Published:Updated:

புற்றுநோயைத் தடுக்கும் திருமூலரின் மூச்சுப் பயிற்சி!அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

மூச்சுப் பயிற்சி

சர்வதேச யோகா தின சிறப்புக் கட்டுரை: அமெரிக்காவில் செல் உயிரியலில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுவர் முனைவர் சுந்தரவடிவேல் (சுந்தர்) பாலசுப்ரமணியன். இவர், புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ந்தும் கற்பித்தும் வருகிறார்.

புற்றுநோயைத் தடுக்கும் திருமூலரின் மூச்சுப் பயிற்சி!அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

சர்வதேச யோகா தின சிறப்புக் கட்டுரை: அமெரிக்காவில் செல் உயிரியலில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுவர் முனைவர் சுந்தரவடிவேல் (சுந்தர்) பாலசுப்ரமணியன். இவர், புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ந்தும் கற்பித்தும் வருகிறார்.

Published:Updated:
மூச்சுப் பயிற்சி

மருத்துவத்துறையில் சவாலாகவே இருக்கும் பல பிரச்சனைகளுக்கு திருமூலரின் மூச்சுப் பயிற்சி தீர்வளிக்கிறது என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தவர் சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியன். சர்வதேச யோகா தினத்தில் அவர் கூறும் மூச்சுப் பயிற்சியின் மகத்துவத்தை பார்ப்போம்.

யோகக் கலையின் அட்டாங்கங்களுள் நான்காவதாக இருப்பது பிராணாயாமம். இதைப் பிராணத்தின் இயமம் (நெறிப்படுத்துதல்) என்று கொள்ளலாம். அதாவது, உள்ளும் புறமும் விரவித் திரிகின்ற வாயுவை நம்முள்ளே நெறிப்படுத்தி நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளும், உயிர்ப்பை ஓங்கச் செய்து சாக்காட்டை விலக்கும் ஓர் உயரிய பயிற்சியே பிராணாயாமம் ஆகும்.

இதை மூச்சுப் பயிற்சி, யோக மூச்சுப் பயிற்சி (yogic breathing, yoga breathing, breathing regulation) என்றும் இக்காலத்தில் வழங்குகிறார்கள். யோகப் பயிற்சிப் பள்ளிகளும் ஆசிரியர்களும் பதஞ்சலி முனிவரது யோக சூத்திரம் என்ற நூலையே பரவலாகக் கையாண்டு வருகிறார்கள். இந்நூலில் பிராணாயாமத்தைப் பற்றி நான்கு சூத்திரங்கள் சொல்லப் பட்டுள்ளன.

திருமூலர்
திருமூலர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவை பிராணாயாமம் மனவிருளை அகற்றித் தெளிவைத் தரும் என்றும், மூச்சை அடக்குதல் நலமென்றும், ஒரு பொருளின் மேல் கவனத்தையும் மூச்சையும் நிலைநிறுத்துதல் ஒரு பயிற்சியென்றும் சொல்கின்றன. இவற்றுக்கு மேல் எந்த முறைகளையும் யோக சூத்திரம் என்ற நூல் குறிப்பிடவில்லை. பதஞ்சலி முனிவரும், திருமூல முனிவரும் நந்தியென்னும் குருவிடம் பயின்றவர்கள் என்ற நிலையில், பிராணாயாமத்தின் இன்னும் பல பரிமாணங்களை விளக்கிச் சொல்கின்றன திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் பிராணாயாமப் பகுதி. இப்பகுதிக்குள் 14 பாடல்களே காணப்பட்டாலும், அட்டாங்க யோகத்தின் பிற பகுதிகளுக்குள்ளும், யோகப் பகுதிக்குள் விரவிக்கிடக்கும் பல்வேறு பாடல்களினூடாகவும் பல அரிய பிராணாயாமத் தகவல்களைத் திருமூல முனிவர் அருளியிருக் கிறார்.

இப்பாடல்கள் அனைத்தையும் அறிவியல் முறையில் ஆராய்வது என் வாழ்நாள் குறிக்கோளாக இருக்கும் வேளையில் என் முதற்கட்ட ஆய்வில் ஒரேயொரு பாடலை மட்டும் தற்கால உயிர்வேதியியல் நுட்பங்களின் மூலம் அறிந்துகொள்ள முற்பட்டேன். இதில் என்னுடன் அமெரிக்காவின் தென்கரோலின மருத்துவப் பல்கலையில் இயங்கிவரும் என் சக ஆய்வாளர்களும் பங்கெடுத்துக்கொண்டார்கள். முதலில் அப்பாடலையும், அதன் பிறகு, அதைக் கொண்டு நாங்கள் செய்த ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் இக்கட்டுரையில் சுருக்கமாக விளக்கியுள்ளேன். தமிழர்களின் பண்டைய இலக்கியங்கள் இக்கால வாழ்வியலுக்கு எந்நாட்டுச் சூழலிலும் பயன்படும் என்பதை இந்த ஆய்வு நன்கு தெளிவுறுத்துகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமந்திரம், பாடல் எண் 568:

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் அறுபத்து நாலதில் கும்பகம்

ஊறுதல் முப்பத்து ரெண்டதில் ரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே

இப்பாடலில் பூரகம் (மூச்சை இழுத்தல்), கும்பகம் (மூச்சை அடக்கல்), மற்றும் இரேசகம் (மூச்சை வெளிவிடுதல்) ஆகியன குறித்தும், ஒவ்வொரு படியின் கால அளவை குறித்தும், எந்த நாசியினூடாக என்பது குறித்தும் விளக்கியுள்ளார் திருமூல முனிவர்.

பிராணாயாமம்
பிராணாயாமம்

கால அளவை:

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் ஈரெட்டு, அறுபத்து நான்கு, முப்பத்து இரண்டு என்பன மாத்திரை அளவுகளைக் குறிப்பனவாகும். மாத்திரைகளை நாம் தமிழ் இலக்கண முறையின் வாயிலாகச் சொற்கட்டுக்களைக் கொண்டு அளவீடு செய்தல் இயலும். எடுத்துக்காட்டாக அம்மா என்பது (அ=1, ம்=½, மா=2) மொத்தம் 3 ½ மாத்திரைகளைக் கொண்ட சொல். இதைப் போலவே எட்டு மாத்திரை அளவில் ஒரு மந்திரத்தையோ சொற்கட்டையோ எடுத்துக்கொள்வோம் (தாம்ததீங்கின = 8 மாத்திரைகள்; ஓம் நமசிவாய = இதில் ஓம் என்பதை இரண்டுமாத்திரை அளவிலான ஓரெழுத்து மந்திரம் என்று எடுத்துக்கொண்டால் ஓம் நமசிவாய என்பதும் எட்டு மாத்திரை அளவினதாகும்). இந்த எட்டு மாத்திரை சொற்கட்டை இரண்டு, எட்டு, நான்கு முறைகள் திரும்பத் திரும்பக் கூறினால் அவை முறையே 16, 64, 32 மாத்திரைகள் அளவில் நீண்டு வரும். மாத்திரைகளை அளவிட மனதுக்குள் மந்திரத்தை உச்சரித்தபடி, விரல்களால் எண்ணிக்கொள்ளலாம். அல்லது ஒரு தாள கதியை, ராகத்தைப் (பண்) பயன்படுத்திக்கொண்டு இதை எண்ணிக் கொள்ளலாம். இதை எனது வலைப்பதிவில் 2005-ம் ஆண்டில் பதிவிட்டிருந்தேன். மேலும், சில காணொளிகளிலும் இந்த எண்ணும் முறையை விளக்கியுள்ளேன். அக்காணொளிகளை pranascience.com எனும் எனது இணையதளத்தில் காணலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமூலரின் மூச்சுப் பயிற்சி

நாசிகளின் முறை:

வாமம் என்பது இடது நாசியையும், பிங்கலை என்பது வலது நாசியையும் குறிக்கும். பிங்கலை என்பது இப்பாடலில் குறிக்கப்படவில்லையென்றாலும், சில பாடல்களுக்குப் பின்னர் வரும் பாடல் எண் 573-ல் இக்குறிப்பு உள்ளது. இரண்டு பாடல்களும் ஏறக்குறைய ஒரே மூச்சுப் பயிற்சி முறையைக் குறிப்பிடுவதாலும், மேலும் பாடல் எண் 568-ன் இறுதி வரியில் வரும் மாறுதல் ஒன்றின்கண் என்பதிலிருந்தும் இந்தப் பயிற்சியில் இடது நாசியில் மூச்சை இழுத்தால் வலது நாசியில் வெளிவிட வேண்டும் எனப் பொருள் கொள்ளலாம். அதாவது, இடது நாசியில் மூச்சை இழுத்து, அடக்கிப் பின்னர் வலது நாசியின் வழியாக வெளியிட வேண்டும். அதேபோல நாசிச் சுழற்சியால் வலது பக்கம் மூச்சை இழுக்க நேர்ந்தால் அதை இடது பக்கமாக வெளிவிட வேண்டும்.

மூச்சுப் பயிற்சி
மூச்சுப் பயிற்சி

திருமூலர் மூச்சுப் பயிற்சி முறை:

சரியான அல்லது வசதியான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, உணவு உட்கொள்ளும் முன்னரோ, அல்லது உணவுக்குப் பிறகோ, சுமார் இரண்டு மணி நேரம் இடைவெளி கழித்து இப்பயிற்சியைச் செய்தல் நலம். காலையும் நண்பகலும், மாலையும் சிறப்பான நேரங்கள். முதலில் கண்களை மூடிக்கொண்டு மூச்சின் மீது கவனம் செலுத்த வேண்டும். பிறகு, எந்த நாசியின் வழியே மூச்சு அதிகமாக ஓடுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் இடதும், சில நேரங்களில் வலதும் ஓடும், இது நாடி சுழற்சி எனப்படும். இதைத் தொடர்ந்து கவனித்து அறிந்துகொண்டால் இடது நாசி திறந்திருக்கும் வேளைகளில் இப்பயிற்சியைச் செய்யலாம். அல்லது வலது நாசி திறந்திருக்கும் வேளைகளில் செய்ய நேர்ந்தால் வலது நாசியாலும் மூச்சை உள்ளிழுக்கலாம். கீழ்வரும் முறையில் திருமூலர் மூச்சுப் பயிற்சியைச் செய்ய வேண்டும்:

எந்த நாசி அதிகமாகத் திறந்திருக்கிறதோ அதன் வழியாக மூச்சை 16 மாத்திரைகளுக்கு (இரண்டு முறை ஓம் நமசிவாய என்று மனதுக்குள் உச்சரித்தவாறு) இழுக்க வேண்டும்.

பிறகு இரண்டு நாசிகளையும் மூடிக்கொண்டு எட்டு முறை ஓம் நமசிவாய (64 மாத்திரைகள்) என மனதுக்குள் எண்ண வேண்டும்.

சற்றே மூடியிருக்கும் நாசியின் வழியாக (மூச்சை இழுத்த நாசியல்லாத மற்ற நாசி) மூச்சை 4 முறை ஓம் நமசிவாய (32 மாத்திரைகள்) அளவுக்கு வெளியிட வேண்டும்.

நிலை எண் 1-லிருந்து மீண்டும் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

இப்பயிற்சியில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை, மூச்சை நன்றாக உள்ளே இழுத்தலும், பிறகு இயன்றவரை அடக்குதலும், அதன் பின் முழுவதுமாக வெளியிடுவதுமேயாகும். இவற்றின் கால அளவை முதலில் பயிலும்போது சற்றே கூடக் குறைய வைத்துக் கொண்டு தத்தம் உடல்நிலைக்கேற்ப வசதியாகப் பயிலவும். பிறகு, திருமூல முனிவர் குறிப்பிடும் இந்த எண்ணிக்கை அளவுக்கு ஒருவரால் பயிற்சியைச் செய்ய முடியும்.

ஆராய்ச்சிக்கான அடித்தளம்:

மேற்கூறிய திருமூலர் மூச்சுப் பயிற்சியைச் செய்யும்போது, வாயில் அதிக அளவில் உமிழ்நீர் சுரப்பதைக் கண்டேன். இதுவே யோக நூல்களில் குறிப்பிடப்படும் அமிழ்தம், பால், தேன் என்பதாகவும் இருக்கக் கூடும் என எண்ணினேன். என் அறிவியல் ஆராய்ச்சியின் வாயிலாக, உமிழ்நீரில் நிறைய புரதங்கள் இருக்கின்றன என்றும், இவை நம் மன மற்றும் உடல் ரீதியான செயற்பாடுகளுக்கு இன்றியமையாதன என்பதையும் அறிந்துகொண்டேன். இதையே என் ஆராய்ச்சிக்கான அடித்தளமாகக் கொண்டேன்.

அமெரிக்காவில் மூச்சுப் பயிற்சி வகுப்பு
அமெரிக்காவில் மூச்சுப் பயிற்சி வகுப்பு

ஆராய்ச்சி:

2013-ம் ஆண்டின் பிற்பகுதியில் தென் கரோலின மருத்துவப் பல்கலைக்கழகத்தின் South Carolina Clinical and Translational Research Institute (SCTR) என்ற அமைப்பின் நிதி உதவியுடன் 20 பேர்களைக் கொண்டு ஒரு குழுவிடம் இந்தச் சோதனையை நடத்தினோம். 10 பேர் கொண்ட இரு குழுக்களாக இவர்கள் பிரிக்கப்பட்டார்கள். இவர்கள் யாவரும் திருமூலர் மூச்சுப் பயிற்சியைக் குறித்து ஏற்கெனவே அறிந்திராதவர்கள். இவர்களுக்கு முதலில் ஓம் என்ற ஓதுதலும், பிறகு திருமூலர் மூச்சுப் பயிற்சியும் (மேற்கண்ட முறை) கற்றுத் தரப்பட்டன. இப்பயிற்சிகளைத் தலா 10 நிமிடங்கள் இவர்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கொரு முறையும் இவர்களது உமிழ்நீர் ஒரு சோதனைக் குழாயில் சேகரிக்கப்பட்டது. இந்த இருபது பேர்களில் 10 பேர் மூச்சுப் பயிற்சிகளைச் செய்யவும், பத்துப் பேர் அமைதியாக அமர்ந்து எதையேனும் வாசிக்கவும் செய்தார்கள். இந்த வாசிக்கும் குழு ஒப்புநோக்குக்காக ஏற்படுத்தப்படும் ஓர் அறிவியல் முறைமையாகும்.

அளவீடுகள்:

சேகரிக்கப்பட்ட உமிழ் நீரிலிருந்து பின்வரும் அளவீடுகளைச் செய்தோம்.

முதலில் நரம்பு வளர்ச்சிக் காரணி (nerve growth factor) தூண்டப்படுகிறதா என்பதை எலைசா (ELISA) என்ற முறையில் அளவிட்டோம்.

பொதுவான புரத அளவுகளின் ஏற்ற இறக்கங்களை மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி (mass spectrometry) என்ற முறையில் அளவிட்டோம்.

மன அழுத்தம் மற்றும் திசுக்களின் சிதைவோடு சம்பந்தப்பட்டிருக்கும் சைட்டோகைன் (cytokine) என்னும் மூலக்கூறுகளை பன்முக (multiplex) எலைசா முறையில் அளவிட்டோம்.

ஆய்வின் முடிவுகள்

முதலாவதாக நரம்பு வளர்ச்சிக் காரணியின் அளவானது திருமூலர் மூச்சுப் பயிற்சி செய்தவர்களின் உமிழ்நீரில், செய்யாதவர்களைவிடவும், செய்வதற்கு முன்பிருந்ததைவிடவும் அதிக அளவில் காணப்பட்டது. இம்முடிவானது ஒரு யோகப் பயிற்சியின் மூலம் நரம்பு வளர்ச்சிக் காரணி தூண்டப்படும் என்பதை முதன்முதலாகக் காட்டிய ஆய்வு. இந்த ஆய்வு முடிவுகள் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிடும் International Psychogeriatrics என்ற ஆய்வேட்டில் வெளியானது.

இரண்டாவதாக, சுமார் 22 புரதங்கள் இம்மூச்சுப் பயிற்சியின் வாயிலாக ஏற்ற இறக்கங்களைக் காட்டின. இப்புரதங்கள் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதிலும் (immune regulation), புற்றுநோய் உற்பத்தியாவதைத் தடுப்பதிலும் (tumor suppressors) துணைபுரிபவை. இந்த ஆய்வின் முடிவுகள் Evidence Based Complementary and Alternative Medicine என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியானது. ஒரு மூச்சுப் பயிற்சியின் மூலம் இத்தகைய மூலக்கூறுகளைத் தூண்டமுடியும் என்ற எங்களின் கண்டுபிடிப்பு அறிவியல் உலகுக்குப் புதிய செய்தி.

பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சி

மூன்றாவதாக, உடல் மற்றும் மனோரீதியான அழுத்தங்களால் (stress) அதிகமாகும் சைட்டோகைன் என்னும் மூலக்கூறுகளில் முக்கியமான மூன்றின் அளவு குறைவதையும் கண்டோம். இந்த மூலக்கூறுகள் அழுத்தத்தால் ஏற்படும் திசுச் சிதைவுக்கு வழிவகுப்பவை. இவற்றைக் குறைப்பதன்மூலம் உடல் மற்றும் மனதில் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள வகையுண்டு என்பதையும் எங்கள் ஆய்வு உணர்த்தியது. இந்த ஆய்வு முடிவுகள் BMC Complementary and Alternative Medicine என்ற புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியானதுடன் நியூ யார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டது. இந்த மூன்றாம் கட்ட ஆய்வுக்கு டெக்ஸாஸ் மாநிலத்தில் இயங்கும் Pure Action என்ற யோக ஆராய்ச்சி நிறுவனமும் நிதியுதவியில் ஒரு பகுதியை அளித்தது.

ஆராய்ச்சி முடிவுகளின் பயன்பாடுகள்

மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் நாம் என்னென்ன விதமான நோய்களைத் தடுக்க அல்லது சிகிச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதைச் சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறேன்:

நரம்பு வளர்ச்சிக் காரணியானது அல்சைமர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டோரின் மூளையில் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. எனவே, நரம்பு வளர்ச்சிக் காரணியை மூளைக்குள் செலுத்துவதை ஒரு சிகிச்சை முறையாக மேற்கொண்டுள்ளார்கள். நாம் திருமூலர் மூச்சுப் பயிற்சியின் மூலமாக இதே நரம்பு வளர்ச்சிக் காரணியைத் தூண்டிக்கொள்ள முடியும். உமிழ் நீரில் சுரக்கப்படும் இக்காரணியானது நரம்புச் செல்களின் வழியாக மைய நரம்பு மண்டலத்தை அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, அல்சைமர் போன்ற நோய்கள் வருவதைத் தடுக்கவும், குணப்படுத்திக் கொள்ளவும் இப்பயிற்சி முறை உதவக்கூடும் என்பதை எங்களின் முதற்கட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

நோய் எதிர்ப்புப் புரதங்களைத் திருமூலர் மூச்சுப் பயிற்சி தூண்டுகிறது. இதன் மூலம், நோய்க்கிருமிகள் உடலினுள் நுழையும் முக்கிய வாயில்களான நாசி, வாய் மற்றும் மூச்சு, உணவுக் குழல்கள் ஆகியவற்றில் இப்புரதங்கள் அதிகரிக்கும்போது இக்கிருமிகள் உடலிலிருந்து அகற்றப்படுகின்றன. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள இப்பயிற்சி துணை புரிகிறது. இவை இன்றைய கோவிட் நுண்கிருமித் தொற்று போன்றவற்றையும் சமாளிக்கும் திறன் கொண்டவை என்பதை அண்மைய ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

யோகா தினம்
யோகா தினம்

3. நம் உடலில் உள்ள அணுக்கள் (செல்கள்) புற்றுநோயை உருவாக்கும் செல்களாக உருமாற்றம் பெறுவதைத் தடுக்கும் வேலையைச் சில புரதங்கள் செய்கின்றன. இப்புரதங்களைப் புற்றுத் தடுப்பான்கள் (tumor suppressors) எனலாம். இத்தகைய புரதங்களை எங்ஙனம் தூண்டுவது என்பது மருத்துவத்துறையில் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. எங்கள் ஆராய்ச்சியில் புற்றுத் தடுப்பான்களாக இருக்கும் சுமார் நான்கு புரதங்கள் திருமூலர் மூச்சுப் பயிற்சியால் தூண்டப்படுவதைக் கண்டறிந்திருக்கிறோம். இதுவும் இத்துறையில் ஒரு முதன்முறையான கண்டுபிடிப்பாகும். இதைத் தொடர்ந்து National Institutes of Health நிதியுதவியுடன் பிராணாசயன்ஸ் நிறுவனம் தற்போது மார்பகப் புற்று நோயில் இந்த மூச்சுப் பயிற்சி முறைகளை ஆராய்ச்சி செய்து வருகிறது.

4. மேலும், நோய் எதிர்ப்பில் ஈடுபடும் ரத்த வெள்ளையணுக்கள் சைட்டோகைன்கள் எனும் புரதங்களை உற்பத்தி செய்கின்றன. இவ்வகையான புரதங்கள் அளவுக்கு மீறும்போது திசுக்கள் சிதைவடைகின்றன. நோய் பீடிக்கிறது. சைட்டோகைன் புரதங்கள் பொதுவாக மன மற்றும் உடல்ரீதியான அழுத்தங்களின்போது அதிக அளவில் உற்பத்தியாகி நம் உடலின் நடுநிலையான செயற்பாடுகளைப் பாதிக்கிறது.

திருமூலர் திருமந்திரத்தில் எண்ணற்ற பிராணாயாம நுணுக்கங்களை விளக்கியுள்ளார். அவற்றுள் ஒரேயொரு பாடலை எடுத்து ஆராயும்போது மேற்கண்ட தகவல்களை அறிய முடிகிறது. இதைப்போலவே மற்ற பாடல்களையும் அறிவியல் நோக்கில் ஆராயும்போது திருமந்திரத்தின் பெருமைகளை அனைத்துலகமும் போற்றி, இத்தகைய மாண்புமிக்க நூலைப் பின்பற்றும் வழி ஏற்படும். இந்த வகையில் திருமூலர் பெயரில் ஓர் ஆய்வு இருக்கையை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் உதவியும் ஒத்துழைப்பும் இத்தகைய ஆய்வுகள் மேலோங்க வழிவகுக்கும் என நம்புகிறோம், அவற்றையே வேண்டுகிறோம்.

கட்டுரையாளர்
முனைவர் சுந்தரவடிவேல் (சுந்தர்) பாலசுப்ரமணியன்
கட்டுரையாளர் முனைவர் சுந்தரவடிவேல் (சுந்தர்) பாலசுப்ரமணியன்

கட்டுரையாளரைப் பற்றி:

முனைவர் சுந்தரவடிவேல் (சுந்தர்) பாலசுப்ரமணியன் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் சித்த மருத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் தந்தை மற்றும் உறவினர்களிடம் யோக முறைகளையும், சித்த மருத்துவ முறைகளையும் பயின்றார். மதுரை விவேகானந்த குருகுலக் கல்லூரியில் இளங்கலை வேதியியலும், பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார். ஓராண்டு புதுடெல்லியில் தேசிய நோயெதிர்ப்புக் கழகத்தில் ஆராய்ச்சிப் பணிக்குப் பின் அமெரிக்காவில் செல் உயிரியலில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார். தற்போதைய பணியில் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைக் குறித்து ஆராய்ந்தும், கற்பித்தும் வருகிறார். யோக முறைகளை விவேகானந்த குருகுலம், சச்சிதானந்தரின் யோகாவில், மற்றும் தமிழகம், புதுச்சேரியிலுள்ள பல குருமார்களிடமுமிருந்தும் கற்றுக் கொண்டவர். திருமந்திரத்துடன் ஏனைய சித்தர் முறைகளிலும், திருக்குறளிலும் மிகுந்த நாட்டமுள்ளவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism