வைரல் ஹிட்ஸ்!
மனிதர்களின் அறிவியல் தொழில்நுட்பத்துக்கு விலங்குகள் தயாராகிவிட்டனவா? இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லும் அழகு வீடியோ. அமெரிக்காவின் லூயிஸ்வில்லே உயிரியல் பூங்காவுக்குச் (Louisville Zoo) சென்ற ஒருவர், தனது மொபைலில் எடுத்து இருந்த சில கொரில்லாக்களின் படங்களை ஒரு கொரில்லாவிடம் காண்பிக்கிறார். முதலில், புரியாமல் முழிக்கும் அந்தக் கொரில்லா, மெள்ள மெள்ள ஆர்வம் கொள்கிறது. ஒரு நண்பனைப் போல அருகில் அமர்ந்து படங்களைப் பார்த்து மகிழ்கிறது. 60 லட்சத்துக்கும் மேலானவர்கள் பார்த்து ரசித்த வீடியோ இது.

மேக்னஸ் கார்ல்ஸன் தெரியும்தானே? உலகின் இளமையான செஸ் கிராண்ட் மாஸ்டர். நார்வே நாட்டைச் சேர்ந்தவர். செஸ் விளையாட்டில் இப்போது தர வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர். சில ஆண்டுகளுக்கு முன் மேக்னஸ் தனது மேனேஜர் எஸ்பென்னுடன் ‘பிளிட்ஸ் செஸ்’ விளையாடினார். ஓட்டப்பந்தயங்களில் ‘ஹேண்டிகாப்’ என்பார்கள், அதுபோன்ற சலுகை ஆட்டம். வேகமாக விளையாடும் இந்தப் போட்டியில் எஸ்பென்னுக்கு மூன்று நிமிடங்கள். ஆனால், மேக்னஸுக்கு 30 விநாடிகள்தான். அதற்குள் எஸ்பெனை வெல்ல வேண்டும். என்ன நடக்கிறது என இந்த வீடியோவில் பாருங்கள். மின்னல் வேகப் போட்டி என்பதால் எல்லாமே வேகமாக நடக்கும். வீடியோ செட்டிங்கில் வேகத்தைக் குறைத்து 0.25 வைத்துப் பார்த்தால், தெளிவாகப் புரியும்.

த்ரில்லிங்கான விளையாட்டு, ஸ்கேட்டிங். உலகின் முக்கியமான ஸ்கேட்டிங் வீரரான ஸக் மேடம் (Zak Maytum), 100 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்கேட் செய்திருக்கிறார். அமெரிக்காவில் கொலரோடோ மாகாணத்தின் ஒரு மலைச் சாலையில் இந்த வேகத்தில் பறந்திருக்கிறார் ஸக். வளைவுகளில் திரும்புவதற்காகத் தரையில் கைகளை ஊன்றும்போது எல்லாம், ஒரு ஆக்ஷன் ஹீரோ அறிமுகம்போல தீப்பொறிகள் பறக்கின்றன. இந்த வீடியோ, வெளியான வேகத்தில் வைரல் ஹிட் அடிக்க, 28 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். நீங்களும் பார்த்து மகிழுங்கள். ஆனால், ‘நானும் செய்கிறேன்’ என இறங்காதீர்கள். ஏனெனில், ஸக் இதற்காக பல ஆண்டுகள் முறையாகப் பயிற்சி எடுத்து, அதன் பிறகே இந்த வேகத்தில் சென்றிருக்கிறார்.

ஜக்ளிங் (Juggling) என்பது கிட்டத்தட்ட மேஜிக் போல, நம்மை வியப்பில் ஆழ்த்தும் வித்தை. கான்டாக்ட் ஜக்ளிங் என்றால், ஒரு பந்தை நம் உடலின் பாகங்கள் மூலம் நகர்த்தி வித்தை காட்டுவது. அது ஒரு மாயத்தோற்றம்போல நடக்கும். இது உண்மையா அல்லது மேஜிக்கா என்பது சஸ்பென்ஸ். பல நூற்றாண்டுகளாக செய்யப்பட்டுவரும் இந்த ஜக்ளிங்கில் தேர்ச்சிபெறுவது சாதாரண விஷயம் அல்ல. இந்த வீடியோவில் சிறுவன் செய்வதைப் பாருங்கள். அசரவைக்கும் மேஜிக் ஆட்டம்.

- கார்க்கிபவா