லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

மாதவிடாய்... விடுப்பு கேட்பது பலவீனமல்ல...!

மாதவிடாய் விடுப்பு கேட்பது பலவீனமல்ல...!
பிரீமியம் ஸ்டோரி
News
மாதவிடாய் விடுப்பு கேட்பது பலவீனமல்ல...!

நைட் டியூட்டிதான் பார்க்குறேன். திடீர்னு வயிறுவலிக்கும்போதே புரிஞ்சுடும்... வந்துருச் சுனு. பக்கத்துல ஏதாவது ஹோட்டல் இருக்கானு பாப்போம். இருந்தா தப்பிச்சோம்.

மாதவிடாய் என்பது உயிரியல் செயல் பாடு. ஆனால், சமூகம் மாதவிடாய் கால வலிகளைப் புரிந்துகொள்ளாமல் தீட்டு என்று பெண்களை ஒதுக்குகிறது. இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகின்றனர். மாதவிடாயின்போது வலிகளுடன் வேலை பார்ப்பது பெண் களுக்குச் சவாலானது. அந்த நாள்களில் பெண்கள், தங்களின் உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். விகடன் குழுமம் உள்ளிட்ட வெகுசில நிறுவனங்கள் மட்டுமே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அறிவித்திருக்கும் நிலையில், அனைத்து துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் அந்தச் சலுகை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வருகிறது. மாதவிடாய் நாள்களில் பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் கேட்டறிந்தோம்.

``பாத்ரூம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டாங்க!'' - வீட்டு வேலை செய்பவர்

“வாரத்துல எல்லா நாளும் வேலை செய்யணும், ஞாயிற்றுக்கிழமைகூட லீவு எடுக்க முடியாது. என்னிக்காவது நல்லது கெட்டதுனு லீவு எடுத்தா ஒரு நாள் சம்பளம் போயிரும். இதுல மாத விடாய்க்கெல்லாம் லீவு எடுக்க முடியுமா... அந்த நாள்கள்ல நாலு வீட்டுல வேலை செஞ்சிட்டு என் வீட்டுலயும் வேலை செய்யணும். வேலைக்குப் போற வீடுகள்ல பாத்ரூம் பயன்படுத்தவிட மாட்டாங்க. நாப்கின்கூட மாத்த முடியாது. அசௌகர்யமா இருந்தாலும் அதோடவே வேலை பாத்துட்டு பக்கத்துல ஹோட்டல், பேங்க், ஆஸ்பத்திரி இருந்தா, அங்கேபோய் நாப்கின் மாத்திப்போம்.’’

மாதவிடாய் விடுப்பு கேட்பது பலவீனமல்ல...!
மாதவிடாய் விடுப்பு கேட்பது பலவீனமல்ல...!

``நாப்கின் மாத்த இடம் தேடி அலையணும்!'' - தூய்மைப் பணியாளர்

“நைட் டியூட்டிதான் பார்க்குறேன். திடீர்னு வயிறுவலிக்கும்போதே புரிஞ்சுடும்... வந்துருச்சுனு. பக்கத்துல ஏதாவது ஹோட்டல் இருக்கானு பாப்போம். இருந்தா தப்பிச்சோம். இல்லைனா சூப்பர்வைஸர்கிட்ட அனுமதி வாங்கிட்டு நாப்கின் மாத்த இடம் தேடி அலையணும். ஆனா, அதுக்கு அவர்கிட்ட வாங்கப்போற திட்டை நினைச்சாலே மனசு பதைக்கும். இடுப்பு வலிக்கும்போது, ரோட்டோரமாதான் கொஞ்ச நேரம் படுத்துருப்போம். சரி... வேற வேலைக்குப் போலாம்னா குப்பை அள்ளுறவங்களுக்கு யாரும் வேலை தர முன்வர்றதில்லையே.”

``அந்த டைம்ல டைட்டான யூனிஃபார்ம் போடற எரிச்சல் இருக்கே...'' - பெண் காவலர்

“அரசியல் தலைவருக்கு பந்தோபஸ்து போட்டா மணிக்கணக்குல நிக்கணும். மாதவிடாய்னு முன்னாடியே தெரிஞ்சிட்டா பிரச்னை இல்லை. லீவோ, பர்மிஷனோ வாங்கிக்கலாம். ஆனா திடீர்னு வந்தா செத் தோம். அந்த டைம்ல டைட்டான யூனிஃபார்ம் போடற எரிச்சல் இருக்கே... வார்த்தையால சொல்ல முடியாத அவஸ்தை அது.”

``நாப்கின் மாத்த முடியாமப் போனதுல அலர்ஜி வந்துருச்சு!'' -
லோகோ பைலட்


“இன்ஜின்ல ஏறும்போதும் இறங்கும் போதும் அதிகமா வலிக்கும். சுமார் அஞ்சு மணி நேரம் வரை டிராவல் பண்ணணும். பாத்ரூம் வசதி இல்லாததால யூரின் வந்தாலும், நாப்கின் மாத்தணும்னாலும் கஷ்டம்தான். கம்பார்ட்மென்டுக்கு போய்தான் பாத்ரூம் யூஸ் பண்ண முடியும். ஆனா, அதுக்கு நேரம் கிடைக்கணும்ல. ரொம்ப நேரம் ப்ளீடிங் அதிகமா இருந்து, நாப்கின் மாத்த முடியாமப் போனதுல எனக்கு அலர்ஜி வந்துருச்சு.’’

வ.கீதா
வ.கீதா

``அமைப்புசாரா தொழில்செய்யும் பெண்களுக்கு சாத்தியமா?'' - பெண்ணிய எழுத்தாளர் வ.கீதா

“பெண்ணுக்கு மாதவிடாய் விடு முறை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பெண் தொழிலாளர் களுக்கான சிறப்புக் கோரிக்கையை முன்வைக்கும்போது, அது பெண் களுக்கு எதிராகவே திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. பெண்களை வேலைக்கு எடுக்கவே நிறுவனங்கள் தயக்கம் காட்டலாம். மாதவிடாய் அவதி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும், அவரது உடல்வலியைப் பொறுத்து மாறுபடும். இத்தனை நாள்கள்தான் விடுப்பு என்று சட்டம் போட்டு வரையறுக்க முடியாது. அமைப்பு சாரா தொழில்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு சாத்தியமா என்பதை ஆராய வேண்டும். இதுவரை இயற்றப்பட்ட சட்டங்கள் எதுவும் அமைப்பு சாரா தொழில்களில் பெரும்பான்மையாக நடைமுறையில் இல்லாத போது மாதவிடாய் விடுப்பும் அமல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியே.’’

தனலட்சுமி
தனலட்சுமி

``இது பெண்களின் உரிமை!'' - அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தனலட்சுமி

“மாதவிடாய் விடுப்பும் மகப்பேறு விடுப்பும் பெண்களுக்கு வேண்டு மென்று கோரிக்கை முன் வைப்பதால் அவர்கள் பலவீன மானவர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது. மாதவிடாய் கால அவதிக்காக விடுப்பு எடுத்துக்கொள்வது பெண்களின் உரிமை. பணிச்சுமை காரணமாக பெண்கள் மாதவிடாய் நாள்களிலும் வலி நிவாரண மருந்துகள் எடுத்துக்கொண்டு பணியைத் தொடர்கிறார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கலாம். கான்ட்ராக்ட் முறையிலும், அமைப்பு சாரா தொழில்களில் உடலுழைப்பு செலுத்தும் பெண்களுக்கும் இந்த நாள்களில் விடுப்பு எடுத்தால் சம்பளத்தில் பிடிப்பார்கள். இதனால் பலரும் வேறு வழியின்றி வேலைக்குச் செல் கிறார்கள். இவர்களுக்கும் மாதவிடாய் விடு முறையை உறுதி செய்ய வேண்டும்.’’