மை டியர் ஜீபா
‘‘மாலத்தீவுகள் குட்டிக்குட்டியாக நிறைய இருக்குமாமே, அது ஒரு தனிநாடா ஜீபா?”
- கே.வர்ஷா, விளாங்குடி.

‘‘மாலத்தீவுகள் தனி நாடுதான் வர்ஷா. இந்தியப் பெருங்கடலில், இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே 1,192 தீவுகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் 200 தீவுகள் மட்டுமே மனிதர்கள் வசிக்கும் விதத்தில் உள்ளன. அடுத்தடுத்து உள்ள இந்தக் குட்டித் தீவுகளைப் பார்க்கும்போது, ஒரு பூமாலை போல இருக்கும். அதனால், சம்ஸ்கிருத வார்த்தையான ‘மாலா’ என்பதிலிருந்து ‘மாலத் தீவு’ என்றானது. இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த மாலத்தீவு, 1965-ம் ஆண்டு விடுதலை பெற்றது. இதன் தலைநகரம், மாலே (Male). மாலத்தீவின் முதன்மையான தொழில், மீன் பிடித்தல். சுற்றுலா, இந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மாலத்தீவின் அழகான கடற்கரைகளும் பவளப் பாறைகளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. வருடம்தோறும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரியும் இடமாக மாலத்தீவு உள்ளது.”
‘‘ஹாய் ஜீபா... வைகை அணையை யார் கட்டியது?”
- பிறை பிரியன், தேனி.

‘‘தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருப்பதுதான் வைகை அணை. தமிழக அரசால் கட்டப்பட்டு, 1959 ஜனவரி 29-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த அணை, 71 அடி நீர் கொள்ளளவு கொண்டது. இங்கே தேக்கிவைத்து வெளியேற்றப்படும் நீரின் விசையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தாவரங்களை ஆராய்ச்சி செய்ய ஒரு விவசாய ஆராய்ச்சி மையம் உள்ளது. அணையின் அருகே சிறுவர்கள் பூங்காவும், உயிரியல் காட்சி சாலையும் உள்ளன.”
‘‘டியர் ஜீபா... அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யன் (Grand Canyon) பள்ளத்தாக்கு பற்றிச் சொல்லேன்’’
- கே.கார்த்திக், மதுரை-10.

“இயற்கையாக அமைந்த ஏழு அதிசயங்களில் ஒன்று எனப் புகழப்படும் இடம், கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கு. இது, அமெரிக்காவில் உள்ள அரிசோனா (Arizona) பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 350 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பள்ளத்தாக்கின் சில இடங்களில், ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான ஆழம் இருக்கும். விளிம்புப் பகுதி, 300 அடி தடிமனான மேலடுக்கு சுண்ணாம்புப் படிவப் பாறையால் ஆனது. இது, கைபாப் அடுக்கு (Kaibab Plateau) எனப்படுகிறது. இந்தச் சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில், 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினங்களின் புதைப் படிவங்கள் காணப்படுகின்றன. இந்தப் பள்ளத்தாக்கை ஒட்டி, கொலராடோ ஆறு (Colorado River) ஓடுகிறது. சுற்றுலாப் பயணிகள், ஆற்றில் படகுச் சவாரி செய்தவாறு பள்ளத்தாக்கின் அழகை ரசிக்கின்றனர். இதை, அமெரிக்க அரசு தேசியப் பூங்காவாக அறிவித்துள்ளது.’’
‘‘மை டியர் ஜீபா... WWE விளையாட்டில் புகழ்பெற்ற ரோமன் ரெஜின்ஸ் பற்றி கொஞ்சம் சொல் ப்ளிஸ்!
- கி.கார்த்திகேயன், சென்னை-73.

‘‘லீட்டி ஜோசப் அனோய் (Leati Joseph Anoai) என்ற அமெரிக்கர், ஒரு கால்பந்து வீரர். அதிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, WWE (World Wrestling Entertainment) எனப்படும் மல்யுத்த விளையாட்டில் கலந்துகொண்டார். தனது பெயரை ரோமன் லேக்கி (Roman Leakee) என மாற்றிக்கொண்டார். 2010-ம் ஆண்டு செப்டம்பரில், இவர் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தார். அதே மாதம் 21-ம் தேதி நடந்த போட்டியில் வெற்றிபெற்றார். 2012-ல் ‘தி ஷீல்டு’ போட்டிகளில் கலந்துகொண்டார். அதில், சீத் ரோலின்ஸ் மற்றும் டீன் அம்ரோஸ் (Seth Rollins and Dean Ambrose) போன்ற புகழ்பெற்ற வீரர்களை எதிர்கொண்டு படுதோல்வி அடைந்தார். தன் பெயரை ரோமன் ரெஜின்ஸ் (Roman Reigns) என மாற்றிக்கொண்டு, புகழ்பெற்ற மல்யுத்த வீரர் சி.ஜே. பார்க்கரை வென்றார். 2014-ல் சூப்பர் ஸ்டார் ஆஃப் த இயர் ஸ்லாமி (Superstar of the Year Slammy Award) மற்றும் 2015-ல் ராயல் ரம்பிள் மேட்ச் (Royal Rumble match) ஆகிய விருதுகளை வென்று ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.”
ஜெயசூர்யா