Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சிமோனா
பிரீமியம் ஸ்டோரி
சிமோனா

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
சிமோனா
பிரீமியம் ஸ்டோரி
சிமோனா

இந்தியப் பெண்மணியின் பிரமாண்ட வளர்ச்சி!

ந்தியாவைச் சேர்ந்த அன்ஷுலா காந்த் என்ற பெண்மணியை நிர்வாக இயக்குநர் மற்றும் முதல் தலைமை நிதி அதிகாரியாக உலக வங்கி நியமித்துள்ளது. உலக வங்கியின் நிதி மற்றும் இடர் மேலாண்மைப் பொறுப்பு இனி அன்ஷுலா வசம் இருக்கும். நிதிநிலை அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் இடர் மேலாண்மையுடன், வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் இணைந்து நிதி திரட்டுதல் பணியையும் செய்யவிருக்கிறார் அன்ஷுலா. இதுகுறித்து உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்பாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நிதி மேலாண்மை, வங்கிப் பணி, தொழில்நுட்ப அனுபவம் என்று பாரத ஸ்டேட் வங்கியில் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றிய தன் 35 ஆண்டு அனுபவத்தைக் கொண்டுவருபவர் அன்ஷுலா” எனத் தெரிவித்துள்ளார்.

அன்ஷுலா
அன்ஷுலா

சட்டத் தெளிவு, பணியாற்றல் போன்றவற்றை உள்ளடக்கிய பணிகளை மேற்கொள்ளவிருக்கும் அன்ஷுலா, தலைவர் டேவிட் மால்பாஸின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் பணியாற்றுவார். டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரி மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பயின்றவர் அன்ஷுலா. 1983-ம் ஆண்டு, பாரத ஸ்டேட் வங்கியின் புரபேஷனரி ஆபீஸராகப் பணியில் சேர்ந்த இவர், படிப்படியாக 35 ஆண்டுகளில் இந்த பிரமாண்ட வளர்ச்சியைக் கண்டிருக்கிறார்.

வாழ்த்துகள் அன்ஷுலா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தடகள வீராங்கனையின் அபூர்வ சாதனை!

த்தாலி நாட்டின் நபோலி நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக யுனிவர்சியேட் தடகளப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்திருக்கிறார் தடகள வீராங்கனை துத்தி சந்த். இந்தப் போட்டிகளின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓட்ட தூரத்தை 11.32 விநாடிகளில் எட்டி, தங்கம் வென்றார் 23 வயதான துத்தி. போட்டியின் ஆரம்பம் முதலே அவர் முன்னிலை வகித்தார். ஒடிசாவைச் சேர்ந்த இவர், 11.24 விநாடிகளில் இதே தூரத்தைக் கடந்து தேசிய சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் பெறுகிறார்.

பந்தயம் முடிந்ததும், “என்னைக் கீழே இழுத்தால், முன்னைவிட அதிக ஆற்றலுடன் மீள்வேன்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

துத்தி சந்த்
துத்தி சந்த்

புவனேஸ்வர் நகரின் கலிங்கா பல்கலைக்கழகத்தின் மாணவி துத்தி. தோஹா நகரில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க இன்னும் இவர் தகுதி பெறவில்லை என்பது கேள்விக்குரியது.

துத்தியை வாழ்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “அபூர்வமான வீராங்கனையின் அபூர்வ சாதனை இது; உங்கள் விடாமுயற்சிக்கும் திறமைக்கும் கிடைத்த வெற்றி இது. வாழ்த்துகள் துத்தி! இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

மின்னல் வேக மங்கைக்கு வாழ்த்துகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மாவின் கனவை நனவாக்கிய மகள்!

ருமேனிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான சிமோனா ஹேலப் உலகின் நம்பர் ஒன் ஆட்டக் காரரான செரினா வில்லியம்ஸைத் தோற்கடித்து விம்பிள்டன் தங்கக் கோப்பையைக் கைப்பற்றினார். லண்டனின் விம்பிள்டன் மைதானத்தில் நடந்த மகளிர் இறுதிப் போட்டியில் 6-2, 6-2 என்ற நேர் செட்டுகளில் செரினாவைத் தோற்கடித்தார்.

சிமோனா
சிமோனா

37 வயதான செரினா, 24-வது பட்டத்தை வெல்லும் ஆவலுடன் விளையாடத் தொடங்கினார். ஆனால், தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி, 56 நிமிடங்களில் வெற்றியடைந்தார் சிமோனா. இதன் மூலம் விம்பிள்டன் இறுதிப் போட்டி களில் வெல்லும் முதல் ருமேனியப் பெண் என்கிற பெருமையையும் இவர் பெறுகிறார். “தொடக்கத்தில் உடல்நிலை கொஞ்சம் கவலையைத் தந்தது. பதற்றமாக இருந்தது. ஆனால், அவற்றுக்கு நேரமில்லை என்று எண்ணி என்னால் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ, அவ்வளவு சிறப்பாக விளையாடினேன்” என்று கூறினார் சிமோனா.

“என் 10 வயது முதல் அம்மாவின் கனவு இது. நான் இவரது கனவை நனவாக்கும் நாளும் வந்துவிட்டது. புல்வெளியில் ஆட ஏதுவாக என் விளையாட்டுப் பாணியில் சில மாற்றங்கள் செய்தேன்; வென்றுவிட்டேன். மீண்டும் இங்கு விளையாட ஆவலாக இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

வி(ன்)ம்பிள்டன் வீராங்கனை!

பள்ளிச் சீருடையுடன் நாற்று நட்ட மாணவிகள்!

மீபத்தில் மாணவிகள் சிலர் பள்ளிச் சீருடையுடன் வயலில் இறங்கி, நாற்று நடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாயின. அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தைச் சேர்ந்த சப்கைதி என்ற ஊரில் உள்ளது ஆஸ்பயர் ஜூனியர் காலேஜ் என்ற உயர்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகள்தாம் தங்கள் பாடத் திட்டத்தின் பகுதியாக வயலில் இறங்கி இவ்வாறு வேளாண்மை செய்யக் கற்றுக்கொள்கிறார்கள்.

பள்ளிச் சீருடையுடன் நாற்று நட்ட மாணவிகள்
பள்ளிச் சீருடையுடன் நாற்று நட்ட மாணவிகள்

ஆஸ்பயர் பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஜூனியர் கல்லூரி (நம் 11 மற்றும் 12-ம் வகுப்பு) பயிலும் மாணவிகள் விதை விதைப்பதை பிராக்டிகல் வகுப்பு மூலம் கற்றுக்கொண்டனர். பள்ளியின் முதல்வர் மயுர்சா போரோ, “இவ்வாறு நேரடியாகக் களமிறங்கி விவசாயம் கற்றுக்கொள்வதன் மூலம் கிராமப்புற வாழ்வியலுடன் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளவும், விவசாயிகள் பிரச்னைகளை உணர்ந்துகொள்ளவும் மாணவிகளால் முடியும்” என்று தெரிவித்தார்.

வித்தியாச விவசாயிகள்!

சவுதி அரேபியா சென்று குற்றவாளியைக் கொண்டுவந்த காவல்துறை அதிகாரி!

கேரள மாநிலம் கொல்லம் நகர காவல்துறை ஆணையர் மெரின் ஜோசஃப், ஐ.பி.எஸ். கொல்லம் நகரைச் சேர்ந்த, தேடப்பட்டு வந்த கிரிமினல் குற்றவாளி சுனில் குமார் பத்ரன். சவுதி நாட்டில் வசித்துவந்த சுனில் குமார் கடந்த 2017-ம் ஆண்டு விடுமுறையில் இந்தியா வந்தபோது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நண்பரின் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமி வீட்டில் தெரிவித்து புகார் அளிப்பதற்குள், சவுதிக்குத் தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து மன உளைச்சல் காரணமாக சிறுமி தற்கொலை செய்துகொண்டாள். குற்றவாளி வெளிநாட்டில் இருந்ததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறியது காவல்துறை. வழக்கு இழுபறியால் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

மெரின்
மெரின்

2019 மார்ச் மாதம் கொல்லம் நகரின் ஆணையரானவுடன், மெரின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கெதிரான வழக்குகளைக் கையில் எடுத்தார். அப்போது இந்த வழக்கு குறித்தும் தெரியவந்தது. 2010-ம் ஆண்டிலேயே சவுதி அரசுடன் இந்தியா, குற்றவாளிகள் ஒப்படைப்பு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது தெரியவர, இன்டர்போல் மூலம் தகவல் தெரிவித்து வழக்கு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். சவுதி அரசுக்கும் தகவல் பறக்க, சுனில்குமாரைக் கைது செய்தது சவுதி காவல்துறை. கைது செய்யப்பட்டவரை இந்தியா கொண்டுவர தன் கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரிகள் யாரையும் அனுப்பாத மெரின், ஒப்படைப்பு நடவடிக்கைகள் குறித்துத் தானும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சவுதிக்கு நேரில் சென்று குற்றவாளி சுனில் குமாரை இந்தியா அழைத்து வந்திருக்கிறார். இவ்வாறு சவுதி அரசால் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் முதல் குற்றவாளி சுனில்குமார்தான்!

`சிங்கம்’ மெரின்!

அவள் செய்திகள்

திருவனந்தபுரத்தில் 40 பெண்களை உள்ளடக்கிய `எல்-40' என்ற மகளிர் ஊழியர் குழு ரயில்பெட்டிகள் மற்றும் இன்ஜின்களின் இயந்திரப் பராமரிப்பை, கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இயந்திரப் பராமரிப்பு செய்யும் இதுபோன்ற ‘மகளிர் மட்டும்’ குழு இல்லை!

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சீனாவின் குவாங்க்சாங் நகரை அடுத்த கிராமம் ஒன்றில் ஏழு சீனத் தோழிகள் ஒன்றிணைந்து 6 லட்சம் டாலர் மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கிப் புனரமைத்துள்ளனர். வாழ்க்கை முழுக்க அந்த வீட்டில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து, அங்கேயே மரணமடைய விரும்புவதாக, 2008-ம் ஆண்டு அவர்கள் எடுத்த முடிவின்படி இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது!

மும்பை நகரில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கிலும், கம் பூட்ஸ் மற்றும் மழைக் கோட் அணிந்து குப்பை பொறுக்கிக்கொண்டிருந்தார்கள் சிலர். நகரைச் சேர்ந்த 15 வயது மாணவி சஞ்சனா ரன்வால் சமூக ஊடகங்கள் மூலம் நிதி திரட்டி, குப்பை பொறுக்கும் 200 பிளாட்பார வாசிகளுக்கு மழைக் கோட்டும், பூட்ஸும் வாங்கிப் பரிசளித்துள்ளார்.

ஸ்விகி உணவு டெலிவரி நிறுவனம் சம்யுக்தா விஜயன் என்ற மூன்றாம் பாலினரைத் தன் தலைமைத் திட்ட மேலாளராக நியமித்துள்ளது. சொந்தமாக டூட்ஸ்டுடியோ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமும் நடத்தி வரும் சம்யுக்தா, ஸ்விகி நிறுவனத்தின் மூன்றாம் பாலின ஊழியர்களுக்கு உதவும் ஊக்கக் குழுவுடன் இணைந்து பணியாற்றிவருகிறார்.

புனே நகரின் போரி அலி என்ற நெரிசலான வியாபாரப் பகுதியின் கடைகளிலுள்ள ஷட்டர்கள்மீது பளபளவென ஓவியங்கள் வரையப்பட்டு அந்தப் பகுதியே அழகாகத் தெரிகிறது. அலிஃபியா கச்வாலா மற்றும் அனுஷ்கா ஹர்திகர் என்ற இரு பெண்களும் இணைந்து `எ ஃப்ரெஷ் கோட்’ என்ற பெயரில் ஷட்டர் ஓவியங்கள் வரைந்து, 100 ஆண்டு பழைமையான இந்த மார்க்கெட் பகுதியை அழகாக்கியுள்ளனர்.

82 வயதான பி.எஸ்.பத்மினி, திருவனந்தபுரம் மியூசியம் ஹாலில் தன் ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருள்களின் காட்சி ஒன்றை சமீபத்தில் நடத்தினார். கணவர் இறந்த பின், 60 வயதுக்குப் பிறகே ஓவியம் வரையக் கற்றுக்கொண்ட பத்மினி, வேஸ்ட் துணி, காகிதம், உடைந்த சி.டி-க்கள் என்று கிடைக்கும் பொருள் எதுவாயினும் அதைக் கலைப்பொருளாக மாற்றிவிடுகிறார். கற்க வயது தடையல்ல என்று நிரூபித்திருக்கிறார் அவர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ட அமெரிக்காவில் முதன்முறை யாக, இறந்துபோன பெண்ணிடமிருந்து கருப்பை தானம் பெற்ற பெண் ஒருவருக்குப் புகழ்பெற்ற கிளீவ்லேண்ட் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கருப்பை இழந்த அல்லது செயலிழந்துபோன பெண் களுக்கு இந்தக் கருப்பை தானம் பெரிதும் உதவும். இறந்து 6 முதல் 8 மணி நேரத்துக்குள் கருப்பை தானம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகின் றனர் மருத்துவர்கள்.

மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் அபுஜ்மத் காட்டுப் பகுதியில் 23 வயது முரியா பழங்குடியினப் பெண்ணான கீர்த்தா தோர்பா துணிச்சலாக மருந்தகம் ஒன்றைத் தொடங்கி நடத்திவருகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக பள்ளிப்படிப்பை முடிக்க இயலாத கீர்த்தாவின் கடைதான், சுற்றுவட்டாரத்தின் பல கிராமங்களுக்கு மருந்துகள் மற்றும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கிவருகிறது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

டந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் பயிற்சியின்போது நடந்த விமான விபத்து ஒன்றில் இந்திய விமானப்படை வீரர் ஸ்குவாட்ரன் லீடர் சமீர் அப்ரொல் வீரமரணமடைந்தார். அவரின் மனைவி கரிமா அப்ரொல், வாரணாசியில் அதன்பின் நடந்த எஸ்.எஸ்.பி தேர்வில் வெற்றிபெற்று, தெலங்கானாவிலுள்ள துந்துகல் விமானப்படை அகாடமியில் விரைவில் பயிற்சி எடுக்கவுள்ளார். கணவர் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என்றும் இயங்கிவருகிறார் இவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism