Published:Updated:

11 வயதில் 70 உலக சாதனை; `இளம் யோகா டீச்சர்' பட்டம்; யோகாவில் கலக்கும் சிறுமி பிரிஷா!

சாதனைச் சிறுமி பிரிஷா
சாதனைச் சிறுமி பிரிஷா

யோகா மீதுள்ள ஆர்வம் காரணமாக இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார் சிறுமி பிரிஷா. ஏழாம் வகுப்புப் படிக்கும் இந்தச் சிறுமியின் தற்போதைய சாதனைகளின் எண்ணிக்கை 70.

நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் - தேவி பிரியா தம்பதியின் மகள் பிரிஷா. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வருகிறார். பிரிஷாவின் பாட்டி மற்றும் அம்மா யோகா செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள். அதனால் ஒரு வயதிலேயே அவர்களிடம் இருந்து யோகா கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளார் பிரிஷா.

யோகா சாதனையாளர் பிரிஷா
யோகா சாதனையாளர் பிரிஷா
யோகாதான் என் மூச்சுக்காத்து! - 300 வகையில் அசத்தும் ஆர்த்தி

இளம் வயதிலேயே யோகா கற்றுக்கொண்ட சிறுமி பிரிஷா அதில் பல்வேறு சாதனைகளைப் படைக்கத் தொடங்கினார். கண்ட பேருண்டாசனத்தை ஒரு நிமிடத்தில் 16 முறை செய்தது, சுப்த பத்மாசனம் மற்றும் கும்த பத்மாசனத்தை தண்ணீரில் நீச்சல் அடித்தபடியே செய்வது என யோகாசனம் மற்றும் நீச்சலில் ஏற்கெனவே 41 உலக சாதனைகளை பிரிஷா படைத்துள்ளார்.

இந்நிலையில், கண்களைக் கட்டிக்கொண்டு ஒரே நாளில் 29 புதிய சாதனைகளை அவர் படைத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து செயல்படும் `எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்' சாதனைகளுக்காக, அவர் பொதுமக்கள் மற்றும் சாதனைகளை மதிப்பீடு செய்யும் பார்வையாளர்கள் முன்னிலையில் யோகாசனங்களை நிகழ்த்திக் காட்டினார்.

யோகா செய்தபடி சாதனை படைக்கும் சிறுமி
யோகா செய்தபடி சாதனை படைக்கும் சிறுமி
விதையான அம்மா... விருட்சமான மகள்! - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா

கண்களைக் கட்டிக்கொண்டு கபோடா ஆசனத்தில் அதிவேகமாக ரூபிக்ஸ் க்யூபை சரி செய்வது, வாமதேவ ஆசனம் மற்றும் விபரீத கண்ட பேருண்ட ஆசனத்தில் கண்களைக் கட்டியபடி பிரைன்விட்டாவை வேகமாக சரிசெய்வது, கண்களைக் கட்டியபடி ஸ்கேட்டிங் சென்றபடியே பந்தை தரையில் தட்டியபடி செல்வது, கண்களைக் கட்டியபடி நான்கு வழிச் சாலையில் ஒரு கையால் சைக்கிள் ஓட்டுவது என 29 சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்.

இளம் யோகா டீச்சர்!

சாதனைகள் குறித்து சிறுமி பிரிஷா கூறுகையில், ``எனக்கு கராத்தே, டான்ஸ், டிராயிங் எனப் பல விஷயங்களில் ஆர்வம் இருந்தபோதிலும் யோகா மீது ஈடுபாடு அதிகம் வந்துச்சு. அதுக்கு எங்கமாவும் பாட்டியும் தான் காரணம். அவங்க கொடுத்த ஊக்கத்தால் இதுவரை 70 சாதனைகளை செஞ்சிருக்கேன்.

அம்மாவைப் பார்த்து யோகா கத்துக்கிட்டேன். எனக்குத் தெரிஞ்ச யோகாவை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க விரும்புறேன்.
பிரிஷா, யோகா சாதனையாளர்

நான் கற்றுக்கொண்ட யோகாசனத்தை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கணும்னு ஆசை. அதனால் யோகா தொடர்பான புத்தகம் எழுதினேன். அதை அங்கீகரிச்ச மத்திய அரசு, `இளம் யோகா டீச்சர்’னு பட்டம் கொடுத்திருக்காங்க.

கொரோனா காலத்தில் யோகா செய்வது உடலுக்கு ரொம்பவே நல்லது. அதனால் கடந்த ரெண்டு வருஷமா ஆன்லைன் மூலம் யோகா வகுப்பு எடுத்துட்டிருக்கேன். நிறைய பேர் அதில் சேர்ந்து யோகா கத்துக்கிட்டாங்க. பள்ளி, கல்லூரி, முதியோர் இல்லம், காவல்துறையினர், என்.சி.சி மாணவர்கள் எனப் பலருக்கும் யோகா வகுப்பு எடுத்திருக்கேன்.

யோகா செய்யும் சிறுமி
யோகா செய்யும் சிறுமி

ஒரு நாள் எங்கம்மா என்னை பார்வையற்றோர் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க இருந்த என் வயதுள்ள சிறுவர்களைப் பார்த்ததும் ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அதனால், பெற்றோர் உதவியோடு, எனக்கு ஸ்கூல் முடிஞ்சதும் பார்வையற்றோர் பள்ளிக்குப் போய் அவங்களுக்கு இலவசமா யோகா கற்றுக் கொடுத்தேன்.

நோய் தீர்க்கும் யோகாசனம்!

பார்வையற்றோர் பள்ளியில் என்னிடம் யோகா கற்றுக்கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற மாணவர் உலக சாதனை படைச்சார். நான் மட்டும் சாதனை படைக்காமல் என்னோடு சேர்ந்து மற்றவர்களும் சாதிப்பது பெருமையா இருக்கு.

கண்களைக் கட்டிக்கொண்டு சாதனை
கண்களைக் கட்டிக்கொண்டு சாதனை

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா ஆகிய நோய்களைத் தீர்க்கும் மருந்தாக யோகாசனம் இருக்கு. நோய் வருமுன் தடுப்பதற்கான ஆசனங்கள் என்ன, நோய் வந்த பிறகு செய்ய வேண்டிய ஆசனங்கள் என்ன என்பதை எல்லாம் என்னோட புத்தகத்தில் எழுதியிருக்கேன். அதைப் படிச்சுட்டு நிறைய பேர் போன் செஞ்சு பாராட்டும்போது மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார்.

பிரிஷாவின் தாய் தேவி பிரியா கூறுகையில், ``எனக்கு யோகா மீது ஆர்வம் அதிகம். நான் யோகாவில் எம்.எஸ்ஸி முடிச்சிருக்கேன். சிறு வயதிலேயே பிரிஷா யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டியதோடு, தான் கற்றதை பிறருக்குக் கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வம் காட்டுறார்.

சிறுமி பிரிஷா
சிறுமி பிரிஷா

இளம் வயதிலேயே நிறைய சாதனைகளைச் செய்திருப்பதால், பிரிஷாவுக்கு குளோபல் பல்கலைக்கழகம் `அதிக சாதனை புரிந்தவர்' என்ற பட்டம் கொடுத்திருக்கு. நியூ ஜெருசலம் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கு. அவள் விகடன் சார்பாக `லிட்டில் ஸ்டார்’ பட்டம் வழங்கப்பட்டிருக்கு. நிறைய சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் பிரிஷாவுக்கு நானும் என் கணவரும் ஒத்துழைப்புக் கொடுக்கிறோம்” என்றார் பெருமையுடன்.

11 வயதில் 70 உலக சாதனைகளைப் படைத்திருக்கும் சிறுமி பிரிஷாவை விகடன் சார்பாக வாழ்த்தினோம்!

அடுத்த கட்டுரைக்கு