Published:Updated:

கற்றுக்கொண்டது கால்வலிக்காக... திரும்பிப் பார்க்கிறது உலகமே! - யோகா குடும்பம்

அசத்தல் குடும்பம்..

பிரீமியம் ஸ்டோரி
லைக்குடிசை வீடு. அதில் அடுக்கிவைக்க முடியாத அளவுக்கு ஷீல்டுகள், மெடல்கள் குவிந்துகிடக்கின்றன. அனைத்தும் கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என எல்லோருமாக வாங்கிக் குவித்தவை எனும்போது... ஆச்சர்யம் பொங்குகிறது நமக்கு!

திருவாரூர் மாவட்டம், புலிவலம் அருகே யுள்ள வில்வனம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கீட்டு ஆய்வாளராகப் பணிபுரிகிறார். மனைவி கஸ்தூரி. 9-ம் வகுப்புப் படிக்கும் மூத்த மகள் தர்ஷினி, 7-ம் வகுப்புப் படிக்கும் இளைய மகள் ஹரிணி, 3-ம் வகுப்புப் படிக்கும் மகன் ரித்தீஷ் அனைவருக்குமே யோகா கலை மீது கொள்ளை ஆர்வம். இதில் இவர்கள் படைத்த சாதனைக்காகக் கிடைத்த விருதுகள்தாம் ஓலைக்குடிசை வீடு முழுக்க நிறைந்துகிடக்கின்றன. ஊரே, `யோகா குடும்பம்' என்றே போற்றுகிறது!

தர்ஷினி, ஹரிணி
தர்ஷினி, ஹரிணி

சிறுவயது முதல் விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம்கொண்ட கண்ணன், மாரத்தான் ஓட்டப் பந்தயங்களில் தேசிய அளவில் பரிசுகளைப் பெற்றவர். மனைவி கஸ்தூரி, கபடி போட்டியில் மாநில அளவில் பரிசுகளை வென்றவர்.

`யோகா குடும்பம்' என்று பெயரெடுத்தது எப்படி என்பது பற்றி பேசிய கண்ணன், “ஓட்டப்பந்தயப் பயிற்சி எடுத்தபோது இடதுகால் முட்டியில் வலி ஏற்பட்டு, நடக்கமுடியாமல் இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டேன். தொடர்ந்து பல இடங்களில் வைத்தியம் செய்தும் வலி தீரவில்லை. கடைசியாக, பிஸியோதெரபிஸ்டிடம் சிகிச்சைக்குச் சென்றபோது, பத்து யோகாசனங்கள் சொல்லிக்கொடுத்தார். தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்ததில் கால்வலி முழுவதும் நீங்கி குணமடைந்த போதுதான் யோகாவின் அருமையை உணர்ந்தேன். அதனால், மனைவி மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் யோகாவைக் கற்றுத்தர வேண்டும் என்று முடிவெடுத்தேன். நாங்கள் ஐவரும் திருவாரூரிலிருக்கும் யோகா மாஸ்டர் சண்முகத்திடம் முறையாக யோகாசனம் கற்றுக்கொண்டோம். முதலில் மாவட்ட அளவில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு அனைவருமே வெற்றி பெற்றோம். இது, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தினமும் காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் என விடாமல் யோகா செய்கிறோம். உலக அளவில் புகழ்பெற்ற பி.கே.எஸ்.அய்யங்கார் எழுதிய `லைட் ஆன் யோகா’ புத்தகத்தில் உள்ள யோகங்களைப் பின்பற்றுகிறோம். எங்கள் குழந்தைகள் மிகவும் கடினமான 50 ஆசனங்கள் உட்பட 500 விதமான ஆசனங்களைக் கற்றுள்ளார்கள்” என்று சொல்லும்போதே முகத்தில் பெருமிதம் மேலிடுகிறது.

மூத்த மகள் தர்ஷினி, தேசிய அளவில் 11 பதக்கங்கள், சர்வதேச அளவில் மூன்று பதக்கங்கள் உட்பட 110 பதக்கங்களைப் பெற்று பலரையும் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதோடு, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் இரண்டாவது இடம், 2018-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 14 வயதுக்கான உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் என்று பிரமிக்கவைக்கிறார்.

தர்ஷினி, ஹரிணி
தர்ஷினி, ஹரிணி

இளையமகள் ஹரிணியும் சளைத்தவளல்லள்... தேசிய அளவில் ஐந்து பதக்கங்கள், சர்வதேச அளவில் ஒரு பதக்கம் என 62 பதக்கங்கள் பெற்று அசத்தி யுள்ளார். இருவருமே சேர்ந்து ‘இளைய யோகா ரத்னா ‘பட்டமும் பெற்றிருப்பது சிறப்பு. மகன், ரித்தீஷ் தேசிய அளவில் நான்கு பதக்கங்கள் உட்பட 20 பதக்கங்கள் பெற்றுள்ளார். கூடவே குழந்தைகள் மூவரும் படிப்பிலும் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணன் தன் பங்குக்குத் தேசிய அளவில் ஒரு பதக்கம், சர்வதேச அளவில் ஒரு பதக்கம் உட்பட 10 பதக்கங்கள் பெற்றிருக்கிறார். கஸ்தூரி, தேசிய அளவில் ஒரு பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்.

ரித்தீஷ்
ரித்தீஷ்

“வருங்காலத்தில் தர்ஷினி, ஹரிணி, ரித்தீஷ் மூவரையும் குஜராத்தில் உள்ள யோகா பல்கலைக்கழகத்தில் யோகா மருத்துவப் பட்டம் பெறவைப்பதும், உலகம் முழுவதும் யோகாவை பரவச் செய்வதுமே எங்கள் நோக்கம்” என்று சொல்லும் இந்தத் தம்பதிக்கு, இந்தச் சாதனைகளை நிகழ்த்துவதற்கு போதுமான பொருளாதாரம் இல்லை என்பதுதான் பெருங்கவலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கற்றுக்கொண்டது கால்வலிக்காக... திரும்பிப் பார்க்கிறது உலகமே! - யோகா குடும்பம்

“கணவரின் குறைந்த வருமானத்தைக் கொண்டுதான் ஐந்து பேரும் பல மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்கிறோம். சீனாவில் நடைபெற்ற போட்டிக்குச் செல்ல எங்கள் மகள்கள் படிக்கும் ஜி.ஆர்.எம்.பெண்கள் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் கமலசுந்தரி மேடமும், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனமும் 1.5 லட்சம் ரூபாய் நிதி தந்து உதவினார்கள். அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிக்கு இந்திய அளவில் தர்ஷினி தகுதி பெற்றும், பணம் இல்லாததால் போக முடியவில்லை. தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமைத் தேடித் தர தயாராக இருக்கிறோம். அதற்கு மத்திய - மாநில அரசுகள் உதவிட வேண்டும்” என்று வேண்டுகோள்வைக்கிறார் கஸ்தூரி.

`யோகாவை உலகுக்கே அறிமுகம் செய்தது இந்தியாதான்' என்று சொல்லி, யோகா தினம் உட்பட பல்வேறு வழிகளில் யோகாவை உயர்த்திப்பிடிக்கும் இந்திய அரசு, யோகா மூலமாக இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கத் தயாராக இருக்கும் இந்த `யோகா குடும்ப'த்தின் பக்கம் கொஞ்சம் கவனத்தைத் திருப்பலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு