Published:Updated:

யோகாதான் என் மூச்சுக்காத்து! - 300 வகையில் அசத்தும் ஆர்த்தி

நம்பிக்கை நட்சத்திரம்

பிரீமியம் ஸ்டோரி
இன்று எல்லாம் நவீனமயமாகிவிட்டது. உடல் உழைப்பு குறைந்துவிட்டது. அதனால், மனிதர்களுக்கு எண்ணிலடங்காத நோய்கள் வருகின்றன.

இந்த நிலையில், உடலையும், உள்ளத்தையும் ஒரே நேர் கோட்டில் வைக்க யோகா கலையைச் செய்யும்படி, மருத்துவ உலகமே சொல்லத் தொடங்கியிருக்கிறது. அப்படி, முக்கியத்துவம் வாய்ந்த யோகா கலையை தனது உயிர்மூச்சாகக்கொண்டு செய்துவருகிறார் ஆர்த்தி. கரூர் நகராட்சியில் உள்ள வையாபுரி நகரைச் சேர்ந்த ஆர்த்தி பார்க்கிற இடங்களிலெல்லாம் யோகா செய்து அசரடிக்கிறார்.

தீவிர யோகா பயிற்சியில் இருந்த ஆர்த்தியைச் சந்தித்துப் பேசினோம்...

“அப்பா சீனிவாசன், அம்மா ஜோதிமணி. எனக்கு தம்பி ஒருத்தன் இருக்கான். அப்பா, கரூர் பேருந்து நிலையம் அருகே டீக்கடை வைத்து நடத்திக்கிட்டு வர்றார். சின்ன வயதில் என்னை பள்ளியில் சேர்த்தப்ப, எக்ஸ்டிரா கரிகுலர்ல எங்கம்மா யோகா கிளாஸ்னு குறிப்பிட்டாங்க. ஆர்வமில்லாம தான் யோகா கிளாஸை அட்டென்ட் பண்ணினேன். ஆனால், பள்ளியின் யோகா மாஸ்டராக இருந்த மாதவன் சார், நான் யோகா செய்றதைப் பார்த்துட்டு, ‘உனக்கு இயல்பாகவே நல்லா யோகா செய்ய வருது. நீ யோகாவுல கவனம் செலுத்தினால், பிற்காலத்தில் உலக அளவில் இதில் நிறைய சாதனைகளைப் பண்ண முடியும்’னு சொன்னார்.

யோகாதான் என் மூச்சுக்காத்து! - 300 வகையில் அசத்தும் ஆர்த்தி

மேலும், எனக்குள் இருந்த ஆற்றலைப் பார்த்த யோகா மாஸ்டர் மாதவன் சார், தனது வீட்டு முகவரியைக் கொடுத்து, என்னை விடுமுறை நாள்களில் யோகா பயிற்சிக்கு வரச்சொன்னார். அங்கேயும் ஆர்வமா போய் கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட 300 வகையான யோகாக்களை செய்ய ஆரம்பிச்சுட்டேன். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, மதுரையில் மாநில அளவில் யோகா போட்டி வெச்சாங்க. அதுல கலந்துகிட்ட எனக்கு மூன்றாம் பரிசு கிடைச்சது. அன்னிக்கு நான் அடைஞ்ச ஆனந்தத்துக்கு அளவே இல்லை'' என்று சொல்லும் ஆர்த்தியை இந்த வெற்றிதான் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு அநாயசமாக உயர்த்தியிருக்கிறது.

``தொடர்ந்து, பல போட்டிகளில் மாநில, மாவட்ட அளவுகளில் முதல் பரிசுகள் வாங்கினேன். எட்டாம் வகுப்பு படிச்சப்ப, பெங்களூர்ல தேசிய அளவில் யோகா போட்டி வெச்சாங்க. அதுல கலந்துகிட்டேன். சிறப்பா யோகா செய்தேன். தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வாங்கினேன். அதேபோல், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறப்ப, புதுச்சேரியில் தேசிய அளவில் யோகா போட்டி வெச்சாங்க. அதுலயும் நான்தான் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வாங்கினேன். இதனால், நான் படித்த பள்ளிக்கும் பெருமை கிடைக்க, பள்ளி நிர்வாகம் என்னை ஊக்குவிக்கும்விதமாக, 12-ம் வகுப்பு வரைக்கும் எனக்குப் பள்ளிக்கட்டணம் வாங்கலை'' என்று சொல்லும்போது ஆர்த்தியின் குரலில் அத்தனை உற்சாகம்.

யோகாதான் என் மூச்சுக்காத்து! - 300 வகையில் அசத்தும் ஆர்த்தி

பள்ளிப்படிப்பை முடித்ததும், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்ஸி கணினி அறிவியல் சேர்ந்த ஆர்த்தி, அங்கேயும் யோகா திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பல பரிசுகளை இவர் வாங்க, அதைப் பார்த்த கல்லூரி நிர்வாகம், இரண்டாம் வருடம் படிக்கும்போது, மலேசியாவில் நடந்த உலக அளவிலான யோகா நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஓப்பன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், ஆர்த்தி செய்த யோகா நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. அதனால், இரண்டாம் மற்றும் இறுதி ஆண்டுகளுக்கான கல்லூரிக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று ஆர்த்தியை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது கல்லூரி நிர்வாகம்.

‘`யோகா, எனக்குப் பல மதிப்புகளைப் பெற்றுத்தருவதை உணர்ந்த தருணம் அது. அதனால், கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் யோகாவைவிடக் கூடாது. யோகாவைதான் உயிர்மூச்சா வெச்சு செயல்படணும்னு முடிவு பண்ணினேன். இன்னும் அதீத ஆர்வமாக யோகாவைக் கத்துக்க ஆரம்பிச்சேன்.

யோகாதான் என் மூச்சுக்காத்து! - 300 வகையில் அசத்தும் ஆர்த்தி

2018 - 19-ம் வருட கல்வியாண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல டிப்ளோமா யோகா கோர்ஸ் படிச்சு முடிச்சேன். அப்போ புதுச்சேரியில் சர்வதேச அளவில் யோகா போட்டி நடந்தது. உலகம் முழுக்க இருந்து மொத்தம் 4,000 போட்டியாளர்கள் கலந்துகிட்டாங்க. அங்கே 15 - 20 வரையிலான வயது பிரிவில் சர்வதேச அளவில் சாம்பியன்ஷிப் பட்டம் வாங்கினேன். அந்த அறிவிப்பைக் கேட்ட நொடியில், ஆனந்தத்தில் அழுதுட் டேன்...’’ சொல்லும்போதே சிலிர்க்கிறார் ஆர்த்தி.

‘`இப்படி நான் யோகாவுல பல உயரங்களைத் தொட்டதற்கு என்னோட பெற்றோர்தான் முக்கிய காரணம். குறிப்பாக, எங்கம்மா வீட்டு வேலையை விட்டுட்டு, என்னோடு பயணித்து, நான் பெறும் வெற்றிகளைப் பார்த்து, பெரு மிதத்தில் விம்முவார். அதைப் பார்க்கும் எனக்கு, எனர்ஜியா இருக்கும். கடந்த வருடம் ஒரு மாதம், கேரளாவில் உள்ள சிவானந்தா ஆசிரமத்துல தங்கி, யோகா சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி கோர்ஸ் படிச்சு முடிச்சேன். அதோடு, இப்போது எம்.எஸ்ஸி யோகா கோர்ஸை கரஸ்ல படிச்சுக்கிட்டு இருக்கேன். தவிர, பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

யோகாதான் என் மூச்சுக்காத்து! - 300 வகையில் அசத்தும் ஆர்த்தி

வழக்கமாக தரையில் பெட்ஷீட் விரித்து, அதில் யோகா செய்யாம, வித்தியாசமான இடங்களில் எல்லாம் யோகா செய்ய முயற்சி பண்ணினேன். மொட்டைமாடி கட்டை, வீட்டு நிலைப்படி, சுவர், கணினி வைக்கும் டேபிள், ஆக்டிவா வண்டியின் முன்பக்கம் என்று வித்தியாசமான இடங்களில் யோகாசனம் செய்தேன். அதை சமூலவலைதளங்களில் வீடியோவாக்கி வெளியிட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ்’’ என்று சொல்லும் ஆர்த்தி, கொரோனா காலத்தையும் விடவில்லை.

‘`மக்கள் பலரும் மாஸ்க் அணியாமல் வெளியில் போவதைப் பார்த்ததும், எனக்கு கவலையா போயிட்டு. அதனால், நான் மாஸ்க் அணிந்தபடி யோகா செய்து, அதை வீடியோவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். ‘யோகா செய்வது உங்கள் உடல்நலனுக்கு நல்லது; மாஸ்க் அணிவது உங்கள் உயிருக்கு நல்லது’ என்று யோகா செய்தபடி பேசியிருந்தேன்.

அதைப்பார்த்த பலரும், ‘உங்க வித்தியாசமான அறிவுரையால், நாங்க இப்போ மாஸ்க் அணிஞ்சுக்கிட்டுப் போறோம்’னு சொன்னாங்க. மனதுக்கு நிறைவா இருந்துச்சு.

நோயற்ற வாழ்வும், குழப்பமற்ற மனதும் அமைய, யோகா அவசியம். யோகாவில் நான் கின்னஸ் ரெக்கார்டு பண்ணும் முயற்சியிலும் இருக்கிறேன். அடுத்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகிட்டு, யோகாவில் தங்க மெடல் அடிக்கணும்னு லட்சியம் இருக்கு. ஆனால், நான் யோகா செய்வதைப் பார்த்த பலரும், ‘உன்னால அதை தாண்டியும் சாதிக்க முடியும்’னு சொல்றாங்க. அவங்க என்மேல வெச்சுருக்கிற அந்த நம்பிக்கையும், நான் என்மீது வெச்சுருக்கிற தன்னம்பிக்கையும் சேர்ந்து, யோகாவில் உச்ச உயரங்களை நிச்சயம் தொடுவேன்” என்றார் ஆர்த்தி, உறுதியாக!.

உச்சம் தொட வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு