நான் விவாகரத்தான பெண். என் மகளுடன் சிங்கிள் பேரன்ட்டாக வாழ்ந்து வந்தேன். அவள் படிப்பையும், எங்கள் குடும்பச் செலவுகளையும் பார்த்துக்கொள்ளும் வகையில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். இந்நிலையில், என்னுடன் பணிபுரியும், மனைவியை விவாகரத்து செய்த ஒருவர் என்னை விரும்புவதாகச் சொன்னார். நான் ஆரம்பத்தில் என் மகளை யோசித்து அதற்கு மறுத்துவிட்டேன். என்றாலும், அவர் குணம் ஒரு கட்டத்தில் எனக்கும் பிடித்துப்போனது. என்றாலும், என் மகளின் சம்மதம்தான் இதில் முக்கியம் என்பதை அவரிடம் தெரிவித்தேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
என் மகள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறாள். சென்ற வருடம் அவளிடம், என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் என்னை திருமணம் செய்ய விரும்புவது பற்றிக் கூறி, அவளது விருப்பத்தைக் கேட்டேன். அவள் தோழியின் அப்பா, விவாகரத்துக்குப் பின் இன்னொரு திருமணம் செய்துகொண்டதை பகிர்ந்துகொண்டவள், 'அதேபோல நாமும் முடிவெடுக்கலாம்...' என்றாள். பின்னர், அவரை என் மகளுக்கு அறிமுகப்படுத்தினேன். ஆறு மாதங்கள் கழித்து, என் மகள் அவரிடம் பழகிய பின்னர், 'இப்போது சொல், இவரை அப்பாவாக ஏற்றுக்கொள்ள உனக்கு விருப்பமா?' என்று மீண்டும் கேட்டேன். 'சம்மதம் மட்டுமல்லாது, இந்த முடிவை நானும் விரும்புகிறேன். நாம் ஒரு ஃபேமிலியாக சந்தோஷமாக இருக்கலாம்' என்றாள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎன் மகள் சம்மதம் சொன்னதும், அவர் தன் பெற்றோரிடம் எங்கள் திருமண விருப்பம் குறித்துக் கூறினார். அவர்களும் சம்மதித்துவிட்டனர். அவரின் முதல் மனைவிக்கும் இவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள். ஆனால், அவளை அவர் முதல் மனைவி தன் பொறுப்பில் அழைத்துச் சென்றதுடன், அவரும் மறுமணம் புரிந்துகொண்டுள்ளார்.
இப்போது எங்களுக்குத் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன. என் மாமியார், 'நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில ரொம்பக் கஷ்டப்பட்டுட்டீங்க. இனிமேலாவது சந்தோஷமா, நிம்மதியா இருங்க...' என்று அன்பாக இருக்கிறார். என்னை மட்டுமல்ல, என் மகளையும் நன்றாகப் பார்த்துக்கொள்கிறார். மற்றவர்களிடம் சொல்லும்போது, 'என் பேத்தி...' என்றுதான் அவளை அறிமுகப்படுத்துகிறார். என் மகளுக்கும் அவரை பிடித்துப்போய்விட்டது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தில்தான் அவரை சமாளிக்க முடியவில்லை. அது... குழந்தை.

'எனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ மட்டும் பெத்துக்கொடுத்துடு...' என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார் என் மாமியார். திருமணத்துக்கு முன் நானும் என் கணவரும், 'நம் இருவருக்குமே பிள்ளைகள் இருக்கிறார்கள், எனவே நமக்கு என்று இனி குழந்தை வேண்டாம்' என்ற முடிவை சேர்ந்தே எடுத்தோம். இப்போது எனக்கு 35 வயதாகிறது. என் கணவருக்கு 42 வயதாகிறது. நாங்கள் இருவருமே, ஒரு குழந்தை வேண்டும் என நினைக்கும், அதை வரவேற்கும், வளர்க்கும் மனநிலையில் இல்லை. மேலும், என் மகளுக்கு 13 வயதாகிறது. இதை நான் என் மாமியாரிடம் பக்குவமாகச் சொல்லிப்பார்த்துவிட்டேன். ஆனாலும் அவர் சமாதானம் ஆகாமல் இருக்கிறார்.
என் மாமியார் என்னிடம், 'அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீ குழந்தை பெத்துக்கிட்டே ஆகணும்...' என்று கண்டிப்புடனோ, வற்புறுத்தியோ சொன்னால், 'என்னால முடியாது...' என்று என்னாலும் அதே கண்டிப்புடன் மறுக்க முடியும். ஆனால் அவரோ, 'நாளைக்கு என் பேத்திக்கும்(என் மகள்) ஒரு துணையா இருக்கும்ல. வளர்க்கறதை பத்தியெல்லாம் யோசிக்காத... நான் பார்த்துக்குறேன். இன்னொரு குழந்தை இந்த வீட்டுக்கு வர்றது நிச்சயம் நம்ம எல்லாரோட சந்தோஷத்தையும் அதிகமாக்கவே செய்யும்...' என்றெல்லாம் கல்லைக் கரைப்பதுபோல பேசிக்கொண்டே இருக்கிறார். என் மகளும், 'பாட்டி சொல்றதும் சரிதான்னு தோணுது... போன வருஷம்கூட என் க்ளாஸ்மேட் ஒரு பையனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்துச்சு... நீ இன்னொரு பேபி பெத்துக்கிட்டா எனக்கும் ஓ.கேதாம்மா...' என்கிறாள். என் கணவர், 'வேண்டாம், குழப்பிக்காத' என்கிறார்.
என்ன முடிவெடுப்பது நான்?