Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பிரீமியம் ஸ்டோரி

புக்கர் லாங் லிஸ்ட்டில் இந்திய வம்சாவளிப் பெண்!

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண்ணான அவ்னி தோஷியின் பெயர், ‘புக்கர் லாங் லிஸ்ட்’டில் இடம்பெற்றுள்ளது. துபாயில் வசித்து வருபவர் எழுத்தாளர் அவ்னி தோஷி. கடந்த 2013-ம் ஆண்டு, இவர் எழுதி வெளியிட்ட ‘பர்ன்ட் சுகர்’ என்ற புனைவு நூல், இந்தியாவில் ‘கேர்ள் இன் வைட் காட்டன்’ என்ற பெயரில் வெளியானது. அமெரிக்கக் குடிமகளான அவ்னி, நியூயார்க் பர்னார்ட் கல்லூரியில் கலை, வரலாறு கற்றவர். 2013-ம் ஆண்டு தெற்கு ஆசியாவின் திபோர் ஜோன்ஸ் பரிசை இந்த நாவல் வென்றது. கடந்த ஆண்டு டாடா பரிசுக்கும் இந்த நூல் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

தாரா மற்றும் அந்தரா எனும் தாய் - மகள் இணையைப் பற்றி இந்நூல் பேசுகிறது. தீவிர ஞாபக மறதி நோயால் அல்லலுறும் தாரா, அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதும், அவளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பான பதின்பருவப் பெண்ணாக அந்தராவும் இந்த நூலில் வலம் வருகிறார்கள். கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியான 162 நாவல்களிலிருந்து 13 நாவல்கள் `புக்கர் லாங் லிஸ்ட்’டில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளன.

வாழ்த்துகள் அவ்னி!

பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்.

தமிழகத்தைச் சேர்ந்த பி.அமுதா ஐ.ஏ.எஸ், பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 16 உயரதிகாரிகளின் பணியிட மாற்றங்களில் அமுதாவுக்கு இந்த இடம் கிடைத்துள்ளது. தற்போது, உத்தரகாண்ட் மாநிலம் மிசௌரியில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமியில் விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் அமுதா, 1994 பேட்ச் அதிகாரியாவார். பல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றி மக்களிடம் பாராட்டைப் பெற்றவர். 25 ஆண்டுகளில் சுமார் 15 துறைகளில் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் பணியாற்றியவர்.

 அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

2015-ம் ஆண்டு, சென்னைப் பெருவெள்ளத்தின்போது அமுதா மிகச் சிறப்பாக பேரிடர் மேலாண்மை செய்ததையும், நீர்நிலைகளைத் தூர்வாரி செப்பனிட வழிசெய்ததையும் மக்கள் இன்றைக்கும் நினைவுகூர்கிறார்கள். 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதி இறந்தபோது அவரது உடலை எந்த சிக்கலும் இன்றி நல்லடக்கம் செய்ய சமயோசிதமாகப் பணியாற்றியதாக அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடம் பாராட்டைப் பெற்றவர்.

வாழ்த்துகள் அமுதா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் கலக்கிய இந்திய ஜோடி!

அமெரிக்காவின் பிரபல ரியாலிட்டி ஷோ `அமெரிக்கா ஹேஸ் காட் டேலன்ட்’. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இளம் வயதினர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சில நிமிட நேரத்துக்குள் தங்கள் சிறப்புத் திறமை களை வெளிக்காட்ட வேண்டும். அவர்களது திறமையை அளவிடும் நிகழ்ச்சியின் நீதிபதிகள் வெற்றியாளரை அறிவிப்பதுண்டு.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் சோனாலி மஜும்தார் - சுமந்த் மரோஜு ஜோடி கலந்துகொண்டது. இந்திய இசைக்கு ‘சால்சா’ நடனமாடி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது இந்த ஜோடி.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த 2012-ம் ஆண்டு `இந்தியாஸ் காட் டேலன்ட்’ நிகழ்ச்சியின் மூலம் இந்திய அரங்கில் பிரபலமான இந்த ஜோடி, அப்படியே ‘பிரிட்டன்ஸ் காட் டேலன்ட்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று கலக்கியது. ‘‘இந்தியாஸ் காட் டேலன்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகுதான் பங்களாதேஷ் எல்லையிலுள்ள எங்கள் கிராமத்துக்கே மின்சாரம் கிடைத்தது. நாளொன்றுக்கு 80 ரூபாய்க்கு என் தந்தை கூலி வேலை செய்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பின் குடியிருக்க வீடும் கொஞ்சம் நிலமும் கிடைத்தது” என்று சொல்லி மகிழ்கிறார் சோனாலி. ‘பாட் சால்சா’ என்ற நடன நிறுவனத்தில் இணைந்து ஆட ஆரம்பித்த ஜோடி, இப்போது அமெரிக்காவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகிறது.

வெற்றிபெற வாழ்த்துகள்!

உலகைக் கடக்கவிருக்கும் இரு சிறுகோளை கண்டுபிடித்த இந்தியச் சிறுமிகள்!

குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் உலகைக் கடக்கப் போகும் சிறுகோள் ஒன்றை நாசா மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். வைதேகி வெகரியா சஞ்சய்பாய் மற்றும் ராதிகா லகானி பிரஃபுல்பா என்ற இரு மாணவிகளும் இதை சமீபத்தில் கண்டறிந்திருக்கிறார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரு மாதங்களாக, ‘அனைத்திந்திய சிறுகோள் தேடல் முயற்சி 2020’ என்ற நிகழ்ச்சி மூலம் விண்வெளியை ஆராய்ந்து வந்தனர் இருவரும். சர்வதேச விண்வெளித் தேடல் கூட்டு முயற்சி மற்றும் டெக்சாஸ் நகரின் ஹார்டின் சிம்மன்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. சூரத்தின் பிபி சாவனி சைதன்யா வித்யா சங்கலைச் சேர்ந்த இந்த இருவரும் செவ்வாய்க் கிரகத்துக்கருகே சுற்றிய இந்தச் சிறுகோளை அடையாளம் கண்டனர். `கிட்டத்தட்ட 20 விண்பொருள்களை நாங்கள் ஆய்வு செய்ததில் கண்டறிந்தோம். இப்போதைக்கு ஹெச்.எல்.வி 2514 என்று அதற்கு எண் தந்துள்ளோம். நாசா அதன் சுற்றுப்பாதையை ஊர்ஜிதம் செய்ததும் சிறுகோளுக்குப் பெயர் வைக்கவிருக்கிறோம்’ என்று மாணவிகள் இருவரும் கூறியிருக்கிறார்கள்.

நட்சத்திரப் பெண்கள்!

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்ஜுன் என்ற மகனைப் பெற்றெடுத்தார் காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை கீதா போகாட். டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் விளையாட்டுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதற்கான தீவிர பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

புனே நகரைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆஜி மா, சாலையோரத்தில் நின்று சிலம்பம் ஆடும் காணொலி ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. கொரோனா ஊரடங்குக் காரணத்தால் உணவின்றி விடப்பட்ட ஆஜி மா, மனம்தளராமல் சாலைகளில் சிலம்பம் ஆடி மக்களிடம் உதவி பெற்றுவந்தார். காணொலி வெளியான பிறகு நடிகர் சோனு சூட் உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் ஆஜி மாவுக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

14 ஆண்டுகள் தொடர் நீதிமன்றப் போராட்டத்துக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு இனி நிரந்தரப் பணி வழங்கலாம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

59 வயதான சிங்கப்பூர் வாழ் இந்திய செவிலியரான கலா நாராயணசாமி, கோவிட்-19-க்கு எதிரான மருத்துவ நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பு தந்துகொண்டிருப்பதைப் பாராட்டி சிங்கப்பூர் அதிபரின் ‘குடியரசுத் தலைவர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. பாராட்டுப் பத்திரமும், 10,000 சிங்கப்பூர் டாலரும் கலா உள்ளிட்ட ஐந்து செவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சேஞ்ச்.ஆர்க் இணையதளம் மூலம் சுபர்ணா கோஷ் என்ற பெண்மணி பிரதமர் மோடிக்கு ஒரு விநோத கூட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். 70,000 பேர் கையெழுத்திட்டுள்ள இந்தக் கோரிக்கையில், `இந்திய ஆண்கள், இந்தியப் பெண்களுக்கு இணையாக வீட்டு வேலைகளில் ஈடுபட வேண்டும்’ என்று ஆண்களிடம் வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு