FA பக்கங்கள்
Published:Updated:

எதனாலே... எதனாலே?

எதனாலே... எதனாலே?

ங்களுக்கு ரொம்பப் பிடித்த கார்ட்டூன் சேனலை உற்சாகமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்போதும்  கொட்டாவி வருகிறதா? இதுதான் சாக்கு என அம்மாவும், ‘தூக்கம் வருதுல போய்ப் படு’ என தொலைக்காட்சியை நிறுத்துவார்கள். நம்மை அறியாமலே கொட்டாவி, விக்கல், புரையேறுதல், தும்மல், குறட்டை ஏன் வருகிறது?

எதனாலே... எதனாலே?

குறட்டை

‘தூங்கும்போது நான் குறட்டை விட்டேனா? இல்லவே இல்லை’ எனச் சிலர் சண்டைக்கே வருவார்கள்.

எதனாலே... எதனாலே?

குறட்டை விடுவது குற்றம் கிடையாது. ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம். தொண்டையில் சதை வளர்ந்து, ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் கஷ்டப்பட்டு செல்வதால் ஏற்படும் சத்தமே குறட்டை. முன்பு, வயதானவர்களுக்கு மட்டுமே வந்த குறட்டை, தற்போது பதின் வயதிலும் வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம், உடல் பருமன். பெரிய கழுத்து இருப்பவர்கள், குப்புறப்படுத்துத் தூங்குபவர்களுக்கு குறட்டை வரும். உடல் பருமனைத் தவிர்ப்பது, சரியான நிலையில் உறங்குவது, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை குறட்டைப் பிரச்னையில் இருந்து விடுதலை தரும். அதிக சப்தத்துடன் வந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள்.

விக்கல்

எதனாலே... எதனாலே?

நெஞ்சுப் பகுதியையும், வயிற்றையும் பிரிக்கும் தசையின் பெயர், உதரவிதானம். இந்தத் தசையில் ஏற்படும் துடிப்புதான், விக்கல். இந்தத் தசைத் துடிப்பு ஏற்படும்போது, நுரையீரல் சுருங்கி விரிவதில் சிரமம் ஏற்பட்டு, தொண்டையின் குரல் நாளம் வழியாக சத்தத்துடன் விக்கல் வருகிறது. வாயுக்கள் நிறைந்த பானங்கள் அருந்தும்போது, வேகமாகச் சாப்பிடும்போது, வயிறு நிரம்பச் சாப்பிடும்போது இந்தப் பிரச்னை ஏற்படும். விக்கல் ஏற்படும்போது பயமுறுத்தினாலோ, அதிர்ச்சியான செய்தியைச் சொன்னாலோ, உடல் உள் உறுப்புகள் சில நொடி அதிரும். உடலில் உள்ள நரம்பு இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஓரிரு நொடிகள் நின்று, மீண்டும் செயல்படும். இதனால், விக்கல் நின்றுவிடும். ஆனால், இந்த சுய மருத்துவ முறை மிகவும் தவறு. ஓரிரு நொடிக்கு மேல் அதிர்ச்சியில் நரம்பு இயக்கங்கள் நின்றுவிட்டால், பெரிய பிரச்னை ஏற்படும். எனவே, விக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்தவும். 10 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்து மூச்சுப் பயிற்சி செய்யவும். ஒரு நாளில் பல முறை விக்கல் வந்தால், மருத்துவரை அணுகவும்.

கொட்டாவி

எதனாலே... எதனாலே?

டல் சோர்வு அடையும்போதும், தூக்கம் வரும்போதும் உடலுக்கு இயல்பாகவே அதிக ஆக்ஸிஜன் தேவைப்படும். நமது மூளை, ‘அகலமாகத் திற’ என உடனடியாக வாய்க்குக் கட்டளையிட்டு,  அதிக ஆக்ஸிஜனை உள்ளே இழுத்துக்கொள்ளும். இதுவே, கொட்டாவி. இந்தக் கொட்டாவி விடும்போது, நுரையீரலுக்கும் அதிக ஆக்ஸிஜன் செல்லும். கொட்டாவி வருவதைத் தடுக்க முடியாது. கொட்டாவி வரும்போது, அதே மனநிலையில் இருக்கக்கூடிய மற்றவர்களுக்கும் கொட்டாவி வரும். எப்போதாவது கொட்டாவி விடுவது பிரச்னை இல்லை. ஆனால், தினமும் தொடர்ந்து கொட்டாவி வந்துகொண்டே இருந்தால், நுரையீரலில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம். எனவே, மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. 

புரையேறுதல்

சாப்பிடும்போது புரையேறினால், ‘யாரோ நம்மை நினைக்கிறார்கள். அதனால்தான் புரையேறுகிறது’ எனப் பலரும் சொல்வார்கள். அது உண்மை அல்ல. சாப்பிடும்போது, உணவு வயிற்றுக்குச் செல்ல வேண்டும். வயிறையும் நுரையீரலையும் தடுக்கும் தடுப்பு சரியாக இயங்காமல், உணவு மூச்சுக் குழாயில் தவறி விழுந்துவிட்டால், மூச்சு விடுவது பாதிக்கப்படும். இதனால், நுரையீரலில் இருந்து வேகமான அழுத்தத்துடன் காற்று வந்து, மூச்சுக் குழாயில் இருக்கும் உணவை வெளியேற்றும். இதையே,  புரையேறுதல் என்கிறோம். புரையேறும்போது தலையில் தட்டினாலும், தண்ணீர் அருந்தினாலும் எந்த மாற்றமும் நடக்காது. நுரையீரலே சரிசெய்துகொள்ளும். சில சமயங்களில் சிக்கல் ஏற்பட்டு, மூச்சுவிட சிரமப்படலாம். அப்போது, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். எந்த உணவாக இருந்தாலும் கவனத்துடன் மெதுவாக, நன்றாக மென்று விழுங்கினால், எந்தப் பிரச்னையும் இல்லை. அரட்டை அடித்தவாறு சாப்பிடுவது, நீர் அருந்துவதைத் தவிர்க்கவும்.

தும்மல்

எதனாலே... எதனாலே?

தும்மல் என்பது ஒற்றன் போல. நமது உடலுக்குள் ஒவ்வாத பொருள் ஏதேனும் வந்தால், அதனை நமக்கு உணர்த்துவதுதான் தும்மல். நுரையீரலில் மாசு, அலர்ஜி, தொற்று ஆகியவை ஏற்படும் சமயங்களில் தும்மல் வரும். தூசி, புகை மட்டுமல்ல, ஒருவரது உடலுக்கு அலர்ஜியாக இருக்கும் உணவைச் சாப்பிட்டாலும் தும்மல் வரும். அதிகாலை நேரத்தில் புற வெப்பநிலை குறைவாக இருக்கும். அந்தச் சமயங்களில் தூக்கத்தில் இருந்து எழும்போது, அவர்களுக்கு வெப்பநிலை ஒவ்வாமை காரணமாக, இடைவிடாத தும்மல் ஏற்படும். சிலருக்கு பனிக் காற்றால் தும்மல் வரலாம். தும்மல் வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அலர்ஜி காரணம்.அலர்ஜியைக் கண்டுபிடித்து, அதைத் தவிர்க்க வேண்டும். தும்மல் வரும்போது, கர்ச்சீஃப் வைத்து தும்ம வேண்டும். அடிக்கடி தொடர்ந்து தும்மல் வந்தால், சைனஸ், நுரையீரல் தொந்தரவுகள், நிமோனியா காய்ச்சல் போன்றவை இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுகுவது சிறந்தது.  

- பு.விவேக் ஆனந்த்