
தமிழ்மகன்

ரம்யாவுக்கு ஓர் அண்ணன் இருப்பதே, இன்னொரு ரம்யா போல அதிர்ச்சித் தகவலாக இருந்தது. வினோத்தைவிட தீபாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. புரொபஸர் சுசீந்திரன் கொலை செய்யப்பட்ட விவகாரத்துக்கே ‘செர்ன்’ அமைப்புடன் தொடர்புப்படுத்திப் பார்த்தவள் அவள். ரம்யாவின் அண்ணன் கவின், செர்ன் லேபாரட்டரியில் சயின்டிஸ்ட். புரொபஸரின் கொலைக்காகக் கைது செய்யப்பட்டிருப்பவள், அவன் தங்கை ரம்யா. இவ்வளவு ஈஸியாக யாரும் சிக்க மாட்டார்கள்.
‘‘வினோத்... ஒரு விஷயம் ரொம்ப ஃபிஷ்ஷியா இருக்கு. நான் ஆரம்பத்தில இருந்தே ‘புரொபஸர் ஆராய்ச்சியை செர்ன் அமைப்புல சில பேர் விரும்பலை’ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். செர்ன் அமைப்புல வேலை செய்யிற கவின், இந்த ஆபரேஷன்ல இருப்பான்னு தோணுது. அவனோட தங்கச்சி இந்த விஷயத்தில அரெஸ்ட் ஆகியிருக்கிறது ஒரு பொட்டன்ட் லிங்க்.’’ தீபா சற்று உணர்ச்சிவசப்பட்டிருந்தது தெரிந்தது.
செர்ன் விவகாரத்தைக் கொஞ்சம் விளக்கும்படி வினோத் கேட்டான். விளக்கியவள், ‘‘செர்ன் ஆராய்ச்சியில் ஏதோ ஆபத்து இருப்பதை புரொபஸர் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் இருக்கும் ஆபத்தை ஆதாரத்துடன் எழுதும் முயற்சியின்போதுதான் அவர் கொல்லப்பட்டார். ரம்யா கைது செய்யப்பட்டிருப்பது அதற்கு ஓர் அத்தாட்சி போல இருக்கிறது’’ எனச் சொல்லி முடித்தாள்.
டெல்லி வந்தால் ரம்யாவை மீட்க ஏதாவது உதவி கிடைக்கும் என்றுதான் வினோத் நினைத்தான். அவள் ஏதோ ‘ரா ஒன்’ கதை போல அனிமேஷனிலிருந்து உயிர்பெற்ற பொம்மையா, அவள் பேசியது எப்படி இருந்தது, குரல்தானா அல்லது சிந்தஸைஸரா... ஏதாவது ஒரு க்ளூ கிடைக்கும் என்றுதான் வந்தான். இப்போதோ ரம்யாதான் கொலைகாரி என்பதற்கு ஜெனீவா வரை ஆதாரம் பிடிக்கிறார்கள்.

ரம்யாவைக் காப்பாற்றுவதற்கான பிடிகள் எல்லாமே தளர்ந்துகொண்டிருந்தன. எல்லா இடங்களிலும் ரம்யாவைப் பார்த்த சாட்சிகள் இருந்தன. போதாத குறைக்கு இப்போது ஜெனீவா, செர்ன் லேப் எனப் பயமுறுத்துகிறார்கள். சர்வதேச சதியில் தானும் ஓர் அங்கமாகிவிடுவோமா எனப் பயப்படவும் செய்தான்.
‘‘நாம் யூகிப்பதைவிட அவரிடமே பேசுவதுதான் நல்லது. ஒருவேளை அவருக்கு ரம்யா இங்கு கைதுசெய்யப்பட்டிருப்பதே தெரியாமல் இருக்கலாம்’’ எனத் திருத்தமாக தீபாவிடம் சொன்னான்.
‘‘சொல்லலாம். ஆனால், அதனால் அவர்கள் அலெர்ட் ஆகிவிட வாய்ப்பாகிவிடாதா?’’
‘‘தகவலை மட்டும் சொல்லுங்கள். மீதி தன்னால் வரட்டும்.’’
‘‘நான் உடனே கவினுக்கு மெயில் போடுறேன். இங்க நடக்கிற எல்லா விஷயங்களையும் சொல்கிறேன். அவனுடைய பதிலில் உண்மை தெரிந்துவிடும். இன்னொரு பக்கம், சைபர் க்ரைம் மூலம் அவனுடைய நடவடிக்கையைக் கண்காணிக்கச் சொல்லலாம். வினோத், நீங்கள் இன்னொரு நாள் டெல்லியில் இருப்பீர்கள்தானே?’’ என்றாள்.
‘‘சென்னைக்கு நல்ல செய்தியுடன் போக வேண்டும். அதற்காக, இன்னும் ஒரு நாள் இருப்பதில் சிரமம் இல்லை.’’
போன் நம்பர்கள், இமெயில் முகவரிகளெல்லாம் பரிமாறிக்கொண்டு வினோத் அங்கிருந்து விடைபெற்று, டெல்லி புராணகிலா அருகே ஓட்டல் ஒன்றில் அறையெடுத்துத் தங்கியபோது அவனுக்கு எழுந்த ஒரே கேள்வி... ரம்யா தனக்கு ஓர் அண்ணன் இருப்பதை ஏன் மறைத்தாள்?
தீபாவிடமிருந்து வந்த மெயில் கவினுக்கு அதிர்ச்சி தந்தது. இத்தனைக் கொலைகள்... எல்லாம் ரம்யா செய்ததாகச் சொல்லியிருந்தது அதைவிட அதிர்ச்சி. உண்மையில் புரொபஸர் சுசீந்திரனின் மரணம், செர்ன் விஞ்ஞானிகள் சிலரைத் தூக்கிவாரிப் போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ‘இந்த ஆராய்ச்சியின் மூலமாக நாம் பிரபஞ்சத்தின் ஆதாரத்தை அசைத்துப் பார்க்கிறோம். ஆபத்து எந்த வடிவத்தில் வரும் என எதிர்பார்க்க முடியாது’ என அச்சுறுத்தியபடி இருந்தார். ‘இந்தக் கிழவனுக்கு வேறு வேலையில்லை’ என்றவர்களும் ‘கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றவர்களும் அதில் இருந்தனர். குறிப்பாக, ஸ்டீபன் ஹாக்கிங் இந்த விஷயத்தில் வேறுவிதமாக எச்சரிக்கை செய்துகொண்டிருந்தார். ‘வேறு கிரகங்களைத் தேடுங்கள்’ என்பதுதான் அவருடைய முக்கியமான அறிவுறுத்தல். ‘பூமிக்கு ஆபத்து நெருங்குகிறது’ என்பது அவருடைய தொடர்ச்சியான நினைவூட்டலாக இருந்தது. செர்ன் சோதனைகள், பிரபஞ்சத்தை அறிவதற்கான களம்தான். இன்னொரு கிரகத்தை அறிவதற்கான இன்னொரு வழி. இதில் ஆதாயம் யாருக்கு? பெரிய பணமுதலைகளுக்கு இதில் ஆர்வம் இருக்கிறது. வேற்றுக் கிரகங்களில் ரியல் எஸ்டேட் போடுகிற அளவுக்குக் கனவில் இருக்கிறார்கள். புரொபஸரைக் கொல்ல நினைப்பவர்கள் அவர்கள் என்றால், இதில் ரம்யா எங்கே வந்தாள்?

இந்தத் தொடர்கொலைகள் ரம்யாவுக்குச் சம்பந்தமற்றவை. அவளைப் பலிகடா ஆக்கி, யாரோ செய்கிற படுகொலைகள் எனத் தெளிவாகத் தெரிந்தது. இப்போதே செர்னில் நடக்கும் பிசினஸ் மலைப்பானது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஷீட்டுகள் மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். ஃபைபர் ஆப்டிக் கேபிள், டிஸ்ப்ளே மானிட்டர்ஸ், ட்ரான்ஸ்ஃபார்மர், ஃப்ரேம் வொர்க் கான்ட்ராக்ட்கள், வொர்க்ஸ்டேஷன் இன்ஃப்ராஸ்ட்ரெக்சர்ஸ், சிலிக்கன் பிக்ஸல் சென்சர்ஸ், கட்டுமானங்கள் என எல்லாவற்றிலும் பணம் விளையாடியது.
இதை நிறுத்தச் சொன்னால் சும்மா இருப்பார்களா? இந்த ஆய்வின் முடிவில் மேலும் கான்ட்ராக்ட்கள் இருந்தன. பதவிகள், அதிகாரங்கள், பணம் எல்லாம் இருந்தன. சுசீந்திரன் அதை உணர்ந்தே இருந்தார். ஆனால், அதற்காகக் கொலை செய்வார்கள் என நினைத்திருக்க மாட்டார். அவரை மட்டும் கொன்றால் சரியாக இருக்காது என்பதால்தான், அவருக்கு முன்னும் பின்னும் சில கொலைகளைச் சேர்த்திருக்கிறார்கள். ஓர் அப்பிராணியை, ஒரு பழிவாங்கல் காரணத்துடன் பிணைத்திருக்கிறார்கள். ரம்யாவை நினைத்தபோது பதற்றமாகவும் இருந்தது.
‘இதில் ரம்யா ஒரு பலிகடா. தேவையில்லாமல் சிக்கவைக்கப்பட்டிருக்கிறாள்’ என விளக்கமாகப் பதில் மெயில் போட்டான்.
கவினின் அப்பாவும் ரம்யாவின் அப்பாவும் அண்ணன், தம்பிகள். ரம்யா, சித்தப்பா மகள். அமைதியான, அறிவாளியான பெண். கவின், தன் சித்தப்பாவைத் தொடர்புகொண்டு பயப்பட வேண்டாம் என அறிவுறுத்தினான். நடந்த அத்தனை விவகாரங்களையும் ஒவ்வொரு வரியாகக் கேட்டுக்கொண்டான். ‘‘பதினைஞ்சு நாள்களுக்குப் பிறகுதான் பார்க்க முடியும்னு சொல்லிட்டாங்க. எப்படியாவது காப்பாத்துப்பா’’ என அழுதார்கள். ‘‘நான் அடுத்த வாரம் சென்னை வருவேன். கவலைப்படாதீங்க, வெளியே கொண்டாந்துடலாம்’’ என்றான்.
பார்ட்டிகல் பிசிக்ஸில் பிஹெச்.டி முடித்தபோது கவினுக்கு ஒரு கனவு இருந்தது. கார்ல் சேகன் போல வெளிக்கிரகத் தொடர்புகளை ஆய்வுசெய்ய வேண்டும் என்ற கனவு அது. செர்ன் பிக்பாங் ஆய்வும் அப்படியான ஒரு பெருங்கனவின் வாசல் போல இருக்கவேதான் வேலைக்கு விண்ணப்பித்தான். பல்லாயிரம் விஞ்ஞானிகளின் கூட்டு உழைப்பு. அப்சர்வேட்டரி அனாலிசிஸ் பிரிவின் ஆயிரத்தில் ஒருவன் வேலை.
தீபாவை போனில் அழைத்தான். ‘‘உங்கள் மெயிலில் ரம்யாவுடன் சேர்த்து என்னையும் சந்தேகிப்பது தெரிகிறது. என்மீது வந்திருப்பது இயற்கையான சந்தேகம் தான். என் தங்கைக்குக் கொலையில் தொடர்பு இருப்பதாகச் சொல்லும் போது, என்னை சந்தேகிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். புரொபஸரின் எதிரிகள் செர்னில் இல்லை. செர்னால் ஆதாயம் அடைபவர்களில் இருக்கிறார்கள். இதற்குப் போலீஸ் கண்கள் போதாது. அறிவியல் வேண்டும். கொஞ்சம் முயற்சி செய்து புரொபஸரின் பாஸ்வேர்டைப் பிடியுங்கள். அவருடைய அத்தனை மெயில்களும் படிக்கப்பட வேண்டும். கூகுள் டாக்கில் இருந்தால் அவருடைய கடைசிக் கட்டுரையை எடுத்துவிட முடியும். ரம்யாவை இதில் சிக்க வைத்திருப்பவர்களின் சதியைக் கண்டுபிடிக்க வேண்டும். புரொபஸரைக் கொன்றவர்களின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். நான் அடுத்த வாரம் சென்னை வருகிறேன்.’’ வேகமாகப் பட்டியல் போல பேசினான்.
‘‘கொலை செய்வதற்கு உங்கள் தங்கையே புரொபஸரின் வீட்டுக்கு வந்திருக்கிறார். புரொபஸரின் மனைவி அடையாளம் சொல்கிறார்.’’
‘‘அது நல்லதுதான். ஒரு பெண்ணையே அத்தனை இடங்களிலும் பார்த்ததாகச் சொல்வதே பிசிக்ஸுக்கு விரோதம். ஒரு வாரத்தில் ஐந்து கொலைகளை வெவ்வேறு நகரங்களில் நடத்தியிருப்பதில்தான் தவறு செய்துவிட்டார்கள். ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண், தினமும் இரவில் இத்தனை தூரங்கள் பயணித்து இந்தக் கொலைகளை நிகழ்த்திவிட்டு, மறுநாள் ஆபீஸுக்குச் சாதாரணமாகப் போயிருக்க முடியாது. அதே இரவுகளில் அவள் ஹாஸ்டலிலும் இருந்திருக்கிறாள்... எப்படி?’’
‘‘அந்தச் சந்தேகம்தான் எல்லோருக்கும்.’’
‘‘ரம்யா போலவே ஒருத்தியை உருவாக்கியதுதான் அவர்கள் சாமர்த்தியம். அதையே எல்லா கொலை களிலும் பயன்படுத்தியதில் சிக்கிக்கொண்டார்கள். இந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்க வேண்டும்... சதிகாரர்கள் தானாக வெளியே வருவார்கள்.’’
தீபாவுக்குக் குழப்பமாகத்தான் இருந்தது. வினோத் சொல்வதை நம்புவதா, கவின் சொல்வதை நம்புவதா, போலீஸ் சொல்வதை நம்புவதா? எல்லோரையும் சந்தேகத்துடன் நம்பினாள். வினோத்திடம் விஷயத்தைச் சொல்ல முற்பட்டபோது, அவனுடைய போன், ‘நாட் ரீச்சபிள்’ என்றே வந்தது.

புரொபஸரின் மெயில்களில் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளை வெளியே எடுக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இறங்கினாள்.
புராணகிலா சிதில அரண்மனையைக் காலொடிய சுற்றிவிட்டு இந்தியா கேட் பக்கம் வந்தான் வினோத். காலையிலேயே ராமநாதனிடம் நடந்ததைச் சொன்னான். எம்.டி-யிடம், ‘‘இன்னொரு நாள் இருந்து சில வேலைகளை முடிக்க வேண்டும்’’ என்றான். ‘‘ஏடாகூடமா நீ எதுலயாவது மாட்டிக்கப் போறே’’ என்றார் முத்துராஜா. எல்லோரும் கேட்டைச் சுற்றிச் சுற்றி வாக்கிங் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு வேகவைத்த சோளத்தை வாங்கிச் சுவைத்தபடி அறைக்குப் போய் சாப்பிடலாமா, சாப்பிடாமலேயே படுத்துவிடலாமா என மனசைச் சுண்டிப் பூவா தலையா போட்ட நேரத்தில், பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. ‘‘வினோத்!’’
தீபா.
‘‘மத்தியானத்திலிருந்து ட்ரை பண்றேன். உங்க போன் நாட் ரீச்சபிள்.’’
‘‘புராணகிலா போனேன். போன் டவர் இல்லை. அப்புறம் ஸ்விட்ச்டு ஆஃப்!’’
‘‘பரவால்ல. இங்கதான் ரெகுலரா வாக்கிங் போவேன். ரம்யாவோட அண்ணன்கிட்டப் பேசிட்டேன். அதைவிட முக்கியம் புரொபஸரோட மெயில் பாஸ்வேர்டு கண்டுபிடிச்சுட்டேன்.’’
ஒருவித நன்றியுணர்வில் கையைப்பிடித்துக் குலுக்கினான். ‘‘புரொபஸரோட கட்டுரையை உனக்கும் ரம்யா அண்ணனுக்கும் ஃபார்வேர்ட் பண்ணிட்டேன். ஆனா... அவருடைய கட்டுரையைப் படிச்சா ரொம்பப் பயமா இருக்கு!’’ என்றபடி அச்சத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
தொடரும்