லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்கள் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பிரபலங்களின் உடை ஏலம் மூலம் கிடைக்கும் பணத்தில் எளிய மக்களுக்கு உதவி

க்களுக்கு நாடடங்கு காலத்தில் உதவும்விதமாக, பிரபலங்களின் உடைகளை ஏலம்விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்துகிறது, `வேஸ்டட் சொல்யூஷன்ஸ்' என்ற தன்னார்வ அமைப்பு. இந்த அமைப்பின் தலைவரும் நடிகையுமான ஆன் அன்றா, “செலிபிரிட்டிகள் எங்களுக்கு உதவ தங்களின் உடைகளைத் தருகிறார்கள். அதற்குச் சரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்” என்கிறார். சமீபத்தில் நடைபெற்ற `லாக்மே ஃபேஷன் வீக்'கில் தான் அணிந்திருந்த உடையை வேஸ்டட் சொல்யூஷன்ஸ் அமைப்பின் ‘ரீபர்த் கலெக்டிவ்’ மூலம் ஏலம் விடப்போவதாக நடிகை நித்யா மேனன் அறிவித்திருந்தார்.

நித்யா மேனன்
நித்யா மேனன்

உடைகளின் மீள் பயன்பாடு, செகண்டு ஹாண்ட் உடைகளை அணிவது போன்றவற்றை வேஸ்டட் சொல்யூஷன்ஸ் வலியுறுத்துகிறது. ``சென்னை, பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்கு இந்த முயற்சி பெரிதும் உதவுகிறது'' என்று ஆன் கூறுகிறார். இன்னும் எட்டு வாரங்களுக்கு இந்த ஏலம் நடைபெறும் என்றும், ஒவ்வொரு வியாழன் அன்றும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வாரம் யாருடைய உடை ஏலம் விடப்படும் என்று அறிவிப்பதாகவும் கூறியிருக்கிறார் ஆன்.

``10,000 ரூபாயில் தொடங்கிய நித்யாவின் உடை, அமெரிக்காவின் மேரிலாண்டில் வசிக்கும் அதிதி கபூர் என்ற அவர் ரசிகையால் அறிவிக்கப்படாத மதிப்புக்கு வாங்கப்பட்டது. இந்தப் பணம் `அர்ப்பணம் டிரஸ்ட்'டுடன் இணைந்து பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டில் வசிக்கும் குடும்பங்களுக்குப் பயன்படுத்தப்படும்'' என்று ஆன் அறிவித்திருக்கிறார்.

ஏலம் நல்லது!

ராணுவத்தில் பாலின சமத்துவத்துக்கான ஐ.நா விருது பெறும் இந்திய அதிகாரி

ராணுவத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் பெண்களைப் பாராட்ட ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் ‘மிலிட்டரி ஜெண்டர் அட்வகேட்’ விருதை வழங்கி வருகிறது. 2019-ம் ஆண்டுக்கான இந்த விருதை பிரேசில் ராணுவ அதிகாரியான கார்லோ அராஜோவுடன் பகிர்ந்து கொள்கிறார், இந்திய அமைதிப்படையில் மேஜர் பதவி வகிக்கும் சுமன் கவானி.

இந்த விருதினை வெல்லும் இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த முதல் பெண் அதிகாரி சுமன். தெற்கு சூடானுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா சபையின் அமைதிப்படையில் பணியாற்றிய சுமன், 230 அதிகாரிகளுக்கு பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் களப் பணியாற்றுவதில் பயிற்சியளித்திருக்கிறார். ஒவ்வொரு குழுவிலும் பெண் அதிகாரிகள் பணியாற்றுவதை சுமன் உறுதி செய்திருக்கிறார்.

சுமன் கவானி
சுமன் கவானி

2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் சுமன், “நாம் அன்றாடப் பணிகளில் பாலின சமத்துவத்தைக் கட்டமைப்பதோடு, நம்முடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்துக்கு அதைக் கற்றுத் தரவும் வேண்டும்” என்கிறார். விருது பெறும் இவ்விரு பெண்களையும் `நல்ல ரோல் மாடல்கள்' என்று ஐ.நா சபையின் தலைவர் அன்டோனியோ குதரஸ் பாராட்டியுள்ளார்.

வாழ்த்துகள் சுமன்!

குடும்ப வன்முறையால் அவதியுறும் பெண்களுக்கான சிறப்பு ஹெல்ப்லைன்

மிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித் திருக்கும் வேளையில் பெரும்பாலான ஆண்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் பல மடங்கு அதிகரித்திருக் கின்றன. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு தனி ஹெல்ப்லைன் அமைத்துப் பணியாற்றி வருகிறது. தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஹெல்ப்லைனுக்கு நாடடங்கு காலத்தில் இதுவரை 5,740 தொலைபேசி அழைப்புகள் அவசர உதவி கேட்டு வந்துள்ளன. இவற்றில் 5,702 புகார்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி, தீர்வு காணப்பட்டுள்ளது. 38 வழக்குகள் பதியப்பட்டு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹெல்ப்லைன்
ஹெல்ப்லைன்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் முதலிய மாவட்டங் களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில்தான் அதிக புகார்களாக 1,915 அழைப்புகள் பதிவாகியுள்ளன. இவை தவிர தமிழ்நாடு மாநில மகளிர் கமிஷனும் மாவட்ட வாரியாக மகளிருக்கான உதவி எண்களை அறிவித்திருக்கிறது. அதிலும் ஒரு நாளைக்கு சராசரியாக 50 அழைப்புகள் வருகின்றன. என்.ஜி.ஓக்களின் துணையுடன் இவ்வாறு வரும் அழைப்புகளுக்கு கவுன்சலிங் செய்யப்படுகிறது. நாடடங்கு அறிவிக்கப்பட்ட போது அதிகரித்த இந்தக் குடும்ப வன்முறை இப்போது குறையத் தொடங்கியிருப்பதாகக் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி ரவி தெரிவித்துள்ளார். ஹெல்ப்லைன் சுட்டி: https://bit.ly/tnwomenhelp

துணிவுடன் அணுகுங்கள்!

151 பெண் தொழிலாளர்களை மீட்டு விமானத்தில் ஊருக்கு அனுப்பிய நடிகர்

பிரபல பாலிவுட் நடிகரும் சமூக ஆர்வலருமான சோனு சூட், கேரள மாநிலத்தில் பணியாற்றி வந்த 151 பெண் தொழிலாளர்களைத் தன் சொந்த செலவில் விமானமேற்றி அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள பல தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்த இந்தப் பெண்கள் கோவிட்-19 தாக்குதலுக்குப் பின் தங்கள் சொந்த ஊர் திரும்பும் ஆவலில் தங்கள் பணிகளை ராஜினாமா செய்திருந்தார்கள். கைகளில் பணமுமின்றி, போதிய உணவு, இருப்பிடமும் இன்றி தவித்துவந்தார்கள். இப்படி வாரக்கணக்கில் உழன்ற பெண்களை நடிகர் சோனு சூட் ‘சார்டர்டு ஃப்ளைட்’ மூலம் ஒடிசாவுக்கு அனுப்பியுள்ளார்.

சோனு சூட்
சோனு சூட்

கொச்சியிலிருந்து புவனேஸ்வரம் நகருக்குக் கிளம்பிய ஏர் ஏசியா விமானத்தில் கிட்டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 151 பெண்களும், பாவா மர நிறுவனத்தில் பணியாற்றிய ஒன்பது பேரும் இருந்தார்கள். நாட்டுக்குள் முதன்முறையாக விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்ட வடமாநில ஊழியர்கள் இந்தப் பெண்களே. செய்தித் தாள்களில் இந்தப் பெண்களைப் பற்றி வந்த செய்தி களைப் படித்த சோனு, உடனே விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து அனுப்பினார். ஒடிசாவை அடைந்ததும் இந்தப் பெண்களுக்கான தங்கும் வசதிகளை மாநில அரசு செய்திருந்தது. இது தவிர, ஆங்காங்கு இவ்வாறு சிக்கிக்கொண்ட தொழிலாளர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் ஒன்றையும் அமைத்து உதவி வருகிறார் சோனு. தன் சொந்த ஹோட்டலில் மருத்துவப் பணியாளர்கள் தங்குவதற்காக தனி அறைகளையும் ஒதுக்கியுள்ளார். தேவி, சாகசம், சந்திரமுகி என்று பல தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவும், சிறு கதா பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் சோனு.

நிஜ ஹீரோவான நிழல் வில்லன்!

கேரள மாநிலத்தின் முதல் பெண் டி.ஜி.பி ஶ்ரீலேகா

கேரள மாநிலத்தின் தீயணைப்புத் துறையின் முதல் பெண் நிர்வாக இயக்குநராக சமீபத்தில் ஶ்ரீலேகா ஐ.பி.எஸ் தன் பணியைத் தொடங்கினார். ஏற்கெனவே கூடுதல் டி.ஜி.பி ஆகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஶ்ரீலேகாவுக்குத் தீயணைப்புத்துறை டி.ஜி.பி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஜேக்கப் தாமஸ், ஹேமச்சந்திரன் ஆகிய இரு டி.ஜி.பிக்கள் பணி ஓய்வு பெறுவதையடுத்து, ஶ்ரீலேகாவுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஶ்ரீலேகா டி.ஜி.பி ஆனாலும், கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள டி.ஜி.பி பதவிகள் இரண்டு மட்டுமே என்பதால், இந்தப் பொறுப்பு கிடைப்பது தாமதமானது.

ஶ்ரீலேகா
ஶ்ரீலேகா

காவல் பணிகளின் 1987-ம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்தவர் ஶ்ரீலேகா. கல்லூரியில் விரிவுரையாளராகவும், ரிசர்வ் வங்கியிலும் பணியாற்றிய பின் காவல் பணிகளுக்குத் தேர்வானார். ஆலப்புழா, பத்தனம்திட்டா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் டி.சி.பி ஆகப் பணியாற்றிய ஶ்ரீலேகா, எர்ணாகுளம் மற்றும் கொச்சியில் டி.ஐ.ஜி ஆகப் பணியாற்றியுள்ளார். டெல்லியிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திலும் பணியாற்றியுள்ளார். ரப்பர் மார்க்கெட்டிங் ஃபெடரேஷன், சாலை மற்றும் பாலங்கள் கார்ப்பரேஷன் ஆகிய அமைப்புகளிலும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். க்ரைம் பிராஞ்ச் ஐ.ஜி ஆகவும், விழிப்புப் பணிகள் இயக்குநராகவும், சிறைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறைகளின் கமிஷனராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

முதல் பெண்ணுக்கு நம் வாழ்த்துகள்!

அவள் செய்திகள்

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வசிக்கும் சான்ட்ரா அகிபோர், அந்நாட்டின் முதல் பெண் கார் மெக்கானிக் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

சான்ட்ரா அகிபோர்
சான்ட்ரா அகிபோர்

13 வயதில் அவ்வூரின் கராஜ் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தவர், படிப்படியாக முன்னேறி கடந்த 22 ஆண்டுகளாக இந்த வேலையைச் செய்துவருகிறார். இப்போது ‘லேடி மெக்கானிக்’ என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்கு மெக்கானிக் வேலையைக் கற்றுத்தந்து, அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க வழிவகை செய்கிறார். ஒரு லட்சம் பெண்களையாவது இந்தத் துறைக்கு அறிமுகம் செய்துவிட சான்ட்ரா விரும்புகிறார்.

கே.டி.கமருன்னிசா
கே.டி.கமருன்னிசா

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 25 வயது செவிலியர் கே.டி.கமருன்னிசா, கேரள மாநிலம் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டுக்கு அனுப்பிய சிறப்பு மருத்துவக் குழுவில் இடம்பிடித்துள்ளார். கேரளாவைத் தாக்கிய நீபா வைரஸ் நோய் தாக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு கோழிக்கோடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளித்தவர் கமருன்னிசா. ``இந்த அனுபவமே என்னை கோவிட்-19 நோய்க்கு எதிரான போரில் பங்கேற்க வளைகுடா நாட்டுக்குச் செல்லும் துணிவைத் தந்தது'' என்று இவர் கூறியுள்ளார்.

சாவித்ரி
சாவித்ரி

திண்டுக்கல்லைச் சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பார்வையற்ற கர்ப்பிணி 34 வயது சாவித்ரி. இவருக்கு உதவ தன்னார்வலர் செல்வம், மாவட்ட எஸ்.பி அருண்சக்தி குமாரிடம் வேண்டினார். தஞ்சை அரசு மருத்துவமனையில் சாவித்ரிக்கு சுகப்பிரசவம் ஆனபின்பு நேசக்கரங்கள் இல்லத்தில் தாயும் சேயும் தங்க ஏற்பாடு செய்தார் அருண். தன் மகனுக்கு எஸ்.பி பெயர் வைக்க வேண்டும் என்று சாவித்ரி கேட்டுக்கொண்டார். குழந்தைக்கு `ஶ்ரீபதி' என்று பெயர்சூட்டப்பட்டு, தாயும் சேயும் திண்டுக்கல்லிலுள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ந்தியப் பளுதூக்கும் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுக்கப்போவதாக கோனா ஃபிலிம் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

கர்ணம் மல்லேஸ்வரி
கர்ணம் மல்லேஸ்வரி

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற மல்லேஸ்வரி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு, இந்தி, தமிழ் எனப் பன்மொழிகளில் வெளி வரவுள்ளது இந்தத் திரைப்படம்.

2025-ம் ஆண்டு, பயன்பாட்டுக்கு வரவுள்ள டபிள்யூ-ஃபர்ஸ்ட் என்ற விண்வெளி டெலஸ்கோப்புக்கு `நான்சி கிரேஸ் ரோமன்' பெயரை வைக்க அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா முடிவெடுத்துள்ளது.

நான்சி கிரேஸ்
நான்சி கிரேஸ்

நாசாவின் முதல் தலைமை வானியலாளரான நான்சி கிரேஸ், அகண்டப் பெருவெளியை ஆய்வு செய்யும் டெலஸ்கோப்புகளை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். நாசாவின் பிரபல ஹபிள் டெலஸ் கோப்பின் அன்னை என்று நான்சியை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.

சஹீது இப்ரஹிம்
சஹீது இப்ரஹிம்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கிறார் அந்நாட்டு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஹீது இப்ரஹிம். இவர் சமீபத்தில் சமூக வலைதளப்பக்கத்தில் 99 வயதான தன் அத்தை, மும்பை நகரில் நாடடங்கு சூழலால் உணவின்றி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தட்டுத் தடுமாறி தன் கைகளால் உணவு தயாரித்து வழங்கும் வீடியோவைப் பதிவிட்டிருக்கிறார். மருமகன் பாகிஸ்தானிலும், அத்தை மும்பையிலும் என வெவ்வேறு இடங்களில் வசித்தாலும், மனிதத்தால் கட்டுண்டு இருக் கும் இந்தக் குடும்பத்தை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

சான்ட்ரா
சான்ட்ரா

11-ம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதிய சான்ட்ரா பாபு என்ற ஒற்றைச் சிறுமிக்காக கேரள மாநில அரசு, நிறுத்தி வைத்திருந்த தன் படகுச் சேவையை மீண்டும் தொடங்கியது. ஆலப்புழாவை அடுத்த எம்.என்.பிளாக் என்ற சிறு தீவில் வசிக்கும் சான்ட்ரா 11-ம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதுவதற்காக, அங்கிருந்து ஆர்.பிளாக் என்ற தீவுக்கு 70 பேர் பயணிக்கக்கூடிய படகு ஒன்றை அம்மாநில அரசின் நீர்வழிப் போக்குவரத்துத்துறை ஓட்டியது. தேர்வு நடைபெற்ற அந்த இரண்டு நாள்களும் மட்டுமே ஓடிய படகில் பயணம் செய்த ஒரே நபர், சான்ட்ரா!

வைதேகி
வைதேகி

ந்திய கிரிக்கெட்டின் அண்டர்-19 குழுவில் விளையாடிவரும் இளம் நட்சத்திரமான அதர்வா அங்கோலேகரின் தாயார் வைதேகி. கடந்த 2010-ம் ஆண்டு, கணவர் இறந்துபோனது முதல் அதர்வாவுடன் பர்த் என்ற 13 வயது மகனையும் தனியே வளர்த்துவரும் வைதேகி, மும்பை மாநகரப் பேருந்து நிறுவனத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். கொரோனா சூழ்ந்திருக்கும் நிலையிலும், தவறாது பணியாற்றிவரும் வைதேகி, “ரயில்கள் இல்லாத இந்தக் காலகட்டத்தில் நகரின் நாடித்துடிப்பு பேருந்துதான்” என்கிறார்.