
தமிழ்ப்பிரபா, படம்: ப.சரவணக்குமார்
``மத்தவங்க காட்டுற அதிகப்படியான கருணைதான் எங்களை இயல்பா இருக்கவிடாமப் பண்ணுது ப்ரோ” என்று சொல்லும் அருண், `Multiple Sclerosis’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்.
சேல்ஸ்மேனாக வேலையைத் தொடங்கியவர், இளம் வயதிலேயே விற்பனைத் துறையில் மிகப்பெரிய பொறுப்பை வகித்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆறு இலக்கச் சம்பளம். மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக நாள்களைக் கழித்துக்கொண்டிருந்தவரைத்தான் காலம் சிதைத்துப்போட்டது.
``மகனுக்கு பாஸ்போர்ட் அப்ளை பண்றதுக்காகப் போகும்போது, என் நடையைப் பார்த்தும் நான் பேசியதை வெச்சும் செக்யூரிட்டி என்னை உள்ளே விடலை. `குடிச்சிருந்தா உள்ளே அனுமதி இல்லை’னு சொல்லிட்டார். அப்போதான் நான் அந்த நோயால் ரொம்பத் தீவிரமா பாதிக்கப்பட்டிருக்கேன்னு புரிஞ்சது. மனைவிக்கு வெளிநாட்டுல வேலை கிடைச்ச சமயம் அது. என்னால அவங்க கரியர் பாதிக்கக் கூடாதுனு அவங்களையும் என் மகனையும் அமெரிக்காவுக்கு அனுப்பிவெச்சேன். அமெரிக்கா போய் நாலு வருஷம் ஆகுது” என அருண் சொல்லிக் கொண்டிருக்கும்போது, மகனின் நினைவு வந்து கண்கள் கலங்குகின்றன.
நோயின் தீவிரத்தால் நடையும் பேச்சும் முற்றிலும் செயலிழந்து, வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். இதனூடாகத் தனிமையும் அருணைக் கொன்றிருக்கிறது. எல்லா வகைகளிலும் சோர்ந்திருந்தவருக்கு ஏதாவது ஒரு கிளையைப் பற்றிக்கொண்டு மேலெழ வேண்டும் என்கிற எண்ணம் துளிர்த்திருக்கிறது. தனக்கு வந்திருந்த நோயைப் பற்றி இணையத்தில் படித்திருக்கிறார். அதைக் குணப்படுத்த முடியாது என்று தெரிந்தது. ஆனாலும், தனக்கு இருக்கும் மனவுறுதி தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு இருக்குமா என்கிற கேள்வி அவரைத் துரத்தியது.
“ `லைஃப் கோச்’னு ஒரு கோர்ஸ் இருக்கு. அதை ஆன்லைன்ல படிச்சு பாஸ் ஆனேன். அது கவுன்சலிங் கொடுக்கிற வேலையெல்லாம் கிடையாது. பிரச்னைகளை வெறுமனே காதுகொடுத்து மட்டும் கேட்கணும். இன்னைக்கு உலகத்துல எல்லோரும் பேசத்தான் தயாரா இருக்காங்களே தவிர, கேட்க விரும்புறதில்லை. அதுவும் என்னைப்போல பாதிப்புக்குள்ளான வங்களோட பிரச்னையை என்னால தானே ப்ரோ புரிஞ்சுக்க முடியும்” என மென்சோகத்துடன் சிரிக்கிறார்.

கடந்த இரண்டு வருடங்களாக ‘லைஃப் கோச்’சாக இருக்கும் அருண், தன்னைப்போல Multiple Sclerosis நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களுக்கும் தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கும் செவிகொடுப்பதன் மூலம் அவர்களின் மனபாரங்களைக் காலியாக்குகிறார்.
``பிரசவ சமயத்துல ஒரு பெண்ணுக்கு இந்த நோய் வந்ததும், குழந்தையை மட்டும் வெச்சுக்கிட்டு, இவங்களை விவாகரத்து செஞ்சு அனுப்பிட்டாங்க. ஒருமுறை, இவங்களை வீட்டுல விட்டுட்டு அவங்க அம்மா, கடைக்குப் போயிட்டாங்க. இவங்களுக்கு பீரியட்ஸ் வந்திருக்கு. வீல்சேர்ல இருந்து எழவும் முடியாது. அப்படியே நகர்ந்துக்கிட்டே பாத்ரூம் நோக்கிப் போகும்போது தவறி விழுந்துட்டாங்க. அவங்க அம்மா வந்து பார்க்கும்போது இந்தப் பெண்ணைச் சுற்றிலும் ரத்தமும் யூரினும்... அம்மா மயங்கி விழ... இப்படி ஒரு வாழ்க்கை தனக்குத் தேவையான்னு இந்தப் பொண்ணு தற்கொலை செய்துக்கிற அளவுக்குப் போயி எப்படியோ பிழைச்சுக்கிட்டாங்க. இதை எங்கிட்ட சொல்லி, கால் மணி நேரம் அழுதுட்டு மட்டுமே இருந்தாங்க. நான் எதுவுமே பேசலை. எங்களைப்போல நிறையபேர் இருக்காங்க ப்ரோ.
எங்களுக்குத் தேவையானதெல்லாம் எங்க பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்கணும்கிறதுதான். அதுக்கு நான் ஒரு கருவியா இருக்கேன், இருப்பேன்” எனச் சொல்லி, அருண் தன் கைத்தடியை அழுத்தமாக ஊன்றியது வாழ்க்கையின் மீதும்தான்.