Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ashwathy satheesan
பிரீமியம் ஸ்டோரி
ashwathy satheesan

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
ashwathy satheesan
பிரீமியம் ஸ்டோரி
ashwathy satheesan

பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட்அப் நிறுவனரான முதல் இந்தியப் பெண்!

ப்போது அமெரிக்காவில் வசிக்கும் 27 வயதான இந்திய வம்சாவளிப் பெண் அங்கிதி போஸ். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் செகோயா கேப்பிடல் என்ற நிதி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அங்கிதி, தென்கிழக்காசிய வணிக சந்தைகள் எப்படி இயங்குகின்றன, அவற்றில் பொருள் பரிமாற்றங்கள் என்னென்ன தடங்களில் நடைபெறுகின்றன என்று ஆராயத் தொடங்கினார். அப்போதுதான் தேவைக்கும் வழங்கலுக்குமிடையேயான பெரும் இடைவெளியை அடையாளம் கண்டுகொண்டார். மூலப்பொருள் வாங்க விரும்புபவர்கள் மிகச் சாதாரண சிறுதொழிலதிபர்கள். அவற்றை வழங்கும் பெருநிறுவனங்களை நேரடியாக அவர்களால் தொடர்புகொள்ள முடிவதில்லை என்பதை உணர்ந்துகொண்டவர், இரு தரப்பினையும் இணைக்கும் ஒரு தடமாக ‘சிலிங்கோ’ என்ற புதிய இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் ஒன்றை 2015-ம் ஆண்டு நிறுவினார். அப்போது அவருக்கு வயது 23 மட்டுமே!

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

எங்கு மலிவாகக் கொள்முதல் செய்யலாம் என்பதில் தொடங்கி, அதற்கான நிதியுதவி பற்றிய விளக்கங்கள், டெக்னிக்கல் உதவிகள், விற்பனை மற்றும் மார்கெட்டிங் என்று சகலமும் செய்துதருகிறது சிலிங்கோ.

“இதைத் தொடங்கும்போது லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் கொஞ்சமும் இல்லை. உலகை மாற்ற மட்டுமே விரும்பினோம். ஆசியாவிலிருந்து இந்த நிறுவனத்தை உலகளாவியதாக மாற்றுவதே இப்போதைக்கு என்முன் இருக்கும் ஒரே குறிக்கோள்” என்று சொல்லும் அங்கிதி, பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் ஸ்டார்ட்அப்பை நடத்தும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார்.

வாழ்த்துகள் பில்லியன் டாலர் பேபி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூந்தல் தானம் செய்த காவல்துறை அதிகாரி!

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாளக்குடா பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி அபர்ணா லவகுமார். அவ்வப்போது தன்னால் இயன்ற சேவைகள் செய்துவரும் அபர்ணா, சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு உற்சாகமூட்ட தன் தலையை மொட்டையடித்துக்கொண்டார். அவரது கூந்தல் தானம் செய்யப்பட்டது. “தோற்றத்தில் என்ன இருக்கிறது? ஒன்றிரண்டு ஆண்டுகளில் கூந்தல் மீண்டும் வளர்ந்துவிடும். நான் செய்தது அப்படி ஒன்றும் பெரிய சாதனை இல்லை” என்று சொல்கிறார் அபர்ணா. கூந்தலை இழந்திருப்பதால் புற்றுநோயாளிகள் எப்படி உணர்வார்கள் என்று தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறுகிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

“தொடர்ச்சியாக நான் கூந்தல் தானம் செய்வது வழக்கம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனைக் கண்டதும் மொட்டையே அடித்துக்கொள்வது என்று முடிவெடுத்தேன். தன் முடியை இழந்ததை அந்தச் சிறுவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்கிறார். சிறுவயதிலேயே கணவரை இழந்த அபர்ணா தன் இரு பெண் குழந்தைகளையும் தனியாகவே வளர்த்துவருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவமனையில் இறந்துபோன உறவினரின் சடலத்தைப் பெற்றுக்கொள்ளக்கூட பணமின்றி தவித்த குடும்பம் ஒன்றுக்கு உதவ தன் கையில் அணிந்திருந்த மூன்று தங்க வளையல்களை விற்று பணம் தந்து, இறுதிக்கடன்களைச் செய்து முடிக்க உதவினார் அபர்ணா. இப்போது கூந்தல் தானம் செய்ததற்காக மீண்டும் ஊடக வெளிச்சம் இவர் மேல் விழுந்திருக்கிறது.

அற்புதம், அபர்ணா!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பறக்கும் பார்பி பொம்மைகள் அறிமுகம்!

புகழ்பெற்ற விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்துடன் இணைந்து புதிய ரக பொம்மை களை, பார்பி பொம்மைகளைத் தயாரிக்கும் மேட்டல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விமானி, விமானப் பணிப்பெண், விமானப் பொறியாளர் என மூன்று ரகங்களில் அறிமுகமாகியிருக்கின்றன இந்தப் பொம்மைகள். ஐந்து வயது நிரம்பிய பெண் குழந்தைகள் தங்களைப் பற்றி உணர்ந்துகொள்ளவும், மனத்திலுள்ள ஐயங்களைத்தீர்த்து தன்னைப்பற்றிய தெளிவு கொள்ளவும் ஏதுவாக `தி டிரீம் கேப் புராஜக்ட்' என்ற இந்தப் பணியைச் செய்துவருகிறது மேட்டல். இங்கிலாந்தில் பணியாற்றும் பொறியாளர்களில் 12 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்பதோடு, 4.3 சதவிகிதப் பெண்களே விமானிகளாகப் பணியாற்றுகின்றனர் என்றும் தெரியவந்ததால், இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக விமானிகள் மற்றும் விமானப் பொறியாளர்களை முன்னிறுத்துவதாகச் சொல்லியிருக்கிறது விர்ஜின் அட்லான்டிக்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

“ஐந்து வயதிலிருந்தே என்ன மாதிரியான கரியர் நமக்கு சரிப்பட்டுவரும் என்று சிறுமிகள் முடிவெடுக்க இந்தப் பொம்மைகள் உதவும். இந்த பார்பி பொம்மைகள் மூலம் எங்கள் வருங்காலப் பணியாளர்களுடன் இளம்வயதிலிருந்தே எங்களால் தொடர்பில் இணைந்திருக்க முடிகிறது” என்று சொல்கிறார் விர்ஜின் அட்லான்டிக் நிறுவனத்தின் நிக்கி ஹம்ஃப்ரே. இந்தப் பொம்மைகள் விர்ஜின் அட்லான்டிக் விமானங்களில் விரைவில் விற்பனைக்கு வரும், கடைகளில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

கலக்கறே பார்பி!

சாதி ஒழிப்பு முன்னெடுப்போருக்கான நிகரி விருது பெறும் கல்லூரி முதல்வர்!

ணற்கேணி ஆய்விதழ், பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சமத்துவம் கொண்டுவரப் பாடுபடும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த `நிகரி' விருதுகளை வழங்கி வருகிறது. நடப்பாண்டுக்கான நிகரி விருது தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் முதல்வரான வி.செந்தமிழ்ச்செல்விக்கும், உடையாளூர் அரசுப் பள்ளியின் ஆசிரியரான அன்சர் அலிக்கும் வழங்கப்பட்டது. தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் முதல்வரான பேராசிரியர் செந்தமிழ்ச்செல்வி, “ஆசிரியப் பணியைத் தொடங்கிய நாள் முதலே ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்துவருகிறேன். அந்த மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றுவது ஒவ்வொரு ஆசிரியருக்கும் கடமையே” என்கிறார். ஒரத்தநாடை அடுத்த குக்கிராமத்தில் பிறந்த செந்தமிழ்ச்செல்வி, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்காக தனியே பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

செந்தமிழ்ச்செல்வி, அன்சர் அலி
செந்தமிழ்ச்செல்வி, அன்சர் அலி

மணற்கேணி இதழாசிரியரும் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.ரவிக்குமார், “2013-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் ஆசிரியர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது. கல்வி நிலையங்களில் சமத்துவம் கொண்டுவர பணியாற்றும் உயர் மற்றும் இடைநிலை சாதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

`நிகரி' ஆசிரியர்களின் நிகரற்ற பணிக்கு பாராட்டுகள்!

பூசான் திரைப்பட விழாவில் திரையிடப்படும் `மாடத்தி'

தென்கொரியாவிலுள்ள பூசான் நகரில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் லீனா மணிமேகலையின் `மாடத்தி' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று ஒரு சாரார் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், `பார்த்தாலே தீட்டு' என்று ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் `புதிரை வண்ணார்' சமூகம் குறித்த படமே மாடத்தி. “மதாராஸ் மாகாணத்தின் திருநெல்வேலிப் பகுதியில் கண்ணால் பார்க்க தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட ஒரு சாதியினர் இருக் கிறார்கள். அவர்கள் பகலில் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. அவர் களைக் கண்டாலே தீட்டாகி விடுமாம்” என்ற அண்ணல் அம்பேத்கரின் வரிகள்தாம் படத்தின் உயிர்நாடி.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

இந்தப் புதிரை வண்ணார் சமூகத்தில் பிறந்து வளர்ந்து பதின்பருவக் காதலில் விழுந்த பெண் ஒருத்தியின் கதையே மாடத்தி என்று சொல்லும் இயக்குநர் லீனா, “நாம் தொழும் அம்மன்கள் நம்மிடையே வாழ்ந்தவர்கள்; நமது கதைகளை நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் அடங்காத ஆன்மாக்கள். அநீதி இழைக்கப்பட்ட ஒரு வண்ணாத்திப் பெண்ணின் ஆன்மா சொல்லும் கதையாகப் படைக்கப்பட்டிருக்கிறது மாடத்தி” என்று விளக்குகிறார்.

வாழ்த்துகள், லீனா!

அவள் செய்திகள்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மும்பையின் மலத் பகுதியிலுள்ள வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு ஒன்றில் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. சமீபத்தில் இங்கு இஸ்லாமிய சிறுவர்களுடன் விளையாடப்போவதில்லை என்று இந்து சிறுவர்கள் சொல்ல, அவர்களை அழைத்து சமரசம் செய்துவைத்தனர் அப்பார்ட்மென்ட்டின் அம்மாக்கள். குழந்தைகளை ஒன்றிணைத்துக் கூட்டம் நடத்தி ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துச் சொன்னார்கள். அடுத்த சில நாள்களில் விநாயக சதுர்த்தியை இந்துக் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர் இஸ்லாமியக் குழந்தைகள். `தேசம் ஒன்றுதான்' என்பதை தாங்கள் நிலைநிறுத்தவே ஆசைப்படுவதாக இந்தப் பெண்கள் கூறியுள்ளனர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை மரங்களும் செடிகளும் நட்டு, குட்டிக்காடாக மாற்றி யிருக்கிறார்கள் அங்கு பணியாற்றுபவர்கள். சானிடரி இன்ஸ்பெக்டராக அங்கு பணியாற்றும் மதியழகன், “நாற்றத்தைக் குறைக்க உதவும் பூச மரங்களை பஞ்சாயத்து நட்டுத் தந்தது. பின் பணியிடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, குப்பையில் கிடைத்த டயர்கள், செருப்பு மற்றும் ஷூக்கள், வாஷ் பேசின்கள் போன்றவற்றில் செடிகள் நட்டு வளர்க்கத் தொடங்கினோம்” என்கிறார். இப்போது மாதுளை, எலுமிச்சை, கொய்யா, வெண்டைக்காய், தக்காளி, பாகற்காய் எனக் காய்கறிகளும் பழங்களும் தரு கிறது இந்த குப்பைமேடு!

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மும்பையைச் சேர்ந்த சயூரி டல்வி, இதுவரை 95 ‘ஹாஃப் மாரத்தான்’ ஓட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தன் குழந்தையுடன் தனியே வசித்துவரும் சயூரி, எடையைக் குறைப்பதற்காக ஓடத் தொடங்கி, இத்தனை ஓட்டங்களை முடித்து ஸ்லிம்மாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். “நான் நல்லதோர் இடத்தில் இருக்கிறேன். மகனை கவனித்துக்கொள்கிறேன். தன்னிறைவு பெற்றிருக்கிறேன்” என்று சொல்கிறார் சயூரி.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கமதாபாத்திலுள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மாணவியான 22 வயது இளம் பெண் அஷ்வதி சதீசன், பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு கை நடுங்குபவர்கள் பயன்படுத்தும் வகையில் `ஃப்ளியோ' என்ற பேனாவை வடிவமைத்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புக்கு சர்வதேச ஜேம்ஸ் டைசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன் கண்டுபிடிப்பை ஆய்வுகள் மூலம் இன்னும் மேம்படுத்தலாம் என்றும் அஷ்வதி தெரிவித்துள்ளார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

.நா சபையின் காலநிலை செயல்பாடு உச்சி மாநாட்டுக்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 சிறுவர் சிறுமியர் பூமியைப் பாதுகாக்க தங்கள் கோரிக்கைகளை அனுப்பியுள்ளனர். அதில் ஹரிதுவார் நகரில் வசிக்கும் 11 வயது சிறுமியான ரிதிமா பாண்டேயும் ஒருவர். ஒவ்வோர் ஆண்டும் உலகவெப்பமயமாதல் காரணமாக பூமி அதிக வெப்பம்கொள்வதால் நீர்நிலைகள் வற்றுகின்றன; கங்கை போன்ற நதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. எனவே, சுற்றுச்சூழல் மாசை சரிசெய்யத் தவறும் நாடுகள்மீது கடும் கண்டனங்களைப் பதிவுசெய்வதோடு, அவற்றின் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ரிதிமா.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

விவாகரத்தான பின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தால் வேலைக்குச் செல்ல இயலாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கட்டாயம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி-யில் பணியாற்றி வைப்பு நிதியில் மாதம் 32,000 ரூபாய் சேமிக்கும் முன்னாள் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு பெண் ஒருவர் வழக்கு தொடர... மனைவி, குழந்தைகளைக் கவனிக்க வேலைக்குச் செல்ல முடியாததால், அவருக்கு மாதம் 15,000 ரூபாய் ஜீவனாம்சத்தைக் கணவர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். மனைவியின் ஃப்ளாட்டில் வரும் வாடகை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism