Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்கள் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ஐ.நா சபை பாராட்டிய கேரள பெண் அமைச்சர் ஷைலஜா

.நா சபை சமீபத்தில் பொதுச் சேவை தினத்தைக் கொண்டாடியது. அதை முன்னிட்டு கொரோனாவுக்கு எதிராகப் பணியாற்றும் பொது நிலையினரைப் பேச அழைப்பு விடுத்திருந்தது. கொரோனாவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த இந்த வெபினாரில் ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ குதரஸ் மற்றும் பல உயர்மட்ட ஐ.நா சபை அலுவலர்கள் கலந்துகொண்டார்கள். இதில் கேரள மாநில மருத்துவம், சமூக நீதி மற்றும் தாய் சேய் நலத்துறை அமைச்சரான கே.கே.ஷைலஜா கலந்துகொண்டு பேசினார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கேரள மாநிலத்தைத் தாக்கிய நிபா வைரஸ் மற்றும் 2018, 2019-ம் ஆண்டுகளில் கேரளாவைத் தாக்கிய பெரு வெள்ளங்கள் போன்ற அசாதாரண சூழல்களில் கேரள அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டார். கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது முதலே அதைக் கண்டறிய மேற்கண்ட அனுபவங்கள் உதவின என்றும் அவர் விளக்கினார். வூஹானில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதுடன் சர்வதேச சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்களின்படி கேரள மாநிலத்தில் தகுந்த சர்வதேச நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் கூறினார்.

பாராட்டுகள், டீச்சர்!

உலகம் முழுக்க இலவச கோவிட்-19 தடுப்பு மருந்து கோரும் பெண் ஆளுமைகள்!

கோவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் ஐந்து லட்சத்தைத் தாண்டியது. இந்த நிலையில் இந்நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி 100 ஆளுமையாளர்கள் பொதுக் கோரிக்கை ஒன்றை உலகத்தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கையில் நோபல் பரிசு பெற்ற 18 பேர் உட்பட பலர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். வங்கதேச நோபல் லாரேட் முகம்மது யூனூஸ், இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி போன்றவர்களுடன் மலாலா யூசுஃப்சாயும் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

இந்தியாவின் ஷபனா ஆஸ்மி, ரத்தன் டாடா, அசீம் பிரேம்ஜி, அமெரிக்க நடிகை ஷாரன் ஸ்டோன் ஆகியோரும் இந்தக் கோரிக்கையில் இணைந்திருக்கிறார்கள். `உலகின் அனைத்து சமூக, அரசியல், மருத்துவ அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும். எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க பாடுபட வேண்டும்' என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

யாவரும் கேளிர்!

ஃபேர்னஸ் க்ரீம்கள் பெயர்மாற்றத்தை வரவேற்கும் நந்திதா தாஸ்

புகழ்பெற்ற ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் தான் விற்கும் ஃபேர்னஸ் க்ரீம்களின் பெயர்களிலுள்ள ஃபேர் என்ற சொல்லை நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த முடிவை பிரபல பாலிவுட் நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸ் பாராட்டிப் பேசியிருக்கிறார். ஃபேர்னஸ், வைட்டனிங், லைட்னிங் போன்ற சொற்களை இனி ஃபேர்னஸ் க்ரீம்களை விற்கும்போது பயன்படுத்தப் போவதில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளதை நல்ல முன்னெடுப்பு என்று நந்திதா குறிப்பிட்டிருக்கிறார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு விளம்பரம் செய்து ‘ஃபேர் அண்டு லவ்லி’ என்று சொல்லி விற்பனை செய்யும் பல பெரும் நிறுவனங்கள் மத்தியில் விழிப்புணர்வை இது ஏற்படுத்தும்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சின்ன முயற்சி என்றாலும் இது வரவேற்கக்கூடியது என்று கூறியுள்ள நந்திதா, “கோவிட்-19 காலம் பல சமூகக் கொடுமைகளை மக்கள் உணர்ந்து இரக்கம்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்துஸ்தான் லீவரின் இந்த முயற்சி யாரும் எதிர்பாராதது. விற்கும் பொருளை இன்னும் அவர்கள் திரும்பப் பெறவில்லை, பெயர் மாற்றம் மட்டுமே செய்திருக்கிறார்கள். மதம், சாதி, பாலினம், பாலுணர்வு, மொழி, சரும நிறம் என்று உலகில் இன்று பலவற்றின் அடிப்படையில் பாகுபாடு இருக்கிறது. ஒருவர் பிறக்கும்போதிருக்கும் அடிப்படைக் காரணி மாறப்போவதில்லை. அதை யாரும் இனி புறந்தள்ளவும் முடியாது” என்றும் பேசியுள்ளார்.

கறுப்பும் அழகே!

குழந்தைகளுக்குப் பாலியல், பாலின விழிப்புணர்வை ஏற்படுத்த பெற்றோருக்கு அறுவுறுத்தும் செக்ஸ்-எட் டாக்ஸ்

பாலியல் மற்றும் பாலின அடையாளங்கள் குறித்த உரையாடல்களை குழந்தைகளிடம் முன்னெடுப்பதில் பெற்றோருக்கு தயக்கம் இருக்கிறது. பெரும்பாலும் குழந்தைகள் கேட்கும் இதுபோன்ற கேள்விகளுக்கு ‘குட் டச் பேட் டச்’ என்பதைத் தாண்டி வேறு விஷயங்களைப் பெற்றோரால் விளக்க முடிவதில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க அவேர் இந்தியா தன்னார்வ அமைப்பு ‘செக்ஸ்-எட் டாக்ஸ்' என்ற காணொலி உரைத் தொடரை தமிழ் வழியில் உருவாக்கியுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

இந்நிறுவனத்தின் நிறுவனரான சந்தியன், பெற்றோரிடமிருக்கும் தவறான புரிதலை மாற்றுவதும், பாலியல், பாலினம் குறித்த தெளிவில்லாமல் விடப்படும் குழந்தைகள் அடையும் சிக்கல்களையும் இந்த வலை உரைத் தொடர்களையும் என்று கூறுகிறார். “பெற்றோரின் மனத்தை மாற்றுவதன் மூலமும், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும் இனிவரும் தலைமுறைக்கு இந்தத் தெளிவைக் கொண்டுவர முடியும்” என்று கூறியிருக்கிறார். இதுவரை 30 காணொலிகள் யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்தக் காணொலிகளில் தோன்றும் தன்னார்வலர்கள் குடும்பச் சூழலிலோ, நண்பர்களுடனோ பாலியல், பாலினம் பற்றிய ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நல்ல முயற்சி!

சமூக வலைதளங்களில் கலக்கிவரும் ஜானகி டீச்சர் அனிமோஜி!

மீபத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று சமூக வலைதளங்களில் ‘ஜானகி டீச்சர்’அதிகம் பேசப்படுகிறார். அனிமோஜி என்ற கார்ட்டூன் கேரக்டர் போன்ற முகமும், மனித உடலும் பொருத்திய விநோத ‘அனிமோஜி’ இந்த ஜானகி டீச்சர். சென்னை நகரின் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுவதாகச் சொல்லும் ஜானகி, ஆன்லைன் வகுப்புகளில் நடக்கும் காமெடிகளை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைக்கிறார். மாணவ மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் மனதுக்கு இணக்கமாக இருக்கும் ஜானகி டீச்சர் கேரக்டர், சென்னையைச் சேர்ந்த 24 வயது ஸ்டாண்ட் அப் காமெடியனான அபிஷேக் குமாரே.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கொரோனா காலத்தில் ஓய்வுநேரத்தைப் போக்க ஜானகி டீச்சரின் முதல் காணொலியை அவர் பதிவேற்றம் செய்ய, சில மணி நேரங்களில் 11,000 பேர் அதைப் பார்த்து ரசித்தார்கள். அடுத்தடுத்து நான்கு காணொலிகளை இதுவரை அபிஷேக் வெளியிட்டிருக்கிறார். பெண் குரலில் பேசி, சல்வார், சேலை என்று ஆடை அணிந்து வந்து அசராமல் ஜோக்கடிக்கும் அபிஷேக்தான் இன்றைய நாடடங்கு காலத்தில் மக்கள் மனத்தில் இடம்பிடித்திருக்கும் சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன்!

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் டீச்சர்!

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மும்பை மட்டுங்கா பகுதியைச் சேர்ந்த அக்கம்பக்கத்து வீட்டினரான வர்ஷா பாடியா மற்றும் வர்ஷா ஷா இருவரும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட `தேப்ளா' எனப்படும் ரொட்டிகளைச் செய்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள். 70 வயதான வர்ஷா பாடியா பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இருந்தபோதும் இந்தப் பெண்கள் இருவரும் சேர்ந்து தங்களால் ஆன உதவிகளைச் செய்துவருகிறார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பிரபல அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான பியான்சே நோல்ஸ், பி.இ.டி அமைப்பின் மனிதநேயப் பரிசை வென்றிருக்கிறார். வாழ்நாள் சாதனையைப் பாராட்டி அவருக்கு இந்தப் பரிசை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மனைவி மிஷைல் ஒபாமா வழங்கினார். ஒருமைப்பாட்டுக்குத் தொடர்ச்சியாக ‘கறுப்பு உயிர்கள் முக்கியம்’ என்ற போர்க்குரலை மேடையில் எழுப்பினார் பியான்சே. அவர் மகளான எட்டு வயது புளூ ஐவி கார்டர், ‘பிரவுன் ஸ்கின் கேர்ள்’ என்ற பாடலில் பணியாற்றியதற்காக பி.இ.டி விருது பெற்றார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பிரபல அமெரிக்க ரேஸ் கார் டிரைவரான ஜெசி கோம்ப்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் கார் போட்டியில் விபத்துக்குள்ளாகி காலமானார். 39 வயதான ஜெசி கடந்த ஆண்டு உலகின் மிக வேகமாகக் காரோட்டும் பெண் என்ற கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்யும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் தன் ஜெட் பவர் காரில் மணிக்கு 522.783 மைல் வேகத்தில் பயணித்தார். அவரது சாதனையை இறப்புக்குப்பின் அங்கீகரித்திருக்கிறது கின்னஸ் அமைப்பு.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்று வந்த நோபல் பரிசு வென்ற இளம்பெண் மலாலா யூசுஃப்சாய், வெற்றிகரமாகப் பட்டம் பெற்றிருக்கிறார். அரசியல், தத்துவவியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ள மலாலா தன் மகிழ்ச்சியை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

1958-ம் ஆண்டு, அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவில் முதல் கறுப்பினப் பெண்மணியாகப் பணியமர்ந்தார் மேரி டபிள்யூ ஜாக்சன். நாசாவின் பெயரிடப்படாத டி.சி. தலைமையகத்துக்குக் கணிதவியலாளரும், ஏரோஸ்பேஸ் பொறியாளருமான மேரியின் பெயரைச் சூட்டப்போவதாக நாசா அறிவித்துள்ளது. நாசாவின் தலைவர் ஜிம் ப்ரிடென்ஸ்டைன், “ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் பெண்கள் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் சாதிக்க மேரி உதவியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கொரோனா நாடடங்கு காலத்தில் துபாயில் தனியே சிக்கிக்கொண்டார் வைதேகி என்ற நான்கு வயதுக் குழந்தையின் தாயான ஸ்மிதா. கேரளாவிலிருக்கும் மகளுக்குத் தாலாட்டு ஒன்றை அவர் எழுத, அதற்குப் பாடல் வடிவம் தர ஒருவர், நடன அசைவுகள் செய்ய நால்வர், எடிட்டிங் செய்ய ஒருவர் எனப் பல அம்மாக்கள் ஒன்றிணைந்து ஜ்வாலாமுகி என்ற தாலாட்டுப் பாடல் வீடியோவை சமீபத்தில் நடிகர் மம்மூட்டியின் வலைதளம் மூலம் வெளியிட்டனர். முழுக்க முழுக்க கேமரா போனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ பாடல் இப்போது கேரளாவில் சூப்பர் ஹிட்!

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் மும்பை நகரில் சில மின்சார ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. மும்பை மத்திய ரயில்வேயைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கொரோனாவையும் பொருட்படுத்தாது மீண்டும் தங்கள் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதில் மனிஷா மாஸ்கே என்ற ரயில் மோட்டார் வுமன் ரயிலை இயக்கும் படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இத்தனை கடினமான காலகட்டத்திலும் ரயில்களை இயக்கும் தங்கள் பணிகளைத் தடையின்றி செய்யும் பெண்களை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ர்நாடக மாநிலம் உடுப்பி நகரைச் சேர்ந்த 10 வயது சிந்தூரி என்ற சிறுமி சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் சிலருக்கு துணியாலான மாஸ்க்குகளைத் தைத்து அளித்திருக்கிறார். பிறந்தது முதலே இடது கை மணிக்கட்டுக்குக் கீழுள்ள பகுதியை இழந்திருக்கும் சிந்தூரி, இந்தப் பணியைச் செய்தது, மக்களிடம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது!