Published:Updated:

இன்னா நாற்பது இனியவை நாற்பது

யோகா
பிரீமியம் ஸ்டோரி
யோகா

நலம் 10

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நலம் 10

Published:Updated:
யோகா
பிரீமியம் ஸ்டோரி
யோகா

ந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக ‘யோகா’ என்ற ஒற்றைச் சொல் உலகம் முழுக்க ஒலிக்கிறது. ‘உயிர் வளி ஆற்றல், வாதம் பித்தம் கபம், பாசிட்டிவ் நெகட்டிவ் எனர்ஜி’ என எதையும் ஏற்றுக்கொள்ளாத மேற்கத்திய விஞ்ஞானம் யோகக் கலையை மெள்ள மெள்ள உள்வாங்க ஆரம்பித்துவிட்டது. உலகின் எந்த வளர்ந்த நாடுகளுக்குப் போனாலும் யோகா வகுப்புகள் எடுக்கும் மருத்துவரோ பயிற்சிபெற்ற நிபுணரோ அடிக்கடி கண்ணில் தட்டுப்படுகின்றனர்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

நாற்பதுகளுக்கு ஞாபகசக்தி முதல் ஆண்மை சக்தி வரை, அதன் உயர்வுக்கென விதவிதமான யோகப் பயிற்சிகள் உலகின் மூலை முடுக்கெல்லாம் கற்றுத்தரப்படுகின்றன. நாற்பதுகள் நிரம்பி வழியும் மடங்களில் எல்லாம் யோகா தெரியாமல் மடாதிபதிகள் தங்கள் பரப்புரையை நகர்த்த முடியாது என்ற புரிதலில் எல்லா மடமும் யோகா கூட்டணியை பலமாய் வைத்துக்கொள்கின்றன. ‘யோகா செய்யலைன்னா இன்ஷூரன்ஸ் கிடையாது’ என அமெரிக்கா, கர்ப்பிணிகளை எச்சரிக்கிறது. இன்று யோகா துறையில் நடக்கும் நேர்த்தியான ஆய்வுகள், ‘யோகா வெற்று முழக்கமில்லை’ என்பதை ஆணித்தரமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டன. ‘சார்! முழங்காலை மடக்க முடியல... மூணு படி ஏறினால் மூச்சு வாங்குது... எனக்கு யோகா சரியா வருமா?’, ‘காவியும் சாமியும் யோகாவில் கட்டாயமா, எனக்கு அதில் மாறுபாடான நிலைப்பாடு உள்ளதே... என்ன செய்யலாம்’ என்போரின் கேள்விகளோடு இதைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போமே!

பல காலத்துக்குப் பிறகுதான் யோகா மதங்களோடு கைகோத்தது. சரியாகச் சொன்னால், வேத மறுப்பு இயக்கமாய்க் கிளைத்த சாங்கியத் தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டு, ‘உடல் மாயை இல்லை; உடல் உண்மை; அதை உறுதியாக்கித்தான் ஞான மார்க்கத்துக்குள் நுழைய இயலும்’ என்ற புரிதலோடு உருவானவைதான் யோகாசனப் பயிற்சிகள். இயற்கையை வழிபட்ட இயற்கையின் கூறுகளோடு தன்னைப் பொருத்திப்பார்த்து நலவாழ்வைப் புரிந்துகொள்ள முற்பட்ட நம் மூத்த குடியின் புரிதல்தான் யோகா. ‘அட்டாங்க யோகா’வோ ஆயிரக்கணக்கான ஆசனங்களோ, ஒரே நாளில் கட்டமைக்கப்பட்டவையோ ஒரே முனிவரின் கனவில் தோன்றியவையோ அல்ல.

‘எல்லா நோய்களுக்கும் துன்பங்களுக்கும் உனது கன்மமும் பிறப்பும் பிசாசும் சாபங்களும்தான் காரணம்’ என உலகின் பெருவாரியான கூட்டங்கள் வெகுகாலம் சொல்லிக்கொண்டு, ஆதிக்கம் செய்துகொண்டிருந்தபோது, ‘உன் உடல்நலத்துக்கு உன் செயலால், எண்ணத்தால், உணவால், சூழலால் நீ ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் காரணம்; பிறப்போ பிசாசோ காரணமில்லை’ என உரக்கச்சொன்ன கூட்டம்தான் யோகாவையும் புரிந்து கற்பிக்கத் தொடங்கியது. இன்றைக்கு உலகெங்கும் யோகாவைக் கொண்டு சென்றவர்களில் மகரிஷி மகேஷ் யோகி,

பி.கே.எஸ்.ஐயங்கார் போன்றோர் முக்கி யமானவர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யோகா என்பது ஞான மார்க்கத்திற்கான வழிநிலையாக வெகுகாலமாகப் பார்க்கப்பட்டுவந்தபோது, யோகாவை மனிதனின் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் பயன்படுத்த முடியும் என அவற்றை சாமானியனுக்குக் கற்றுக்கொடுக்க முறைப்படுத்திச் சொன்னவர் நம் ஊர் பத்தமடையிலிருந்து சென்ற சுவாமி சிவானந்தா அவர்கள். ரிஷிகேஷில் அவரிடம் பயிற்சி பெற்றவர்களே பீகாரி யோகா குருக்கள், பி.கே.எஸ். ஐயங்கார், மகேஷ் யோகி போன்றோர். அவர்களிடம் தொடங்கி இன்று யோகாவில் உலகெங்கும் கோலோச்சும் எல்லா நிறுவனங்களும் சிவானந்தா பட்டறையில் இருந்து பயிற்சிபெற்று வந்தவர்களே.

இன்னா நாற்பது இனியவை நாற்பது

‘ஆமை எப்படி மெல்ல மூச்சிழுக்கிறது? பாம்பின் மூச்சு ஏன் இப்படி உள்ளது? கடல் மீனும் காட்டின் வண்ணத்துப்பூச்சியும் தன் அசைவில் எப்படித் தன் உடல்நலத்தைத் தற்காத்துக்கொள்கின்றன?’ என உன்னிப்பாய்க் கவனித்து ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம். அப்படி இயற்கையை உற்றுக்கவனித்த நம் மூத்தகுடி, அதன் பின்னர் உலகைப் புரிந்து தத்துவங்களைப் படைத்திருக்கலாம். ஆப்பிள் விழுந்ததைப் புவியீர்ப்பு விசையாக நியூட்டன் யோசித்த மாதிரிதான், உடலின் இயக்கத்தில் இருந்த நீரையும் காற்றையும் பார்த்து, ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’ என நம் சித்தர்களும் யோசித்தனர். இரண்டும் அறிவியல் தத்துவங்களே. உடலின் அசைவுகளையும் மூச்சின் ஓட்டத்தையும் அப்படிக் கவனித்துத்தான் திருமூலரும் ‘காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளருக்குக் கூற்றை உதைக்கும் உரியதுவாமே’ எனும் அறிவியல் தத்துவத்தை இந்த உலகுக்கு அறிவித்திருக்கக்கூடும்.

நியூட்டனின் மூன்றாம் விதியை ஐந்தாம் வகுப்பிலேயே படிக்கும் நம்மவர்கள், திருமூலரின் மூன்றாம் தந்திரத்தையும் ஒன்பதாம் தந்திரத்தையும் நியூட்டனைப் படித்ததுபோல் அறிவியலாய்ப் பார்க்காமலும் படிக்காமலும் போனதுதான் மரபின் அறிவியலை நாம் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்ததற்குக் காரணம். நியூட்டன் அன்று தான் சார்ந்திருந்த மதத்தை, மத குருக்களை எதிர்த்து அறிவியல் கருத்துகளை ஆழமாக உலகத்துக்குப் பதிவிட்டார். ஆனால் நாம் நம் மூத்த குடியின் அறிவியல் கருத்துகளை மதங்களுக்குள் கோயில்களுக்குள் முடக்கிவைத்துவிட்டதுகூட நம் அறிவியல் இடைக்காலத்தில் முடங்கிப்போனதுக்கு முக்கிய காரணமாய் இருக்கலாம்.

ஆனால் இப்போதைய அறிவியல் உலகம் யோகாவை அலசித்தள்ளுகிறது. 10,660 நோயாளிகளிடம் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட 138 ஆய்வுகளில், புற்றுநோய் மருந்துகளோடு கூட்டு சிகிச்சையில் யோகப் பயிற்சிகளும் வழங்கப்பட்டதால் உடல்நலம், மனவுறுதி அதிகரித்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்தது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ஜர்னல் ஆஃப் டயாபடீஸ் ரிசர்ச்’ (Journal of Diabetes research) எனும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ இதழில், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் யோகாவின் பங்கு குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகள் குறித்த கட்டுரை மிக முக்கியமானது (www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4691612/ ). இந்தக் கட்டுரை உலகெங்கும் யோகாவில் நடைபெற்ற ஆய்வுகள் பலவற்றையும் தொகுத்து, அந்த ஆய்வுக் கட்டுரைகளின் போக்கு, நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ஒருமித்த முடிவுகள் என்னவென அலசி ஆராய்ந்து சொல்கிறது.

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா பல்கலைக்கழகமும் தேசிய மாற்று மருத்துவமுறை கவுன்சிலும் (NCCAM) இணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவாய், ‘யோகாவினால் சர்க்கரை நோயும் கட்டுப்படும்’ என்றும், ‘சர்க்கரைநோயினால் பின்னாளில் சிறுநீரக இதயப் பிரச்னைகள் வருவதும் கணிசமாய்த் தடுக்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யோகப் பயிற்சிகள் கணையத்தில் தொய்வடைந்த பீட்டா செல்களைத் தூண்டுவதும், இன்சுலின் பணியைச் சீராக்குவதும் மிகத்தெளிவாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘சீதளி பிராணாயாமம்’ எனும் மூச்சுப்பயிற்சி உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுவதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. ‘மரணம் தவிர்க்க இயலாதது; ஆனால், நம்மால் இன்னும் நீண்ட நாள்கள் வாழ முடியும்’ என்ற நம்பிக்கையில் மூச்சுக்கலையை நம் மூத்த இனம் மிகச்சிறப்பாகக் கையாண்டிருப்பது பல யோகா நூல்களில் நமக்குக் கிடைக்கும் செய்தி. ‘120 வயதெல்லாம் வேண்டாம். அதே வித்தையைப் பயன்படுத்தி, வயோதிகத்தில் செயல்வன்மை குறையும் சிறுநீரகத்தையும் கணையத்தையும் இதயத்தையும் சற்று சீராக்க முடியுமா?’ என நடத்தப்பட்ட ஆய்வுகளில், ‘சாத்தியம்’ எனத் தெரிய வந்திருக்கிறது. மேலும், இந்தப் பயிற்சிகள் உடலில் நடைபெறும் வயோதிக மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதையும் இப்போதைய யோகா ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தியானமும் யோகாசனப் பயிற்சிகளும் பிராணாயாமம் எனும் முயற்சியும் மூளையின் ஆழ்மனவோட்ட வேகத்தை எப்படி அமைதிப்படுத்தி (ஆல்ஃபாநிலை என்கிறார்கள்) மூளையின் செயல்திறனை இன்னும் மேம்படுத்துகின்றன எனப் பல நவீன ஆய்வுகளை நடத்தி, உலகே ஏற்கும் தரவுகளைக் கொணர்ந்திருக்கிறார்கள். ‘மொஸார்ட் இசையும், வாட்சன் கிர்ரிக் டி.என்.ஏ-வின் இரட்டைச் சுருளும் (Double helix), ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு (Theory of relativity) தத்துவமும், ராமானுஜரின் எண் கணித சூத்திரங்களும் இந்த ஆல்ஃபா நிலையில்தான் கண்டறியப்பட்டவை’ எனப் பல யோகா ஆசிரியர்கள் கூறுவர். ‘தியானம் மற்றும் பிராணாயாமத்தின் மூலம் ஒருவரால் இந்த ஆல்ஃபா அமைதி நிலையை அடைய முடியும்’ என்று இன்றைய நவீன அறிவியல் தரவுகளால் நிரூபிக்கின்றனர், இன்றைய நவீன யோகிகள்.

‘யோக நித்திரையின் நவீன வடிவமான IRT/QRT/DRT (Instant/Quick/Deep Relaxation Techniques) எனப்படும் ‘ரிலாக்ஸேஷன் டெக்னிக்’ எப்படித் தூக்கமின்மையை இயல்பாய்க் களைந்து நல்லுடலுக்குத் தேவையான, இரவில் மட்டுமே சுரக்கும் மெலட்டோனின் ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது’ என்றும் இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிக்கழக வழிகாட்டுதலில் நவீன யோகிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். நாள்பட்ட நுரையீரல் நோய்க்கும் ஆஸ்துமாவுக்கும் பிராணாயாமம் எப்படி நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது, புற்றுநோய் செல்களுக்கு எதிரான இயற்கையான நல்ல செல்கள் (Natural Killer Cells) கூடுதலாய் உற்பத்தியாவதற்கு தியானமும் யோகாசனங்களும் பிராணாயாமமும் எந்த வகையில் பணிபுரிகின்றன என்றெல்லாம் நவீன அறிவியலின் தரவுகளுடன் மிகத்துல்லியமாய் நிறுவப்பட்டுவிட்டன.

மொத்தத்தில் யோகா மிக முக்கியமான உடல்நலப் பயிற்சி. நாற்பதுகளுக்குள் நுழையும் ஒவ்வொருவரும் இதை முறையாகக் கற்று தினசரி 20 முதல் 45 நிமிடம் வரை தங்கள் நேர வசதிக்கேற்பப் பயன்படுத்துவது உடலையும் மனதையும் செம்மையாக வைத்திருக்க உதவும். மத்திய அரசின் ஆயுஷ் துறையும் பெங்களூரு யோகா பல்கலைக்கழகமும் சர்க்கரைநோய் முதலான தொற்றா நோய்களுக்கான சிகிச்சைப் பட்டியலில் யோகாவையும் சேர்த்துள்ளது.

நம் மூத்த சமூகத்தின் அன்றைய பிரபஞ்சப் புரிதலை அதன் நுட்பமான அறிவியலை, மதத்துக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் முடக்கிவைத்ததுபோல் இப்போதும் யோகாவை மத அடையாளமாகக் கொண்டு செல்லாமல், இந்தியப் பண்பாட்டின் கொடையாக, உடல் மற்றும் உளநலப் பயிற்சியாக உரக்கச்சொல்வது முக்கியம்.

- இனியவை தொடரும்...

யோகப் பயிற்சிப் பட்டியல்

1. இறைவணக்கம் (உங்கள் மனம் ஒருநிலைப்பட, எந்தக் கடவுளை வேண்டுமானாலும் வணங்கலாம், அல்லது இந்தப் பிரபஞ்சத்தை வணங்கலாம்)- 2 நிமிடம்

இன்னா நாற்பது இனியவை நாற்பது

2. உடல் தசைகளைத் தளர்வாக்கி நீட்டி மடக்கி யோகாசனங்களுக்கு உடலைத் தயார்படுத்துதல்- 6 நிமிடம்

3. சூரிய நமஸ்காரம் 10 முறை ( உங்களின் குடும்ப மருத்துவர் அனுமதித்தால் மட்டும். முதுகு தண்டுவட பாதிப்புள்ளவர்களுக்கு இது ஆகாது) - 9 நிமிடம்

4. நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு, அமர்ந்துகொண்டு செய்யும் ஆசனங்கள் - (உங்கள் யோக மருத்துவர் பரிந்துரைப்பதை மட்டும் செய்தால் போதும்) - எல்லாம் சேர்த்து 15 நிமிடம்

5. அக்னிசாரா, பஸ்திகா, கபாலபாதி கிரியாக்கள் (உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு இதயநோயாளிகளுக்கு வேண்டாம்) - 3 நிமிடம்

இன்னா நாற்பது இனியவை நாற்பது

6. பிராணாயாமம், நாடிசுத்தி பிராணாயாமம் - 6 நிமிடம் 7. பிரம்மரி - 3 நிமிடம் 8. தியானப் பயிற்சி - 15 நிமிடம்

9. உடலைத் தளர்த்தி ஒரு நிமிடம் ஓய்வு 10. இறை/இயற்கை வணக்கம் - 1 நிமிடம்