இந்துப் பெண்ணை திருமணம் செய்து தந்த இஸ்லாமிய தம்பதி

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியத் தம்பதி அப்துல்லா - கதீஜா. இவர்களது நிலத்தில் பணியாட்களாக வேலை செய்துவந்தவர்களின் மகள் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரிக்கு எட்டு வயதாகும்போது பெற்றோர் இறந்துவிட, அவர் அப்துல்லா தம்பதியிடமே வளர்ந்தார். தன் மூன்று குழந்தைகளுடன் நான்காவது குழந்தையாக ராஜேஸ்வரியையும் அன்புடன் வளர்த்து பராமரித்தது அப்துல்லா - கதீஜா தம்பதி. 22 வயதானதும் அவருக்கு தக்க வரன் தேடத்தொடங்கினர். புதுக்கோட்டையைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்ற மணமகனை மணம் பேசி இஸ்லாமியர் நுழைய அனுமதித்த இந்துக்கோயிலில் தாங்களே தாய் தந்தையாக முன்னின்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொடுத்தனர்.
இதுதான் சார் இந்தியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSராணுவ நிரந்தரப் பணியில் பெண்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

‘பெண் ராணுவ அதிகாரிகளை நீண்டகாலப் பணிக்கு நியமிக்க முடியாது’ என்று 10 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சமீபத்தில் 54 பக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ‘ஆண் அதிகாரிகளுக்கு இணையாகப் பெண் அதிகாரிகள் முக்கியப் பங்காற்றியுள்ளனர்’ என்றும், ‘அவர்களது திறனை ஆண் பெண் என பாலினம் கொண்டு அடையாளப்படுத்துதல் மனிதர்களாக அவர்களுக்குச் இழைக்கும் அநீதி’ என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 30 சதவிகிதப் பெண் அதிகாரிகள் ‘கான்ஃப்ளிக்ட் சோன்’ எனப்படும் பிரச்னைக்குரிய இடங்களில் இன்று பணிசெய்வதாகக் குறிப்பிட்டுள்ள நீதிபதி சந்திரசூட், ‘பெண்களை பாலினம் கொண்டு வேறுபடுத்திப் பார்ப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப் பெண்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
‘மாதவிடாய் விருந்து’ நடத்தி கலக்கிய பெண்கள்

மாதவிடாய் குறித்த தேவையற்ற சர்ச்சைகள் எழுந்திருக்கும் நேரத்தில் டெல்லியைச் சேர்ந்த சச்சி சஹேலி என்ற தன்னார்வ அமைப்பு ‘மாதவிடாய் விருந்து’ ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. “ஐ’யம் அ பிரௌடு மென்ஸ்ட்ருவேட்டிங் வுமன்” என்ற வாசகம்கொண்ட டி-ஷர்ட் அணிந்து 28 பெண்கள் சுமார் 500 நபர்களுக்கு சமைத்து விருந்து பரிமாறினார்கள். குஜராத்தின் புஜ் நகரின் கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து ‘மாதவிடாய் சோதனை’ நடத்திய செய்தியும், சாமியார் ஒருவர் ‘மாதவிடாயுடன் சமைக்கும் பெண் அடுத்த பிறவியில் நாயாகவும், அவள் சமைக்கும் உணவை உண்ணும் ஆண் அடுத்த பிறவியில் எருமையாகவும் பிறப்பார்கள்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பெரும் மன உளைச்சலைத் தந்தன’ என்று சொன்னார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டாக்டர் சுரபி சிங்.
கறை நல்லது!

லண்டனின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் 53 வயது தக்மர் டர்னர் என்ற பெண், மூளையின் முக்கிய நரம்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வயலின் வாசித்துக்கொண்டே மூளையிலுள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டார். வயலின் வாசித்தபடி ஆபரேஷன் டேபிளில் படுத்திருக்கும் அவரது காணொலி வைரல் ஆனது.

சென்னையில் சமீபத்தில் சிறார் வன்கொடுமைக்கு எதிரான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநகரத் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தகுந்த நடவடிக்கைகள் மூலம் அவர்களைப் பாதுகாப்பதாகவும் நிகழ்ச்சியில் பேசினார்.

கனடா நாட்டின் கணித சொசைட்டி அமைப்பின் பெண் கணிதவியல் மேதைகளுக்கு வழங்கப்படும் பெருமைமிக்க கிரீகர் நெல்சன் விருதை டாக்டர் சுஜாதா ராமதுரை வென்றிருக்கிறார். ஏற்கெனவே கடந்த 2006-ம் ஆண்டு ராமானுஜம் பரிசையும் இவர் வென்றுள்ளார்; இந்திய அரசின் பிரதமருக்கு ஆலோசனை தரும் இந்தியன் நாலெட்ஜ் கமிஷன் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

அவந்திகா கன்னா என்ற 17 வயது இளம்பெண் ‘இந்தியா ஸ்டோரி’ என்ற புதிய அலைபேசி செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார். ஜி.பி.எஸ் சமிக்ஞை கிடைத்ததும் ‘ஆடியோ கைடுகள்’ மூலம் அந்தந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை இந்தச் செயலி நமக்குச் சொல்லிவிடும். வெவ்வேறு திறமைகளைக்கொண்ட 30 பேர் இவருடன் இந்தச் செயலி உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஃபோன்களில் இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும்.

மக்கள்தொகை திட்டமிடல், குழந்தைப் பிறப்பு, பெண்ணுரிமை, உழைக்கும் மக்கள் உரிமை போன்ற பல தளங்களில் சிறந்த பணியாற்றியதற்காக இந்தியாவின் தலைசிறந்த பெண்ணியவாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கீதா சென்னுக்கு புகழ்பெற்ற ‘டான் டேவிட்’ விருது வழங்கப்படுகிறது. ராமலிங்கசுவாமி மையம் என்ற அமைப்பை நிறுவி கடந்த 35 ஆண்டுகளாக நடத்தி வரும் கீதாவுக்கு, விருதுடன் ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையும் அளிக்கப்படுகிறது.

துணிவுடன் உண்மைச் செய்திகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் ‘மக்கில் மெடல்’ இந்த ஆண்டு இந்திய ஊடகவியலாளர் ராணா அயூபுக்கு வழங்கப்படவுள்ளது. `குஜராத் ஃபைல்ஸ் - அனாடமி ஆஃப் அ கவரப்' என்ற நூலை எழுதியிருக்கும் ராணா, தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றியவர்; இப்போது வாஷிங்டன் போஸ்ட்டின் சிறப்பு பத்திரிகையாளராகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.