Published:Updated:

லாக்டௌன் காலத்தில் ஆணாதிக்கம் கூடியிருக்கிறதா? - ஓர் உளவியல் பார்வை

 வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

மனைவியைக் கணவன் கண்காணித்துக் கொண்டே இருப்பது, சமையலை விமர்சிப்பது, வேலைகளை ஏவுவது போன்ற செயல்களால் ஒருகட்டத்தில் பெண்கள் எரிச்சலடையத் தொடங்குகிறார்கள்.

ஒரு வீட்டில் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருக்கும் மனைவி, அவசரம் அவசரமாக சமையல் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். கணவருக்கு முக்கியமான அலுவலக செல்போன் அழைப்பு வருகிறது. மனைவி அப்போதுதான் `கரகர' சத்தத்தில் மிக்ஸியை இயக்கிக்கொண்டிருக்கிறார். கணவனோ கோபத்தில் ``முக்கியமான கால் வருது. அதைக் கொஞ்சம் நிறுத்துறியா" என்று கத்துகிறார். மனைவிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

``மிக்ஸியைத் தூக்கிட்டு நான் வெளியே போக முடியாது. ஆனா, மொபைலைத் தூக்கிட்டு நீங்க வெளில போகலாம்ல" என்கிறார்.

கணவர் சட்டென்று சிரித்துவிட்டு, நகர்கிறார். பெண் என்பவள் எல்லோரையும் அனுசரித்துப்போக வேண்டும். ஆனால், பெண்ணை அனுசரித்துச் செல்ல யாரும் தயாராக இல்லை.

ஆண்களுக்கும் இதுபோன்ற சூழலைக் கையாளத் தெரியாத நிலைதான் நீடிக்கிறது. உளவியல் ஆலோசகர் மினி ராவிடம் இதுபற்றி கேட்டபோது, ``பெண்களைப் பொறுத்தவரை அலுவலகச் சூழலில்தான் நிம்மதியாக வேலை பார்க்க முடியும். வீட்டிலிருந்தால் குழந்தையின் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி சமையல் வரை பார்க்க வேண்டியிருப்பதால் அலுவலகப் பணியில் கவனம் செலுத்தமுடியாது.

 வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

மனைவியைக் கணவன் கண்காணித்துக் கொண்டே இருப்பது, சமையலை விமர்சிப்பது, வேலைகளை ஏவுவது போன்ற செயல்களால் ஒருகட்டத்தில் பெண்கள் எரிச்சலடையத் தொடங்குகிறார்கள். கணவரும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் இரண்டு பேரும் நிறைய நேரம் ஒன்றாக இருக்கும் நிலை ஏற்படுவதால், வெறுப்பும் விரக்தியும் அதிகமாகின்றன.

கணவன் மனைவிக்குள் தோன்றும் இது போன்ற சிறிய உரசல்கள், வார்த்தை வன்முறையாகவோ, உணர்வுரீதியான வன்முறையாகவோ (Emotional abuse) மாறுகிறது. குழந்தைகள் முன்னால் மனைவியைத் திட்டுவது, குத்திக்காட்டுவது, குறைகூறுவது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன. சின்ன விஷயங்கள், உரசல்கள் அனைத்தும் பெரிதாகின்றன.

 வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

இந்தியா இப்போதும் ஆணாதிக்க சமூகமாகவே இருக்கிறது. லாக்டௌன் காலத்தில் அந்த ஆதிக்கம் கூடியிருக்கிறது. `குடும்பத்தை நிர்வகிக்க முடியவில்லை என்றால் வேலையை விட்டுவிடு' என்று பெண்களிடம் சர்வசாதாரணமாகச் சொல்ல முடிகிறது. ஆண்களுக்கு நிகராகப் படித்து சம்பளம் வாங்கும் பெண்களை `வீட்டில் இரு' என்று எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. இதை எதிர்கொள்ளும் பெண்கள், வீட்டு வேலைகளைச் செய்வதற்கு மட்டும்தான் தமக்குத் திறமை இருக்கிறது எனச் சுயமரியாதையை இழக்கும் வகையில் சிந்திக்கத் தொடங்கிவிடுகின்றனர்.

விளைவு, மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தம் என்பது வயிற்றுப் புண் தொடங்கி பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும்.

இதுபோன்ற விஷயங்களால் ஸெனோபோபியா (Xenophobia) என்ற பிரச்னை பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. நிலையற்ற தன்மை, குடும்பத்தில் உரசல்கள், நோய் பற்றிய அச்சம் போன்றவற்றால் எதிர்காலம் குறித்த பயம், பதற்றம் உருவாவதே ஸெனாபோபியா. பெருந்தொற்று காலத்தின் நீட்சியாகவே இந்தப் பிரச்னையைப் பார்க்க முடிகிறது" என்கிறார் மினி ராவ்.

- இந்தப் பிரச்னைகளின் பின்னணியுடன் தீர்வுகளையும் முழுமையாக அலசும் கட்டுரையை அவள் விகடன் இதழில் வாசிக்க > அஷ்டாவதானிகளுக்கும் வேண்டும் ஆசுவாசம்! - WFH பெண்கள் - சிக்கல்களும் தீர்வும்! https://bit.ly/3kuEcdo

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு