Published:Updated:

"அந்த சர்ப்ரைஸ் பரிசு எங்க கனவு இல்லமா இருக்கும்னு எதிர்பார்க்கலை!" - வைரல் வீடியோ பெண் சுப்ரியா

சுப்ரியாவை அழைத்து வீடு பரிசளித்த ஜாய் ஆலுகாஸ்
சுப்ரியாவை அழைத்து வீடு பரிசளித்த ஜாய் ஆலுகாஸ்

"எங்கள் பாஸ் என்னை வாழ்த்தியது ஒருபோதும் மறக்க முடியாதது. நன்மை செய்வதை எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்" என அவர் கூறினார் என நெகிழ்கிறார் வைரல் பெண் சுப்ரியா.

எப்படிப்பட்ட வீடியோ எந்த நேரத்தில் வைரலாகும் என யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில் நடுரோட்டில் திக்கற்று நின்ற பார்வையற்ற முதியவரை பெண் ஒருவர் காப்பாற்றி, அவரின் கைப்பிடித்து பஸ் ஏற்றிவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது. கேரள மாநிலம் திருவல்லாவில் நடு ரோட்டில் பாய்ந்து வரும் வாகனங்களுக்கு நடுவில் கைகளைப் பிசைந்துகொண்டு நின்ற பார்வை தெரியாத முதியவரைக் காப்பாற்றியிருக்கிறார் சுப்ரியா. திருவல்லாவில் துணிக்கடையில் விற்பனை பிரிவில் பணிபுரியும் சுப்ரியா அந்த முதியவரைக் கனிவுடன் பஸ் ஏற்றிவிட்ட நிகழ்வை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சுப்ரியாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மிகவும் ஆச்சர்யமானவை.

பார்வையற்ற முதியவரின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் சுப்ரியா
பார்வையற்ற முதியவரின் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் சுப்ரியா

வைரல் பெண் சுப்ரியா, கணவன் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். முதியவருக்கு உதவிய நிகழ்வுபற்றி கூறுகையில், "வேலை முடிஞ்சதும் என் கணவர் அனூப்தான் என்னை பைக்கில வீட்டுக்கு அழைச்சுட்டுப் போவார். அன்னிக்கு 'கொஞ்சம் வேலை இருக்கு. வேலை முடிச்சு வெளியே வா. நான் வரேன்'னு சொன்னார். நான் வெளியே வந்து ரோட்ல நடந்துகிட்டிருந்தபோதுதான் பார்வை தெரியாத முதியவர் நடுரோட்ல நிக்கிறதைப் பார்த்தேன். ரோட்ல போற வண்டி அவரை இடிப்பதுபோலப் போனது. அப்பதான் நான் ஓடிப்போய் அவரின் கைப்பிடித்து சாலை ஓரமாக நிறுத்தி 'நீங்க எங்க போகணும்'னு கேட்டேன். அந்த இடத்தில பஸ் ஸ்டாப் உண்டானுகூட எனக்குத் தெரியாது. என் கணவர் அனூப் வந்தால் அவரது பைக்கில அந்த முதியவரை பஸ் ஸ்டாப்புக்குக் கூட்டிட்டுபோய் பஸ் ஏற்றிவிடலாம்னு நினைச்சேன்.

அப்போதான் அந்த முதியவர், 'இந்த இடத்துல ஒரு பஸ் ஸ்டாப் உண்டு மோளே'ன்னு சொன்னார். அந்த நேரத்துலதான் பஸ் வந்தது. பஸ்ஸை அங்க நிறுத்துவாங்கன்னு நான் நினைக்கல. இருந்தாலும் நான் கையைக் காட்டியதும் பஸ் நின்றது. கடைசி சீட்டுல கண்டக்டர் இருந்தார். அவரிடம் பார்வை தெரியாத வயதானவர் ஒருவரை பஸ்ஸில் அழைச்சுட்டுப் போவீங்களான்னு கேட்டேன். அவரும் சம்மதிச்சதால நான் அவரைக் கையைப் பிடிச்சு பஸ்ல ஏற்றி அனுப்பினேன். அந்தச் சம்பவத்தை இப்படி வீடியோவா எடுத்தது எனக்குத் தெரியாது.

அன்னைக்கு ராத்திரி 9 மணி இருக்கும் என்கூட வேலை செய்யுற அர்ச்சனா போன் பண்ணி 'இணையதளத்தில் ஹீரோ ஆயிட்டியே'ன்னு சொன்னாங்க. எனக்குப் புரியல. என் கணவர்கிட்ட நீங்க எனக்கு வீடியோ எதாவது ஃபேஸ்புக்கில போட்டீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க, 'உனக்கு ஒண்ணும் தெரியாதா. நீ பஸ் ஏற்றி விட்ட முதியவர் யாரு'ன்னு கேட்டாங்க. அப்பதான் எனக்கு அந்தச் சம்பவம் ஞாபகத்துல வந்தது. அதுக்குப் பிறகுதான் போனை எடுத்து வீடியோவை பார்த்தேன். எனக்கு ஆச்சர்யமாபோச்சு. யார் வீடியோ எடுத்திருப்பாங்கன்னு மறுநாள் காலையில கணவருடன் பைக்கில் வேலைக்கு வரும்போது அந்த இடத்துல பார்த்தேன். அப்போதுதான் அங்க எங்களையே பார்த்திட்டு நின்ன ஜோஸ்வாவை என் கணவர் காட்டி 'இவர்தான் வீடியோ எடுத்திருக்கார் நன்றி சொல்லணுமா'ன்னு' கேட்டார். கண்டிப்பா நன்றி சொல்லணும்னு நான் அவருக்கு நன்றி சொன்னேன்" என்றார்.

முதியவரைக் காப்பாற்றிய சுப்ரியா
முதியவரைக் காப்பாற்றிய சுப்ரியா
கேரளா: அன்று நூற்றுக்கணக்கானோர்; இன்று 8 பேர்! -இறந்த பிறகும் வாழ்வளித்த இளைஞர்

ஆற்றின்கரை எலெக்ட்ரானிக் கடையில் வேலை செய்யும் ஜோஸ்வா இந்த வீடியோவை தனது மொபைல் போனில் எடுத்திருக்கிறார். இதுபற்றி ஜோஸ்வா கூறும்போது, "எங்க கடையோட குடோன்ல நான் பொருள்கள் எடுக்கப் போனப்பதான் பார்வை இல்லாத முதியவர் நடு ரோட்டுல நிக்கிறதைப் பார்த்தேன். அவங்களுக்கு உதவ யாரும் இல்லையேன்னு நினைச்சு நான் இறங்கிப் போகலாம்னு இருக்கும்போதுதான் சுப்ரியா அந்த முதியவரின் கையைப் பிடிச்சு ஓரமா கூட்டிட்டுபோனாங்க. அப்புறமா அவங்க பஸ்ஸை நிறுத்தினாங்க. அதில் இருந்துதான் நான் வீடியோ எடுக்கத் தொடங்கினேன். அவங்க ஓடிப்போய் கண்டக்டர்கிட்ட விசாரிச்சுகிட்டு, மீண்டும் ஓடிப்போய் முதியவரைக் கூட்டிட்டு வந்து பஸ்ல ஏற்றிவிட்டது வரைக்கும் வீடியோ எடுத்தேன். எல்லோரும் இதை ஃபேஸ்புக்கில போடச் சொன்னாங்க. அவங்க பர்மிஷன் இல்லாம எப்படி வீடியோவை போடுறதுன்னு யோசிச்சேன். அப்பதான் நல்ல விஷயம்தானேன்னு எல்லோரும் சொன்னதால வீடியோவை ஃபேஸ்புக்கில் போட்டேன். வீடியோ அப்லோட் செய்த 5 நிமிஷத்துல 50 ஷேர் ஆச்சுது. அப்புறம் ஏகப்பட்ட ஷேர்ஸ். இந்த வீடியோ இப்படி வைரலாகும்னு நான் நினைக்கல" என்றார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சுப்ரியா வேலைபார்க்கும் கடையின் உரிமையாளர் ஜாய் ஆலுகாஸ் போனில் அழைத்து பாராட்டியதுடன் தன்னை வந்து சந்திக்குமாறு கூறியிருந்தார். திருச்சூரில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு குடும்பத்தினருடன் சென்று அவரைச் சந்தித்தார் சுப்ரியா. அந்தச் சந்திப்பில்தான் சுப்ரியாவுக்கு வீடு வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜாய் ஆலுகாஸ்.

அந்தச் சந்திப்பு குறித்து சுப்ரியா கூறுகையில், "சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் பலரும் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆனால், எங்கள் பாஸ் என்னை வாழ்த்தியது ஒருபோதும் மறக்க முடியாதது. நன்மை செய்வதை எப்போதும் மனதில் நிறுத்திக்கொள் என அவர் கூறினார். மேலும், எனக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசு தருவதாகச் சொன்னார். அது எங்கள் கனவு இல்லமாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத நிகழ்வுதான் அன்று நடந்தது" என்றார்.

கணவர், பிள்ளைகளுடன் சுப்ரியா
கணவர், பிள்ளைகளுடன் சுப்ரியா

சுப்ரியா உதவியது திருவல்லா கற்றோட்டு தலப்பாலை பகுதியைச் சேர்ந்த ஜோஸ் (62) எனத் தெரியவந்துள்ளது. இதுபற்றி ஜோஸ் கூறும்போது, "முழுவதும் கண் பார்வை பறிபோய் 15 வருஷம் ஆகுது. அன்று திருவல்லா தாலுகா ஆஸ்பத்திரிக்கு போயிட்டுத் திரும்பி வரும்போது வழி தவறி நடுரோட்டில் நின்றபோது அந்தப் பெண் வந்து உதவினார்" என்றார். ஜோசுக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். சலூன் கடையில் பணிபுரியும் மூத்த மகனால் மட்டுமே வருமானம் வருகிறது. ஐ.டி.ஐ படித்த இரண்டாவது மகன் மற்றும் 10-ம் வகுப்பு படித்து முடித்து மேற்படிப்புக்குத் தயாராகும் மகள் ஆகியோருடன் வசித்துவருகிறார் ஜோஸ். ஜோஸுக்கும் சிலர் வீடு உதவி செய்துள்ளனர். ஆனாலும் அவரது வீட்டு வேலை பாதியிலேயே நிற்கிறது.

அடுத்த கட்டுரைக்கு