Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பிரீமியம் ஸ்டோரி

மாஸ்க் தந்த மாரியாத்தா!

தமிழகத்தின் பொள்ளாச்சி பகுதியை அடுத்த கம்மாளப்பட்டி, அர்த்தநாரிப்பாளையம், குள்ளகவுண்டனூர் கிராமங்களில் பொதுமக்களுக்கு மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றை மாரியம்மன் வேடம் அணிந்தபடி விநியோகம் செய்து, அவற்றின் பலன்களை விளக்கியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த நாடகக் கலைஞரான சங்கீதா. நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் கொரோனா வேகமாகப் பரவிவருவதையடுத்து மக்களுக்கு விழிப்பு உணர்வூட்ட இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 400 மாஸ்க்குகள், 1,000 சானிட்டைசர்கள் இப்படி வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

காளீசுவரி நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் படமாக்கியிருக்கும் ரதீஷ் சுப்பிரமணியம், லாக்டெளன் காலத்தில் உரிய உரிமங்கள் பெறப்பட்டு இந்தப் படப்பிடிப்பு நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாரியம்மன் வேடத்தில் மாஸ்க்குகள், சானிட்டைசர்கள் விநியோகிக்கும் சங்கீதா, இந்த இரண்டு நிமிடக் குறும்படத்தில் தோன்றி, நம் பாரம்பர்ய பழக்கவழக்கங்களான மஞ்சள் நீரில் குளிப்பது முதல் வீட்டில் சுகாதாரமாகச் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது, தனிமனித இடைவெளி வரை கொரோனாவைத் தவிர்க்க போதிய நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியத்தை எளிமையாக விளக்கியிருக்கிறார்.

தனிமனித இடைவெளி... மாரியாத்தா சொல்றதை மறக்காம செய்யுங்க!

`உலக அமைதி உங்களால்தான்' பெண்களைப் போற்றும் தலாய் லாமா

திபெத் மக்களில் ஒரு பிரிவின் தலைவரான தலாய் லாமா, சமீபத்தில் லண்டன் காவல்துறையினருக்கு வலையுரை ஒன்றை நிகழ்த்தினார். அதில், `ஆண்களைவிட பெண்கள் பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடியவர்கள். அன்பு மற்றும் பரிவு மலர, பெண்கள்தான் தொடர்ந்து உதவ வேண்டும்' என்று கூறினார். `வரலாற்று ரீதியாகப் பார்த்தால் போர் புரிந்தவர்கள் ஆண்கள்; இறைச்சிக் கடைக்காரர்கள் ஆண்கள். பெண்கள் மென்மை கொண்டவர்கள்' என்றும் அவர் கூறினார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

`பெண் தலைவர்கள் அதிகமிருந்தால், உலகில் அமைதி நிலவும் என்று சில நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்' என்ற தலாய் லாமா, பின்லாந்து நாட்டின் பிரதமராக சன்னா மரின் பதவியேற்றபோதும், தன்னைப் போல பல பெண்களுக்கு அமைச்சரவையில் அவர் பதவியளித்தபோதும் அவரை வாழ்த்திக் கடிதம் எழுதியதையும் நினைவுகூர்ந்தார்.

`இந்திய மக்கள் இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம், கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம் என்று பல மதங்களைக் கடைப்பிடிப்பவர்களாக இருந்தாலும், எல்லா மதங்களின் அடிப்படையான அன்புகொண்டே வாழ்கிறார்கள். அனைத்து மதங்களும் அன்பையே வலியுறுத்துவதால், எல்லா மதங்களையுமே நாம் மதித்து நடக்கக் கற்போம்' என்றும் தலாய் லாமா அறிவுறுத்தி்யிருக்கிறார்.

அன்பே எல்லாம்!

வியக்க வைக்கும் 95%, சாதித்த பழங்குடி மாணவி!

தமிழக கேரள மாநிலங்களின் எல்லையிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட காட்டுப்பகுதியிலுள்ள பூச்சிக்கொட்டாம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பழங்குடியின மாணவி ஶ்ரீதேவி. இவர் தினமும் 100 கி.மீ பயணம் செய்து கேரள மாநிலம் சாலக்குடியிலுள்ள பள்ளிக்குச் சென்றுவருகிறார். பேருந்து நிறுத்தமே எட்டு கி.மீ தொலைவிலுள்ள அந்தக் கிராமத்தில் இன்னும் மின்சாரமோ, பேருந்து வசதிகளோ இல்லை. இந்தச் சூழலில்தான் ஶ்ரீதேவி கேரள மாநில அரசு நடத்திய பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் 95 சதவிகித மதிப்பெண் பெற்று வெற்றி யடைந்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கொரோனா காரணமாக லாக்டெளன் அறிவிக்கப்பட்ட பிறகு, பள்ளிக்குச் செல்ல பேருந்து இன்றி தவித்தார். கேரள அரசே மாநில எல்லையிலிருந்து சாலக்குடி வரை தேர்வு நாள்களில் இவருக்காகச் சிறப்புப் பேருந்து இயக்கியது. தந்தையுடன் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் கேரள மாநில எல்லை வரை சென்று அங்கிருந்து மாநில சிறப்புப் பேருந்தில் சென்று தேர்வெழுதி சாதனை படைத்திருக்கிறார்.

கடும் தடைகளை மீறி சாதித்திருக்கும் இவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. மருத்துவராவது தன் கனவு என்று கூறியிருக்கிறார் ஶ்ரீதேவி.

முயற்சி திருவினையாக்கும்!

தாராவி `கொரோனா போர்...' கைகோத்த தமிழ்!

மும்பை தாராவி பகுதியில் வெகு வேகமாக கொரோனா பரவியதை ஊடகங்கள் அறிவித்தன. நெரிசலான பகுதி என்பதாலும், மக்கள்தொகை அதிகமான பகுதி என்பதாலும் அங்குள்ள மக்களுக்கு மருத்துவ மற்றும் பிற உதவிகள் சென்று சேர காலதாமதமானது. பெரும்பாலும் கொரோனா காரணத்தால் வேலையிழந்த தாராவி மக்களை நோயும் பசியும் வாட்டத்தொடங்கின.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த `மகிழ்ச்சிப் பேரவை' அமைப்பின் நிறுவனரான வெண்ணிலா, தன் குழுவினருடன் இங்கு பணியாற்றத் தொடங்கினார். தங்கள் வீடுகள், கழிவறைகள் மற்றும் தெருக்களைச் சுத்தம் செய்ய தாராவியில் வசிப்பவர்களை ஊக்கப்படுத்தினார்.

விளைவு... மக்கள் தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்தனர், சுகாதாரம் பேணினார்கள், தனிமனித இடைவெளி சரியாகப் பின்பற்றப்பட்டது. ஐந்து சதுர கி.மீ பரப்பளவில் 6-10 லட்சம் மக்கள் வசிக்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி தாராவி.

கோவிட்-19 நோயின் ‘ஹாட் ஸ்பாட்' ஆகக்கூடும் என்ற அச்சத்தைப் போக்க வெண்ணிலாவின் மகிழ்ச்சிப் பேரவை அமைப்பும், மும்பையைச் சேர்ந்த குமணராசனின் `தமிழ் லெமூரியா டிரஸ்ட்'டும் இணைந்து அங்கு பணியாற்றியுள்ளன. மாநில அரசும் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை முயற்சிகளை முடுக்கிவிட, இப்போது கொரோனா அங்கு கட்டுக்குள் வந்திருக்கிறது.

நாமதான் நமக்கு நிக்கணும்!

`நம்பிக்கை' உணவகம்!

கொரோனா காரணமாகத் தொடர்ச்சியாக பலர் வேலைவாய்ப்புகளை இழந்துவருகிறார்கள். இந்தச் சூழலில் சென்னையைச் சேர்ந்த ஐந்து மாற்றுத்திறனாளிகள் உணவகம் ஒன்றை இணைந்து நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ரத்தினம், பிரமிளா, மணிகண்டன், சுதீஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய ஐந்து பேரும் கேட்கும் மற்றும் பேசும்திறன் குறைந்தவர்கள்; சைகை மொழியில் பேசக்கூடியவர்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

`வாய்ஸ் ஃபார் தி வாய்ஸ்லெஸ் டிரஸ்ட்' என்ற அமைப்பின் தலைவரான கற்பகத்தின் முயற்சியில் இந்த ஐவரும் இணைந்து உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உரிமையாளர், தன் உணவகத்தின் ஒரு கிளையை நடத்த இவர்களுக்கு அனுமதி அளித்துள்ளார்.

இக்குழுவிலிருக்கும் விளையாட்டு வீராங்கனையும் பயிற்சியாளருமான ரத்தினம், `நான் வாங்கிய மெடல்களையும் சான்றிதழ்களையும் வைத்து இந்த கொரோனா காலத்தில் என்ன செய்ய முடியும். ஆனாலும் நம்பிக்கை இழக்க வில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் ஐ.டி நிறுவன ஊழியர்கள் வரை நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்துத் தவித்து வருகிறார்கள். நாம் ஏன் போராடி வெற்றிபெற்று அனைவருக்கும் எடுத்துக்காட்டக் கூடாது என்று நினைத்தேன். செயல்படுகிறேன்' என்கிறார் பெருமையோடு!

ஒவ்வொரு பூக்களுமே..!

அவள் செய்திகள்

முத்தலாக் ஒழிப்பு சட்டத்துக்கு எதிராக சமீபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூர்பினா ரஷீது என்ற பெண் உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சி பெண்கள் பிரிவின் தேசிய பொதுச்செயலாளரான நூர்பினா, `இந்தச் சட்டம், மனைவி களுக்குப் பாதுகாப்பைத் தருவதைவிட, முஸ்லிம் இன கணவர்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது' என்று சாடியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

முன்னாள் தென்னாப்பிரிக்க குடியரசுத்தலைவரும், கறுப்பினத் தலைவருமான நெல்சன் மண்டேலாவின் இளைய மகளான 59 வயது சிட்சி மண்டேலா மரண மடைந்தார். டென்மார்க் நாட்டுக்கான தென்னாப்பிரிக்க தூதரான சிட்சி, வெள்ளையர் ஆட்சியில் பல இன்னல்களை தன் தாய் வின்னி மண்டேலாவுடன் சேர்ந்து எதிர்கொண்டவர். 1985-ம் ஆண்டு, நிபந்தனையின் பேரில் அளிக்கப்பட்ட விடுதலையை நெல்சன் மண்டேலா மறுக்க, அந்த மறுப்பு அறிக்கையை மக்களுக்கு வாசித்தவர் சிட்சி.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெங்களூரைத் தலைமையகமாகக்கொண்ட பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷாவுக்கு, ஐ.எம்.சி பெண்கள் கிளையின் சென்ற ஆண்டின் சிறந்தப் பெண்மணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. `பெரியதோ, சிறியதோ, நாட்டின் முன்னேற்றத்துக்கான முயற்சியெடுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்' என்று கூறியிருக்கிறார் கிரண்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகளில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் நாட்டிலேயே அதிக மதிப்பெண் பெற்றுள்ளார் டெல்லி, குருகிராம் நகரைச் சேர்ந்த அனுஷ்கா பந்தா. ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர், 95.2 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார். செஸ் விளையாடுவதில் தேர்ந்தவரான அனுஷ்கா, `மென்பொருள் பொறியாளராக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றுவதே என் ஆசை' என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முயற்சிகளை அரசு எடுத்துவருவதாக அறிவித்திருக்கிறார். நாட்டில் 28 மாநிலங்களில் பெருவாரியாக 20 மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 50 சதவிகிதம் இருப்பதை உணர்ந்ததாகவும், ஹரியானாவிலும் இதை அமல்படுத்த மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

2020-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் சிறுகதைப் பரிசை 29 வயதான இந்தியப் பெண் கிருத்திகா பாண்டே வென்றிருக்கிறார். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக மாணவியான கிருத்திகா எழுதிய ‘தி கிரேட் இண்டியன் டீ அண்டு ஸ்நாக்ஸ்’ என்ற சிறுகதைக்குதான் பரிசு. கடினமான சூழலில் டீக்கடை ஒன்றில் இஸ்லாமியருக்கும் இந்து ஒருவருக்கும் பிறக்கும் காதலைச் சொல்கிறது கதை. 49 நாடுகளைச் சேர்ந்த 5,000 பேர் இந்தப் போட்டியில் கலந்துகொண்டார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கேரள மாநிலம் திருச்சூர் நகரில் பெண் காவல்துறை அதிகாரிகள் கொண்ட ‘பைக் ரோந்துப் படை’ ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கை அமல்படுத்தவும், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கவும் இந்தப் படை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட்களில் பறக்கும் இந்தப் பெண்கள், `பொது மக்களைப் பரிவுடனும் கனிவுடனும் அணுகுகிறார்கள்' என்று டி.ஜி.பி லோக்நாத் பெஹரா கூறியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

படிப்பை பாதியில்விட்டு, 32 ஆண்டுகளுக்குப் பின் 12-ம் வகுப்புத் தேர்வுகள் எழுதித் தேர்வாகி சாதனை படைத்திருக்கிறார் 50 வயதுப் பெண்மணி. மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த லகிந்தியு சியெம்லி கணக்குப் பாடம் கடினமாக இருந்ததால், 10-ம் வகுப்புக்குப் பின் பள்ளி செல்லவில்லை. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருபவர், ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு படித்துத் தேர்வெழுதியிருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு