
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
இருக்கன்குன்றை அடுத்து ஆயிமலை நீண்டுகிடக்கிறது. ஆயிமலையின் மேல்முகட்டைப் பறம்பின் மக்கள் கடப்பதில்லை. அந்தத் திசையின் அடர்காடுகளில் சேர நாட்டினரே வேட்டையில் ஈடுபடுகின்றனர். எனவே, அப்போதிலிருந்து அது அவர்களின் பகுதியாகவே கருதப்படுகிறது. அந்தக் காட்டின் நடுவில்தான் குட்டநாடும் குடநாடும் இப்போது தத்தம் படைகளை ஒருங்கிணைத்துள்ளன.

குடவர்கோ போர்க்களம் வரவில்லை. அவருக்குப் பதில் அமைச்சன் கோளூர்சாத்தனே வந்திருந்தான். குட்டநாட்டு வேந்தன் உதியஞ்சேரல் தாக்குதலின் முழுத் தன்மையையும் தீர்மானிப்பவனாக இருந்தான். இரு நாட்டுத் தளபதிகளான துடும்பனும் எஃகல்மாடனும் அவனது உத்தரவை நிறைவேற்ற ஆயத்தநிலையில் இருந்தனர். ஆயிமலையின் இடப்புற விளிம்பின் வழியாக எஃகல்மாடன் தலைமையிலும் வலப்புற விளிம்பின் வழியாக துடும்பனின் தலைமையிலும் பறம்புக்குள் படையெடுக்க முடிவுசெய்திருந்தனர்.
நேரெதிராக இருந்த இருக்கன்குன்றின் உச்சியில் நிலைகொண்டிருந்தான் கூழையன். தேக்கனும் உதிரனும் வந்துசேர்ந்தனர். அருகில் இருந்த ஊர்களைச் சேர்ந்த நூறு வீரர்கள் கூழையனோடு இருந்தனர். தேக்கனிடம் நிலைமையை விவரித்தான் கூழையன். எதிரிப்படையின் எண்ணிக்கையைத் தோராயமாகத்தான் சொல்ல முடிந்தது. ``ஆயிமலையின் மேல்முகடுகளில் இருந்துதான் நம்மால் பார்க்க முடியும். மலையின் கீழ்ப்பகுதியில் உள்ளொடுங்கிய அடர்காட்டுக்குள் அவர்கள் இருப்பதால், அவர்களின் எண்ணிக்கையைச் சரியாக மதிப்பிட முடியவில்லை” என்றான் கூழையன். ஆனால், இருவர் படைகளும் காட்டுக்குள் வந்துவிட்டதை உறுதிசெய்தான். ``அவர்களின் தாக்குதல் திட்டத்தைத்தான் கணிக்க முடியவில்லை’’ என்றான்.
தேக்கன் நிலைமையைப் புரிந்து கொள்ள நேரமெடுத்துக் கொண்டான். சேரர்கள் இருவரையும் எளிதாக நினைத்துவிடக் கூடாது என அவனுக்குத் தெரியும். `கூழையனின் கூற்றுப்படி சேரப்படை முழுமையாக வந்து இரு வாரங்களாகப்போகின்றன. ஆனால், இன்னும் அந்த இடம் விட்டு அசையாமல் ஏன் இருக்கிறான்? அவனது காத்திருப்பு எதற்காக?’ - தேக்கன், கேள்விகளை எழுப்பியபடியே இருந்தான்.
``சேரன் ஆயிமலையின் இடப்புற விளிம்பு அல்லது வலப்புற விளிம்பு என ஏதேனும் ஒன்றின் வழியாகத்தான் உள்ளே நுழைந்தாக வேண்டும்” என்று கூழையன் சொன்னபோது, ``ஏன், இரண்டு பக்கங்களிலும் ஒருசேர உள்ளே நுழைய மாட்டானா?” எனக் கேட்டான் தேக்கன்.
``வாய்ப்பிருக்கிறது” என்றான் கூழையன்.
``இந்த இரண்டு பக்கங்களிலும் அவனது படையை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாவோம் என அவனுக்குத் தெரியுமல்லவா, பிறகு ஏன் அவன் காலம் தாழ்த்திக்கொண்டிருக்கிறான்?”
கூழையனிடம் பதில் இல்லை.
``நம்மை இங்கு கவனம் செலுத்தவைத்து, அவன் வேறு திசையில் நுழைய மாட்டானா?” எனக் கேட்டான் உதிரன்.
``இல்லை, வேறு எங்கும் அவனது படை நிலைகொள்ளவில்லை. இங்குதான் அவன் மையமிட்டுள்ளான்” என்றான் கூழையன்.
எப்படிச் சிந்தித்தாலும் அவனது செயலின் காரணம் பிடிபடவில்லை.
அன்றிரவு தேக்கன் எந்த முடிவும் எடுக்கவில்லை. `உதியஞ்சேரல் ஏன் காத்திருக்கிறான்? அவனுக்குத் தேவையான செய்தி வந்து சேரவில்லை அல்லது அவன் நினைத்த இடத்தில் எதிரிகளாகிய நாம் வந்து சேரவில்லை. இந்த இரண்டு காரணங்கள்தாம் இருக்க முடியும். சோழனும் பாண்டியனும் படையெடுத்துள்ள செய்தி அறிந்து அவர்களின் தாக்குதலுக்காகக் காத்திருக்கலாம் அல்லது நாம் ஆயிமலையின் எந்த விளிம்பில் அவனை எதிர்கொள்ள அணிவகுக்கப்போகிறோம் என்பதை அறியக் காத்திருக்கலாம்’ என்று சிந்தித்தபடியிருந்தான்.

பின்னிரவு தொடங்கியது. தேக்கன் சொன்னான், ``நாளை காலை இரு விளிம்புகளிலும் நமது படையை அணிவகுக்கச்செய்வோம். அதன் பிறகும் அவன் முன்னகரவில்லை என்றால், சோழ, பாண்டியப் படையெடுப்போடு ஏதோ ஒருவகையில் இவனது திட்டம் ஒருங்கிணைந்துள்ளது என்று பொருள்.”
கூழையனும் உதிரனும் தேக்கனின் சொல்லோடு முரண்பட முடியாமல் அமைதிகாத்தனர். தேக்கன் சொன்னான், ``அப்படியோர் ஒருங்கிணைப்பு இருப்பதாக நாம் முடிவுக்கு வந்தால், எதிரிகளை நோக்கி நமது படை முன்பாய்ச்சலில் சென்று தாக்கவேண்டியிருக்கும்.”
தேக்கனின் கூற்று சரியெனப்பட்டது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசினர். இடப்புற விளிம்பில் உதிரனின் தலைமையில் இருபது ஊர்களையும், வலப்புற விளிம்பில் கூழையனின் தலைமையில் இருபத்தாறு ஊர்களையும் அணிவகுக்குமாறு தேக்கன் சொன்னான். குதிரைப்படையினரோடு குன்றின் மேல்முகட்டில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து இரு பக்க நிலைமைக்கு ஏற்ப முடிவெடுத்துத் தாக்குதலை வலுவூட்டுவது தேக்கனின் வேலை என முடிவானது.
திட்டமிட்டபடி கூழையனும் உதிரனும் ஆயிமலையின் விளிம்புகளில் எதிரிகளைத் தாக்க ஆயத்தமாயினர். வலிமைமிகுந்த குதிரைப்படையோடு இருக்கன்குன்றின் மேலே நின்றபடி இரு பக்க நிலைமைகளையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் தேக்கன்.
மறுநாள் முழுவதும் எதிரிகளிடம் எந்த அசைவும் இல்லை. காத்திருந்தான் தேக்கன்.
விருந்து மண்டபம் கோடையின் வெக்கையைச் சிறிதும் உள்ளிறக்காமல் இருந்தது. ஆனால், தேறல் கணக்கின்றி உள்ளிறங்கிக்கொண்டிருந்தது. ஹிப்பாலஸ், குடியில் பேரார்வம் கொண்டவனைப்போலக் காட்டிக்கொண்டிருந்தான். ஆனால், அவன் குடிக்கும் வழக்கமான வேகம் இன்றில்லை. காரணம், அவனது தேவை வேறொன்று.
சோழவேலன் சொன்னார், ``எவ்வளவு அடர்கானகத்தில் இருந்தாலும் தேவையான அளவு வழியமைப்பதில் வல்லமை வாய்ந்தவர்கள் குறுங்காடர்கள். இருக்கையின் மீதிருக்கும் தூசியை ஊதித்தள்ளுவதைப்போல பின்னிக்கிடக்கும் செடிகொடிகளையும் புதர்களையும் விலக்கி எளிதில் வழியமைப்பார்கள். கீழ்க்காடர்களோ, நீரும் வேரும் கிழங்கும் அறிந்தவர்கள். மண்ணுள் இருக்கும் அனைத்தையும் பற்றி அவர்களைப்போல் அறிந்த இன்னோர் உயிர் இல்லை என்றே சொல்லலாம். மேல் மண்ணை மோந்து அடிமண்ணைக் கண்டறியும் ஆற்றல் கொண்டவர்கள். மண்ணுள் மணிக்கற்கள் இருக்கும் இடத்தில் நன்கு வேர்விட்டு வளரக்கூடியது `கருநொச்சி’ என்று கண்டறிந்தவர்கள் அவர்களே. அதனால்தான் கருநொச்சி இருக்கும் நிலத்தில் புதையல் இருக்கும் என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.
மேல்காடர்களோ நிலத்தின் மேற்புறத்தைத் தமது உடலின் மேற்புறம்போல பாவிப்பவர்கள். மரம், செடிகொடி என அனைத்தையும் இருக்கும் நிலையிலேயே ஆயுதமாக மாற்றத் தெரிந்தவர்கள். இவர்கள் மூவரும் ஆதியில் ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகள். `அந்த ஆதித்தாய், மண்ணுள்ளிருந்து விளைந்தவள்; மண்ணாலானவள்’ என்று சொல்கிறார்கள். அதனால்தான் இன்றும் மண் போர்த்தி உறங்கும் பழக்கம் அவர்களிடம் உண்டு.”
ஹிப்பாலஸ், இதுவரை இப்படியொரு பழக்கமிருக்கும் மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. மிரண்டு நின்றான்.
``கிழக்குப் பகுதி மலையின் ஆதிகுடிகள் இவர்கள். பச்சைமலைத்தொடர்போல் ஒற்றைக்குணம் கொண்ட நீள்மலையல்ல அது. ஒவ்வொரு குன்றுக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. கிழக்கும் மேற்கும் எதிர்த்திசைகளைப்போல இந்த இரு திசைகளில் உள்ள மலைமனிதர்களும் எதிரெதிர்த் தன்மைகளைக் கொண்டவர்களே!”
இத்தனை தலைமுறைகளாகத் தமிழ் நிலத்தோடு வணிகம் நடந்திருந்தும் இதுவரை கேள்விப்பட்டிராத செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஹிப்பாலஸ்.
சோழவேலன் தொடர்ந்தார். ``காட்டின் ஆதிக்குணங்களைத் தங்களின் குருதி நாளங்களில் உணர்ந்தவர்கள் நெடுங்காடர்கள். எனவே, அவர்களைக்கொண்டே படையெடுப்பின் முறைமையை வகுத்துள்ளான் என் மகன் செங்கணச்சோழன். சோழநாட்டு நிலைப்படையின் தேர்ந்த வீரர்கள் மட்டுமே இந்தப் படையெடுப்பில் பங்கெடுத்துள்ளனர். நெடுங்காடர்கள் கவசமென அணிவகுக்க, பறம்பை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கிறது சோழப்படை. அது சமதளப்போரில் எவ்வளவு ஆற்றல்வாய்ந்த தாக்குதலை நடத்துமோ அதைவிட வலிமையான தாக்குதலை இப்போது காடுகளுக்குள் நடத்த வல்லது” என்றான்.
விழித்த விழி நகராமல் நின்றது. `சேரனையும் பாண்டியனையும் கடந்தவனாக இருக்கிறான் சோழன்’ எனத் தோன்றியது. இந்த எண்ணம் தோன்றிய மறுகணமே `தான் கேட்ட கேள்விக்கான விடையைச் சொல்லாமல், மற்ற செய்திகளைச் சொல்வதன் மூலம் பேச்சை திசைதிருப்புகிறார் சோழவேலன்’ என்றும் தோன்றியது.

ஹிப்பாலஸ், ஆழ்ந்து சிந்தித்து `அவரின் வழியையே நாமும் பின்பற்றுவோம்’ என நினைத்துக் கேட்டான், ``இவ்வளவு வலிமைகொண்ட படை இருக்குமேயானால், நீங்கள் வெல்வதற்குப் பேரரசுகள் இருக்கின்றனவே. ஏன் பறம்பின் மீது படையெடுக்க வேண்டும்?”
உற்சாகத்தோடு பீறிட்ட சொற்கள் சட்டென நின்றன. வேகம் முறிந்ததுபோலானது. அமைதி சூழ்ந்தது.
சோழவேலன் சொல்லத் தயங்குகிறாரா அல்லது எப்படித் தொடங்குவது எனச் சிந்திக்கிறாரா என்பதை ஹிப்பாலஸால் கணிக்க முடியவில்லை. சற்று அமைதிக்குப் பிறகு ஹிப்பாலஸைப் பார்த்து சோழவேலன் கேட்டார், ``ஒரு நாட்டைச் செழிப்புமிக்க நாடு என எதை வைத்துத் தீர்மானிப்பீர்கள்?”
``அது மனிதர்கள் தீர்மானிப்பதன்று; அந்நாட்டின் சேமிப்பறைகளில் இருக்கும் பொன்னும் மணியும் முத்தும்தாம் தீர்மானிக்கின்றன.”
``சரியாகச் சொன்னீர்கள். யவனர்களாகிய நீங்கள், இந்நிலத்தில் நடக்கும் அரசாட்சிகளையும் நாடுகளையும் நன்கு அறிந்தவர்களாயிற்றே! நீங்களே சொல்லுங்கள், இந்த நிலத்தில் செழிப்புமிக்க நாடு எது?”
இதுபோன்ற பேச்சுகளில்தான் ஆழமான மனக்காயங்கள் உருவாகின்றன. அவை வணிகத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வார்த்தைகளுக்குக் கொடுக்கப்படும் விலையை நீதிமானோ, உழவனோ அறிந்ததைவிட வணிகனே அதிகம் அறிந்திருப்பான். எனவே, விடை சொல்வதைத் தவிர்த்தான் ஹிப்பாலஸ்.
``ஏன் தயங்குகிறீர்கள், நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்?”
சொல்ல முடியாமல் தவித்தவன் தயக்கத்தை உடைத்து மெள்ளச் சொன்னான் ``பொன்னும் மணியும் முத்துக்களைவிட மதிப்பு உயர்ந்தன. ஆனால், அவை மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. முத்துக்களோ அளவிடற்கரிய முறையில் கிடைக்கின்றன. பெரும்முத்துக்குளியலை நாள்தோறும் நடத்திவரும் பாண்டியநாடே செழிப்புமிக்கது.”
தலையசைத்துச் சிரித்தான் சோழவேலன் ``இப்படித்தான் தவறுதலாக மதிப்பிடுகிறீர்கள்.”
``இதில் என்ன தவறு இருக்கிறது?”
``முத்துக்களைவிடப் பொன்னும் மணியும்தாமே மதிப்பில் உயர்ந்தன?”
``ஆமாம்.”
``அந்தச் செல்வத்தை அளவிட முடியாத அளவு வைத்துள்ளது யார்?”
சற்றே தயங்கியபடி ``தெரியவில்லை” என்றான் ஹிப்பாலஸ்.
ஹிப்பாலஸின் முகத்தைக் கூர்ந்துபார்த்து, புருவங்களை உயர்த்தியபடி சொன்னார், ``பறம்பின் பாரி.”
கண்கள் பிதுங்க விழித்தான் ஹிப்பாலஸ். `என்ன சொல்கிறான் சோழவேலன்’ என்பதைப் புரிந்துகொள்ள முடியாத குழப்பத்தை, அவனது முகம் காட்டியது.
``நான் சொல்வதை உங்களால் ஏற்க முடியவில்லை அல்லவா?”
``ஆம்’’ எனத் தலையசைத்தான்.
``பச்சைமலைத்தொடரின் நீளம் அறிவீர்களா நீங்கள்?”
``எங்களின் நாவாய்கள் குமரிமுனை திரும்பினால் கரையையொட்டி ஒரு மாதகாலம் பயணப்பட்டு, சுபாகரா இடத்தில் மேற்குத் திசையில் திரும்புகின்றன. அந்த இடம் வரை நீண்டுகிடக்கிறது என நினைக்கிறேன்.”
``ஆமாம். நீங்கள் சொல்வது மிகச்சரி. கண்காண முடியாத தொலைவு நீண்டுகிடக்கும் இந்தப் பச்சைமலைத்தொடர் முழுவதையும் தம் வாழ்விடமாகக் கொண்டவர்கள்தாம் பதினான்கு வேளிர்குடிகள்.
மலையுள் உள்ள குகைப்பாறைகளின் சுரங்கங்களிலும் ஆற்றிலும் பள்ளத்தாக்கிலும்தான் விலை உயர்ந்த மணிக்கற்கள் கிடைக்கின்றன. உங்களின் யவனப் பேரரசர் உட்பட எல்லா நாட்டு வேந்தர்களும் செல்வந்தர்களும் எண்வகைத் திருமணிகளையே வாங்கவும் அணியவும் சேமிக்கவும் விரும்புகிறோம்.”
அமைதிகொண்டு கேட்டான் ஹிப்பாலஸ்.
``வெருகின் கண்போல முழுப்பச்சை நிறத்தின் நடுவில் செங்குத்தான வெண்கோடு ஒளிருமே பூமர வைடூரியம். அதைத்தானே யவனர்களாகிய நீங்கள் மிக உயர்ந்ததாகக் கருதுவீர்கள்?”
``ஆமாம்.”
``அந்த வகையான வைடூரியம் மிக அதிகமாகக் கிடைப்பது உடுவன்மலையில். அந்த மலையை ஆள்பவன் வேள் அழுந்துவன்.”
`இதை எதற்குச் சொல்கிறார்?’ எனச் சிந்தித்தான் ஹிப்பாலஸ்.
``தேன்துளியின் மீது கதிரவன் ஒளிபட்டு மின்னுவதுபோல் இருக்குமே அது என்ன வகை வைடூரியம்?” எனக் கேட்டார்.
ஹிப்பாலஸுக்கு, சட்டெனப் பெயர் நினைவில் வரவில்லை. சோழவேலன் சொன்னார், ``வாலவாயம். அது கிடைப்பது தணக்கன் குன்றில். அந்த இடம் நெடுவேள் ஆதனின் மலைப்பகுதியைச் சேர்ந்தது. அவனது மலைக்கு அடுத்து இருப்பதுதான் பன்றிமலை. மயிலின் கழுத்துபோலக் கார்நீலம் இறங்கி ஓடும் வைரக்கல் கிடைக்கும் இடம் அதுதான்” என்று பட்டியலிட்டார் சோழவேலன்.
இவரது பேச்சு எதை நோக்கிப் போகிறது என்பதை ஹிப்பாலஸால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஹிப்பாலஸின் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி சோழவேலன் கேட்டார், ``எங்கள் வேந்தர்கள் மிகவும் விரும்பி அணியும் வைடூரியம் எது தெரியுமா?”
``தெரியாது” என்றான்.
``முயலின் குருதி சிற்றகலின் ஒளி பட்டுத் திகைத்துத் திகைத்து ஒளி சிந்தும். அதன் ஒவ்வொரு மினுக்கும் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். அந்த வகையிலான வைடூரியத்தை `துகிர்கனகம்’ என்போம். அதுதான் இந்த நிலமெங்கும் இருக்கும் வேந்தர்கள் விரும்பி அணிவது. அது கிடைக்கும் இடம் புடவூர் வேளன்குன்றில்.
சொல்லியபடி இருக்கையை விட்டு எழுந்தார் சோழவேலன். ஹிப்பாலஸும் உடன் எழுந்தான். விருந்து மாளிகையின் எதிர்ப்புறச் சுவரை நோக்கி மெள்ள நடந்தபடி சோழவேலன் கேட்டார், ``யவன வணிகர்கள் நீலமணிக்கற்களை மிக அதிகமாக வாங்குவது எந்த நாட்டில்?”
``எங்கள் நாட்டுச் செல்வந்தர்கள் அதிகம் விரும்புவது கார்நீல மணிகளைத்தான். அந்த வகை மணிகள் அதிகம் கிடைப்பது ஈழநாட்டில்தான். எனவே, அங்கிருந்து அதிகம் வாங்குகிறோம். அரச குடும்பத்தினர் பொதுவாக கார்நீலத்தைத் தவிர்த்துவிட்டு மாநீல மணிகற்களைத்தான் பயன்படுத்துவர். அந்த வகைக் கற்கள் அதிகம் கிடைப்பது மணிபல்லவத் தீவில். எனவே, எங்களின் நாவாய்கள் ஆண்டு முழுவதும் மணிபல்லவத் தீவில் நிலைகொள்கின்றன.”
சுவரில் இருந்த ஓவியத்தில் பெண் ஒருத்தி நீர்நிறைந்த சிறு குவளையைக் கையில் வைத்துள்ளாள். அந்தக் குவளையில் உள்ள நீரிலிருந்து ஒளி படருவதுபோல் வரையப்பட்டிருந்தது. அதைக் காட்டி, ``இந்த ஓவியம் எதைக் குறிக்கிறது என்று உங்களால் அறிய முடிகிறதா?” எனக் கேட்டார்.
நீர் நிரம்பிய குவளையிலிருந்து எப்படி ஒளி வருகிறது என்பது ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை. அதைக் கேட்ட பிறகு சோழவேலன் சொன்னார், ``அதில் உள்ளது புன்னாட்டு மணிக்கல். அது உமிழும் நீலத்துக்கு இணையே இல்லை. குவளை நிறைய கறந்த பாலை நிரப்பி, அதற்குள் அந்த மணிக்கல்லைப் போட்டால் பாலுக்கு மேல் ஒளி பரவும்” என்றார்.
ஹிப்பாலஸின் முகம் முழுவதும் வியப்பு பரவியது. சோழவேலன் சொன்னார், ``அந்தப் புன்னாடு வேள்முடியனின் கையில் உள்ளது. உள்ளுக்குள் தீச்சுடர்போல் அணையாமல் ஒளி வீசும் இளஞ்சிவப்பு நிற மணிக்கற்கள்தாம் வேந்தர்கள் விரும்பி அணிவது. மகுடத்தில் சூடும் முடிமாலையில் அவ்வித மணிக்கற்கள் பதித்தால், அந்த வேந்தன் எந்தப் போரிலும் தோல்வியைத் தழுவ மாட்டான் என்பது நம்பிக்கை. அவ்வித மணிக்கற்கள் அதிகம் கிடைப்பது செருவின்குன்றில். அது அழும்பின் வேள் குன்றாய் இருக்கிறது.
இவர்கள் உட்பட ஒன்பது வேளிர்கள் இன்றும் பச்சைமலையை ஆள்கின்றனர். எஞ்சியோர் வேற்றுநாட்டுப் படையெடுப்புகளால் வீழ்ந்துவிட்டனர். பதினான்கு குடி வேளிர்களுக்கும் ஆதியிலிருந்து ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்களின் நிலப்பகுதியில் கண்டெடுக்கும் மணிக்கற்களைக் குலத்தலைவனிடம் கொடுப்பர். அவன் அவற்றைப் பாதுகாத்து வைப்பான். அந்தக் குலத்தலைவன் மரணத்தைத் தழுவியவுடன் புதியவன் பொறுப்பை ஏற்கும்போது செய்யும் முதற்பணி, ஏற்கெனவே இருந்தவன் காலத்தில் சேகரிக்கப்பட்ட மணிக்கற்களைப் பறம்புநாட்டிலிருக்கும் பாழி நகரில் போய் வைத்துவிடுவதுதான்.’’
சோழவேலன் சொல்லிவந்தது என்ன என்பதை ஹிப்பாலஸ் உணரும் வேளை தேறல்களின் மயக்கத்தை கணநேரத்தில் கலைத்தது. சோழவேலன் தொடர்ந்தார், ``ஆதியில் நெருக்கடியான சுழலில் யாரோ ஒரு வேளிர்குடி பாழி நகரில் போய் மணிகற்களைப் பாதுகாத்து வைத்திருப்பான். அதன் பிறகு வேளிர் குடிகளிடம் இது ஒரு சடங்காக மாறிவிட்டது. குலத்தின் புதிய தலைவன் பழையவனின் காலத்துச் சேமிப்பைப் பாழியில் போடுவது அவனது காலத்தைச் சிறப்பாக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இப்படி பதினான்கு வேளிர்குடியும் தலைமுறை தலைமுறையாக மணிக்கற்களைப் பாழி நகரில் போட்டுவிட்டு வருகின்றனர். பறம்பு வேளிர்கள் அதைக் காத்துவருகின்றனர்.”
செங்கணச்சோழன் படையெடுப்பின் நோக்கம் ஹிப்பாலஸுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால், இந்தச் செய்தியே தெரியாமல்தான் மற்ற வேந்தர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. சோழவேலன் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் பறம்பின் மாபெரும் செல்வம் கொள்ளிக்காட்டு விதையோ, சோமப்பூண்டு பானமோ, தேவாங்கு விலங்கோ அல்ல; பாழி நகர்ச் செல்வம்தான்.”
ஹிப்பாலஸ் எண்ணிக்கொண்டிருக்கும்போது சோழவேலன் சொன்னார், ``இன்று, நேற்று அல்ல... எத்தனையோ தலைமுறைகளாகப் பாழி நகரத்தில் குவிக்கப்படும் செல்வம் கதைகளாகப் பரவியபடியே இருக்கிறது. உலகின் மாபெரும் செல்வமான மணிக்கற்களை மலைமக்கள் பாழாய்ப்போடுகின்றனர் என்று எல்லோருக்கும் தெரியும். அதைக் கைப்பற்றும் கனவும் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் பாழி நகர் எங்கு இருக்கிறது என்ற குறிப்பு, வேளிர்குடியின் மிகச்சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் எந்தச் சூழலிலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். போரில் வீழ்ந்த வேளிர்களிடம்கூட அந்த உண்மையைப் பெற முடியவில்லை.”
ஹிப்பாலஸ் தன்னை முழுமுற்றாக மறந்த நிலையில் சோழவேலனின் சொல்லைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

``மறைக்கப்படுவதுதான் கவனிக்கப்படுவதாக மாறும். மேற்குத்திசையில் உள்ள பச்சைமலைத்தொடரில் வேளிர்களால் மறைக்கப்படுவது கிழக்குத்திசைக் குன்றுகளில் உள்ள நெடுங்காடர்களால் கவனிக்கப்படத் தொடங்கியது. தலைமுறை தலைமுறையாகப் பாழி நகரை அறிவதே நெடுங்காடர்களின் பணி. அவர்களின் முன்னோர்கள் இட்ட வாக்கும் அதுதான். மண்ணின் அடிவாரத்தை மோந்தே கண்டறியும் கீழ்க்காடர்கள்தான் பாழி நகர் நிலைகொண்டுள்ள நிலத்தைக் கண்டறிந்துள்ளனர். எண்ணிலடங்காத மணிக்கற்கள் குவிக்கப்பட்டிருக்கும் அந்த நிலத்தை அவர்கள் கண்டறிந்தபோதுதான் இன்னொன்றையும் சேர்த்தே அறிந்தனர்.
``என்ன?’’ என்று அதிர்ந்து கேட்டான் ஹிப்பாலஸ்.
``வேற்று மனிதர்களால் ஒருபோதும் அந்த இடத்தைக் கண்டறிந்து, அந்தச் செல்வத்தைக் கைப்பற்ற முடியாது என்பதுதான் அது. கீழ்க்காடர்களின் இந்தக் கூற்றை மேல்காடர்களும் குறுங்காடர்களும் ஏற்பதில்லை. அந்தச் செல்வத்தைக் கைப்பற்றக் கீழ்க்காடர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற காரணத்தினாலேயே காடர்களுக்குள் பல தலைமுறைகளாகப் பகை உண்டாகியது.
செங்கணச்சோழன் மூவரையும் ஒருசேரத் தாக்கியபோது, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மூவரும் ஒன்றுசேர்ந்துள்ளனர். அப்படியிருந்தும் சோழப் பேரரசின் பெரும்படையை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. சோழப்படைக்குக் கிடைத்த பெரும்வாய்ப்பு இயற்கையால் நிகழ்ந்த நிலச்சரிவு. அது நெடுங்காடர்களின் குடியிருப்புகளை அழித்தது. அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து சோழப்படையின் மீது தாக்குதல் தொடுக்க முடியாத நிலையை உருவாக்கியது. அப்படியிருந்தும் சோழர்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. போர் நெடுங்காலம் நீடித்தது. இறுதியில் மேல்காடர்கள் உடன்படிக்கைத் திட்டத்தைச் சொன்னார்கள். செங்கணச்சோழன் அதை ஏற்றுக்கொண்டு தாளமலையைக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டான்” என்றான் சோழவேலன்.
ஹிப்பாலஸ், இருக்கையின் முனைக்கே வந்துவிட்டான். மீண்டும் எழுந்தார் சோழவேலன். ``போரிட்டுக்கொண்டிருந்தவர்களை ஒன்றாக இணைத்தது நெடுங்காடர்கள் சொன்ன உடன்படிக்கைத் திட்டம். இருவரின் நீண்டநாள் கனவுகளும் ஒன்றாயின. அதுதான் பாழி நகர். அந்தப் பெருஞ்செல்வத்தை இணைந்து கண்டறிய முடிவுசெய்தனர். காட்டைப் பிளந்து முன்னேறும் ஆற்றல்கொண்ட படையோடு என் மகன் பாழி நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.”
சோழனின் திட்டத்தை முழுமையாக அறிந்தபோது ஹிப்பாலஸ் மெய்சிலிர்த்து நின்றான்.
``கிழக்குக்கும் மேற்குக்குமான பகை, வேந்தனுக்கும் வேளிருக்குமான முரணோடு இணைந்துவிட்டது. இனி பாழி நகரைக் காப்பாற்றப் பாரியால் முடியாது” என்றான் சோழவேலன்.
இருக்கன்குன்றின் மேலே காத்திருந்த தேக்கனுக்கு உதியஞ்சேரலின் திட்டத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயிமலையின் இரு பக்க விளிம்புகளிலும் தனது படையைக் கொண்டுபோய் நிறுத்திய பிறகும் எதிரிகளின் பக்கத்தில் எந்தவித அசைவும் இல்லை. `என்னதான் நினைக்கிறான் உதியஞ்சேரல்?’ என நினைத்தபடியே இருந்த தேக்கன், குதிரைவீரர்களை அழைத்தான். அறுவர் முன்வந்தனர். தன்னோடு எவ்வியூரிலிருந்து வந்த எயினியிடம் சொன்னான், ``அறுவரையும் அழைத்துக்கொண்டு எதிரில் இருக்கும் ஆயிமலையின் முகட்டுக்குப் போ. அங்கு செல்லும் வரை நமக்குக் குதிரைப்பாதை இருக்கிறது. தேவைப்பட்டால் குதிரைப்பாதையையும் கடந்து சில வீரர்களை அனுப்பிவை. ஆயிமலையின் மறுபக்கம் எதிரிகளின் நடவடிக்கையை அறிந்து வா” என்றான்.
எயினி, ஆறு வீரர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். இருக்கன்குன்றிலிருந்து இறங்கி ஆயிமலையின் மேற்புறம் ஏறி உச்சி முகட்டை அடைய வேண்டும். போரின் முதற்பணி தனக்கு வழங்கப்பட்டதை எண்ணி மகிழ்வோடு விரைந்தான் எயினி.
பறம்பில் உள்ள குதிரைகளை, வாரிக்கையன் இரு பாகங்களாகப் பிரித்திருந்தார். அதில் பெரும்பாகத்தை எவ்வியூரில் வைத்துக்கொண்டார். சிறு பாகத்தை மூன்றாகப் பிரித்து மூன்று திசைகளிலும் களம்நோக்கி அனுப்பினார். அவர் அனுப்பிய இருநூறு குதிரைகள் முந்தைய நாள் தேக்கனின் இடத்துக்கு வந்து சேர்ந்தன. அதை முழுமையாகத் தன்னுடன் வைத்துக்கொண்டான். ஆயிமலையின் இரு பக்க விளிம்புகளிலும் கூழையனும் உதிரனும் எதிரிகளைத் தாக்க ஆயத்தநிலையில் இருந்தனர். ஆனால், அவர்களுக்குக் குதிரைவீரர்களை அனுப்பவில்லை. தாக்குதலை மேலிருந்து கண்காணித்துக்கொண்டிருந்த தேக்கனிடம்தான் அனைத்துக் குதிரைவீரர்களும் இருந்தனர். யாருக்கு உதவி தேவையோ அவர்களை நோக்கிக் குதிரைப்படையை அனுப்புவதுதான் தேக்கனின் திட்டம்.
எயினியின் தலைமையிலான ஆறு வீரர்களும் இருக்கன்குன்றைத் தாண்டி ஆயிமலையில் ஏறத் தொடங்கினர். குதிரைகள் பிறந்தது முதலே பறம்பின் மலைப்பாதையில் ஓடிப்பழகியவை. எனவே, மலையேற்றத்திலும் வேகம் குறையாமல் வீரர்களைச் சுமந்து செல்லக்கூடியவை.
ஆயிமலையின் பாதி உயரத்தைக் கடந்தனர். சில இடங்களில் ஆபத்தான சரிவுப்பாறைகள் உண்டு. அந்த இடங்களில் குதிரையை விட்டு இறங்கி நடந்து செல்வர். முன்னால் சென்றுகொண்டிருந்த எயினி இறங்கி நடந்தான். வீரனாகிய தனக்கு வழங்கப்பட்ட இந்தப் பணி குறித்து எயினியின் மனதில் மகிழ்வு பீறிட்டபடி இருந்தது. சரிவுப்பாறையில்கூட குதிரையை நடக்கவிடவில்லை அவன். ஓடுகிற அதே வேகத்தில் இழுத்துக்கொண்டு நடந்தான். பாறையைக் கடந்ததும் குதிரையின் மீது ஏறிக் கடிவாளத்தைச் சுண்டினான். வரிசையாக மற்ற வீரர்களும் குதிரையின் மீது ஏறினர். வேகம் கூடியது. ஆயிமலை முகட்டின் பின்புறமிருந்து உதியஞ்சேரல் எதை எதிர்பார்த்துக் காத்திருந்தானோ அது அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது.
சோழனின் பெரும்படை சுழிப்பள்ளத்தை அடைந்தது. படையின் வால்பகுதி மறுமலையைக் கடந்து கிடந்தது.
இடப்புறக் கரையின் மேல் மறைந்தபடி வந்துகொண்டிருந்த பிட்டன் தலைமையிலான படையும் வலப்புறத்திலிருந்த இரவாதன் தலைமையிலான படையும் தங்களின் நிலையிலேயே இருந்தனர். இந்தப் படை சுழிப்பள்ளத்திலிருந்து இடப்புறமாக எழுவனாற்றில் நுழையப்போகிறதா அல்லது வலப்புறமாக வட்டாற்றில் நுழையப்போகிறதா என்பதைப் பொறுத்துத்தான் அவர்கள் தாக்குதல் அமையும். தாக்குவது என்று முடிவானால் அதற்கான உத்தரவை இரவில்தான் பாரி அறிவிப்பான் என்று இருவரும் நம்பினர். ஏனென்றால், படையின் எண்ணிக்கை மிகப்பெரியது. இரவுதான் சிதறடிக்கும் தாக்குதலுக்குப் பொருத்தமானது.
ஆற்றின் இரு பக்கங்களும் மேலிருந்து படை நகர்வைக் கவனிக்கத் தொடங்கினர். ஆற்றின் போக்கிலே எவ்வியூர் நோக்கிப் போகப்போகிறார்களா அல்லது இணையும் ஆற்றுத்தடத்தில் நுழையப்போகிறார்களா என்பதை உன்னிப்பாகக் கவனித்தனர். விருகமரம் ஒன்றின் மீது ஏறி, தலையை மட்டும் வெளியே நீட்டி உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் பிட்டன். ஆற்றின் வலப்புறம் பாறையின் மேல்மடிப்பிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான் இரவாதன். மலைமுகட்டின் மீதிருந்த பாரியின் இரு கண்களும் சுழிப்பள்ளத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன.
பொழுது புலர்ந்த சிறிது நேரத்திலேயே, கதிரவன் ஒளியில் மின்னத் தொடங்கிய வட்டாற்று மணலில் தம்முடைய கால்களைப் பதித்தன சோழப்படையின் முதல் வரிசை யானைகள்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...