`கல்யாணப் பரிசு' என்றொரு படம். 1959-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்டது. அதில் தங்கவேலு நகைச்சுவை எல்லோராலும் ரசிக்கப்பட்டது. தங்கவேலு அந்தப் படத்தில் தன் மனைவியிடம், தான் மன்னார் அண்ட் கம்பெனியில் வேலையில் இருப்பதாகக் கூறித்தான் கல்யாணம் முடித்திருப்பார். அந்தப் பொய்யைக் காப்பாற்ற அவர் செய்யும் தகிடுதத்தங்களே காமெடி.
பொதுவாக, நம் வாழ்க்கையில் நடப்பதுதான் சற்றே மிகைப்படுத்தப்பட்டு திரைப்படங்களில் காட்டப்படும். அந்த வகையில் பார்த்தால் இதற்கு ஏறக்குறைய அருகிலான சம்பவம் பலருக்கு நிகழ்ந்திருக்கக்கூடும்.
இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காண 2014-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பிரிவு 4(1)(b)(x) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவின் சாராம்சத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னர் ஆர்.டி.ஐ என்பது என்ன என்று பார்ப்போம். இந்தச் சட்டம் 2005-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

இந்தச் சட்டத்தின் கீழ், இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் ஒரு பொது அதிகாரம் பெற்ற அமைப்பிலிருந்து தகவல்களைக் கோரலாம். உடனடியாக அல்லது 30 நாள்களுக்குள் அதற்குப் பதில் அளிக்கப்பட வேண்டும்.
அப்போது கூறப்பட்ட மற்றும் ஒரு காரணம், ``அரசாங்க வேலையில் இருப்பவர் வாங்கும் சம்பளப்பணம், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வரிப்பணமே. அதனால், அவை செலவிடப்படும் விதம் பற்றிய தகவல் பொதுவெளியில் வைக்கப்பட வேண்டும்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்போது மேலே கூறப்பட்டுள்ள பிரிவுக்கு வருவோம். இதன் நோக்கம், ``மனைவிக்குக் கணவனின் சம்பளம் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உரிமை இருக்கிறது. அதனால் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் சுயமாக தங்கள் சம்பள விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டும்."
ஆக, மனைவிக்குத் தன் கணவனின் சம்பளம் பற்றி அறியும் உரிமை நிச்சயமாக உண்டு. இங்கொரு கேள்வி எழக்கூடும். கணவனுக்கும் இதேபோல மனைவியின் சம்பளம் பற்றி அறிய உரிமை உண்டா என்று கேட்டால், நிச்சயம் உண்டு.

சில நேரங்களில் கணவன் தன்னைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படக்கூடாது என்று எழுத்தில் நிபந்தனை விதிப்பதுண்டு. ஆனால், மனைவிக்கு இதையும் மீறி விவரம் அறிந்துகொள்ளும் உரிமையை இந்தச் சட்டம் கொடுக்கிறது.
2017-ம் ஆண்டு ஒரு வழக்கில், மனைவியிடம் கணவனின் மொத்த சம்பளத்தை மட்டுமே கூற சட்டம் இருக்கிறது. அதில் பிடிக்கப்படும் தொகைகள் பற்றிய விவரம் கூறப்பட வேண்டாம் என்று உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவாதத்தில் மற்றொரு முகமும் இருக்கிறது. பல நேரங்களில் விவாகரத்து கோரும் மனைவி இவ்வாறான தகவல்களை அவர் கேட்கப்போகும் பராமரிப்புத் தொகையை நிர்ணயம் செய்வதற்கென சேகரிக்க நேரும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவருக்கு உரிமை கொடுக்கப்படவில்லை.
இந்த உரிமைச்சட்டத்தை நன்றாக அலசிப்பார்த்தால், இங்கு அரசாங்க வேலையில் இருப்பவர் சுயமாகத் தன் சம்பள விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அப்படியென்றால், அரசாங்க வேலையில் இல்லாத கணவர்களின் மனைவிக்கு அவர் சம்பளத்தைப் பற்றிய தகவல் அறிந்துகொள்ள முடியாதா எனும் கேள்வி எழுகிறது. இதுவரையில் நிலை அப்படித்தான் இருக்கிறது.
நீதிமன்றங்களில் இதைப் போன்ற தகவல் கோரி மனைவிகள் தொடுத்த வழக்கில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், ``இதைப்போன்று சொத்து மற்றும் சம்பளம் பற்றிய தகவல்களை மனைவியிடம் கூறுவதற்கு சட்டம் இல்லை" என்றே தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்த வழக்குகளில் பெரும்பாலானவை கணவரின் மேல் சந்தேகம் கொண்டோ, கணவர் அன்றாடச் செலவுகளுக்கு போதிய தொகை கொடுக்காமல் போகும்போதோ தொடுக்கப்பட்டவைதான். இதுபோன்ற வழக்குகளில் பல நேரங்களில் மனைவி நீதிமன்ற வளாகத்திலேயே உடைந்து அழுத சம்பவங்களும் உண்டு. ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களில்கூட, ``சம்பளம் பற்றிய தகவல்கள் ஒருவருக்குச் சொந்தமானவை, அதை அவர் விருப்பமில்லாமல் மற்றொருவருக்கு, அது மனைவியாக இருந்தால்கூட கொடுக்கக் கூடாது" என்றே கூறப்பட்டு வந்தது.

இதற்கு மாற்றுக் கருத்தாக, மத்திய தகவல் ஆணையம் சில நாள்களுக்கு முன் முக்கிய முடிவு ஒன்றை அறிவித்திருக்கிறது.
பணியிடம் தவிர வேறு எங்கு கணவனின் சம்பளம் அல்லது வருமானம் பற்றிய தகவல் கிடைக்கும்? வருமானவரித் துறையிடம்!
காரணம், இங்கு வேலைபார்ப்பவர் அல்லது சுயதொழிலில் இருப்பவர், வேலையே இல்லாமல் பரம்பரைச் சொத்தில் காலம் தள்ளுபவர் என்று எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் வருமானத்தைப் பற்றிய தகவல் இருக்கும் இடம் அதுதான்.
இந்தக் குறிப்பிட்ட வழக்கில், வருமான வரித்துறையிடம் ஒருவரின் மனைவி தன் கணவரின் மொத்த வருமானம் பற்றிய விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, வருமான வரித்துறை அதை நிராகரித்தது.
அதற்குக் கூறப்பட்ட காரணம், ``வரி செலுத்துபவருக்கும் வருமானவரித் துறைக்குமான தனிப்பட்ட ஒப்பந்தத்தில் மூன்றாம் மனிதர் தலையிட உரிமை கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளதைக் கூறி, மனைவியின் கோரிக்கையை மத்திய தகவல் ஆணையம் நிராகரித்துள்ளது. இப்போது இந்த வழக்கில் மனைவிக்குக் கணவர் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பால் இதுநாள் வரையிலிருந்த ஒரு பாரபட்சம் நீங்கிவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, அரசாங்க வேலையிலிருக்கும் கணவரின் மனைவி மட்டுமே அவர் ஊதியம் பற்றிய தகவல்களைப் பெற முடியும் என்றிருந்தது. ஆனால், இந்தப் புதிய தீர்ப்பால், இனி எல்லா மனைவிகளும் கணவர் பற்றிய தகவல்களைப் பெற முடியும்.
-லதா ரகுநாதன்