Published:Updated:

வீடு என்ன குப்பைக் கிடங்கா... ஒரு பெரிய மாற்றத்துக்கு நீங்கள் தயாரா? | மினிமலிசம் - 16

வீடு

வீடு என்பது ஃபர்னிச்சர்களும் அலங்காரப் பொருள்களும் மேஜை நாற்காலிகளும் இன்ன பிற பொருள்களும் வைக்கப்படுவதற்கான குடோன் அல்ல. வீடு என்பது வீடு. அது மனிதர்களுக்கானது. மனிதர்களின் அன்பும் அறிவும் அழகும் பிரகாசிக்க வேண்டிய ஒரு தலம்.

Published:Updated:

வீடு என்ன குப்பைக் கிடங்கா... ஒரு பெரிய மாற்றத்துக்கு நீங்கள் தயாரா? | மினிமலிசம் - 16

வீடு என்பது ஃபர்னிச்சர்களும் அலங்காரப் பொருள்களும் மேஜை நாற்காலிகளும் இன்ன பிற பொருள்களும் வைக்கப்படுவதற்கான குடோன் அல்ல. வீடு என்பது வீடு. அது மனிதர்களுக்கானது. மனிதர்களின் அன்பும் அறிவும் அழகும் பிரகாசிக்க வேண்டிய ஒரு தலம்.

வீடு

நம் மக்கள் பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் தங்கள் வீடுகளிலேயே வாழ்கிறார்கள். அதனால் நம் வீடுகளில் நிறைய நிறைய பொருள்கள் இருப்பது இயல்பு. இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வீட்டில் தங்கியிருக்கும் எவரும் மொத்த உடைமைகளையும் மறு பரிசீலனை செய்து, அந்தப் பொருள்களில் பெருமளவை அகற்றுவது அவசியம். இந்தச் செயல்பாடு வீட்டின் அழகுக்கும் அமைதிக்கும் துணைபுரியும்.

இயல்பாகவே மனித மனம் எதையும் தூக்கிப்போட விரும்பாது. அதனாலேயே தேவையற்ற பொருள்களையும் விஷயங்களையும் வீட்டின் அனைத்து அறைகளிலும், நம் மூளையிலுள்ள மன அறையிலும் பூட்டு போட்டு பத்திரப்படுத்தி வைக்கிறோம். முதலில் வீட்டை ஒழுங்குபடுத்துவோம். அதுவே மன அறையைச் சுத்தப்படுத்தும் சூழலை உங்களுக்கு உருவாக்கித் தரும்.

Clean House
Clean House
pixabay

பல நேரங்களில் மக்கள் ஒரு பொருளைப் பார்த்து, `ஆஹா, நான் இதை விரும்புகிறேன்’ என்று செல்கிறார்கள். பின்னர் அவர்கள் அதற்கு ஓர் இடத்தை ஏற்கெனவே வைத்திருப்பதற்கு மாறாக ஓர் இடத்தையே உருவாக்குகிறார்கள். `அட... அங்கு இன்னும் கொஞ்சம் இடம் இருக்கிறதே... அதனால் என்ன? இன்னும் பொருள்களை வாங்கி அறையை நிறைப்போம்’ என நினைக்கிறார்கள்.

இப்படிச் செய்வதை நிறுத்த வேண்டிய தருணம் இது... நீங்கள் 100% விரும்பாத எதையும் அகற்ற, மினிமலிஸ்ட்டுகள் உங்களுக்கு தெளிவான அழைப்பு ஒன்றை விடுக்கிறார்கள்! நிறைய பொருள்கள் என்றால் நிறைய குழப்பம், இன்னும் நிறைய ஒழுங்கீனம். இப்படியிருப்பது ஒருகட்டத்தில் அன்றாடச் செயல்கள் பலவற்றை பாதிக்கும். அதன் பிறகுதான் `வீட்டைக் கொஞ்சம் சுத்தம் செய்யலாமோ’ என்று நாம் யோசிக்கத் தொடங்குவோம்.

வீடு என்பது ஃபர்னிச்சர்களும் அலங்காரப் பொருள்களும் மேஜை நாற்காலிகளும் இன்ன பிற பொருள்களும் வைக்கப்படுவதற் கான குடோன் அல்ல. வீடு என்பது வீடு. அது மனிதர்களுக்கானது. மனிதர்களின் அன்பும் அறிவும் அழகும் பிரகாசிக்க வேண்டிய ஒரு தலம். அது குப்பைக் கிடங்கு போல பாவிக்கப்படலாமா?

நாம் கால்களையும் கைகளையும் விசாலமாகப் பயன்படுத்தும் வகையில் வீட்டில் இடம் இருக்க வேண்டும். ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குச் செல்வது இயல்பானதாக, எளிதானாக இருக்க வேண்டும். ஏனெனில், பொருள்கள் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெட்டிக் கடை அல்லவே!

சுத்தமான வீடு
சுத்தமான வீடு

வீட்டினுள் நாம் நடக்கும் இடத்தின் பரிமாணங்களை உறுதிசெய்து, அதை மனத்தில் கொண்டே எந்த மரச்சாமான்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். இடத்தின் பரிமாணங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள உங்கள் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு நம் வீட்டின் மாடித் திட்டத்தை உருவாக்கலாம். அதனால் தேவையற்ற பெரிய பொருள்களை வைத்திருக்க வேண்டுமா அல்லது நன்கொடையாக வழங்கவோ, விற்கவோ வேண்டுமா என்பதை நீங்கள் துல்லியமாகத் தீர்மானிக்க முடியும்.

பெரிய பொருள்கள் மட்டுமல்ல... சிறிய பொருள்களுக்கும் இதே அவசிய விதி பொருந்தும். `சின்னதுதானே இருந்துட்டுப் போகட்டுமே’ என நினைப்பது நிச்சயம் பலன் தருமா என மீண்டும் ஒருமுறை யோசித்துக்கொள்ளுங்கள். பொருள்களின் எண்ணிக்கையைக் குறைத்து, கணிசமான அளவு உடைமைகளை கைவிட்டுவிட வேண்டும். இந்தச் செயல்முறை வலிமிகுந்த, உணர்ச்சிமிகுந்த ஒன்றாகவே இருக்கக்கூடும்.

இதற்கான எளிய வழிமுறை...

1. வீட்டிலுள்ள பொருள்களை ஒரு குவியலாகப் பாருங்கள்.

2. அவசியமானவற்றை மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.

3. சில பொருள்களை தானம் செய்யுங்கள்.

4. சில பொருள்களை மறுசுழற்சி செய்யுங்கள் | விற்பனை செய்யுங்கள்.

5. சில பொருள்களைத் தயங்காமல் தூக்கி எறியுங்கள்.

இந்தச் செயல்பாட்டுக்குப் பிறகு வீட்டில் மிகச் சிறிய குவியல் மட்டுமே இருக்க வேண்டும்.

தேவையற்ற பொருள்
தேவையற்ற பொருள்

வீட்டில் ஒவ்வொருவரும் எதையேனும் பல பொருள்களைப் பரிசாகப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், யாரோ ஒருவரிடமிருந்து கிடைத்த பரிசு என்பதால், `அடடா, நான் இதை வைத்திருக்க வேண்டுமே’ என்று குற்ற உணர்வின் காரணமாக நினைக்கிறார்கள்... அது எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை என்று தெரிந்தாலும்கூட! எவ்வளவு காலம் அதைப் பத்திரப்படுத்த முடியும் என யோசியுங்கள்... விடை கிடைத்துவிடும்.

ஆகவே, அதை ஒரு புகைப்படம் எடுத்து டிஜிட்டலாகப் பத்திரப்படுத்திவிட்டு விடை கொடுத்துவிடுங்கள்.

பி.கு: சென்டிமென்ட்டான விஷயம் என்பதால் எல்லா பொருள்களுக்கும் இந்த விதி பொருந்தாது!

நீங்கள் உண்மையில் பார்க்காத, பயன்படுத்தாத நிறைய குப்பை எங்கே இருக்கிறது தெரியுமா? அலமாரி மற்றும் வார்ட்ரோபில்தான். அங்கிருந்து தொடங்கலாமே! ஆம்... உங்களுக்கு அதில் பல பொருள்கள் / விஷயங்கள் தேவைப்பட வாய்ப்பில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிதான். ஆனால், நீங்கள் அதைச் செய்துவிட்டால் ஒரு பெரிய சாதனைதான்!

இழுப்பறைகள் மற்றும் ஹால் அலமாரிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு நல்ல விதி 20/20 விதியாகும். அதாவது... ஒருவேளை அதன் விலை ரூபாய் 20-க்கும் குறைவாக இருந்தாலோ, அதை மாற்றுவதற்கு 20 நிமிடங்கள்தான் ஆகும் என்றால், அதைத் தயங்காமல் அகற்றவும்.

• இதே போல சமையலறை மற்றும் பிற அறைகளிலுள்ள தேவையற்ற பொருள்கள், தேவைக்கதிகமான மற்றும் பழைய காலணிகள் ஆகியவையும் அகற்றப்பட வேண்டியவைதான். ஏனெனில், அந்தக் காலணிகள் எல்லாம் உங்களுக்குத் தேவையில்லை என்பது உங்களுக்கே தெரியும். தேவையற்ற பொருள்களை அகற்றுவதற்கு இதுதான் நேரம்.

நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தாத இடங்களில் தொடங்குவது விரைவான வெற்றியை அளிக்கும். ஏனென்றால், அங்கே நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பொருள்கள் உங்களுக்குத் தேவைப்படாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உண்மையில் நீங்கள் பல ஆண்டுகளாக அவற்றைப் பார்க்கவில்லை. அதை இன்னமும் பத்திரப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை!

வீடு என்ன குப்பைக் கிடங்கா... ஒரு பெரிய மாற்றத்துக்கு நீங்கள் தயாரா? | மினிமலிசம் - 16

நீங்கள் ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை, இந்த மகத்தான பணியில் ஈடுபட வேண்டும். அப்போது தேவையற்றதை அகற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அப்போது உங்களால் நிர்வகிக்க முடிந்ததைச் செய்யுங்கள். நீங்கள் முடிவெடுத்த பிறகு மீண்டும் வெளியே செல்லும் பெட்டிகளைப் பாவமாகப் பார்க்க வேண்டாம்!