மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10

ன்னல் ஸ்கிரீன் துணியால் வடிகட்டிய நிலவு. நைட்டியில் இருந்த ரம்யா, கட்டிலில் தன் மடியில் இருந்த கணினியில் தீவிரமாக இருந்தாள்.

‘நன்மைகள் நடக்க வேண்டுமானால் தீயவர்கள் ஒழிக்கப்பட வேண்டும்’ - இதுதான் ரம்யா உருவாக்கிக்கொண்டிருக்கும் விளையாட்டின் முழக்க வாக்கியம். ‘பைரவி’ என்ற அந்த வீடியோ கேமில் அவளேதான் நாயகி. கொலை இருந்தால்தான் பரபரப்பாக இருக்கும் எனச் சொன்னது ‘பொன்னியின் செல்வன்’ கதைக்காக மட்டுமல்ல... அவளுடைய கேமுக்காகவும்தான். இரவில் நேரம் போவதே தெரியாமல் விழித்திருப்பது அவளுக்கு ஒரு நாளும் சோர்வாக இருந்ததே இல்லை. ஹாஸ்டல் அறையில் அவளுடைய கட்டிலில் அமர்ந்து, மடியில் கிடத்தியிருந்த மடிக்கணினியில் ஓர் அரசியல்வாதியை உருவாக்கிக் கொண்டி ருந்தாள். வீழ்த்த வேண்டியவர்கள் பட்டியலில் நிச்சயம் ஓர் அரசியல்வாதியும் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள். சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்குக் காரணமான அயோக்கியர்களை பைரவி எப்படி வீழ்த்துகிறாள் என்பதுதான் அவள் உருவாக்கும் விளையாட்டின் மையம்.

இதுவரை ஐந்து பேரை வீழ்த்தியிருக்கிறாள். இன்னும் கொஞ்சம் நகாசு வேலைகள் முடிந்ததும், முத்துராஜாவிடம் சொல்லி இந்த கேமையும் விற்பனைக்குக் கொண்டுவரலாம் என நினைத்தாள். அதற்குமுன் வினோத்திடம் இதைக்காட்டி பிரமிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது அவளுடைய ஆசை.

அது இரண்டு ஸ்பின்ஸ்டர் தங்குவதற்கான அறை. அங்கு எல்லாமே இரண்டு அல்லது நான்கு பெண்கள் தங்கும் அறைகளாகவே இருந்தன. பக்கத்தில் படுத்திருந்த வினோதினி, விளக்கொளியின் தொல்லையால் கண்களைத் திறக்காமலேயே ‘‘போதும்... தூங்குடி’’ என்று அடிக்கடி முணுமுணுத்த வாறே புரண்டபடி... உருண்டபடி இருந்தாள். பொறாமையாகத்தான் இருந்தது. இரவு 9 மணிக்குப் படுத்தால், காலை 9 மணிக்குத்தான் எழுந்திருப்பாள். இரவு ஒரு மணி ஆகிவிட்டதை லேப்டாப்பில் ஓடிக்கொண்டிருந்த கடிகாரம் சுட்டியது.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10

இனி எப்படியாவது தூங்கினால்தான் நல்லது. காலையில் பொன்னியின் செல்வன் பழுவேட்டரை யர் போர்க் காட்சிகள் பாக்கியிருந்தன. விளக்கை அணைத்துவிட்டு நீலநிற மெல் ஒளியில் கண்ணாடி யில் அவளுடைய உருவத்தைப் பார்த்தாள். தான் உருவாக்கிய தன்னுடைய கிராஃபிக்ஸ் உருவத்தில் இருப்பதுபோலவே, தான் தெரிந்ததைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். கம்ப்யூட்டரைப் பார்த்துப் பார்த்துக் கண்ணே தன்னை அப்படிப் பழக்கிக் கொண்டுவிட்டதாகத் தலையை ஆட்டிச் சிரித்தாள். போர்வையைப் போர்த்திக்கொண்டு நித்திரைக்குப் போகும்வரை, கண்ணாடியில் அந்த உருவம் நின்றிருந்தது. பிறகு, புகைபோலக் கரைந்தது.

மஜூம்தார் தன் ஆய்வுக்கூடத்துக்கு ஜீப்பில் வந்திறங்கினார். தன் கருத்துக்குக் கூட்டத்தில் ஒரு கவனம் இருந்ததை அவர் அனுமானித்தார். எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல இது சைக்கோ சீரியல் கில்லிங் இல்லை என்பது அவருக்குத் தெரிந்தது. மெரினாவில் இறந்துபோன ஜஸ்டினின் விரல்களில் தலைமுடிகள் சிக்கியி ருந்ததைக் கண்டெடுத்து அவரிடம் ஆய்வுக்கு அனுப்பியிருந்தனர். அவற்றை எலெக்ட்ரானிக் மைக்ரோஸ்கோபிக் ஆய்வுக்கும் கெமிக்கல் ஆய்வுக்கும் உட்படுத்த வேண்டியிருந்தது. மைக்ரோஸ்கோபிக் ஆய்வில் இரண்டும் ஒரே பெண்ணின் தலைமுடிதான் என்பதைக் குறித்திருந்தார். நிறம், ஸ்ட்ரெக்சர், மரபணு எனப் பல கட்டங்களில் அதை நிரூபிக்க வேண்டியிருந்தது.

கெமிக்கல் டெஸ்ட்டுகள் பாக்கி. போன் தொல்லையே வேலையைப் பாதித்தது. தலைமைச் செயலாளர் கொடுத்த பிரஷரில், அரைமணி நேரத்துக்கு ஒரு போன் வந்தது. மறுபடி போன். தலைமைச் செயலாளரின் உதவியாளர். ‘‘இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆய்வு முடிந்துவிடும்’’ என்றார் மஜூம்தார்.

‘‘யார்னு தெரிஞ்சுடுச்சா?’’ என அபத்தமாகக் கேட்டார் உதவியாளர்.

‘‘கொலை செஞ்சது பெண்தான்னு தெரிஞ்சுடும். அதற்கப்புறம் நாம சந்தேகப்படற பெண்ணோட ஜீன் சாம்பிள் எடுத்து ஒப்பிட்டுப் பார்க்கணும்.’’

‘‘சீஃப் செகரட்டரி கேட்டா என்ன சொல்லணும்?’’

‘‘சாம்பிள் எடுத்தாச்சு. அக்யூஸ்ட் சாம்பிளோட கம்பேர் பண்ணணும்னு சொல்லுங்க.’’

‘‘அக்யூஸ்ட் யாராவது கஸ்டடியில இருக்காங்களா?’’

‘‘இன்னும் இல்ல.’’

‘‘இப்படிச் சொன்னா எப்படி?’’

‘‘அதை கமிஷனர் கிட்ட கேளுங்க. நான் ஃபாரன்சிக் டிபார்ட்மென்ட்...’’

மஜூம்தார் மேற்கொண்டு பேச விரும்பாமல் போனை வைத்துவிட்டார். மறுபடி போன் அடித்தது. ‘‘பேசிக்கிட்டிருக்கும்போதே கட் பண்றீங்க?’’ என்றது உதவி.

‘‘அர்த்தமில்லாம பேசிக்கொண்டிருந்தா, ரெண்டு மணி நேரத்தில முடியற வேலை மூணு மணி நேரமா மாறிடும்.’’

இந்தமுறை பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த உதவியாளர் போனை வைத்துவிட்டார். தன் முப்பது வருட சர்வீஸில் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்குப் பிறகு இவ்வளவு டென்ஷன் ஆனது இந்தக் கொலைகளில்தான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10

தலைமுடியில் இருக்கும் கெமிக்கல் கன்டென்ட் லிஸ்ட் எடுத்தார் மஜூம்தார். ஆல்கஹால் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் இருந்தன. இன்ஸ்பெக்டர் சொல்லியிருந்தார். முதல் கொலையின்போது அவள் ஒரு பாரில் இருந்ததாக. கொலைகாரியின் தலைமுடிதான் என்பதற்கான முதல் படி. பெண்ணின் தலைமுடி... குடித்தவளின் தலைமுடி.

ரத்த சாம்பிள், சிறுநீர் சாம்பிளைவிட முடி மிகத் துல்லியமான ஆதாரம். ரத்தமும் சிறுநீரும் இரண்டு மூன்று நாள்கள் ஆகிவிட்டால் கெமிக்கல் டெஸ்ட்டில் சிக்காது. முடி, சில மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும். கொலைகாரி இப்போது சிக்கினாலும் அவளுடைய தலைமுடியும் இந்த சாம்பிளும் ஒத்துப்போகும். ஆல்கஹால் தெரியும். பெரிய திருப்தியாக இருந்தது. விஷயம் புரியாமல் ‘கொலைகாரி கிடைச்சுட்டாளா, கொலைகாரி கிடைச்சுட்டாளா’ என்பது சரியான நச்சரிப்பு.

சாப்பிடக் கிளம்பும் எண்ணத்தில் தலைமுடி களைப் பத்திரப்படுத்த நினைத்த நேரத்தில்தான் மஜூம்தார் கவனித்தார். ஒரே பெண்ணின் தலைமுடி என நினைத்திருந்த இன்னொரு முடியில் எந்த ஆல்கஹால் கன்டென்ட்டும் இல்லை. திகைப்பு எழுந்தது. இரண்டுமே ஒரே பெண்ணின் தலைமுடிதானா என்பதிலேயே சந்தேகம் வந்தது. மறுபடி ஜீன் ஒற்றுமைகளைப் பார்த்தார். ஒரே பெண்தான். ஒரு பெண்ணின் இரண்டு தலைமுடிகளில் ஒன்றில் சாராயம் இருந்ததும் இன்னொன்றில் சாராயம் இல்லாமை யும் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஒரே ஒரு வாய்ப்பு இருந்தது. குடிப்பதற்கு முந்தைய அவளுடைய ஒரு தலைமுடியை விரலில் பிடித்து இழுத்து வைத்திருந்து, அவள் குடித்த பிறகு இன்னொரு முடியைச் சேகரித்திருக்க வேண்டும். ஒரு செல்போன் திருடனுக்கு இதெல்லாம் வேலையா? மஜூம்தாரின் உதவியாளர், ஹாலில் இருந்து அறைக்குள் நுழைந்து, ‘‘சார், டெஸ்ட் முடிஞ்சுதா?’’ என்றார். ‘சாப்பிடப் போகலாமா?’ என்று அர்த்தம்.

மஜூம்தார் பிரச்னையை விளக்கினார். ‘‘ஒரே பெண்ணோட ரெண்டு தலைமுடிகள் வெவ்வேறு ரிசல்ட் காட்டுதுன்னா ரொம்ப கன்ஃபியூஷனா இருக்கே?’’ என அந்த உதவியாளர், மஜூம்தார் சொன்னதையே வேறு வாக்கியத்தில் சொன்னார்.

‘‘அந்தப் பெண்ணோட தலைமுடியை ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒண்ணை எடுத்து அதை விரல்ல சுத்தி வெச்சிருந்து மறுவாரம் மெரினாவில இன்னொரு தரம் சேகரிச்சு... ஏதோ இடிக்குது.’’

‘‘சார் நீங்க அன்னைக்கு மீட்டிங்ல சொன்ன மாதிரி மோகினியோட முடியா இருக்குமா?’’ உதவியாளர் இப்படி ஒரு சந்தேகத்தைச் சொல்லக் கூச்சப்படவில்லை.

‘‘அப்படியிருந்தாலும் வெவ்வேறு டைம்ல எடுத்த முடி ஒரே நேரத்தில விரல்ல எப்படி இருக்கும்?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 10

‘‘ஜஸ்டின் அந்தப் பொண்ணு மேல லவ்வாகி அவளோட முடியைப் பத்திரமா வெச்சிருந்திருப்பானா?’’ என்றார் உதவியாளர்.

‘‘உனக்குப் பசியெடுத்தா நீ போய்ச் சாப்பிடுப்பா. அவசர ஐடியாவெல்லாம் சொல்ல வேணாம்.’’

‘‘இல்ல சார்... வந்து...’’

‘‘ஒண்ணுமில்ல... போயிட்டு வா.’’

உதவியாளர் ஓர் அசட்டுச் சிரிப்புடன், ‘‘யோசிக்கிறேன் சார்’’ என அங்கிருந்து அகன்றார். மஜூம்தார் வாய்ப்புகளை யோசித்தார். ஒரு வார இடைவெளியில் ஒரு பெண்ணின் தலையிலிருந்து இரண்டு முடிகளை ஒருவனால் எப்படிச் சேகரிக்க முடியும்? சேகரிப்பது என்பது பெரிய வார்த்தை... செல்போன் திருடும்போது கையோடு தலைமுடியும் வந்திருக்க வேண்டும். முதல் செல்போன் திருட்டின்போது கிடைத்த முடிகள், செல்போனோடு செல்போனாக அவன் பாக்கெட்டில் கிடந்திருக்க வேண்டும். இரண்டாவதாகத் திருடிய போனில், இரண்டாவது முடி கிடைத்திருக்க வேண்டும். ஒரே பெண்ணிடம் இரண்டு முறை செல்போன் திருடியிருக்கிறான்.

மிகவும் கஷ்டமான திருப்பங்கள் கொண்ட கற்பனையாக இருந்தாலும், ஓரளவுக்கு ஒத்துப்போனது இதுதான்.

மஜூம்தார் சாப்பிடும் இடத்துக்கு வந்தார். கை கழுவும் பேசினுக்குமேலே ஓரங்களில் சாயம்போன ஒரு நிலைக் கண்ணாடி உண்டு. வழக்கமாகக் கைக் கழுவி கர்ச்சீப்பால் துடைத்தபடி முகத்தைப் பார்ப்பார். அப்படிப் பார்க்கும் போது, யாரோ அவரின் ஆய்வறையிலிருந்து அவசரமாக வெளியேறுவது தெரிந்தது. நழுவி ஓடுவதில் ஒரு திருட்டுத்தனம். வேகமாக வெளியே வந்து பார்த்தார். வாசலிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் யாருமே இல்லை. அவ்வளவு சீக்கிரம் ஓடியிருக்க முடியாதே என மேலும் கீழும் கவனித்தார். மரத்தின் கிளைகளைக்கூடப் பார்த்தார். பாய்ந்து ஓடி மறைந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. உள்ளே வந்தார். காணாமல்போன பொருள் என்ன என்பதை வேகமாகக் கணித்தார். தலைமுடி இருந்த பாலிதீன் கவர் அங்கே இல்லை. அதைப் பற்றிய ரிப்போர்ட்டுகளும் காணவில்லை.

கண்ணாடி வழியாகப் பார்த்த உருவத்தை நினைவுகூர நினைத்தார். வேகமாக மறைந்தது மட்டுமே நினைவில் இருந்தது. ‘அது ஒரு பெண்ணாக இருக்கலாம்’ என்பதை நினைத்தபோது அவருக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

(தொடரும்)