மதுரை நகருக்குள், வைகை ஆற்றின் நடுவே அமைந்துள்ளது தீர்த்தவாரி மண்டபங்களுள் ஒன்றான மைய மண்டபம். ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மண்டபம் தற்போது எந்தவித பராமரிப்புமின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் கட்டுமானத்தில் பெரும்பகுதியை இழந்துவிட்ட இம்மண்டபத்தில், தற்போது ஒரு சிறிய பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. மேலும் இது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.
'மைய மண்டபம்', அக்கால மதுரையை ஆட்சி செய்த காலிங்கராயன் எனும் மன்னரால் 1293ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், இதன் தூண்களில் காணப்படும் வேலைப்பாடுகள் நாயக்கர் கால கட்டடக் கலையை ஒத்திருப்பதால், மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இம்மண்டபம் கட்டப்பட்டது எனவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இரு வேறு கருத்துக்களைப் பகிர்கிறார்கள். வண்டியூரை அடுத்துள்ள தேனூர் மண்டபமும், மைய மண்டபமும் சமகாலத்தில் கட்டப்பட்டவை என்ற கருத்தும் நிலவி வருகிறது.
ஆற்றில் ஓடி வரும் நீரின் வேகத்தைச் சமாளிக்கும் வகையில் மைய மண்டபத்தின் அடிப்பாகமானது பொறியியல் நுட்பத்துடன் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றைக் கடந்து மதுரை நகரை அடையும் கிராம மக்கள் வழிபடும் வகையில், தல்லாகுளம் பெருமாள் கோயில், திருவாப்புடையார் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் முதலிய மதுரை நகரின் முக்கிய கோயில்களின் உற்சவ மூர்த்திகளை வைத்து வழிபடும் தலமாகவும், மீனாட்சி சொக்கநாதருக்கான வசந்த மண்டபமாகவும 'மைய மண்டபம்' இருந்துள்ளது.
36 தூண்களைக்கொண்டிருந்த இம்மண்டபத்தில், தற்போது 22 தூண்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இதன் அடிப்பாகம் முழுவதும் காரைக் கற்கள் தூர்ந்துவிழும் நிலையில் உள்ளன. அடுத்த முறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமானால், மண்டபம் இடிந்துவிழும் வாய்ப்பு அதிகம். மைய மண்டபம் போன்றே சேதமடைந்து காணப்பட்ட தேனூர் மண்டபம், இந்து சமய அறநிலையத் துறையால் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. இதைப் போன்றே, மைய மண்டபமும் சீரமைக்கப்பட வேண்டும்.
கடந்த காலம் அறியாதவர்களுக்கு, நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவருக்கு எதிர்காலம் இல்லை. பழைமை காப்பது அவசியமன்றோ!