Published:Updated:

பறித்தது கொரோனா... கொடுத்தது கீரை! - வாழ்க்கையை மீட்டெடுத்த ‘மாத்தியோசி’

விஜயபாரதி
பிரீமியம் ஸ்டோரி
விஜயபாரதி

நம்பிக்கை மனுஷி

பறித்தது கொரோனா... கொடுத்தது கீரை! - வாழ்க்கையை மீட்டெடுத்த ‘மாத்தியோசி’

நம்பிக்கை மனுஷி

Published:Updated:
விஜயபாரதி
பிரீமியம் ஸ்டோரி
விஜயபாரதி
கொரோனா... பலரின் வாழ்க்கையை முடித்துவைத்திருக்கிறது. இன்னும் சிலரின் வாழ்க்கையைத் தடம்புரளச் செய்திருக்கிறது. வாழ்வின் மீதான கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதைத்திருக்கிறது.

பெங்களூரைச் சேர்ந்த விஜயபாரதிக்குப் புதிய பாதையைக் காட்டியிருக்கிறது. புறம்பேசும் சமுதாயத்தையும் மக்களையும் எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. பெங்களூரில் ஃபுட் ரெஃப்ளெக்ஸாலஜி (Foot Reflexology) நிபுணராகப் பணியாற்றிய விஜயபாரதி, கொரோனா சூழலில் தன்னுடைய சொந்த ஊரான கோவையில் ஆர்கானிக் கீரை விற்பனையாளராக மாறியுள்ளார். இதுகுறித்து விஜயபாரதியிடம் பேசினோம்.

“என் பெரிய பொண்ணுக்கு ஏழு வயசு. சின்னவளுக்கு அஞ்சு வயசு. பெங்களூரில் இருந்தோம். என்னோட கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். `பொண்ணுங்க தைரியமா இருக்கணும், யாரையும் சார்ந்து வாழக் கூடாது’ன்னு அவர் அடிக்கடி சொல்லுவாரு. அதனால்தான் என்னை ஃபுட் ரெஃப்ளெக்ஸாலஜி படிக்க வெச்சாரு. படிச்சு முடிச்சு நானும் வீட்டிலேயே தெரபி சென்டர் நடத்திட்டு இருந்தேன்.

நிறைய கனவுகளோட வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருந்துச்சு. திடீர்னு ஒருநாள் என் கணவருக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு. வயிற்று வலியில துடிச்சாரு. ஸ்கேன் எடுத்துப் பார்த்துட்டு கணையப் புற்றுநோய்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. உலகமே இருண்டு போன மாதிரி இருந்துச்சு. எப்படியாவது அவரைக் காப்பாத்திடலாம்னு நம்பிக்கையோட ஓட ஆரம்பிச்சேன். கடன் வாங்கி செலவழிச்சேன். ஆனா, அத்தனையும் வீணாப்போச்சு. நோயோட தாக்கம் அதிகமாகி ஒரே வருஷத்துல அவர் இறந்துட்டார்” வார்த்தை தழுதழுக்க அமைதியாகிறார் விஜய பாரதி.

“தனி ஒருத்தியா, ரெண்டு பொண்ணுங் களோட சமுதாயத்தை எதிர்கொள்வது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் புரிஞ்சுது. நிறைய போராட்டங்கள், புறக்கணிப்புகள்... விரக்தியின் உச்சத்துல தற்கொலை முயற்சிவரை போன என்னை குழந்தை களோட எதிர்காலம் குறித்த பயம்தான் யோசிக்கவெச்சது. நானும் இல்லைனா என் குழந்தைகள் இந்தச் சமுதாயத்தில் எப்படி வாழ்வாங்கன்னு பயம் வந்துச்சு. குழந்தைகளுக்காக வாழ ஆரம்பிச்சேன். நான் இழந்த எல்லா சந்தோஷங்களும் என் பொண்ணுங்களுக்குக் கிடைக்கணும்னு நினைச்சேன். ஒரு வருஷம் குழந்தைகளோடு பெங்களூரிலேயே இருந்தேன். தெரபி சென்டர், ஒரு தனியார் நிறுவனத்துல அட்மின் என ரெண்டு வேலைகள் செஞ்சு சம்பாதிக்க ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைச்சும், என்னோட வருமானத்துல வீட்டு வாடகை, குழந்தைகளோட படிப்பு, அன்றாட தேவைகள்னு எல்லாத்தையும் சமாளிக்க முடியல.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜனவரில குழந்தைகளோடு கோயம்புத்தூர்ல உள்ள அம்மா வீட்டுக்கு வந்தேன். சில நிறுவனங்களில் இன்டர்வியூவும் அட்டெண்ட் பண்ணிருந்தேன். பிப்ரவரில தமிழ்நாட்டில் கொரோனா பரவ ஆரம்பிச்சதால் எந்த நிறுவனமும் புதுசா யாரையும் வேலைக்கு எடுக்கலைனு சொல்லிட்டாங்க. என்னோட ஒவ்வொரு முயற்சியும் சுவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்புச்சு. வருமானம் இல்லாமல் அப்பாவுக்கும் தம்பிக்கும் பாரமா இருக்குற மாதிரியான எண்ணம் என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு. அதனால், குறைந்த முதலீட்டில் ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு தேட ஆரம்பிச்சப்போ தான், ஆர்கானிக் சார்ந்த அத்தியாவசிய பொருள்களுக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கிறது தெரிஞ்சுது” என்ற விஜயபாரதி கீரை விற்பனை பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.

விஜயபாரதி
விஜயபாரதி

“ஆர்கானிக் முறையில் கீரை விவசாயம் செய்யறவங்ககிட்ட இருந்து கீரைகள் வாங்கிட்டு வந்து, வீட்டு வாசலில் வெச்சு விற்க ஆரம்பிச்சேன். கீரையோட சுவை நல்லா இருந்ததால விற்பனை அதிகமாச்சு. நான், அப்பா, தம்பி, தம்பி மனைவின்னு குடும்பமா இப்போ கீரை வியாபாரம் பண்றோம். தினமும் மூன்று மணிநேர வேலைதான். ஒரு கீரைக்கட்டுக்கு 5 ரூபாய் லாபம் வெச்சு விக்கிறோம். செலவுகள் எல்லாம் போக ஒரு நாளைக்கு 500 ரூபாய் லாபம் கிடைக்கும். அடுத்தகட்டமா வீட்டிலேயே கீரை வளர்க்கும் ஐடியாவும் இருக்கு.

படிச்ச படிப்புக்கும் இப்போ பண்ற வேலைக்கும் சம்பந்தம் இல்லைதான். ஆனால், பசிக்கு முன்னாடி கெளரவத்தை வெச்சுக்கிட்டு என்ன பண்ணப்போறோம். பெரிய பெரிய நிறுவனங்களே ஆட்டம் கண்டு, நிறைய பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கும் இந்த நேரத்தில், வருமானத்துக்காகப் புதுசு, புதுசா ஐடியா தேடி சம்பாதிச்சாதான், வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும். இது மாற்றத்துக்கான நேரம்...” - விடைபெறுகிறார் விஜயபாரதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism