நம்பிக்கை அளித்த சங்கீத் உத்சல்!
இனிய குரலோசையாலும், நளினமான நடனத்தினாலும் கடலூர் பார்வையாளர்களை ‘சங்கீத் உத்சவ் கலை சங்கமம்’ நிகழ்ச்சியால் கட்டிப்போட்டார்கள் சுட்டிகள்.


கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் போட்டிகளை, கடலூர் சி.கே மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நடத்திவருகிறது.


மற்ற மாணவர்களோடு சேர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் இசை, நடனப் போட்டிகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் னிவாஸ், வெற்றிபெற்ற சுட்டிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.


‘‘குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல அடித்தளம் அமைத்துத் தருவது நம் ஒவ்வொருவரின் கடமை. சி.கே பள்ளி நிர்வாகம் அதை சிறப்பாகச் செய்துவருகிறது. இங்கே பங்கேற்ற எல்லா மாணவர்களுமே கலைத் துறையில், நாளைய நட்சத்திரங்களாக ஜொலிப்பார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.



‘‘கடந்த ஆண்டுகளில்... இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களில் சிலர், ‘சன் சிங்கர்,’ ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ போன்றவற்றில் பங்கேற்று கலக்கிவருகிறார்கள். விரைவில் எங்களையும் அதுபோல பார்ப்பீர்கள்’’ என்ற ஒரு சுட்டியின் குரலில் மிளிர்ந்தது தன்னம்பிக்கை.
- க.பூபாலன் படங்கள்: எஸ்.தேவராஜன்