22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பசி போக்கும் மனம் வேண்டும்!

வெண்ணிலா
பிரீமியம் ஸ்டோரி
News
வெண்ணிலா

நேசம்

``பசிக்கு மழையும் வெயிலும் தெரியாது. பசியின் வலியை நானும் சின்ன வயசுல அனுபவிச்சிருக்கேன். அதனாலதான் என் வருமானத்துல ஒரு தொகையை ஒதுக்கி, இந்த மக்களுக்காக சமையல் செய்துட்டு வந்து கொடுக்கிறேன்'' என்கிறார் கோவையைச் சேர்ந்த வெண்ணிலா.

கோவையின் சாலையோர மனிதர்களைத் தேடித் தேடி தினமும் உணவு அளிக்கிறார் பொருளாதாரப் பட்டதாரியான லதா என்கிற வெண்ணிலா. ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தன் வருமானம் மூலம் மட்டுமே இதைச் செய்கிறார்.

பசி போக்கும்  மனம் வேண்டும்!

`` உணவு, உடை என்று யாருக்கு என்ன தேவையோ அதையும் வாங்கிக்கொடுக்கிறேன். வெளியூர்களில் இருந்து வரும் சிலர் முதுமையாலும் மறதியினாலும் வேறு வழியில்லாமல் இங்கேயே இருந்திடறாங்க. சாப்பாடு கொடுக்கப் போறப்ப அவங்களுக்கு உடம்புக்கு முடியலைங்கிறதை உணர்ந்தா உடனே ஆம்புலன்ஸ்ல மருத்துவமனைக்கு அனுப்பி வெச்சிடுவேன். என்னால முடியாத நாள்கள்ல, எனக்குத் தெரிஞ்ச ஹோட்டல்கள்ல பேசி இந்த மக்களோட சாப்பாட்டுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்திடுவேன். விசேஷ நாள்கள்ல வீட்ல என்ன செய்றேனோ, அதை இந்த மக்களுக்காக எடுத்துட்டு வந்திடுவேன். மழையா இருந்தாலும் சரி வெயிலா இருந்தாலும் சரி, என் பயணம் ஒருநாளும் நின்னதில்லை.

நஞ்சப்பா ரோட்டுல பிரதாப் என்ற வடமாநிலத்துக் காரர் ரொம்பவும் நோய்வாய்ப்பட்டு, மனநலமும் பாதிக்கப்பட்டு ரெண்டு வருஷமா இருந்தார். பக்கத்தில் போகவே எல்லாரும் பயப்படுவாங்க. எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்தவரை தூக்கி உதவி செய்யும்போது சுத்தி இருந்த மக்கள் வேடிக்கைதான் பார்த்தாங்க. உடனடியா ஒரு ஹோமுக்கு அழைத்துச் சொன்னேன். இப்போ அவர் அந்த ஹோம்ல நிம்மதியா நல்லா இருக்கார்.

சாந்தானு ஒரு பாட்டி கோவை டவுன் பஸ் ஸ்டாண்டுலதான் இருப்பாங்க. உடல் முழுதும் சரும நோயால் பாதிக்கப்பட்டு புழு வைக்கற நிலையில் இருந்தாங்க. அவங்களையும் ஹோம்ல சேர்த்து மருத்துவம் எல்லாம் செய்த பின்பு நல்லா இருக்காங்க.

எல்லோருக்கும் மனசும் உயிரும் இருக்கு. இந்த மனிதர்களை அருவருப்பாகப் பார்க்கக் கூடாது என்பதுதான் என் வேண்டுகோள்.

இதையெல்லாம் புண்ணியம் கிடைக்கும்னோ, பப்ளிசிட்டிக்காகவோ பண்ணலை. அவங்க கதையை எல்லாம் கேட்கிறப்ப நம்ம கஷ்டம் எல்லாம் தூசுன்னு தோணுது. எனக்கும் ஒரு நிம்மதி கிடைக்குது. நான் எதிர்பார்க்கிறது அவ்வளவுதான்.

என் சக்திக்கு மீறின உதவியா இருந்தா சமூக வலைதளத்துல அதைப் பதிவு பண்றேன். என்மேல உள்ள நம்பிக்கையில மக்கள் உதவுறாங்க’’ என்கிறார் நேசத்தோடு.

மழை விடாமல் பெய்தாலும், மீண்டும் உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறார் வெண்ணிலா.