திங்கட்கிழமைகளைக் குறித்து பலரும் மனவருத்தம் தெரிவிப்பதுண்டு. வாரத்தின் முதல் நாளில் தன்னைத்தானே உந்தி, எழுந்து அதே சுழலும் வேலைக்குச் செல்வதில்தான் எவ்வளவு சிரமம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா… வெள்ளிக்கிழமைகள் குறித்தும் இதே மனோபாவத்தை வேலை செய்பவர்கள் வைத்திருக்கிறார்களாம்.

சமீபத்தில் ஆன்லைன் சேவைகளை வழங்கி வரும் `லிங்க்டுஇன்’ (LinkedIn) ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் இந்தியாவில் பணிபுரியும் 18 வயதுக்கு மேலான 1,001 ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் மூலம் வெளியிடப்பட்ட தகவல்கள்...
* இனி வாரத்தின் புதிய வெள்ளிக்கிழமை, `வியாழன்’ தான். இந்த ஆய்வில் பங்கேற்ற 79 சதவிகிதத்தினர், அலுவலகத்திற்குச் செல்ல இறுதி விருப்ப நாளாக வெள்ளிக்கிழமையைத் தேர்வு செய்கின்றனர். திங்கட்கிழமைகளை வேலை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவதாகவும், பயனுள்ள நாளாகவும் கருதுகின்றனர்.
* 50 சதவிகிதத்தினர் தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வெள்ளிக்கிழமைகளைக் கழிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் நிலுவையில் உள்ள தங்களது வேலையை முடித்துவிட்டு, வார இறுதியை முன்கூட்டியே கொண்டாட விரும்புகின்றனர்.
* இருக்கும் வேலையைவிட வேறொரு நல்ல வேலை சரியான நேரத்தில் கிடைக்கையில், தங்களின் மேலாளர்கள் பணியிடத்தை விட்டு வெளியேறுவதை (Loud leaving), இந்தியாவில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள், அதாவது 60 சதவிகிதத்தினர் எதிர்கொண்டிருக்கின்றனர்.
* ஒருவர் பணிபுரியும் இருக்கையைவிட்டு மற்றொரு சக பணியாளரது இருக்கைக்குச் சென்று அலுவலக வேலைகள் குறித்தோ அல்லது சாதாரணமாகவோ பேசுவதை `டெஸ்க்பாம்பிங்’ (Deskbombing) என்று அழைக்கின்றனர். 62 சதவிகிதத்தினர் சிறந்த உரையாடல்களுக்கு டெஸ்க்பாம்பிங் வழிவகை செய்வதாக அறிவித்துள்ளனர்.

Also Read
* தாங்கள் தொலைதூரத்தில் வேலை செய்கையில், அலுவலக நண்பர்களுடனான தேநீர் இடைவேளை பிணைப்பைத் தவறவிடுவதாக முக்கால்வாசி பேர் தெரிவித்துள்ளனர்.
* அறிக்கையில் கூறப்பட்ட மற்றொரு டிரெண்ட் `மாங்க் மோட்’ (Monk Mode). இதில் ஊழியர்கள் பல வேலைகளைச் செய்வதற்குப் பதிலாக ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டும் மேற்கொள்கின்றனர். வேலையில் கவனம் செலுத்துவதற்காக மீட்டிங் ரூமுக்குள் சென்றுவிடுவது அல்லது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அனைத்தும் இதில் அடங்கும்.