Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பிரீமியம் ஸ்டோரி

ஆட்சியரின் பெயரை கிராமத்துக்குச் சூட்டி நன்றி சொன்ன கோண்டு இன மக்கள்

தெலங்கானா மாநிலத்தின் அதிலாபாத் மாவட்டத்தின் ஆட்சியராகக் கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் தமிழகத்தைச் சேர்ந்த திவ்யா தேவராஜ். 2010-ம் ஆண்டு ஆட்சிப்பணியை முடித்த திவ்யா, கோண்டு இன மக்கள் அதிகம் வாழும் அதிலாபாத் மாவட்டத்தில் காலடி வைக்கும்போதே அங்கு பல்வேறு இனக்குழுக்களுக்குள் கலவரங்கள் வெடித்திருந்தன. அந்த மக்களுடன் நெருங்கி பணியாற்ற விருப்பம்கொண்ட திவ்யா, அவர்களது தாய்மொழியான கோண்டு மொழியைக் கற்றார். வெறும் வாய் வார்த்தைக்கு என்று இல்லாமல், மூன்றே மாதங்களில் வாக்கியங்கள் அமைத்து பேசும் அளவுக்குத் தேர்ந்தார். பஞ்சாயத்துக் கூட்டங்களில் அமைதியாக இருந்த மக்கள் அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக உரையாடும் அளவுக்கு அவரது கோண்டு மொழிப்பயன்பாடு தேர்ந்தது. அவர்களது நீண்டநாள் நிலப் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் கிடைக்க வழிசெய்த திவ்யா, அவர்களது நிலங்களில் விளைந்த பருத்திக்கு நல்ல விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்தார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மக்களுடன் அன்பாகப் பழகிய திவ்யாவை மக்களும் புரிந்துகொண்டார்கள். “மக்கள் எளிதில் அணுகக் கூடியவராக இருக்கிறார்; எங்கள் வீடுகளில் அனைவரையும் சந்தித்து பெயர் முதற்கொண்டு அறிந்துவைத்திருக்கிறார்” என்று சொல்லும் பழங்குடி இனத் தலைவரான மாருதி, ``மழைக்காலத்தில் நீர் தேங்கும் தங்கள் நிலங்களைப் பண்படுத்தி மேடாக்க ஏற்பாடு செய்தார்'' என்றும் திவ்யா வைப் பாராட்டுகிறார். அவருக்குப் பெரிதாக எந்த பரிசும் கொடுக்க முடியாத தாங்கள், தங்களது கிராமத்துக்கு அவரது பெயரை `திவ்யாகுடா' என்று சூட்டியிருப்பதாகத் தெரிவித்த மாருதி, ``இனி தலைமுறை தலைமுறைக்கும் அவர் மீதான எங்கள் அன்பு பேசப்படும்'' என்றும் தெரிவித்தார்.

சிறுவயதில் விவசாயியான தன் தாத்தா வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் அதிகாரிகளைக் கண்டு ஒளிந்திருந்ததை வெளிப்படையாகச் சுட்டும் திவ்யா, அந்த அனுபவம் தன்னை விவசாயிகளின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவியது என்கிறார். மின் வாரியத்தில் பணியாற்றி பல கிராமங்களுக்கு விளக்கு வெளிச்சம் தந்த தன் தந்தையின் பணியையும் நினைவுகூர்பவர், தன் பணியால் தந்தையின் முகம் மகிழ்ச்சியில் ஒளிர்ந்ததைக் கூறுகிறார். அதே மகிழ்ச்சியைத் தானும் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வமே தன்னை மக்களிடம் நெருக்கமாக்கியது என்கிறார்.

தமிழ் மகளுக்கு நம் பாராட்டுகள்!

உதவித்தொகை முதல் டிஸ்னி நிறுவனப் பங்குகள் வரை ஜியானாவுக்குக் குவியும் உதவிகள்

மெரிக்காவின் மினியபோலிஸ் நகரைச் சேர்ந்த கறுப்பின இளைஞரான ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவர் சமீபத்தில் அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் நாடு முழுவதும் அமெரிக்க கறுப்பின மக்கள் கொந்தளித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தந்தை ஜார்ஜை இழந்த ஆறு வயது சிறுமியான ஜியானா ஃபிளாய்டுக்கு மக்களின் ஆதரவு பெருகிவருகிறது. தங்களால் இயன்ற உதவிகளை சிறுமிக்கு செய்துவருகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகையும் பாடகியும் தயாரிப்பாளருமான பார்பரா ஸ்ட்ரெய்சண்ட் தனக்குச் சொந்தமான டிஸ்னி நிறுவனப் பங்குகள் சிலவற்றை ஜியானாவுக்குப் பரிசளித்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

`ஸ்டாப் கில்லிங் அவர் ஃபாதர்ஸ்' என்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஜியானாவுக்கு, டெக்சாஸ் சதர்ன் பல்கலைக்கழகம் அங்கு படிக்க முழு உதவித்தொகையும் தருவதாக அறிவித்திருக்கிறது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநரான ஆப்ரா வின்ஃப்ரே மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவியான மிஷல் ஒபாமா ஆகியோரும் ஜியானாவுக்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் பாடகர் கேனி வெஸ்ட் கல்லூரிப்படிப்புக்கான நிதியுதவியைத் தருவதாகவும் அறிவித்திருக்கிறார். ஜியானாவின் வங்கிக்கணக்குக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கப் பொது மக்கள் அனுப்பியிருக்கிறார்கள். `என் அப்பாவை நான் மிஸ் செய்வேன்' என்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஜியானா பேசியுள்ளார்.

கை கொடுக்கும் கைகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகள் பூங்கா

மதுரை நகரின் அனைத்து மகளிர் காவல் நிலையங்களான தெற்கு வாசல் மற்றும் டவுன் காவல் நிலையங்களில் குழந்தைகள் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலையத்துக்கு வரும் குழந்தைகள் எளிதில் அணுக இவை வழிசெய்யும். இந்த இரு காவல் நிலையங்களுமே தெற்கு வெளி வீதியிலுள்ள க்ரைம் பிராஞ்ச் அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ளன.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறார், சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கும் சிறார் போன்றோர் இந்தக் காவல் நிலையங்களுக்கு புகார் தரவோ, விசாரணைக்கோ வர நேரிடுகிறது. விசாரணை மற்றும் வழக்கு பதிவு செய்யும் அறைகளில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் மேசை, நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் விளையாடும் சிறு பூங்காவையும் இந்த புதிய வசதிகளையும் நகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் திறந்துவைத்தார். தல்லா குளம் மற்றும் திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையங்களிலும் இந்த வசதி விரைவில் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நண்பன்!

உலகின் ஆழமான சேலஞ்சர் டீப்புக்குச் சென்ற உலகின் முதல் பெண்

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரைச் சேர்ந்த 68 வயது மூதாட்டியான கேத்தி சலிவன், உலகின் மிக ஆழமான இடமான பசிபிக் பெருங்கடலின் சேலஞ்சர் டீப் பகுதியில் டைவிங் செய்து, அங்கு சென்ற உலகின் முதல் பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். ஏற்கெனவே அமெரிக்க வரலாற்று நூல்களில் முக்கிய இடத்தை கேத்தி பிடித்திருக்கிறார். 1984-ம் ஆண்டு அக்டோபர் 11 அன்று அமெரிக்க நாசாவின் விண்வெளிக்கலமான சாலஞ்சரில் இருந்து வெளியேறி விண்வெளியில் விண்நடை செய்த முதல் அமெரிக்கப் பெண் இவர்தான். மூன்றரை மணி நேர விண்வெளி நடை பற்றி பின்னாளில் பேசியிருக்கும் கேத்தி, “அந்த நடை மிகக் குறுகியது. ஆனால், எனக்குப் பின்னால் அதுபோல விண்வெளியில் என்னைவிட அதிக நேரம் நடந்த பிற பெண்களைக் கண்டு எனக்குப் பெருமகிழ்வாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

அவருடன் பணியாற்றிய விக்டர் வெஸ்கோவோ என்ற கடல்சார் ஆய்வாளர் கடலுக்கடியில் சென்று ஆய்வுகள் நடத்திவருகிறார். சமீபத்தில் பசிபிக் பெருங்கடலின் மரியானா ட்ரென்ச் பகுதியின் சேலஞ்சர் டீப் என்ற உலகின் மிக ஆழமான பகுதிக்குச் சென்று ஆய்வுகள் செய்ய முயற்சிகள் தொடங்கினார். கேத்தியை தனி நீர்மூழ்கிக்கலமான ‘லிமிடெட் ஃபாக்டரில்’ தன்னுடன் சேலஞ்சர் டீப்புக்கு அவர் அழைக்க, உடனடியாக ஒப்புக்கொண்டார். கடலுக்கடியில் 11 கி.மீ ஆழமுள்ள சேலஞ்சர் டீப்பின் அடி ஆழம் வரை சென்ற முதல் பெண் என்ற பெருமையை சமீபத்தில் பெற்றார் கேத்தி. ஐந்து மணி நேரப்பயணத்தில் ஆழத்தை அடைந்தவர்கள், அங்கு உணவும் அருந்தியிருக்கிறார்கள். “அறிவியல் வளர்ச்சி மனிதன் செல்ல முடியாத இடங்களுக்கும் அவனை எளிதில் அழைத்துச் சென்றுவிடுகிறது” என்று கேத்தி சொல்கிறார்.

அடி முடி அளந்த மங்கை!

புலம்பெயர் தொழிலாளருக்கு தன் சேமிப்பை வழங்கிய மாணவிக்கு அரசு உதவி

மதுரையைச் சேர்ந்த 13 வயது சிறுமி நேத்ரா, சமீபத்தில் ஐ.நா சபையின் ஏழை களுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப் பட்டார். அமைதி மற்றும் முன்னேற்றத் துக்கான ஐ.நா அமைப்பு இந்த நியமனத்தைச் செய்தது.

மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன் கடந்த மே மாதம் காவல்துறையைத் தொடர்பு கொண்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் தன் எண்ணத்தையும், அதற்கென தன் மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்திருந்த ஐந்து லட்ச ரூபாயைத் தருவதாகவும் தெரியப்படுத்தினார். நாடு முழுக்க புலம் பெயர்ந்த தொழிலாளர் பட்ட துயரைக் கண்ட நேத்ரா, தந்தை மோகனிடமும் தாய் பாண்டிசெல்வியிடமும் தன் சேமிப்பை காவல்துறை மூலம் தொழிலாளர்களுக்குத் தருமாறு ஆலோசனை சொன்னார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

“சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பம் பொருளாதாரச் சிக்கல்களை சந்தித்தது. உணவுக்கும் நீருக்கும்கூட வழியின்றி இருந்தோம். என்னால் இந்தத் தொழிலாளர்களின் நிலையை உணர முடிந்தது” என்று நேத்ரா சொல்கிறார். இதைக் கேள்விப்பட்ட பிரதமர், தன் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேத்ராவைப் பாராட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேத்ராவைப் பாராட்டியதோடு, அவரது கல்விச் செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் அறிவித்திருக்கிறார்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நேத்ரா, பி.காம் முடித்து ஆட்சிப்பணி அதிகாரியாக வருவதே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்கிறார்.

வள்ளல் பெண்ணே, வாழ்க!

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பயோகான் நிறுவனத் தலைவரான கிரண் மஜும்தாருக்கு கடந்த ஆண்டுக்கான ஈ.ஒய். உலகத் தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வெல்லும் உலகின் இரண்டாவது பெண் மற்றும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை கிரண் பெறுகிறார்.

“கோவிட்-19க்குப் பிறகு, சுகாதாரத்துறை மற்றும் ஃபார்மசூட்டிகல் நிறுவனங்களே பெரும் வளர்ச்சி கண்டு அடுத்த ஐ.டி செக்டராக மாறும்” என்று கிரண் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த தாயின் உடையைப் பற்றி விளையாடிய பச்சிளம் குழந்தையின் காணொலிக் காட்சி சமீபத்தில் வைரலாகி பலரது நெஞ்சை கனக்கச் செய்தது. புலம்பெயர்ந்த அந்தத் தொழிலாளியின் மகன்கள் இருவரையும் அவர்களது தாத்தா பாட்டி வளர்த்துவருகிறார்கள். பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் குழந்தைகள் இருவருக்கும் தேவையான நிதியுதவியை தன் மீர் ஃபவுண்டேஷன் மூலம் அளித்து, பராமரித்து வருகிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கோவிட்-19 காரணத்தால் உலகெங்கும் பல நாடு களில் நாடடங்கு அமலில் இருக்கிறது. இதனால் குடும்ப வன்முறையால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடா நாட்டிலுள்ள கனடியன் வுமன்ஸ் அசோசியேஷன் அமைப்பு, வீட்டிலுள்ள பிறருக்குத் தெரியாமல் காணொலி அழைப்புகள் மூலம் பெண்கள், கைகளால் சமிக்ஞை செய்து நண்பர்களுக்கு வன்முறை பற்றிய தகவல் அளிக்கும் முறையை அறிமுகம் செய்திருக்கிறது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரின் வென்லாக் மருத்துவமனையில் கொரோனா நோய் தாக்கிய 30 வயது கர்ப்பிணிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தைக்குத் தாயின் அரவணைப்பும் தாய்ப்பாலும் முக்கியம் என்று உணர்ந்த மருத்துவர்கள் குழு, அதன் மூலம் கொரோனா பரவாது என்பதாலும், தாயின் இயற்கையான நோய் எதிர்ப்பு சத்து குழந்தைக்குத் தாய்ப்பால் மூலம் கிடைக்கும் என்பதாலும் இருவரையும் பிரிக்கவில்லை. தாயும் சேயும் நலம்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

அமெரிக்க ராணுவத்தில் சேர பயிற்சி தரும் வெஸ்ட் பாயின்ட் அமெரிக்க மிலிட்டரி அகாடமியிலிருந்து 23 வயது சீக்கியப் பெண்ணான அன்மோல் நாரங், வெற்றிகரமாகப் பயிற்சி முடித்து ராணுவத்தில் பதவியேற்க இருக்கிறார். 218 ஆண்டுகள் தொன்மையான இந்த அகாடமியிலிருந்து வெற்றிபெற்று வெளிவந்திருக்கும் முதல் சீக்கியப் பெண் அன்மோல்; முதல் சீக்கியரும் இவர்தான்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், அந்நாட்டில் நாடடங்கு உத்தரவை சமீபத்தில் தளர்த்தி யிருக்கிறார். கோவிட்-19 நோயாளிகளற்ற நாடு என்றும் நியூசிலாந்தை அவர் அறிவித்திருக்கிறார். “பணி முழுக்க முடியாவிட்டாலும், இது முக்கிய மைல்கல்” என்றும் ஜெசிந்தா அறிவித்துள்ளார். கொரோனா நோயிலிருந்து முற்றிலும் விடுபட்ட முதன்மை நாடுகளில், நியூசிலாந்தும் ஒன்றாகியுள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

காஷ்மீரின் ஶ்ரீநகரைச் சேர்ந்த அமெச்சூர் புகைப்பட நிபுணரான மஸ்ரத் சாஹ்ரா, இந்த ஆண்டின் சர்வதேச ‘ஆஞ்சா நைதிரிங்காஸ்’ விருதை வென்றிருக்கிறார். உலகின் சிறந்த துணிச்சலான புகைப்படச் செய்தி யாளருக்குத் தரப்படும் இந்த விருது, தன்னைப் போன்ற வளரும் புகைப்படக் கலைஞர்களுக்குப் பெரும் ஊக்கம் தருகிறது என்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் மஸ்ரத் தெரிவித்துள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

இங்கிலாந்தின் ஹார்லோ டவுன் நகர் மருத்துவமனையில் மும்பை நகரில் பிறந்த ரீஜா ஆபிரகாம் என்ற செவிலியர் கொரோனா நோயாளிகளைப் பராமரித்து வருகிறார். தன் ஒன்றரை வயதுக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, மருத்துவமனையில் தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் ரீஜாவைப் பாராட்டி, ‘கொரோனா கிரிட்டிகல் வர்க்கர் ஹீரோ’ என்ற விருதை அந்நாட்டு அரசு அவருக்கு அளித்து கௌரவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு