Published:Updated:

பொள்ளாச்சி, நாகர்கோவில் சம்பவங்கள்: பாலியல் கல்விதான் தீர்வு... எப்படி?

பாலியல் கல்வி என்பது ஒரு கடல் போன்றது. அதில் பாலியல் நடத்தைகள் பேசுவது ஒருபக்கம் என்றால் பாலியல் உரிமைகளைப் பேசுவது இன்னொரு பக்கம்.

நாம் இன்னமும் பெண் குழந்தைகளையே ஒழுங்காக இருக்க அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம். அதையும் மீறி, ஆண்கள், பெண்களைக் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்வது என்பது வன்முறை கலாசாரத்தின் ஆபத்தான போக்காகவே பார்க்கப்பட வேண்டும். இதற்கு எதிராக நான் சொல்லக் கூடியது ஒரே ஒரு விஷயம்தான். பாலியல் கல்வி. அது மட்டும்தான் இதற்கான தீர்வாக இருக்கும்.

பாலியல் கல்வி என்பது ஒரு கடல் போன்றது. அதில் பாலியல் நடத்தைகள் பேசுவது ஒருபக்கம் என்றால் பாலியல் உரிமைகளைப் பேசுவது இன்னொரு பக்கம். பாலியல் கல்வி, ஆணும் பெண்ணும் சமம் என்கிறது. பாலியல் உரிமைகளைப் பொறுத்தவரை ஆண், பெண்ணைவிட எந்தவிதத்திலும் உயர்ந்தவன் அல்லன்.

ஆண் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எந்த நேரத்துக்கும் வீட்டுக்கு வரலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். ஆனால், பெண் என்பவள் இப்படித்தான் உடையணிய வேண்டும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது மாதிரி பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். அதே மாதிரி அத்துமீறி பெண்களிடம் தவறாக நடந்துகொள்பவர்கள் மீதான சட்டப்படியான நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

பாலியல் கல்வி
பாலியல் கல்வி

சோஷலிச நாடுகளில் ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படுகிறார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. சிங்கப்பூரில் ஒரு பெண்ணை யாரும் கிண்டல், கேலி செய்துவிட முடியாது. ஆண்களின் தவறான நடத்தைக்கு அந்தப் பெண்ணின் உடையைக் காரணம் காட்ட முடியாது. சின்னதாகப் புகார் செய்தாலும் அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்த நபரை பின்பக்கமாக கைவிலங்கிட்டு, கைது செய்து கடுமையான ஜெயில் தண்டனை கொடுக்கப்படும். தவறு செய்தவரின் பின்னணி என்னவாக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்குள்ளவராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

சட்டங்களால் இது சாத்தியமாகிறது அல்லது சோஷலிச நாடுகள்போல சம உரிமைகள் கொடுக்கும் நாடுகளில் பெண் சுதந்திரம் சாத்தியமாகிறது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நிலைமை மிகவும் மோசம். அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளிலும் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

'டேட்டிங் ரேப்' என்கிறார்கள். ஆணும் பெண்ணும் பழகும்போது வெளியிடங்களுக்குச் செல்வது, சேர்ந்து உணவருந்துவது எல்லாம் இயல்பான விஷயங்கள். அந்த டேட்டிங் பெண்ணுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவளுடன் வல்லுறவு கொள்வது நடந்தால்..? அதுதான் டேட்டிங் ரேப். இந்தியாவில் இந்தக் கலாசாரம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது. ஏற்கெனவே இந்தியா போன்ற நாடுகளில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி ஆபாசத் திரைப்படங்கள் சோஷியல் மீடியாக்கள், அவற்றில் இளம் ஆண்களும் பெண்களும் தேர்ந்தெடுக்கும் தவறான விஷயங்கள் எல்லாம் ஆபத்தின் அறிகுறிகள்.

ஒரு பெண்ணை ஆபாசமாகப் படம் எடுத்து பின்னால் மிரட்டுவதெல்லாம் முன்பு இல்லாமலிருந்தது. இன்று யார் வேண்டுமானாலும் அதைச் செய்துவிட முடியும். அதைவைத்து வாழ்நாள் முழுவதும் மிரட்ட முடியும். பொள்ளாச்சி, நாகர்கோவில் போன்ற இடங்களில் நடந்தவையெல்லாம் இப்படித்தான் இதற்கும் தீர்வு பாலியல் கல்விதான். அது ஆண் பெண் இருவருக்கும் அவசியம்.

பாலியல் கல்வி என்பது பாலியல் உறவு பற்றி போதிக்கிற விஷயமல்ல. ஒரு பெண்ணை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி சமமாக நடத்த வேண்டும், பெண்ணுக்கான மரியாதையை எப்படிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் போதிப்பதுதான் பாலியல் கல்வி. அதுதான் ஆண்களை முறைப்படுத்தும்; பெண்களைச் சரியான பாதையில் செல்ல வழிகாட்டும்.

பாலியல் கல்வி என்பது தன்னம்பிக்கையை வளர்க்கும். மற்றவர்கள் உரிமைகளில் தலையிடுவதைத் தடுக்கும். மது, புகை போன்ற பழக்கங்களை ஒதுக்க வலியுறுத்தும்.

'நான் என் குழந்தைங்ககிட்ட ரொம்ப ஃப்ரெண்ட்லியா நடந்துபேன். எல்லா விஷயங்களையும் பேசுவேன்' - இப்படிப் பெருமை பேசும் பெற்றோர்கள் பலரைப் பார்க்கலாம். எல்லா விஷயங்களைப் பற்றியும் வெளிப்படையாக விவாதிக்கும் இவர்களில் எத்தனை பேர், பிள்ளைகளின் பாலியல் உணர்வுகளைப் பற்றிப் பேசுவார்கள்?

'அதையெல்லாம் பேசணுமா என்ன... அவங்களா அந்தந்த வயசுல தெரிஞ்சுப்பாங்க' என்ற நம்பிக்கையும் பல பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால், வேறெந்த விஷயத்தைவிடவும் நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் பாலியல் பற்றிப் பேசியாக வேண்டியது அவசியம்.

பலமுறை சொன்னதுபோல பெற்றோரை விடவும் இந்த விஷயத்தைப் பிள்ளைகளிடம் நாசுக்காகவும் நாகரிகமாகவும் நல்லவிதத்திலும் பேசக்கூடியவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

பிள்ளைகள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு உரையாடலை நோக்கிய முதல் அடியை நீங்களே எடுத்துவையுங்கள். பிள்ளைகளிடம் எந்த நேரத்தில், எந்த மாதிரியான சூழலில் இத்தகைய உரையாடலைத் தொடங்க வேண்டும் என்பது பற்றி முந்தைய அத்தியாயங்களில் பேசியிருக்கிறோம். அவற்றை கவனத்தில்கொள்ளுங்கள்.

இதற்காக பாலியல் மருத்துவர் காமராஜ் முன்வைக்கும் 10 முக்கிய வழிகாட்டுதல்களை அவள் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள்? https://bit.ly/38ivdaE

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு