என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெண்களும் நிதித் திட்டமிடலும்... அறியவேண்டிய அவசியத் தகவல்கள்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

#Utility

ஷாப்பிங், செலிபிரேஷன், சமையல் என ஒவ்வொன்றுக்கும் பார்த்துப் பார்த்துத் திட்டமிடுகின்றனர் பெண்கள். ஆனால், வாழ்க்கையின் மிக முக்கிய விஷயமான நிதிப் பாதுகாப்புக்கு, தங்களின் நிதி சார்ந்த எதிர்காலத்துக்குத் திட்டமிடுவதில் பெரும்பாலான பெண்கள் அதிக அக்கறை கொள்வதில்லை.
வித்யாபாலா
வித்யாபாலா

நிதித் திட்டமிடல் பெண்களுக்கு ஏன் அவசியம், பெண்கள் நிதி சார்ந்த அறிவை எப்படி வளர்த்துக் கொள்வது என்பது குறித்து நிதி ஆலோசகர் வித்யாபாலாவிடம் பேசினோம்.

“ ‘பெண்களுக்கு இயற்கையாகவே நிதி சார்ந்த முடிவுகளை சரியாக எடுக்கும் தன்மையும், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் குணமும் இருக்கிறது. ஆனால், ரிஸ்க் எடுக்க அவர்கள் தயங்குவதால், நிதி சார்ந்த முடிவு களைத் துணிச்சலுடன் எடுக்கத் தயங்குகிறார்கள். இது பெண்களின் தவறு கிடையாது. இப்படித்தான் அவர்களுடைய சைக்காலஜி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், நிதி மேலாண்மையில் பெண்களின் நிலை மாற வேண்டும் என்பதுதான் என் கருத்து” என்றவர் மேலும் தொடர்ந்தார்...

“இன்றைய நிலையில் ஒரு சில பெண்கள்தாம் பொருளாதார ரீதியாக, யாரையும் சார்ந்திருக்காமல் தனித்திருக்க விரும்புகிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் பணத் தேவைகளுக்கு தன் தந்தையையோ, கணவனையோதான் சார்ந்து இருக்க நேரிடுகிறது. பெண் சம்பாதித்துக் கொண்டு வரும் பணத்தை, திருமணத்துக்கு முன் தந்தையும், திருமணத்துக்குப் பின் கணவரும்தான் நிர்வாகம் செய்கிறார்களே தவிர, அந்தப் பெண் குடும்பத்தின் நிதி நிர்வாகத்தை மேற்கொள்வது கிடையாது. பெண்கள் இந்த நிலைமையை மாற்றினால் நிதி மேலாண்மையில் ஆண்களை விட சிறந்த மேலாளர்களாக இருக்க முடியும்.

பெண்களும் நிதித் திட்டமிடலும்... அறியவேண்டிய அவசியத் தகவல்கள்!

இதற்கு, ஒவ்வொரு பெண்ணும் தனக்கு எந்த வகையான நிதி திட்டமிடல் தேவை என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காகப் பெண்கள் நிதித்துறையில் பட்டம் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. பணம் பற்றிய அடிப்படை புரிந்துணர்வு பெற்றிருந் தாலே போதும். பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருப்பதைவிட, சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு, முதலீட்டின் மூலம் எப்படி வருமானத்தைப் பெருக்குவது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். நிதி சார்ந்த விஷயங்களை அதிகம் பேசும் போதும், நிதி சார்ந்த விஷயங்களை அதிகம் படிக்கும் போதும் இது சாத்தியமாகும்.

இன்றைய இணைய உலகில் முதலீடு சார்ந்த விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தின் பொருளாதார பிரச்னைகள் தீர வேண்டும் அதற்கான வழிகள் என்ன என்பதை கணினியின் முன் அமர்ந்து ‘கூகுள் ஆண்டவரிடம்’ கேட்டால் போதும். அனைத்து விஷயங்களையும், இந்தக் கணினிக் கடவுள் சொல்லிவிடுவார்.

முதலில், ஆபரணத் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தாண்டி, வங்கிச் சேவைகள், மியூச்சுவல் ஃபண்டு மற்றும் பங்கு முதலீடுகள் போன்றவை குறித்து பெண்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான், புதிய திட்டமிடலில் ஈடுபட வேண்டும்” என்றார் தெளிவாக.

நிதி நிர்வாகத் திட்டமிடல் ஏன் அவசியம்?

‘‘நிதித் திட்டமிடல் ஆண்களுக்கான விஷயம் மட்டுமல்ல என்பதைப் பெண்கள் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு சில நிகழ்ச்சிகள் பெண்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிடும், இதனால் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். இத்தகைய காரணங்களுக்காக, நிதிக் கட்டுப்பாட்டை பெண்கள் கையில் எடுத்துக்கொள்வது அவசியமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிதி விஷயங்களை கணவரிடம் ஒப்படைத்து இருந்தால், இது போன்ற சூழ்நிலைகளில் பணப் பற்றாக்குறை பெண்களை அதல பாதாளத்தில் வீழ்த்திவிடும். இது மாதிரியான சமயங்களில் நிதிச் சிக்கல்களைத் தவிர்க்க, ஆரம்பத்திலிருந்தே மாதாந்தர முதலீடுகள் மேல் பெண்கள் கவனம் வைப்பது அவசியம். மேலும், தங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்குவது போன்ற முடிவுகளை எடுப்பது சிறந்தது. இன்று ஆண்பிள்ளைகள் இல்லாத குடும்பங்களில் மகள்கள், மகன்களாக மாறி குடும்பத்துக்கு நிதிப் பங்களிப்பை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இருப்பவர்கள், நிச்சயமாக நிதிநிர்வாகத்தைத் திட்டமிட வேண்டும்.

வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகள்!

அவசரகாலத்தில் தேவைக்கான தொகையைச் சேமிப்பதற்காக அஞ்சலகம் அல்லது வங்கி ஆர்.டி சேமிப்பை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு இன்றைய காலத்தில் சுமார் 5.8 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் தேவையின்போது உடனே பணத்தை வெளியில் எடுக்கும் சேமிப்பாகவும் இது இருக்கும். இது சிறுசேமிப்பு போன்றதுதான். சம்பளத்திலிருந்து மாதாமாதம் ஒரு தொகையை இதில் சேமித்து வரும்போது, தக்க நேரத்தில் உதவி செய்யும் பணமாக இந்தச் சேமிப்பு இருக்கும்.

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு!

சம்பாதிக்கும் அனைவருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் மாதம் ரூ.30,000 சம்பாதிக்கக்கூடிய ஒரு பெண், நிச்சயமாக 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்து வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்போது, தனது மாத வருமானத்தை நம்பி இருக்கும் அம்மா, அப்பா அல்லது உடன்பிறந்தோருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் உதவியாக இருக்கும். அதே போல, ஹெல்த் இன்ஷூரன்ஸ் மிகவும் முக்கியம். அலுவலகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்ந்து பாலிசி எடுத்திருந்தாலும், தனியாக தேவையான அளவுக்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது.

கோல்டு ஃபண்டுகள்!

பெண்களிடம் முதலீடு செய்யுங்கள் என்று யாராவது சொன்னால், பெரும்பாலான பெண் களின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாமே தங்க நகைகளை வாங்கி வைப்பதன் மீதுதான் செல்லும். தங்க நகைகளை வாங்கி வைப்பது, மாதாந்தர நகை சேமிப்புத் திட்டங்கள் மூலம் நகைகளை வாங்குவது லாபகரமானது கிடையாது. ஏனெனில், பயனாளர்களைவிட, நகைக்கடை வியாபாரிகளுக்கும், நகைச் சேமிப்புத் திட்டங்களை நடத்துபவர்களுக்கும்தான் லாபம் அதிகம்.

பொதுவாக, தங்க நகை சேமிப்புத் திட்டங்களை நடத்துபவர்கள், அரசிடம் ஹெச்.எஸ்.என் (Harmonized System of Nomenclature) நம்பர் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இந்த எண் இருந்தால் மட்டும்தான், அவர்கள் தங்க நகை சேமிப்புத் திட்டங்களை நடத்த முடியும். ஆனால், ஒரு சிலரே இந்த எண்ணைப் பெற்று முறையாக தங்க நகைச் சேமிப்புத் திட்டங்களை நடத்துகிறார்கள். அதனால் நுகர்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதில் ஏதாவது சிக்கல் என்றால், காவல் நிலையத்தையும் நீதிமன்றத்தையும்தான் அணுக வேண்டும். அதனால், சேமிக்கும் முறை எளிதாக இருக்கிறது என்பதற்காக, ரிஸ்க் அதிகமுள்ள, லாபம் குறைந்த தங்க நகை சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதைவிட, அரசின் தங்கப் பத்திரங்கள் (கோல்டு பாண்டுகள்) மற்றும் பேப்பர் கோல்டு என்று சொல்லப்படுகிற கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதன் மூலம், நிலையான வருமானத்தையும் பெற முடியும். தேவையான நேரத்தில் பணத்தை எடுத்து தங்க நகைகளையும் வாங்கிக் கொள்ளலாம்.

ஓய்வுக்கால திட்டமிடல்!

மற்ற எல்லாவற்றையும்விட ஓய்வுக்காலத் திட்டமிடல் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம். ஏனெனில் ஆண்களைவிட, பெண்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. அதனால் நமக்கெல்லாம் ஓய்வு திட்டமிடல் தேவையா... அதுதான் கணவர் இருக்கிறாரே, பிள்ளைகள் இருக்கிறார்களே என்று யோசிக்காமல் இப்போதே உங்கள் ஓய்வுக்காலத்துக்கு என்று தனித்தொகையை ஒதுக்கிச் சேமிக்கவும்.

ஓய்வுக்கால நிதி என்பது வழக்கமான வைப்பு நிதி, தங்க நகை முதலீடாக மட்டும் இருந்தால் போதாது. வயதான காலத்தில், அதிக தொகை கையில் இருக்க, நீண்ட கால நோக்கில் நல்ல பலன் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், மாத வருமானம் நின்றுவிடும் என்பதை மனதில் கொண்டு, அதற்கு ஈடுசெய்யும் அளவுக்கு மாற்று வருமானம் தரக்கூடிய திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஓய்வுக்கால சேமிப்பு முதலீடு, இதன் அடிப்படையில் அமைய வேண்டும். அதனால் வயது குறைவாக இருக்கும்போது, கொஞ்சம் ரிஸ்க் எடுக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை ஆரம்பியுங்கள்'' என்றார் நிறைவாக.

பெண்களும் நிதித் திட்டமிடலும்... அறியவேண்டிய அவசியத் தகவல்கள்!

நிதி ஆலோசகர்களை அணுகுங்கள்!

நி
தித் திட்டமிடலின்போது, எதில் முதலீடு செய்வது, எந்த சேமிப்பு பாதுகாப்பானது என்பதில் பலருக்கும் குழப்பங்கள் வரும். இதற்கு நிதி ஆலோசகர்களின் உதவியை நாடுவது நல்லது. குடும்பத்தின் வரவு செலவு விவரங்களை சரிபார்த்து, பற்றாக்குறைக்கு என்ன செய்யலாம், கூடுதலாக இருக்கும் பணத்தை எப்படி சேமிப்பது, எதில் முதலீடு செய்தால் எதிர்காலத் தேவைகளை எளிதில் அடையலாம், எந்த இன்ஷூரன்ஸ் யாருக்கு ஏற்றது என்பதை எடுத்துச் சொல்வதுதான் இவர்களின் பணி. இவர்களை ‘சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்ஸ்’ என்று சொல்வார்கள்.

மருத்துவர்களிடம் பொய் சொல்லக் கூடாது என்பதுபோல, இவர்களிடமும் பொய் சொல்லக் கூடாது. கடன், வருமானம், சொத்துகள் என குடும்பத்தின் பொருளாதார ரீதியான விஷயங்களை உண்மையாகச் சொல்லும்போதுதான், அதைக் கொண்டு முறையாகத் திட்டமிட முடியும். இதேபோல இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்கள், அஞ்சலக சேமிப்பு ஏஜென்ட்கள் என்று பலரும்கூட நமக்கு உதவ முடியும். ஆனால், பணத்தை முதலீடு/டெபாசிட் செய்யும்போது நாமேதான் நேரடியாகச் செய்ய வேண்டும். ஏஜென்ட்கள் உட்பட யாரிடமும் கொடுக்கக் கூடாது. தேவைப்பட்டால் செக் மூலமாகக் கொடுக்க லாம். ஆனால், அது சரியாக வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வங்கி, இன்ஷூரன்ஸ் அலுவலகம், அஞ்சலகம் என்று நாமே நேரடியாகச் சென்று பணத்தைச் செலுத்துவதுதான் பெரும்பாலும் சரியான நடைமுறையாக இருக்கும். ஆன்லைன் மூலமாகவே பணத்தைச் செலுத்துவதற்குரிய வசதிகளும் வந்துவிட்டதால், அதையும் பயன்படுத்தலாம். நேரடியாகச் சென்றாலும் சரி, ஆன்லைன் மூலமாகச் செலுத்தினாலும் சரி, அதற்கு உண்டான சரியான ரசீதுகளை கையோடு பெற்று பத்திரப்படுத்திக் கொள்வது முக்கியம்.