Published:Updated:

ஆராரோ... ஆரிராரோ... - “மகனல்ல மகளல்ல வானவில்லே..!”

விஜயராஜ மல்லிகாவின் இடைபாலின குழந்தைகளுக்கான தாலாட்டு

பிரீமியம் ஸ்டோரி
`ஆணல்ல பெண்ணல்ல கண்மணி நீ என்றே தேன்மணி அல்லோ... தேன்மணி...' எனத் தொடங்குகிறது, விஜயராஜ மல்லிகா எழுதியிருக்கும் இடைபாலின குழந்தைகளுக்கான தாலாட்டு.

`நன்மையும் தீமையும் வேறுபடுத்தி அறிய வேண்டும்...நீ நீயாய் முழுமையடைய வேண்டும் ராரிராரோ...மகனல்ல மகளல்ல வானவில்லே மார்போடு சேர்க்கிறேன் நான் உன்னை...

சாபம்ல பாபமல்ல ஓமனே

நீ என்ற ஜீவிதத்தில் வந்துதித்த பாக்கியம்...

ராரீராரோ ராரீராரோ ராரீரம் ராரீரம் ராரீராரோ...'

ஆண் குழந்தையாகவும் அல்லாமல், பெண் குழந்தையாகவும் அல்லாமல் இடை பாலினத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கான முதல் தாலாட்டுப் பாடலை உருக்கமாகவும் உத்வேகம் தரும் வகையிலும் எழுதி வைரலாகி யிருக்கிறார், கேரளத்தைச் சேர்ந்த திருநங்கை கவிஞர் விஜயராஜ மல்லிகா.

‘‘நம் சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தாலாட்டுப் பாடல்கள் இருக்கின்றன. ஆனால், இடை பாலின குழந்தைகளுக்கு இதுவரை இல்லை. பிறக்கும்போது ஆண் குழந்தையாகவோ, பெண் குழந்தையாகவோ மட்டுமல்ல... சில குழந்தைகள் இடைபாலின (Intersex) குழந்தைகளாகவும் பிறப்பார்கள். அதாவது, அவர்களின் பாலுறுப்பு ஆண், பெண் என இருவருக்குமான தன்மைகளைக் கொண்டிருக்கும். வளர வளரதான், தன் பாலை அக்குழந்தையின் உடல் முடிவு செய்யும்.இப்படியான இடைபாலின குழந்தைகள் பிறக்கும்போது, அந்தக் குடும்பம் மனதளவில் அழுத்தத்துக்கும் குழப்பத்துக்கும் ஆளாகும். என்றாலும், இயற்கையின் முடிவை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்களும் குழந்தைகள்தானே... சக மனிதர்களாக இந்தச் சமூகத்தில் வளரவிருக்கிறவர்கள்தானே... அவர்களை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவர்களின் அம்மாதான். அப்படி, தன் இடைபாலின குழந்தையை முழுமனதாக ஏற்றுக்கொண்டு இந்தப் பூமிக்கு வரவேற்கும் அம்மா பாடும் தாலாட்டாக இதை நான் எழுதினேன்’’ என்று சொல்லும் விஜயராஜ மல்லிகா, இதுவரை மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதில், ‘தெய்வத்தின்றே மகள்’ என்ற அவரின் முதல் புத்தகம் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ சிலபஸில் சேர்க்கப்பட்டுள்ளது.

‘`இது, டிரான்ஸ்ஜெண்டர் குழந்தைகளுக் கான தாலாட்டுப் பாடல் இல்லை. திருநங்கை, திருநம்பி என்று சொல்லப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள், பிறந்த பாலினத்தி லிருந்து வளர வளரத்தான் வேறுபட்டு எதிர் பாலினத்துக்கு மாறுவார்கள். இடைபாலினம் என்பது பிறக்கும் குழந்தை ஆண், பெண் இருவருக்குமான பிறப்புறுப்புகளையோ, பாலின உறுப்புகளையோ கொண்டிருப்பது.

ஆராரோ... ஆரிராரோ... - “மகனல்ல மகளல்ல வானவில்லே..!”

இது இயற்கையில் விதிக்கப்பட்டது, இந்தக் குழந்தைகள் இப்படியே வளர்வதே நல்லது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இடைபாலின குழந்தைகளின் பெற்றோர்கள், அந்தக் குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்து, அதன் பாலை தங்கள் விருப்பப்படி நிறுவ நினைக்கிறார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் உடல்ரீதியாகப் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

அதனால்தான் 2019-ம் வருடம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இடைபாலின குழந்தைகளுக்கு இதுபோன்ற அறுவைசிகிச்சை செய்யக் கூடாது எனத் தீர்ப்பு வழங்கியது. இந்தியாவிலேயே இப்படியொரு தீர்ப்பு தமிழ்நாட்டில்தான் வழங்கப்பட்டிருக்கிறது’’ என்றவர், ‘‘இந்தப் பின்புலத்தின் அடிப்படையில்தான், இடைபாலின குழந்தைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அந்தக் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் வலியுறுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் ஊட்டப்படும் தன்னம்பிக்கை, இடைபாலின குழந்தைக்கும் ஊட்டப்பட வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு இணையாக அந்தக் குழந்தையையும் வளர்க்க வேண்டும். அந்தப் பொறுப்பை அம்மாவின் தாலாட்டில் இருந்து தொடங்கி வைப்பதே இந்தத் தாலாட்டுப் பிறக்க அடித்தளம்’’ என்ற விஜயராஜ மல்லிகா, தன் வாழ்க்கை பற்றி பகிர்ந்துகொண்டார்.

“30 வயதில் விஜயராஜ மல்லிகா என்ற பெயருடன், ஒரு திருநங்கையாக நான் வாழ ஆரம்பித்தேன். ஒரு வருடத்துக்கு முன் எனக்குத் திருமணம் முடிந்தது. கணவர், கம்ப்யூட்டர் இன்ஜினீயர்” என்றவர் தனது தாலாட்டுப் பாடலுக்குக் கிடைத்த வரவேற்பைப் பற்றி சொன்னார். “இடைபாலின குழந்தைகளின் அம்மாக்கள் பலர், ‘எங்கள் குழந்தைகளுக்கான பிரத்யேக தாலாட்டுப் பாடல் என்பதை கேட்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சமூகச் செயற்பாட்டாளர் மேஜிக் மாயா, இந்தப் பாடல் நம்பிக்கை ஊட்டும்விதமாக இருப்பதாகக் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மகுமார் பரமேஸ்வரன், இதை தமிழில் மொழிப்பெயர்த்தார். மலையாளப் பின்னணிப் பாடகி கரிம்புழா ராதா, 54 வருடங் களுக்குப் பின், இந்தத் தாலாட்டுக்குப் பின்னணி பாடினார். வயலின் இசை கோக்கப்பட்ட இந்தத் தாலாட்டுப் பாடலுக்கு, டாக்டர் சந்தியா மோகினி ஆட்டம் ஆடினார். இந்தத் தாலாட்டின் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப்பெயர்ப்புகள் விரைவில் வர உள்ளன. இந்தளவுக்கு இதற்கு வரவேற்பு கிடைக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை’’ என்பவர்,

‘‘உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் இடைபாலினத்தவர்கள் இருக்கிறார்கள். இடைபாலின குழந்தைகளை ஏற்றுக்கொள்வோம், மற்றவர்களுக்கு இணையான அன்பு, மரியாதை, வாய்ப்புடன் இந்தச் சமுதாயத்தில் அவர்கள் வளர வாய்ப்பளிப்போம்...” - விஜயராஜ மல்லிகாவின் வார்த்தைகளில் அக்கறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாயின் மனதுக்கு எழுதப்பட்ட தாலாட்டு!

ஆராரோ... ஆரிராரோ... - “மகனல்ல மகளல்ல வானவில்லே..!”

விஜயராஜ மல்லிகாவின் தாலாட்டுப் பாடலுக்கு மோகினி ஆட்டம் ஆடி யூடியூபில் பதிவேற்றிய திருச்சூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியை டாக்டர் சந்தியா, ‘‘குழந்தைகளுக்கான தாலாட்டு களை நாம் அறிவோம். இது, இடைபாலின குழந்தை யின் தாயின் மனதுக்கு வலுசேர்க்கும் வகையில் எழுதப்பட்ட தாலாட்டு. இதற்கான என் மோகினி ஆட்டத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இடைபாலின குழந்தையை வளர்க்கும் ஒரு தாயின் சூழலை உலகுக்கு உரக்கச் சொன்னதில் என் பங்களிப்பும் இருப்பது நிறைவாக உள்ளது’’ என்றார்.

அறுவைசிகிச்சை... தீர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், திருநங்கை திருமணம் தொடர்பாகத் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அதில் இடைபாலின குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை குறித்தும் குறிப்பிட்டது. உறுப்பு ஒட்டிப் பிறக்கும் இடைபாலின குழந்தைகளுக்கு, அவர்களுக்கு விவரம் தெரியாத குழந்தைப் பருவத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் பெற்றோர் உறுப்பை வலுக்கட்டாயமாக, தங்கள் விருப்பப்படி அகற்றுகின்றனர். குழந்தைகளுக்கு 14 வயதுக்குப் பின்னர்தான் ஹார்மோன் வளர்ச்சி அடையும் என்பதால், 18 வயதுக்கு மேல்தான் தங்கள் பாலினத்தை அவர்கள் தீர்மானிப்பார்கள். அறுவை சிகிச்சை முடிவை அதற்குப் பின்னர் அவர்கள் தாம் எடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டது.

மரபணு மாற்ற குளறுபடி இது!

நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் டாக்டர் ஷஃபியுல்லா, ‘‘சில குழந்தைகள் பிறக்கும்போது மரபணு மாற்ற குளறுபடிகளால் இருபால் உடல் மாற்றம் (Intersex) கொண்டு பிறப்பார்கள். இவர்களுக்கான பிறப்புறுப்புகளிலும் பாலின உள்ளுறுப்புகளிலும் ஒரு சில வேறுபாடுகள் இருக்க வாய்ப்புண்டு.

ஆராரோ... ஆரிராரோ... - “மகனல்ல மகளல்ல வானவில்லே..!”

பொதுவாக, மூன்றாவது பிறந்தநாளுக்கு முன்னர் எல்லா குழந்தைகளும் தங்கள் பாலினத்தை அறிந்துகொள்வார்கள் (Gender Identity). 4 - 7 வயதில், உடை, பொம்மை, அலங்காரம் உள்ளிட்டவற்றில் தங்களின் பாலின விருப்பு, வெறுப்புகளை (Gender Expression) தீர்மானிப்பார்கள். 9 வயது முதல், குழந்தைகள் தங்களின் எதிர்பாலின விவரங்கள், வித்தியாசங்கள் (Sexual Orientation) பற்றி அறிவார்கள். இந்நிலையில் சில குழந்தைகளுக்கு, எதிர்பாலின இயல்புகளுடன் தங்கள் இயல்புகள் ஒத்துப்போவதும், அதை ரசிப்பதும், தம்மையும் அப்படி மாற்றிக்கொள்ள நினைப்பதும் ஏற்படலாம் (Gender Dysphoria). இந்த நிலையில் அவர்களை மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உடல், மன, ஹார்மோன் மாற்றங்களுக் கேற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்” என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு