காந்தியிடமிருந்து பெற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! - எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன்

#Motivation
உப்புக்கு அதிக வரி விதித்த பிரிட்டிஷ் அரசை எதிர்த்து தண்டி, வேதாரண்யத்தை நோக்கிய உப்புச் சத்தியாகிரகம், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அடிக்கோடிட்டுச் சொல்லத்தக்கது. அப்போராட்ட வரலாற்றை ‘மண்ணில் உப்பான வர்கள்’ நூலாக எழுதியுள்ளார் சித்ரா பால சுப்ரமணியன். ஆல் இந்தியா ரேடியோ மற்றும் பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாள ராக உள்ள இவர், காந்தி மற்றும் காந்தியர்கள் குறித்த பதிவுகளைத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
“பொதிகை தொலைக்காட்சியில் 2019-ம் ஆண்டு, காந்தியின் 150-வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்தபோது, அதற்காகக் காந்தியை ஆழமாக வாசித்தேன். காந்திய சிந்தனை, காந்தியின் மேற்கோள்கள், நூல்கள் பற்றி, பொதிகையில் தொடராக அந்த நிகழ்ச்சி வெளியானது. அதுவரை காந்தி குறித்த மேலோட்டமான வாசிப்பு மட்டுமே இருந்த எனக்கு, பணி நிமித்தமாக அவரை ஆழ்ந்து வாசிக்க ஆரம்பித்தபோது அவரது செயல்பாட்டின் மகத்துவம் மற்றும் அவரது சிந்தனைகளின் இன்றைய தேவை குறித்து உணர முடிந்தது. பிறகு, தொடர்ச்சியாகக் காந்தியம் தொடர்பான வாசிப்பிலும் எழுத்திலும் இறங்கினேன்” என்று சொல்லும் சித்ரா, காந்தியம் குறித்து உரைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
“தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் இயங்கி வரும் ‘காந்தி கல்வி நிலைய’த்தில், பாவண்ணன் எழுதிய `சத்தியத்தின் ஆட்சி’, ராமச்சந்திர குஹா எழுதிய ‘நுகர்வெனும் பெரும்பசி’ ஆகிய காந்தியத்தை அடியொற்றிய நூல்கள் மற்றும் காந்தியின் கடிதங்கள் குறித்து உரை யாற்றினேன். காந்தியின் உரைகள் மொத்தம் 20 தொகுதிகளாக வெளி வந்துள்ளன. இந்திய மொழி களிலேயே காந்தியின் உரைகள் தீண்டாமை, கல்வி, பொருளாதாரம் போன்ற தலைப்புகள் வாரியாக முதலில் தொகுக்கப்பட்டது தமிழ் மொழியில்தான்’’ என்று சொல்லும் சித்ரா, காந்தியால் தாக்கம் பெற்ற 14 ஆளுமை களை பொதிகை தொலைக் காட்சியின் ‘மாமனிதர் மகாத்மா’ தொடருக்காக நேர்காணல் செய்திருக்கிறார்.
“அதற்காக ஜெகந்நாதன் - கிருஷ்ணம்மாள் தம்பதி, எழுத்தாளர்கள் அ.மார்க்ஸ், அரவிந்தன் கண்ணையன், வாசுதேவன், தியடோர் பாஸ் கரன், எஸ்.ராமகிருஷ்ணன், பி.ஏ.கிருஷ்ணன், நரசய்யா மருத்துவர் வெ.ஜீவானந்தம், மற்றும் பல பத்திரிகை யாளர்களிடமும் காந்தியம் குறித்த நேர்காணலை மேற் கொண்டேன். குறிப்பாக, காந்தியை விமர்சிக்கக்கூடிய தளத்திலிருந்தும் நேர்காணல் புரிய வேண்டும் என்பதற்காக, பெரியார், அம்பேத்கரை வழி தொடரும் தொல்.திருமா வளவனிடம் மேற்கொண்ட நேர் காணல் முக்கியமானது’’ என்கிறார்.
கொரோனா பொதுமுடக்கத்துக் குப் பிறகு, இணைய வழி கூட்டங்கள் மூலம் காந்திய சிந்தனை உரைகளை தொடர்ச்சியாக நிகழ்த்தி வரும் சித்ரா, அவ்வாறு மதுரை, சேலம் என மாநிலம் முழுக்கவும், அமீரகம் வரையிலும் காந்தியை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். உப்பின் மீதான வரியை எதிர்த்த காந்தியின் தண்டி யாத்திரை குறித்து பல்வேறு தரவுகளைக் கொண்டு முகநூலில் இரண்டு மாதங்கள் தொடர் கட்டுரை களை எழுதினார் சித்ரா. தண்டி, வேதாரண்யம் மட்டுமன்றி உப்புச் சத்தியாகிரகம் வேறு எங்கெல்லாம் நடந்தது, யார் யாரெல்லாம் முக்கியப் பங்காற்றினார்கள், அதில் பெண் களின் பங்களிப்பு குறித்தெல்லாம் விவரிக்கும் அந்தக் கட்டுரைகளே, ‘மண்ணில் உப்பானவர்கள்’ என்கிற தலைப்பில் நூலாகியுள்ளது.
‘`காந்தியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அவர் தவறுகளைத் தாண்டியும் மனிதர் களை நேசித்தவர். பெண் விடுதலை யைப் பற்றிப் பேசுகிறவர்கள் பெரும் பாலும் காந்தியை எடுத்துக்கொள்வ தில்லை. அவரை பழமைவாதியாகத் தான் பார்க்கிறார்கள். ஆனால், காந்தியின் சிந்தனைகள் எப்போதும் நவீனமானவையாகத்தான் இருந் திருக்கின்றன. கல்விக்காக லண்டன், வழக்கறிஞர் பணிக்காகத் தென்னாப் பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த காந்தி, நிறைய பெண்களைச் சந்திக்கிறார். பெண் என்பவள் வீட்டைச் சார்ந்துதான் இருக்க வேண்டும் என்கிற கருத்தை அவர் மறுக்கிறார். ‘எத்தனையோ கிறிஸ் துவப் பெண்கள் தங்கள் நாட்டை விட்டு வந்து ஊழியம் செய்கிறார்கள். அதைப்போல பெண்கள் தங்களது கனவைத் தேடி எங்கு வேண்டு மானாலும் செல்லலாம்’ என்கிறார். பெண்கள் குழுவாக இணைந்து வேலை செய்ய முடியாது என்று அன்றைக்குப் பரவலாக இருந்த கருத்தையும் காந்தி மறுக்கிறார். வீட்டு வேலைகள் பெண்ணுக் கானது மட்டுமல்ல, ஆண் பெண் இருவருக்கும் அதில் சரிசம பங்கு இருக்கிறது என்கிறார். உப்புச் சத்தியாகிரகத்தில் நாடு முழுவதும் பெண்கள் கலந்து கொண்டு சிறையை நிரப்பியிருக்கிறார்கள். உலக வரலாற் றிலேயே காந்தி அளவுக்கு யாரும் பெண்களை போராட்டக்களத்துக்குக் கொண்டு வரவில்லை.
மேலும், காந்தியப் பெண்கள் பூரண விடுதலையோடு இருந்துள்ளனர். ருக்மணி லட்சுமிபதி, சௌந்திரம் ராமச்சந்திரன், துர்கா பாய் தேஷ்முக், கமலாதேவி சட்டோ பாத்தியாய், அம்புஜம் அம்மாள் போன்றோர் மது விலக்குக்காகத் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள். காந்தியத்தின் வழிவந்த அவர்கள் ஓர் ஆளுமையாக உருவெடுத்தனர்” என்றவர் தற்போது இரண்டு நூல்களை எழுதிவருகிறார்.
‘`சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியுமான கோபிசெட்டிப் பாளையம் லட்சுமண அய்யர் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பெண் காந்தியர்கள் குறித்து ‘காந்தி எனும் பெண்’ என்ற முகநூல் தொடரை எழுதி வருகிறேன். எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் வாழ்ந்த காந்தி, `மனதள வில் எளிமையாகவும் உண்மையாக வும் இருந்தாலே வாழ்க்கை இலகுவாக இருக்கும்' என்கிறார். இதுபோன்று காந்தியிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அது பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும்’’ என்று சொல்லும் சித்ரா அதற்கான களப்பணியில் முனைப் புடன் செயலாற்றி வருகிறார்.
பணிகள் தொடரட்டும்!