Published:Updated:

முதலை, ஆமை, இக்வானா, டிராகன்... “இதெல்லாமும் எங்களுக்குக் குழந்தைங்கதான்!”

 சாந்தி, ஆமை
பிரீமியம் ஸ்டோரி
சாந்தி, ஆமை

இவர்கள் வித்தியாசமானவர்கள்

முதலை, ஆமை, இக்வானா, டிராகன்... “இதெல்லாமும் எங்களுக்குக் குழந்தைங்கதான்!”

இவர்கள் வித்தியாசமானவர்கள்

Published:Updated:
 சாந்தி, ஆமை
பிரீமியம் ஸ்டோரி
சாந்தி, ஆமை

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘மெட்ராஸ் முதலைப் பண்ணை’, இந்தியாவில் மிகப் பெரிய முதலைப் பண்ணை என்ற சிறப்பைப் பெற்றது. 2,000 முதலைகள் தவிர, ஆமைகள், மலைப் பாம்புகள், ஓணான் இனத்தைச் சேர்ந்த இக்வானா, பல்லி இனத்தைச் சேர்ந்த கொமோடோ டிராகன் உள்ளிட்ட ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணிகள் பலவும் இந்தப் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. இவற்றைப் பராமரிக்கும் பணியில் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இதுகுறித்து அறிய, சென்னையிலிருந்து நீளும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்துக்கு 15 கி.மீ முன்னதாக உள்ள நெம்மேலி அருகே அமைந்துள்ள முதலைப் பண்ணைக்கு விசிட் அடித்தோம்.

கொரோனா ஊரடங்கால் பார்வையாளர்களுக்கு அனுமதியின்றி பண்ணை நிசப்தமாக இருந்தது. ஒவ்வொரு கூண்டுக்குள்ளும் நீரிலும் நிலத்திலும் நூற்றுக்கணக்கான முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு அசைவற்றுப் படுத்திருந்தன. இங்கு 15 வகை யான முதலைகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் கூண்டில் இறங்கி, தண்ணீரிலுள்ள முதலைகளுக்கு மீன்களைக் கொட்டிக்கொண்டிருந்தார், முதலைப் பராமரிப்பாளர்களில் சீனியரான பரிமளா. இவருக்கும் மீனைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த முதலைகளுக்கும் இடையே வெறும் 2 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. மிகவும் சவாலான அந்தப் பணியை அநாயாசமாக பயமில்லாமல் செய்த பரிமளா, நம்மிடம் யதார்த்தமாகப் பேசினார்.

 சாந்தி
சாந்தி

“என் கணவர் திடீர்னு இறந்துட் டார். மூணு குழந்தைகளையும் காப்பாத்தறதுக்காகத்தான் இங்க வேலைக்கு வந்தேன். ஆரம்பத்துல இருந்தே முதலைகளை மட்டுமே கவனிச்சுக்கிறேன். என்கூட இன்னும் ரெண்டு பெண்கள் வேலை செய்யுறாங்க. காலையில வேலைக்கு வந்ததுமே, ஒவ்வொரு கூண்டுக்குள்ளயும் இறங்கி இலை தழைகளையெல்லாம் கூட்டிச் சுத்தம் செய்வோம். அப்போ மணற்பரப்பில் இருக்கும் முதலைகளையெல்லாம் ஆண் பணியாளர் தண்ணிக்குள்ள துரத்திடுவார். வாரத்துக்கு ஒருமுறை தண்ணியை வெளியேத்திட்டு தொட்டியைச் சுத்தம் செய்வோம். அப்போ எல்லா முதலைகளையும் மணற்பரப்புக்குத் துரத்திவிடுவோம்.

வாரத்துக்கு ஒருமுறைதான் முதலைகளுக்கு உணவு கொடுப் போம். கரியால் வகை முதலை தவிர, மத்த முதலைகளுக்கு மீனுடன் சிக்கனும் கொடுப்போம். பெண் முதலை நீண்ட நேரமா நகராம இருந்தா, அதன் கீழுள்ள மண்ணில் முட்டையிட்டுப் பாதுகாக்குதுன்னு அர்த்தம். அந்த முதலையை விலக்கி விட்டு முட்டையைச் சேகரிச்சு இனவிருத்தி செய்ய பயன்படுத்துவோம். முட்டையைச் சேகரிக்கற நேரங்கள்ல முதலைங்க ஆக்ரோஷமா எங்களைத் தாக்க வரும். கூட இருக்கும் ஆண் பணியாளர் குச்சியை வேகமா தரையில தட்டுவார். முதலைங்க அப்படியே திரும்பிப் போயிடும். கொஞ்சம் தப்பினாலும் எங்களுக்கு எதுவும் நடக்கலாம். பார்க்கிறவங்களுக்கு பயமா இருக்கும். ஆனா, எங்களுக்குப் பழகிப்போச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 பவித்ரா
பவித்ரா

பிறந்து சில மாசம்வரை தனியா பராமரிச்சுட்டு, பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக நாலு வயசு வரை எல்லா முதலைகளையும் தனியா ஓர் இடத்துல வளர்ப்போம். அந்தக் குட்டி முதலைகளின் வாயைப் பத்திரமா அழுத்திப் பிடிச்சுகிட்டு நீவிவிட்டு குழந்தைங்க மாதிரி கவனிச்சுப்போம். பெரிசானதும் இதுங்களோட இயல்புபடி ஆக்ரோஷமா மாறிட்டாலும், முதலைங்க மேல எங்களுக்கு இருக்கும் அன்பு குறையாது. எனக்கு 59 வயசாகது. இன்னும் ஒரு வருஷம்தான் இங்க வேலை செய்ய முடியும். இந்த முதலைகளை அதுக்குப் பிறகு பார்க்க முடியாதேனு இப்ப நினைக்கும்போதே வருத்தமா இருக்கு. ஒரு வருஷத்துக்கு பிறகு என்னவாகுமோ” என்று கவலை பகிர்கிறார் பரிமளா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பண்ணையிலுள்ள ஆமைகளின் செல்லத் தாயாக வலம்வருகிறார் சாந்தி. அவரின் வருகைக்காகக் காத்திருந்த பெரிய ஆமைகள் நான்கும், கூண்டுக்குள் நுழைந்ததும் சாந்தியின் கால்களைச் சுற்றி வருகின்றன. மூன்றடி நீளத்தில் பிரமாண்டமாக இருக்கும் அந்த ஆமைகள் ‘அல்டாப்ரா’ வகையைச் சேர்ந்தவை. குளிப்பாட்டிவிட்டு அவற்றுக்கு உணவாகப் புளிச்சக் கீரையைக் கொடுத்துக்கொண்டே பேசினார் சாந்தி.

முதலை, ஆமை, இக்வானா, டிராகன்... “இதெல்லாமும் எங்களுக்குக் குழந்தைங்கதான்!”

“25 வருஷத்துக்கு முன்பு கணவர் இறந் துட்டார். குடும்பக் கஷ்டத்துக்கு இங்க வேலைக்கு வந்தேன். அஞ்சு வருஷங்கள் தூய்மைப் பணியாளராவும், 10 வருஷங்கள் முதலைப் பராமரிப்பாளராவும் வேலை செஞ்சேன். பிறகு இப்பவரை ஆமைகளைக் கவனிச்சுக்கறேன். தினமும் காலையில வந்ததுமே இந்த இடத்தைச் சுத்தம் செஞ்சு, ஆமைகளைக் குளிப்பாட்டி விடுவேன். 20 வயசாகும் இந்த ஆமைங்க இன்னும் நீளமாகவும், 250 கிலோ எடை வரையும் வளரும். 25 வயசுக்குப் பிறகு முட்டையிடத் தொடங்கும். தண்ணியில நீந்த விரும்பாத இந்த ஆமைங்க, 120 வயசுவரை உயிர்வாழும்.

பரிமளா
பரிமளா

ஆமைகளுக்குக் கீரை வகைகள், கேரட், பீன்ஸ், பீர்க்கங்காய், பூசணி உள்ளிட்ட சில காய்கறிகளையும் பழங்களையும் கொடுப்போம். இவை தவிர, பண்ணையில சில இடங்கள்ல தனியாவும் முதலைகள் வளரும் இடத்துலயும் நிறைய ஆமைகள் இருக்கு. அதில் சில ஆமைகள் மட்டும் மீன், சிக்கன் சாப்பிடும். தனியா வளர்க்கும் எல்லா ஆமைகளையும் பராமரிப்பதுடன், அவற்றின் முட்டைகளைச் சேகரிக்கிறது என் வேலை. நான் ஒருநாள் லீவ் போட்டாலும் இந்த ஆமைங்க ஏங்கிப்போயிடும். இதுங்க எனக்குக் குழந்தைங்க மாதிரி” என்று பூரிப்புடன் கூறுபவரின் முகத்தில் தாய்மை பிரகாசிக்கிறது!

நான்கு அடி நீளமுள்ள பெரிய இக்வானாவுக்குச் செல்லம் கொஞ்சி உணவூட்டிக்கொண்டிருந்த பவித்ரா. “2010-ல் இங்க நூலகரா சேர்ந்து, இப்ப உதவிக் கணக்காளராகவும் இருக்கேன்.

ருச்சிகா
ருச்சிகா

எம்.பி.ஏ படிச்சிருந்தாலும் விலங்குகள் மீதான நேசத்துலதான் இங்க வேலைக்கு வந்தேன். என் பிரதான வேலையுடன், விருப்பப்பட்டு குட்டி முதலைகளுக்கு உணவூட்டும் பணியைச் செஞ்சேன். பிறகு, இக்வானா பராமரிப் பாளரானேன். ரெண்டு இக்வானா இறந்துட்ட நிலையில், எஞ்சிய இந்த 14 வயசு இக்வானாவை பாதுகாப்பா கவனிச்சுக்கிறோம். இதன் பராமரிப்புக்குத் தினமும் ஒரு மணிநேரம் ஒதுக்குவேன். அடர்நிறத்திலுள்ள காய்கறிகள் மட்டுமே அதிகம் சாப்பிடும். இந்தக் கூண்டைத் தாண்டி வெளியே வராது. கூச்ச சுபாவம் கொண்டது. ஆனா, என்மீது மட்டும் ஏறி விளை யாடும். நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

இந்தப் பண்ணையின் ஒரே கால்நடை மருத்துவரான ருச்சிகா, இங்குள்ள அனைத்து பிராணிகளின் உடல்நலம் குறித்தும் துல்லிய மாகத் தெரிந்து வைத்திருக்கிறார். “என் பூர்வீகம் மும்பை. அங்க இளநிலை படிச்ச நிலையில், சென்னையில் முதுநிலை கால்நடை மருத்துவப் படிப்பை போன வருஷம் முடிச்சேன். அடுத்து இங்க வேலையில் சேர்ந்தேன். தினமும் வேலைக்கு வந்ததும் எல்லாப் பிராணிகளின் செயல்பாடுகளையும் கண்காணிப்பதுடன், பணியாளர்கள்கிட்டயும் ஆலோசனை செய்வேன். எல்லா இடத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கு. அதனால, அதிக அளவில் இருந்தாலும் எல்லா முதலைகளின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிப்போம். உடல்நிலை சரியில்லாத பிராணியை மட்டும் தனிமைப்படுத்தி அதுக்கிருக்கும் பிரச்னையைக் கண்டுபிடிச்சு வைத்தியம் செய்வேன். இறந்துபோகும் பிராணிகளைப் பிரேதப் பரிசோதனை செஞ்சு அடக்கம் பண்றவரை என் பொறுப்பு தொடரும். எல்லாத்தையும் கூட்டுமுயற்சியுடன்தான் செய்வோம்.

தெளிந்த நீரோடையைவிட கலங்கிய தண்ணீரைத்தான் முதலைகள் விரும்பும். அதுலதான் முதலைகளுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியா அதிகம் இருக்கும். கலங்கிய தண்ணீரில்கூட முதலைகளுக்குக் கண் பார்வை சிறப்பா தெரியும். உடலிலுள்ள வெப்பத்தை வெளியேற்றவே முதலைகள் மணிக்கணக்கில் வாயைத் திறந்து வெச்சிருக்கும். பசி இல்லாதப்போ அதுக்குப் பிடிச்ச உணவைக் கொடுத்தாலும் சாப்பிடாம படுத்துகிட்டேதான் இருக்கும்” என்னும் ருச்சிகா, குட்டி முதலைகளைக் கொஞ்சியபடி, அவற்றைப் பராமரிக்கும் இடத்தையும் சுற்றிக்காட்டினார்.

முதலை, ஆமை, இக்வானா, டிராகன்... “இதெல்லாமும் எங்களுக்குக் குழந்தைங்கதான்!”

பண்ணையின் துணைக் கண்காணிப் பாளராக இருக்கும் அம்பிகாவுக்குத் தெரியாமல் அங்கு எதுவும் நடை பெறுவதில்லை. கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்டவர், லண்டனில் உயிரியல் பூங்கா நிர்வாகவியல் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு பணியாற்றுகிறார். இவர், ஐந்தடி நீளமுள்ள கொமோடோ டிராகனுக்கு உயிருள்ள கோழியை உணவாகக் கொடுத்த காட்சி பிரமிப்பை ஏற்படுத்தியது.

“முதலைகள் உட்பட இங்குள்ள எல்லா உயிரினங்களும் சரியா சாப்பிட்டி ருக்கா, ஆரோக்கியமா இருக்கான்னு பார்வையிடுவதுதான் என் முதல் வேலை. எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியா இருக்கிறதை உறுதி செய்வதுடன், எல்லாவற்றையும் நல்ல முறையில் பராமரிக்கிறோம். இதில் இங்குள்ள பெண் பணியாளர்களின் பங்குதான் முக்கியமானது.

இத்தனை எண்ணிக்கையிலான முதலைகளை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது. வருஷத்துக்கு ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்க வருவாங்க. அவங்க மூலமாகக் கிடைக்கும் கட்டணம் மற்றும் நன்கொடை மூலமாகவே இந்தப் பண்ணை நிர்வகிக்கப்படுகிறது. அரசின் உதவியும் அவ்வப்போது கிடைக்கும்” என்றார் புன்னகையுடன்.

`இப்படித்தான்' என்று கணிக்க முடியாத மனிதர்களுக்கு நடுவே, 'இப்படித்தான்' என்று முடிவாகிவிட்ட விலங்குகளுடன் வாழ்வது சுலபம்தான் போல!