கண்ணாடிப் பாலம் கலக்கல் பயணம்!
சீனா என்றதும் பெருஞ்சுவர், அதிவேகமான ரயில், உயரமான கட்டடங்கள் என பிரமாண்டமான விஷயங்கள் நினைவுக்கு வரும். அந்தப் பட்டியலில் புதிதாக இணைகிறது, உலகின் நீளமான கண்ணாடிப் பாலம்.

மத்திய சீனாவின் ஹூனான் (Hunan) மாகாணத்தில் அமைந்துள்ளது, Shiniuzhai National Geological Park. இரண்டு மலைகள் எதிரெதிரே இருக்கும் இந்தப் பகுதி, சுற்றுலாவாசிகளின் சொர்க்க பூமி. இந்த இரண்டு மலைகளையும் இணைக்கும் வகையில், ஒரு மரப் பாலம் இருந்தது. அதைக் கண்ணாடிப் பாலமாக மாற்றி, சுற்றுலாப் பயணிகளுக்கு ‘திக் திக்... பக் பக்’ அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

‘Brave Men’s Bridge’ என்று அழைக்கப்படும் இந்தப் பாலத்தின் நீளம், கிட்டத்தட்ட 1000 அடிகள். உயரம் 600 அடிகள். சாதாரண கண்ணாடியைவிட 25 மடங்கு உறுதியான கண்ணாடியால், மிகவும் பாதுகாப்போடு இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், கால்களுக்குக் கீழே தெரியும் அதலபாதாளத்தைப் பார்த்ததும், த்ரில்லில் அலறுகிறார்கள். சிலர், பயத்தில் பாதியில் அங்கேயே அமர்ந்துவிடுகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்வதற்காக காவலர்களும் அங்கே இருக்கிறார்கள். தைரியமாக முழுப் பாலத்தையும் கடந்தவர்களோ... அந்தரத்தில் நிற்பதுபோலவும் காற்றில் நடப்பதுபோலவும் இருக்கிறது என்கிறார்கள் குஷியோடு.
- என்.மல்லிகார்ஜுனா