சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“பீகாரிகளுக்கு உதவினோம்... எம் தமிழர்களுக்கு யார் உதவுவார்?”

“பீகாரிகளுக்கு உதவினோம்... எம் தமிழர்களுக்கு யார் உதவுவார்?”
பிரீமியம் ஸ்டோரி
News
“பீகாரிகளுக்கு உதவினோம்... எம் தமிழர்களுக்கு யார் உதவுவார்?”

உ.சகாயம் ஐ.ஏ.எஸ் (விருப்ப ஓய்வு)

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தமிழர்களால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதாக மூன்று மாதங்களுக்கு முன்பு வட இந்திய சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. இது பீகாரிலும் தமிழ்நாட்டிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உண்மையில் தமிழ்நாடு வெறுப்புகளின் விளைநிலமா? இந்தக் கேள்விக்கு விடையாக மே மாத நிகழ்வு ஒன்று என் நினைவுக்கு வருகிறது. 2009-க்குப் பின்னர் தமிழர்களின் வாழ்வியலில் மே மாதம் முக்கியமானதாகிவருகிறது. தமிழர்கள் தங்களின் வரலாற்று வழித்தடத்தில் கையறு நிலையில் கண்ணீரோடு கதறி நின்றதும் அம்மாதமே. அதையொட்டியும் இந்நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது.

2009, மே மாதம். நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியர். நாடாளுமன்றத் தேர்தல் பணி விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. மே 6, முன்னிரவு நேரம். கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, என் அலைபேசி ஒலிக்கிறது. எதிர்முனையில் நாமக்கல் வட்டாட்சியர். பதற்றத்தோடு, ‘வலையப்பட்டி அருகே தவிட்டு எண்ணெய் ஆலையில் தீ விபத்து' என்கிறார். ‘உடனே அந்த இடத்திற்கு விரைந்து, வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, தவறாது எனக்குத் தகவல் அளியுங்கள்' என்கிறேன். அவர் அரைமணி நேரத்தில் மீண்டும் பேசி, ‘ஆலை முழுவதும் அடங்காது அனல் பரவுகிறது' என்கிறார். விபத்தின் தீவிரம் அறிந்து கோட்டாட்சியரை அங்கே அனுப்பி வைக்கிறேன்.

சிறிது நேரத்தில் வட்டாட்சியரிடமிருந்து தகிக்கும் தகவல்... அணைக்க முடியாத அனல் பரவலில் பதினைந்துக்கும் மேல் பீகார் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டார்கள் என்று. விபத்தின் வீரியத்தை உணர்ந்த நான், தீயணைப்புத் துறையை முடுக்கிவிட்டு விபத்து இடத்திற்கு விரைகிறேன். ஆலையை நெருங்கியபோது, அது பெரும் நெருப்புக்கோளமாய் என் கண்முன்னே நிற்கிறது. அங்கே இருந்தவர்கள், ‘ஆலை நெருப்புக்குள் சிக்கியவர் நிலை என்னவோ' என என்னிடம் பதறுகிறார்கள். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அந்த அக்னி மாளிகையின் அடியே பொறுப்போடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆலையில் தீ நாக்கு மேலே படர, நெருப்புத் துண்டுகள் கீழே விழ, உள்ளே நுழைவதற்குக் கூட வழியின்றி வீரர்கள் வதைபட்டனர். பக்கவாட்டில் பாதை கண்டறியப்பட்டு அதனூடே நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் மீட்டு வந்தனர்.

விபத்தோ பெரியது... பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிறைய... இன்னும் மீட்புப் பணியை விரைவுபடுத்த விழைகிறேன். அப்போது அலுவலர்களெல்லாம் பதற்றத்தோடு நிற்க, தீயணைப்பு வீரர்கள் கருகிய தொழிலாளிகளை சிரமப்பட்டு வெளியே கொண்டு வருகிறார்கள். நான் எப்பொழுதுமே, துன்பப்படும் மனிதர்களின் துயரம் போக்க கைகொடுத்திடத் தயங்குவது இல்லை. அதிலுள்ள அபாயத்துக்கு அஞ்சுவதும் இல்லை. அந்நேரத்தில் நானும் தள்ளி நின்று வேற்று மனிதனாய் வேடிக்கை பார்க்காமல், அந்த உயிர்காக்கும் பணியில் உடன் இறங்க எண்ணுகிறேன்.

அதோடு என் எண்ண அலைகள் ஈழத்திற்குச் செல்கின்றன. அங்கே என் இன மக்கள் இதே நேரத்தில் இதைவிடக் கொடுமையான அபாயச் சூழலில் அபயக்குரல் எழுப்புவதாக என் செவிகளுக்குள் கேட்கிறது. ‘இந்த விபத்தில் சிக்கிக்கொண்ட பீகார் ஏழைத் தொழிலாளர்களும் ஒருவகையில் அவர்களைப் போன்றவர்களே. அவர்களைக் காப்பாற்ற வேண்டும்' என்ற உணர்வு என்னை உந்தித் தள்ளுகிறது.

என் பதவியையும், பாதுகாப்பையும் மறந்து நான் அந்தப் பக்கவாட்டுப் பாதை வழியே ஆலை உள்ளே நுழைகிறேன். கரிக்கட்டையாய் உயிருக்குப் போராடும் இருவரை மீட்கிறேன். தீயணைப்பு வீரர்களோடு சேர்ந்து அவர்களைப் படுக்கையில் வைத்துத் தூக்கிக்கொண்டு வெளியே வருகிறேன். அதன்பின் அங்கிருந்த அலுவலர்கள் ஆபத்து கருதி என்னை உள்ளே செல்ல வேண்டாமென்று தடுத்துவிட்டார்கள்.

“பீகாரிகளுக்கு உதவினோம்... எம் தமிழர்களுக்கு யார் உதவுவார்?”
“பீகாரிகளுக்கு உதவினோம்... எம் தமிழர்களுக்கு யார் உதவுவார்?”

உள்ளே சென்றது எனக்கு ஆபத்தானதுதான். எரிந்துகொண்டிருக்கும் கூரை, சட்டங்கள் விழுந்தால் நானும் தீயின் தீண்டலில் தீய்ந்திருப்பேன். இந்த அபாயம் தீயணைப்பு வீரர்களுக்கும் பொருந்தும். அதை எதிர்கொண்டே அவர்கள் கடமையாற்றுகிறார்கள். கலெக்டருக்கு அது மேற்பார்வைப் பணியே. இந்த அபாயத்தை ஒரு கலெக்டர் எதிர்கொள்ள வேண்டியது இல்லைதான். ஆனாலும் அந்த விபத்துத் தளத்திற்குள் நான் விரைந்து செயல்பட்டேன்.

பாதிக்கப்பட்ட 19 பேர் உடனே நாமக்கல் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிறந்த சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தும், 17 பேர் பரிதாபமாய் இறந்துபோனார்கள். மாண்டவர்களில் ஒருவரே தமிழர். மீதம் 16-ல் 14 பேர் பீகாரிகள். உடனடியாக இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்புகிறேன். பீகாரில் கிழக்கு சாம்பரான் மாவட்டத்திலுள்ள இறந்தோர் குடும்பத்தாருக்கும் அம்மாநில அரசுக்கும் தகவல் அனுப்புகிறேன். என் முயற்சியால் ஒரே வாரத்தில் பீகாரிலிருந்து சுதிரஞ்சன் என்ற அலுவலர் தலைமையில் இறந்தோரின் உறவினர்கள் நாமக்கல் வந்தடைந்தனர். வந்தவர்கள், இறந்தோரை இங்கேயே தகனம் செய்துவிட முடிவெடுத்தனர்.

இறந்துபோனவர்கள் இந்தப் பெருநாட்டின் ஒரு மூலையிலிருந்து எம் தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வந்த ஏழைகள். அவர்களுக்குக் கண்ணியத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்த எண்ணினேன். எனவே நாமக்கல் மக்களை ‘திரளாக வந்து அஞ்சலி செலுத்துங்கள்' என அன்போடு அழைத்தேன். என் அழைப்பை ஏற்று அரசியலாளர்கள் முதல் பொதுமக்கள் வரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். நாமக்கல் மருத்துவமனையில் இறந்தோருக்கு மலரஞ்சலி. பின்னர், இறுதி ஊர்வலம் நாமக்கல் வீதிகளில் நடக்கத் தொடங்கியது. அதில் உறவுக்காரர்களைப் போல அந்த ஊர்க்காரர்கள் உணர்வுபூர்வமாய் கனத்த இதயத்தோடு கலந்துகொண்டனர்.

நகராட்சி மயானத்தில் அவர்களின் மறை நம்பிக்கைக்கு ஒப்ப சடங்குகள் செய்து எரிந்துபோனவர்களை மீண்டும் எரியூட்டினோம். ஒரே நேரத்தில் 16 பேரைத் தகனம் செய்தது எல்லோர் மனதையும் கலங்கச் செய்தது. நாமக்கல், பீகாரிகளைப் பிரித்துப் பார்க்காமல் நம்மக்களென அன்று அஞ்சலி செலுத்தி அன்பைக் காட்டியது. மானுட வரலாற்றில் தனக்கான பெருமையையும் கூட்டியது. 3 நாள் அந்த உறவினர்களைத் தங்க வைத்து உணவளித்தோம். ஒவ்வொருவருக்கும் பணம் அளித்தோம். சொந்த ஊர் செல்ல டிக்கெட் எடுத்து, ரயில் பயணத்தில் பசியாற உணவைக்கூட கையில் கட்டிக் கொடுத்துக் கரிசனம் காட்டினோம். தமிழர்களின் கருணை அதுவே.

அதோடு, இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க தமிழ்நாடு அரசுக்குக் கருத்துரு அனுப்பினேன். ‘அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் நிவாரணம் அளிக்க முடியாது’ எனத் தலைமைச் செயலகத்தில் கருத்துருவை நிராகரித்தார்கள். ஆனாலும் நான் விடவில்லை. அவர்கள் இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நம் தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வந்த ஏழைகள். அந்த ஏழைகளுக்கு சாதி, மத, மொழி அடையாளம் இல்லை. பாதிப்பும் பரிதவிப்பும்தான் அடையாளம். எனவே அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதே நீதி என வலிமையாய் வாதிட்டேன். எனது வாதத்தை ஏற்ற அரசு ஒவ்வொருவருக்கும் அன்று ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்தது. அதை பீகாருக்கு அனுப்பி அந்தக் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர் என்ற செய்தி அறிந்தே நான் நிம்மதி அடைந்தேன்.

பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக அந்த ஆலை செயல்படத் தடை விதித்தேன். இது தொடர்பான அரசியல் குறுக்கீடுகளை உறுதியாக நிராகரித்தேன். அது வேறு கதை..!

இதே 2009 மே மாதக் காலகட்டம், பூமிப்பந்தில் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது. ஈழத்தில் நம்மக்கள் ஒரு பேரழிவை, 21-ம் நூற்றாண்டில் எந்த இனமும் சந்திக்காத, திட்டமிடப்பட்ட கொடூரமான ஒரு இனப்படுகொலையைச் சந்தித்தனர். குழந்தைகளும் பெண்களும் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளால் குதறப்பட்டார்கள். அப்போது தமிழ்நாடு கண்ணீர் வடித்தது. இந்த மாபெரும் மனிதப் பேரவலத்தைக் கண்ட நான் தமிழனாய், மனிதனாய் மனம் உடைந்து போயிருந்த காலம்.

அதே காலத்தில்தான் இந்த நெருப்பு விபத்தும். இங்கே நடந்தது எதிர்பாராத தீ விபத்து. ஆனால், ஈழத்தில் நம் மக்களின் பேரழிவு திட்டமிடப்பட்டது. வல்லரசுகளும், வல்லரசுக் கனவிலிருந்த நாடுகளும் அந்த மனசாட்சியற்ற மனிதவேட்டைக்குத் துணையாய் நின்றன. அன்று எரிந்துகொண்டிருந்த அந்த ஆலைக்குள் சென்றபோதும், கருகிக்கொண்டிருந்தவர்களைக் கையால் தொட்டபோதும், இதேபோல் கூப்பிடும் தூரத்தில் அந்தக் குட்டித் தீவில் குதறப்பட்ட எம்மக்களைக் காப்பாற்ற ஆள் இல்லையே என்று குமுறினேன்.

விபத்து அது, பாதிக்கப்பட்டோர் வேறு மாநிலத்தவர். ஆனாலும், ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்தேன். இறந்தோர் உறவுகளுக்கு நிவாரணம் பெற்றளித்தேன். ஆனால், அதே காலத்தில் ஈழத்தில் கொடூரமான இனப்படுகொலைக்கு ஆளான எம்மக்களுக்கு இன்றுவரை நீதி கிட்டியதா? இல்லையே!

பாதிக்கப்பட்டவர் எவ்வினத்தவர் ஆனாலும் தமிழர்களாகிய நாம் அவர்களின் கண்ணீர் துடைக்கிறோம், காக்க முனைகிறோம். ஆனால், மனித உரிமை மாண்பு பேசும் பன்னாட்டுச் சமூகம், ஈழத்தில் கொன்றழிக்கப்பட்ட எம்மக்களுக்கு எப்போது நீதியளிக்கப்போகிறது? நந்திக் கடலோரம் எம்மக்கள் சிந்திய ரத்த நினைவுகளை அடைகாப்போம்! எம்மக்களுக்கு நீதி கிடைக்க அயராது குரல் கொடுப்போம்!