FA பக்கங்கள்
Published:Updated:

ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்!

- பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதேச அங்கீகாரம்...

வ்வொரு பள்ளியிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. ஆனால், எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு நூலகம் இருக்கிறது’’ என்கிற அந்த மாணவர்களின் குரல்களில் மிளிர்கிறது உற்சாகப் பெருமிதம்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்!

சென்னை, மேற்குத் தாம்பரத்தில் உள்ளது, வள்ளுவர் குருகுலம் பள்ளி. 75-ம் ஆண்டைக் கொண்டாடும் இந்தப் பள்ளி, பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் சர்வதேசப் பள்ளிக்கான விருதைப் பெற்றிருக்கிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் சாய்சுதா,‘‘1940-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவில் இருந்து வந்த அகதிகளுக்காக, இந்திய சுதந்திர இயக்கத்தால் நிறுவப்பட்டதே, ‘வள்ளுவர் டிரஸ்ட்.’ அதற்கு அடுத்த ஆண்டு இந்த வள்ளுவர் குருகுலம் பள்ளி தொடங்கப்பட்டது. அப்போது முதல் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளி, தேசிய அளவிலான பல விருதுகளைப் பெற்றிருக்கிறது” என்கிறார் பூரிப்போடு.

மாணவர்களுக்குப் பிறந்தநாள் என்றால், இனிப்புகள் வழங்குவது இல்லை. அதற்குப் பதில், ஒவ்வொரு மாணவரும் ஒரு புத்தகத்தை வகுப்பறை நூலகத்துக்குத் தருகிறார். இப்படி ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு நூலகமாக ஜொலிக்கிறது.

இந்திய அரசு வழங்கிய தேசிய சுகாதார விருது, மாநில அளவிலான அறிவியல் இன்ஸ்பயர் விருது மற்றும் பல பதக்கங்களைக் குவித்துள்ளது வள்ளுவர் குருகுலம்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்!

‘‘பசுமைத் தாயகம், சுற்றுப்புறத் தூய்மை என பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்துவோம். விளையாட்டுப் போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் நிறையப் பரிசுகளை வாங்கி இருக்கோம். தேசிய அளவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டியில், எங்கள் பள்ளி வெண்கலம் வென்றிருக்கிறது. இப்போ, பிரிட்டிஷ் கவுன்சில் கொடுத்திருக்கும் ‘சர்வதேசப் பள்ளி’ விருது, எங்களை இன்னும் உற்சாகப்படுத்தி இருக்கு’’ என்கிறார் ஒரு மாணவி.

பள்ளியின் தூய்மை, மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம், அவர்களின் சமூகப் பங்களிப்பு, கலாசாரம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றும் முறை ஆகியவற்றை ஆய்வுசெய்து அளிக்கப்படும் விருது இது.

‘‘செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, சர்வதேசப் பள்ளி அங்கீகாரத்துக்கு பதிவுசெய்தோம்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்!

நேரில் வந்து ஆய்வுசெய்தாங்க. எங்களுக்குப் பல்வேறு சவால்கள் கொடுக்கப்பட்டன. பூடான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களிடம் இந்தப் பள்ளியைப் பற்றி இணையதளம் மற்றும் இ-மெயில் மூலம் சொல்லணும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லணும். இது ஓர் உதாரணம்தான். இந்த மாதிரி பல்வேறு கட்ட சவால்கள் இருந்தன. எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ததன் மூலம் நடப்பு ஆண்டுக்கு மட்டும் இல்லாமல், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் சர்வதேசப் பள்ளிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்கிறார் சாய்சுதா.

‘‘இந்த மூன்று ஆண்டுகளுக்கும் பிரிட்டிஷ் கவுன்சில் இன்னும் நிறைய சவால்களைக் கொடுக்குமாம். அதிலும் சாதித்துக் காட்டுவோம்” என்று நம்பிக்கையோடு ஒலிக்கிறது மாணவர்களின் குரல்.


- தா.நந்திதா
படங்கள்:  சொ.பாலசுப்ரமணியன், க.சர்வின்