாரி செல்வக்குமார், ‘‘108 சேவையில் ஏற்கெனவே 50% பெண்கள் மருத்துவ உதவியாளர்களாகவும், மற்ற பணிகளிலும் இருக்கிறார்கள். தகுதியான பெண்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படும். பணியில் பிரச்னை என்றால் நிர்வாகத்திடம் தயங்காமல் முறையிடலாம். அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் செய்துகொடுத்து, பெண்களுக்கு நல்ல பணியிடமாகச் செயல்படுவோம்’’ என்றார்.