Published:Updated:

`எந்தக் குடும்பமும் பெர்ஃபெக்ட் இல்லை. ஆனா நமக்கிருக்கிறது ஒரு குடும்பம்தானே'- ஜன்னலோரக் கதைகள் - 14

women empowerment
News
women empowerment

தவறுகளோ, சுயமரியாதை குறைவோ ஏற்படும் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்புகளை பதிவு செய்துவிடுங்கள்.

`எந்தக் குடும்பமும் பெர்ஃபெக்ட் இல்லை. ஆனா நமக்கிருக்கிறது ஒரு குடும்பம்தானே'- ஜன்னலோரக் கதைகள் - 14

தவறுகளோ, சுயமரியாதை குறைவோ ஏற்படும் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்புகளை பதிவு செய்துவிடுங்கள்.

Published:Updated:
women empowerment
News
women empowerment

என் அலுவலகத் தோழி அவள். `லேட் என்ட்ரி'தான் அவளின் வாடிக்கை. `இப்படி ஓடி வர்றதுக்கு பதிலா ஒரு அஞ்சு நிமிஷம் சீக்கிரம் கிளம்புங்க' என்ற அறிவுரையை நான் உள்பட பலரும் கொடுத்திருக்கிறோம். சின்னப் புன்னகையுடன் அதைக் கடந்து விடுவாள். ஃப்ரெண்ட்ஸ், பார்ட்டி என எங்கும் அவள் வந்து நான் பார்த்தது இல்லை. ஒருநாள் அவளின் வீடு இருக்கும் ஏரியாவில் என் தோழியின் திருமணம் நடைபெற்றது. அதனால் அவளின் வீட்டில் தங்கி, காலை எழுந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என யோசித்தேன். `உங்க ஏரியா பக்கத்துல ஒரு ஃபங்ஷன் இருக்கு. முதல்நாள் ராத்திரி உங்க வீட்ல வந்து தங்கலாமா?' என்று கேட்டேன். `கண்டிப்பா வாங்க' என்று சொன்னாள்.   

பெண் ( மாதிரிப்படம்)
பெண் ( மாதிரிப்படம்)
MICHAEL ZHANG

மறுநாள் அலுவலக வேலை முடித்து அவளுடன் கிளம்பினேன். சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று ஆவடி செல்ல இரண்டு டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறினோம். ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உட்கார இடம் இருக்குமா என்று அவளின் கண்கள் அங்கும், இங்கும் அலை பாய்ந்தன. கடைசியில் ரயிலின் தளத்திலேயே ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டாள். தூரம் செல்லச்செல்ல கூட்டம் குறைந்தது. இருவரும் ஒரு சீட்டில் அருகருகே அமர்ந்து கொண்டோம்.

`வீட்டுக்குப் போய் சமைக்கணுமா?' என்றேன். `ம்ம். தோசை ஊத்தணும்’ என்பதுடன் நிறுத்திக்கொண்டாள். `எதுக்கு இவ்ளோ தூரம் டிராவல் பண்றீங்க. பேசாம உங்க வீட்டுக்காரைக் கூட்டிக்கிட்டு சிட்டிக்குள்ள ஒரு வீடு பார்த்து தங்கலாம்ல’ என்றேன். அதற்கு அவளிடம் எந்தப் பதிலும் இல்லை. பயணம் முடிந்து அவள் வீட்டுக்குள் நுழைந்தோம். `லேட் ஆயிருச்சா? பாப்பா பசிக்குது அழுதுட்டே இருந்தா..’ என்ற அவளின் மாமியார் அவளையும், என்னையும் ஏற, இறங்கப் பார்த்தார். `ஆமா டிரெயின் கொஞ்சம் லேட்’ என்ற பதிலைச் சொல்லி நகர்ந்தவள், அடுத்த சில மணித்துளிகளில் கிச்சனில் களம் இறங்கினாள்.

மின்சார ரயில்
மின்சார ரயில்

ஒவ்வொருவருக்காக தோசை ஊற்றி, இறுதியாக ஹாட்பாக்ஸில் எங்களுக்கும் தோசை ஊற்றிக்கொண்டு வந்து அமர்ந்தாள். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சாப்பாடு முடிந்து பாத்திரம் கழுவி, அறையைச் சுத்தம்செய்து, களைப்புடன், `வாங்க என் ரூம்ல படுத்துப்போம்' என்றாள்.  எப்படி இப்படி எந்திரமாக வேலை செய்ய முடிகிறது என்ற கேள்வியை அவளிடம் கேட்டுவிட முடிவு செய்திருந்தேன். அவளோ படுத்த நொடியில் கண் அயர்ந்து போனாள். அவளைத் தொல்லை செய்ய மனம் இல்லாமல் திரும்பிப் படுத்துக்கொண்டேன். அம்மாவின் ஞாபகம் லேசாக வந்து போனது.

மறுநாள் அதிகாலையிலேயே வீட்டைவிட்டு நிகழ்ச்சிக்காகக் கிளம்பினேன். அந்நேரத்தில் அவளின் கிச்சன் பணிகள் தொடங்கியிருந்தன. நான் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி முடித்து, அவள் அலுவலகம் கிளம்பும் அதே ரயிலுக்கு வந்து சேர்ந்தேன். அவளிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று முன்பே தீர்மானித்து இருந்தேன். அவள் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்தாள். அமைதி கலைத்து, `ஆஃபிஸ் வீடுனு இவ்ளோ வேலை பார்க்குறீங்க...உங்களுக்கு டயர்டா இல்லையா?' என்றேன். சற்று யோசித்தவள், `இருக்கும்.. அழுகை வரும். கோபம் வரும். வேலைக்குப் போணுமானுகூடத் தோணும். அப்படித் தோணும்போதெல்லாம், என் சம்பளத்தை நம்பி இருக்கும் என் அம்மாவையும், என்னை ரோல் மாடலா பார்க்குற என் பொண்ணையும் நினைச்சுப் பார்த்துப்பேன். மனசு மாறிரும்.

பெண்...
பெண்...

ஒண்ணு நான் டிராவல் பண்றேன். நான் இந்தக் குடும்பத்துக்காக சம்பாதிக்கிறேன், ஆஃபிஸ்ல போய் சும்மா உட்கார்ந்துட்டு வரல. அங்கயும் 8 மணி நேரம் வேலைதான் பார்த்துட்டு வர்றேன்னு வீட்ல இருக்கிறவங்க புரிஞ்சுக்கணும். இல்லைன்னா அவங்களுக்குப் புரிய வைக்கிறது டைம் வேஸ்ட்டுனு முடிவு பண்ணி, வீட்டு வேலைகளையும் பார்த்து, ஆஃபிஸ் வேலைகளையும் பார்க்க நான் உடம்பாலும், மனசாலும் தயார் ஆகணும். ரெண்டாவது சொன்னது தான் பல பெண்களோட வாழ்க்கையில நடக்குது என் வாழ்க்கையிலும்.

ஆஃபீஸ் விட்டு வந்ததும், காபி குடிக்கணும்னு தோணும், ஆனா அதுக்கு அடுத்து செய்ய வேண்டிய வேலை மலை மாதிரி குவிஞ்சு கிடக்கும். அதனால் காபிகூட குடிக்காம வேலை செய்ய ஆரம்பிச்சிடுவேன். பீரியட்ஸ் டைம்ல நிக்கக்கூட முடியாத நிலையில களைச்சுப் போய் வீட்டுக்கு வருவேன். வந்ததும், 'சப்பாத்தி போட்டுரு'னு ஈஸியா சொல்லுவாங்க. அழுகை வரும், எதிர்ல இருக்கவங்களை திட்டணும்னு தோணும். கத்திட்டா நான் கஷ்டப்படுறேன்னு புரிஞ்சுக்கவா போறாங்க.... ரெண்டு நாள் பேசமாட்டாங்க. அது இன்னும் கொஞ்சம் மன அழுத்தத்தைத்தான் தரும். அதுக்கு அமைதியா இருக்கிறது எவ்வளவோ மேல்.

பெண்
பெண்

நம்ம ஆஃபிஸ்ல லீவ் கேக்குறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கே தெரியும். வீட்ல என்னடான்னா நான் வேணும்னே லீவ் போட மாட்றேன். நல்லது கெட்டதுல கலந்துக்க மாட்றேன்னு குறை பட்டுக்குவாங்க. செய்யுற ஒவ்வொரு வேலையிலயும் ஆயிரம் குறை சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் நின்னு விளக்கம் கொடுக்க நான் ரெடியா இல்ல. எனக்கு அதுக்கு நேரமும் இல்ல. சில வீடுகள்ல லேடீஸை வேலைக்குப் போகாதன்னு நேரடியா சொல்லமாட்டாங்க. ஆனா, வேலைக்குப் போகவே வேணாம்னு நினைக்குற மனநிலைக்குத் தள்ளிடுவாங்க. அதைத் தாண்டி வெளிய வந்துதான் ஆகணும்" என்று மூச்சுவிடாமல் ஏக்கம் தீரப் பேசினாள்.

``சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு, இவங்ககூட எதுக்கு இருக்கணும். நீங்க தனிக்குடித்தனம் போயிடலாம்ல?" என்றேன். ``போலாம் தான். ஆனா, ஆயிரம் வேலைகளுக்கு நடுவுலயும் ஏதோ ஒரு அன்பு இந்த வீட்ல இருக்கு. என் குழந்தைகளுக்கு தாத்தா - பாட்டி அரவணைப்பு கிடைக்குது. எனக்கு டயர்டா இருக்கும்போது, காபி போட்டுக் குடுக்க ஆள் இல்லைன்னாலும், `சாப்பிடாம வேலைக்குப் போகாத'ன்னு சொல்ல ஆள் இருக்கு. இந்த வீட்டுப் பெரியவங்களை நான் பார்த்துக்கணுங்கிற கடமை எனக்கு இருக்கு. அவங்களை முதியோர் இல்லத்துல சேர்க்கிறதாலயோ, இல்ல நாங்க தனியா போறதாலயோ கஷ்டப்படப்போறது என் குழந்தைங்கதான். பெரியவங்க இன்னும் எத்தனை வருஷம் நம்மகூட இருக்கப் போறாங்க? இருக்குற வரை, நம்ம சொல்றதை நம்ம பிள்ளைங்க கேட்பாங்கன்ற நம்பிக்கையோட அவங்க இருந்துட்டுப் போகட்டுமே' என்று அவள் முடித்தபோது இவ்வளவு பக்குவப்பட்ட மனநிலையா என்று ஆச்சர்யமாக இருந்தது. அதே நேரம் அவள் படும் கஷ்டத்தை அவள் குடும்பத்துக்குப் புரிய வைக்கத் தவறி இருக்கிறாள் என்றும் தோன்றியது.

குடும்பம் என்பது யாரோ ஒருவரின் விட்டுக்கொடுத்தலால்தான் உடையாமல் இருக்கிறது. காலம் மாறினாலும், குடும்பத்தில் இருக்கும் பழைமைவாதங்களும், ஆண் பெரியவன் என்ற எண்ணமும் மாறாமல் இறுகி இருக்கும் குடும்பத்தில் மாற்றத்துக்கான முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் இன்னும் அவர்கள் காலத்தில் நம்மை வைத்துப்பார்க்கும் சூழல் இருக்கலாம். அவர்களுக்கு வெளியில் நடக்கும் மாற்றங்களும், நாம் படும் கஷ்டங்களும் சில நேரங்களில் புரியாமல் இருக்கலாம். அவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

குடும்பம்
குடும்பம்

ஆனால் புரியவைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. உங்கள் விருப்பத்துக்காக மட்டும் வேலைக்குச் செல்கிறோம் என்ற அவர்களின் எண்ணத்தை உடைத்து, குடும்பத்தின் நன்மைக்காக ஆண்களுடன் கைகோத்து இருக்கிறோம் என்பதைப் பதிய வைக்க வேண்டும். நாம் பேசாமல் இங்கு எதுவும் மாறாது.

அதேநேரம் தவறுகளோ, மரியாதைக் குறைவோ ஏற்படும் ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்புகளைப் பதிவு செய்துவிட்டால் பிரச்னைகள் வளராமல் இருக்கும். உங்களுக்கு எதிரில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்குப் புரியவைத்து சேர்ந்து நடைபோடுங்கள். பாதை இன்னும் அழகாக இருக்கும்.

`வாரிசு' பட வசனம்போல எந்தக் குடும்பமும் பெர்ஃபெக்ட் கிடையாது. ஆனால் நம் எல்லோருக்கும் ஒரு குடும்பம்தான் இருக்கிறது. அன்பை மட்டும் பரிமாறுவோம்! அனைவரையும், அத்தனையையும் அசைக்கும் சக்தி அன்புக்கு இருக்கிறது!!