Published:Updated:

ஒவ்வொரு செடியும் மழலையே! - யோகலட்சுமி

யோகலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
யோகலட்சுமி

என் இல்லம் பசுமை இல்லம்

ஒவ்வொரு செடியும் மழலையே! - யோகலட்சுமி

என் இல்லம் பசுமை இல்லம்

Published:Updated:
யோகலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
யோகலட்சுமி
"வீட்டுல ஒரு தோட்டம் இருந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறதோடு, மனசு எப்போதும் ரிலாக்ஸா இருக்கும். மண்வாசனை நிறைஞ்சிருக்கும் இந்த இடத்துக்கு வந்துட்டா கவலையெல்லாம் காணாமல் போயிரும்” - மாடி முழுவதும் பசேலென்று பரவியிருக்கும் தன்னுடைய செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் யோகலட்சுமி.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பழங்கள், காய்கறிகள், பூக்கள், மூலிகைகள் என 350-க்கும் மேற்பட்ட தொட்டிகளுடன் சென்னை, கோவிலம்பாக்கத்தில் ஏழு வருடங்களாகத் தன் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். “நான் ஹோம் மேக்கர். என்னோட ஆசைக்காக முல்லை, அரளி, ரோஜானு சில பூச்செடிகளோட ஆரம்பிச்ச தோட்டம் இது. ஒவ்வொரு செடியிலும் பூ பூத்திருப்பதைப் பார்க்கும்போது, இன்னும் நிறைய செடி வளர்க்கணும்னு எண்ணம் வந்தது. அப்படி ஒவ்வொரு செடியாக அதிகரிச்சு, இன்னிக்கு இந்த இடம் தோட்டமா உருவாகியிருக்கு.

செடியை ஆசையா வளர்க்கிறவங்களுக்கு செடியும் குழந்தை மாதிரிதான். உண்மையில் செடிகள் நம்மோட உணர்வுகளை நல்லாவே புரிஞ்சுக்கிடும். எங்களோட செடிகளுக்கு காய்கறிக் கழிவுகள், மண்புழு உரங்கள்னு இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்துறோம். காய்கறிகள் செழிச்சு வளர்வதோடு, சுவையாகவும் இருக்கும்.

யோகலட்சுமி
யோகலட்சுமி

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, உரம் வைக்கிறதுன்னு ஒரு நாளைக்கு 2 மணிநேரம் செலவழிக்கிறேன். ஒரு மாசத்துக்கு 30 கிலோ காய்கறிகள் கிடைக்கின்றன. எங்களோட தேவை போக மீதியிருக்கும் காய்கறிகளை நண்பர்கள் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பிடுவேன். காய்கறிகளோட சுவையைப் பார்த்துட்டு இப்போ என் தோழிகளும் தோட்டம் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க.

தொட்டி தயார் செய்யும் முறை

ஒரு தொட்டி என்பது 25 சதவிகிதம் தென்னங்கழிவு, 25 சதவிகிதம் சாணம், 25 சதவிகிதம் மண்புழு உரம், பயோ பூஸ்டர்கள் சிறிது என நிரப்ப வேண்டும். இவையெல்லாம் இப்போது நர்சரிகளில் கிடைக்கின்றன. இதை வீட்டிலேயே நாம் தயாரித்துக் கொள்ளலாம். பூச்சி அரிப்பைத் தடுக்க வேப்ப எண்ணெய் அல்லது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கலவையைத் தண்ணீரில் கலந்து 15 நாள்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம். பூச்சி பாதித்த இலைகளை அகற்றுவது, பழுத்த இலைகளை அப்புறப்படுத்துவது எனத் தொடர்ந்து கவனித்துவந்தாலே செடிகள் செழுமையாக இருக்கும்.

சீசனுக்கு பெஸ்ட்

ஆடி மாசத்தில் நிறைய பேர் விதைகள் நடவு செய்வாங்க. இந்த மாசத்தில் புடலை, பாகல், பீர்க்கை, அவரை, வெண்டை, கத்திரின்னு எல்லா காய்கறிகளையும் நடவு செய்யலாம்” என்றவர் தன் தோட்டத்தில் செழிப்பாக வளர்ந்திருக்கும் புடலைச் செடிகளுக்கு உரமிட்டுக்கொண்டே புடலங்காய், கீரை உள்ளிட்டவற்றைப் பயிரிடுவது பற்றி பாடமாகவே விவரித்தார்.

கொடி போன்று படரக்கூடிய செடிகள் வளர்க்க அகலமான பை அல்லது தொட்டிகளைத் தேர்வு செய்வது அவசியம். புடலையில் நீள புடலை, குட்டை புடலைனு ரெண்டு வகை இருக்கு. அதிக உயரத்துக்குப் பந்தல் அமைப்பவர்கள் நீள புடலையையும், குறைந்த உயரத்தில் பந்தல் அமைப்பவர்கள் குட்டை புடலையையும் வளர்க்கலாம்.

ஒவ்வொரு செடியும் மழலையே! - யோகலட்சுமி

செடி வளர்க்கப்போகும் தொட்டியில் தென்னங்கழிவு, மண்புழு உரம், செம்மண் ஆகியவற்றை 2:3:1 என்ற விகிதத்தில் மண்கலவையை நிரப்புங்கள். நடுவிரல் அளவுக்குக் குழிதோண்டி புடலை விதைகளை விதையுங்கள். ஒரு தொட்டிக்கு அதிகப்பட்சம் இரண்டு விதைகளை விதைக்கலாம். 12 நாள்களில் செடி துளிர்விட ஆரம்பிக்கும். செடி துளிர்விட ஆரம்பிக்கும் நேரத்தில் தண்ணீரை காலை, மாலை இரண்டு வேளையும் ஸ்பிரே செய்வது அவசியம். 10 நாள்களுக்கு ஒருமுறை செடிக்கு மண்புழு உரம், காய்கறிக் கழிவுகள் என ஏதேனும் ஓர் இயற்கை உரம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

செடியிலிருந்து சுருள் சுருளாகக் கொடி படர ஆரம்பிக்கும்போது, புடலைக் கொடியை பந்தலில் ஏற்றிவிட வேண்டும். கொடியின் நுனிப்பகுதியை கத்தரித்துவிட்டால், நிறைய கிளைகள் துளிர்ப்பதோடு, காய்களும் நிறைய காய்க்கும். 50-ம் நாளில் செடியில் பூக்கத் தொடங்கும். ஒரு செடியில் ஆண் பூ, பெண் பூ என இரண்டு வகையான பூக்களும் இருக்கும். பூவின் நுனிப்பகுதியில் காய்கள் துளிர்விட்டு இருப்பது பெண் பூ. ஆண் பூக்கள் சில நாள்களில் செடியில் இருந்து உதிர்ந்துவிடும். பூக்கள் கொட்டுகிறதே எனக் கவலைகொள்ளத் தேவையில்லை. பெண் பூக்களும் உதிரும்பட்சத்தில் உரம் வைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

செடியில் பூக்கும் நேரத்தில், 10 மில்லி பஞ்சகவ்யாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின்மீது ஸ்பிரே செய்யுங்கள் அல்லது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றும் சம அளவில் எடுத்து தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். 75-வது நாளில் காய்கள் காய்க்கத் தொடங்கி விடும். காய்கள் செழித்து வந்ததும் அறுவடை செய்து கொள்ளலாம். ஒருமுறை துளிர்த்த செடியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு காய்கள் அறுவடை செய்ய முடியும்.

நன்கு விளைந்து காயைச் செடியிலேயே முற்றவிட்டு அதில் இருக்கும் விதைகளை எடுத்துக் காயவைத்து சாம்பலில் கலந்து வைத்தால் அடுத்த விளைச்சலுக்குத் தாய் விதையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆரோக்கியத்துக்குக் கீரை

குறைந்த அளவுதான் இடம் இருக்கிறது என்பவர்கள் வீடுகளில் கீரைச் செடிகளை வளர்க்கலாம். பழைய குடம், பானை, தொட்டி போன்றவற்றில் மண்புழு உரம், தென்னங்கழிவு, செம்மண் கலந்து ஒரு கைப்படி அளவுக்குக் கீரை விதைகளை தூவிவிடவும். விதை களுக்கு மேலே ஒரு கைப்பிடி மண்ணை நிரப்பி விதைகளை மூடி விடவும்.

உதாரணமாக, பாலக்கீரை விதைக் கிறீர்கள் எனில் 10 நாள்களில் கீரை துளிர்விட ஆரம்பிக்கும். கீரை செழித்து வரும்போது அதன் நுனிப்பகுதிகளை கத்தரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இலைகள் துளிர்க்கத் துளிர்க்க தேவைப்படும்போது கத்தரித்துக்கொள்ளலாம். ஒருமுறை நடவு செய்த பாலக்கீரை விதையிலிருந்து குறைந்தது நான்கு மாதங்களுக்கு மேலாகப் பயன்பெற முடியும்.

ஒவ்வொரு செடியும் மழலையே! - யோகலட்சுமி

இலைகள் துளிர்ப்பது குறைந்ததும், இறுதி முறை செடியில் இருக்கும் இலைகளையும் வேரையும் வெட்டியெடுத்து அதைப் புதைத்துவைத்து சிறிது மண்புழு உரம் கலந்து வைத்துவிட்டால் அடுத்த முறை மண் கலவையில் கலக்க இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

வீட்டிலேயே உரம் தயாரித்தல்

வீட்டிலேயே உரம் தயாரிக்க விரும்புபவர்கள் மூடியுடன்கூடிய உயரமான கேன் அல்லது வாளியைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் அடிப்பகுதியில் துளையிட்டு தண்ணீர் குழாய் ஒன்றை பொருத்திக்கொள்ளுங்கள். தொட்டியில் முதலில் காய்ந்த தென்னை நார், பழுத்த இலை, காய்கறிக் கழிவுகள் என்பதை இரண்டு அடுக்குகளாக நிரப்பி அதன்மீது மண், சாணம், புளித்த மோர் இடலாம். தொட்டி முழுவதையும் இதே முறையில் நிரப்பி மூடி வைத்துவிடவும். சில மாதங்களுக்குப் பிறகு இலைகள், காய்கறிகள் மக்கி உரமாக மாறியிருக்கும். இதை நம்முடைய தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள குழாயின் மூலம் காய்கள் மக்கும் தண்ணீரைப் பிடித்து அவ்வப்போது செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

எண்ணெய்க் கரைசல்

வேப்ப எண்ணெய், கடலை எண்ணெய், புங்கை எண்ணெய் மூன்றிலும் தலா 50 மில்லி எடுத்து ஒன்றாகக் கலக்கவும். இத்துடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுசுற்றிக்கொள்ளவும். இத்துடன் 2 லிட்டர் தண்ணீர் கலந்து தினமும் காலையில் செடிகளின் மீது ஸ்பிரே செய்ய, பூச்சிவெட்டு தாக்குதலிலிருந்து செடியைப் பாதுகாக்கலாம்.

டிப்ஸ்

காய்கறி தோட்டம் அமைப்பவர்கள் உங்கள் தோட்டத்தில் பூச்செடிகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். அப்போதுதான் எளிதாக மகரந்தச் சேர்க்கை நடைபெற்று காய்கறிகளில் விளைச்சல் நன்றாக இருக்கும். காய்கறி கழிவிலிருந்து உரம் தயாரிப்பவர்கள் காய்கறிகளுடன் எலுமிச்சை, ஆரஞ்சு, குழம்புக்குக் கரைத்த புளி போன்றவற்றை சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்க்கும்பட்சத்தில், உரம் தயாரித்தலில் நொதித்தல் நடைபெறாமல் போக வாய்ப்புண்டு.