லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அவள் பதில்கள் 63: ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பிஸ்கட் தரலாமா?

குடல் புழுக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
குடல் புழுக்கள்

- சாஹா

குடல் புழுக்கள் ஏற்பட என்ன காரணம்... அவற்றுக்கு மாத்திரைகள் எடுக்க வேண்டியது அவசியமா?

- சி.கயல்விழி, சேலம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுமருத்துவர் பாபு நாராயணன்.

குடல்புழுக்கள் வருவதற்கான காரணம், சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள்தான். இந்தப் புழுக்கள் எப்படிப் பரவும் என்று தெரிந்துகொள்வது அவசியம். குடல்புழுக்கள் உள்ள ஒருவரது மலம் வழியே அது மற்றவர்களுக்குப் பரவும். திறந்தவெளிகளில் மலம் கழிக்கும்போது, அது அங்குள்ள மண்ணிலும் தண்ணீரிலும் கலந்தும், அங்கே பயிரிடப்படும் காய்கறிகள் வழியேவும் போய், மற்றவர்களுக்கும் பரவக் கூடும்.

குடல் புழுக்கள்
குடல் புழுக்கள்

எனவே காய்கறிகளை சமைப்பதற்கு முன் முறையாகச் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். குழந்தைகள் மணலில் விளையாடிவிட்டு வரும்போது உடனடியாக கை கால்களைக் கழுவச் சொல்லிக் கற்றுக்கொடுக்க வேண்டும். விளையாடிவிட்டு கைகளை வாயில் வைப்பதன் மூலமும் இத்தகைய குடல்புழுக்களின் முட்டைகள் பரவலாம். அவை உடலுக்குள் சென்றதும் புழுக்களாக மாறும். இன்றைய அவசர யுகத்தில் பலரும் அடிக்கடி வெளியிடங்களில் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படிச் சாப்பிடும் இடங்கள் எந்த அளவுக்கு சுகாதாரமானவை என்பது தெரியாது. அந்தச் சுத்தத்தை உறுதிசெய்துகொண்டு சாப்பிடுவது பாதுகாப்பானது.

குடல்புழுக்களை நீக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியமானதுதான். ஆனால், பொதுவாக ரத்தச்சோகையுடன் வருபவர்களுக்கும், அரிப்புடன் வருபவர்களுக்கும் அதன் பின்னணியில் குடல்புழுக்கள் இருக்குமோ என யோசித்து மருத்துவர்கள் மருந்துகளைக் கொடுப்பார்கள். நவீன மருத்துவத்தைப் பொறுத்தவரை குடல்புழுவுக்கான சிகிச்சை என்பது ஒரே ஒரு மாத்திரை தான். உங்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில், இரவு உணவுக்குப் பிறகு ஒரே ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டால் போதுமானதாக இருக்கும். ஆறு மாதங்களுக் கொரு முறை இப்படி எடுத்துக்கொள்ளலாம்.

பாபு நாராயணன், லேகா ஸ்ரீதரன்
பாபு நாராயணன், லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கு ஒரு வயது வரை பிஸ்கட்டோ, இனிப்புகளோ கொடுக்கக்கூடாது என்கிறார்களே... அது உண்மையா?

- இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு, பால், பிஸ்கட் போன்றவற்றை கண்டிப் பாகக் கொடுக்கவே கூடாது. பிஸ்கட்டில் சர்க்கரை, உப்பு, பால் என அனைத்தும் இருப்பதால் இவற்றைக் கொடுக்கக்கூடாது. பிஸ்கட் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சேர்மான பொருள்களை செக் செய்து பார்த்தால், அதில் ரீஃபைண்டு ஃப்ளார் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியும். சுத்திகரிக்கப்பட்ட மாவில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். நார்ச்சத்து குறைவான உணவுகளைச் சாப்பிடும்போது குழந்தையின் செரிமான இயக்கம் சிக்கலாகிறது. மலச்சிக்கல் வரலாம்.

குழந்தை
குழந்தை

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் உள்ள இயற்கையான உப்புச்சத்தே போதுமானது. பிஸ்கட்டில் உள்ள சோடியமும் டிரான்ஸ்ஃபேட்டும் குழந்தையின் உடலுக்கு ஏற்றவையல்ல. பிஸ்கட் தயாரிப்பில் கலவை யைக் கூழாக்கப் பயன்படுத்தப்படும் ‘எமல்சிஃபையர்’ (Emulsifier), குழந்தையின் குடல் இயக்கத்தை பாதிப்பதால் செரிமானம் தடைப்படும். குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். இனிப்புத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற வெள்ளைச் சர்க்கரையில் எந்தச் சத்தும் கிடையாது. வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கும். எனவே இனிப்புகள் சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் உடல்பருமன், பற்சிதைவு போன்ற பிரச்னைகள் வரலாம்.

குழந்தைகளின் வயிற்றின் கொள்ளளவு மிகச் சிறியது என்பதால் அந்தக் குறைந்த உணவு சத்தானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைப் பருவத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்துவது, பிற்காலத்திலும் அவர்களது ஆரோக்கியத்தை உறுதிசெய்ய அடித்தளமாக அமையும்.

உடல், மனநலம், உறவுகள், படிப்பு, வேலை என வழக்கமான ஏரியாக்கள் மட்டுமன்றி, யாரிடம் கேட்பது எனத் தயங்க வைக்கிற விஷயங்களுக்கும் தீர்வுகள் தரக் காத்திருக்கிறது அவள் விகடன். கேட்க நினைப்பதைத் தயங்காமல் கேளுங்கள்... அந்தந்தத் துறை நிபுணர்களிடமிருந்து பதில்கள் பெற்றுத் தரக் காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகளை

`அவள் பதில்கள்', அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002 என்ற முகவரிக்கோ,

avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கவும்.